விழுங்கும் திரை - கணேஷ் சுப்ரமணி


டிக்கெட் கிழித்து உள்ளே சென்றதும்
அனைத்தையும் விழுங்கும்
திரை

தமிழ்நாட்டை விழுங்கிய
திரையரங்கின் இருள்

ஒரு நூற்றாண்டைக் கடந்தும்
விலகவேயில்லை.


சினிமா ஒரு போதை.
சிறு வயதில் சினிமா தியேட்டரில்
செருப்பைத் தொலைத்துவிட்டு
காலியான அரங்கில் அப்பாவுடன் 
தேடியிருக்கிறேன்.

இன்று
எத்தனையோ இளைஞர்கள்
சினிமா அரங்கிற்குள்
வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்
இளமையைத் தொலைக்கிறார்கள்.
எங்கே தேடுவது?

சினிமா சினிமா என்றலையும்
இளைஞர்களுக்கு அந்தச் சினிமா
எதைப் போதிக்கிறது?

அரிவாள் பிடிப்பதையும்
அரைகுறை ஆடை அணிவதையும்தானே?

ஒரு காலத்தில்
சண்டைக் காட்சியில் சிந்திய 
ஒரு துளி ரத்தம் கண்டு
பதைத்தது தமிழினம்.

இன்று எல்லாக் காட்சிகளிலும்
லிட்டர் லிட்டராய் தெறிக்கிறது ரத்தம்.
பதைப்பின்றி பாப்கார்ன் கொறித்துச் 
சிரிக்கிறது அதே தமிழினம்.

பில்லாவும் ஜில்லாவும் தங்கள்
கல்லாவை நிறைக்க உங்களுக்கு
குல்லா போடுவதை
உணர்வதெக்காலம்?

அன்று மெதுவாய் மெதுவாய் தொடலாமா
என பாடல் காட்சிகளில் கண்ணியம் காத்த
காதலர்கள்
இன்று
கட்டிப் புடி கட்டிப்புடிடா என்று
நாய்களைப் போல் கவ்விக் கொள்கிறார்கள்.

அன்றைய சினிமா
சமதர்மங்களைப் பேசியது.
இன்றைய சினிமா
some அதர்மங்களை மட்டுமே பேசுகிறது.

கட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன் என்று
மானம் காத்த வீரத்தைச் சொன்ன தமிழ் சினிமா
இன்று 
மானம் கெட்ட விசயங்களைத்தான்
மணிக்கணக்காய்ச் சொல்கிறது.

ஏ.வி.எம்., விஜயா ஸ்டுடியோக்கள் எல்லாம்
இன்று காலியாகக் கிடக்கின்றன.
எல்லாப் படப்பிடிப்புகளும்
டாஸ்மாக் கடைகளில் நடப்பதால்.

சினிமாவில் வரும்
இளைஞர்கள் எல்லோரும்
பெண்கள் பின்னால் அலைகிறார்கள்.
போதையில் ஆடுகிறார்கள்.
ஆயுதங்களுடன் நடுரோட்டில் ஓடுகிறார்கள்.

நீங்கள் எல்லோரும் அப்படியா இருக்கிறீர்கள்?
சொல்லுங்கள்.!

எதற்காக, யாருக்காக
இல்லதை உள்ளதெனக் காட்டுகிறது சினிமா?
சிந்தியுங்கள் தோழர்களே!



அருள்ஆனந்தர் கல்லூரியில் ஆகஸ்ட் 2014 இல் நடைபெற்ற 'வானம் வசப்படும்' எனும் கவியரங்கில் வாசிப்பதற்காக எழுதியது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்