தரமற்ற கல்வியின் அடையாளம் ஆங்கிலக்கல்வி - கல்யாணி


கல்வியாளர் கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடல்

கே: மாற்றுக் கல்வி குறித்த உங்களின் செயல்பாடுகள் எப்படித் தொடங்கின?

ப: மாற்றுக் கல்வி என்பது பற்றியெல்லாம் தத்துவார்த்தமான முறையில் சிந்தித்து நான் செயல்படத் தொடங்கவில்லை. கல்விப்பணியிலிருந்த போது நான் நேரில் கண்ட சீர்கேடுகளைக் களைந்து செயல்பட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. பொதுவாக பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பாடம் சொல்லித் தருவதைவிட தனியாக தாங்கள் நடத்தும் டியூசன் வகுப்புகளில்தான் அதிகளவு கவனத்துடன் இருந்ததைத் கவனித்தேன். இதனால் டியூசன் படிக்க வசதியில்லாத சாதாரண மாணவர்கள் அடையும் பாதிப்புகளை நேரடியாக என்னால் கண்டுணர முடிந்தது.
இவற்றுக்கு மாற்றாக அமைந்திருக்க வேண்டிய தனியார் பள்ளிகள் வணிகத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு செயல்பட்டன. மாநில அளவில் ரேங்க் வாங்குவதற்காகவும் நூறு சதவீத தேர்ச்சி பெறுவதற்காகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடிப்பதையும் ஊக்குவிக்கும் வண்ணம் செயல்படுகின்றன. இதுவும் கூட மாணவர்களின் கல்வி மீதான அக்கறையினால் செய்யப்படுவதல்ல. ரேங்க் வாங்குவதனால் பள்ளியின் கட்டணம், நன்கொடை போன்றவற்றை அதிகரிக்கச் செய்யவே இவ்வாறான நடவடிக்கைகளில் தனியார் பள்ளிகள் இறங்குகின்றன. இவையெல்லாம் கவலையளிக்கும் விசயங்களாக எனக்குத் தோன்றின. இது போன்ற சீர்கேடுகளைப் போக்கும் ஒரு வித போராட்டமாகவே என்னுடைய கல்விப் பணிகள் தொடங்கின. மாற்றுக் கல்வி எனும் சிந்தனையுடன் நான் என் பணிகளைத் தொடங்கவில்லை. ஏற்கனவே இருக்கும் கல்வியில் நம் கண்முன்னால் நடக்கும் சீர்கேடுகளை எதிர்க்க வேண்டும் என்பதே என்னுடைய முதன்மையான நோக்கமாக இருந்தது.

கே: தாய்மொழிக் கல்வி என்பதை அதிகம் வலியுத்துகிறீர்கள். அது பற்றி..
ப: கல்வி தரமானதா இல்லையா என்பதற்கான அளவுகோலே அது தாய்மொழியில் இருக்கிறதா இல்லையா என்பதுதான். தாய்மொழியில் இல்லையென்றாலே அது தரமற்ற கல்வி என்றுதான் அர்த்தம். தமிழ்நாட்டில் ஆங்கிலக் கல்வி என்பது தரமற்ற கல்வியின் அடையாளம்தான். தாய்மொழியில் கற்கும் ஒரு குழந்தையின் சராசரி புரிதல், ஆங்கிலக் கல்வியில் கற்கும் குழந்தையின் சராசரி புரிதலைக் காட்டிலும் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சில விதிவிலக்குகளை மட்டும் கொண்டு ஆங்கிலக் கல்வி சிறந்தது என்று வாதிடக்கூடாது.

தாய்மொழியில் கற்கும் குழந்தை பாடத்தை நன்கு புரிந்து கொண்டு கற்கிறது. ஆனால் ஆங்கிலக் கல்வி கற்கும் குழந்தை மனப்பாடம் செய்து மட்டுமே வளர்கிறது. இந்த மனப்பாடத் திறனால் பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அது பெற்றாலும் மற்ற திறனறித் தேர்வுகளில் கோட்டை விடுவதையே நாம் பார்க்க முடிகிறது. ஆனால் தாய்மொழியில் கற்கும் குழந்தைகள் இது போன்ற தேர்வுகளில் நன்றாக தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

கே: ஆனால் அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இரண்டாம் வகுப்புப் பாடத்தைக் கூட புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்களாக இல்லை என்று ஓர் ஆய்வு தெரிவிப்பதாக சமீபத்தில் ஓர் இதழில் கட்டுரை வெளிவந்தது. நீங்கள் சொல்வது இதற்கு முரணாக உள்ளதே?
ப: அந்த ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. தமிழ்நாடு முழுக்க அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்களா என்பதையெல்லாம் பொறுத்துதான் இதற்கு பதில் கூற முடியும். அதுவுமில்லாமல் இது போன்ற குறைபாடுகள் பள்ளி நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளால் விளைவனவாகவே இருக்குமேயன்றி, மீடியம் சார்ந்ததாக இருக்காது.

கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள கல்விமுறை தரமற்றதாகவே அமையும். கட்டுப்பாடுகள் என்றால் நான் ரெஜிமென்டேசன் எனும் அர்த்தத்தில் சொல்றேன். ராணுவத்தில் ரெஜிமென்ட் என்று சொல்வார்கள். அங்கே போகாதே, அதைச் செய்யாதே என்றெல்லாம் கட்டுப்படுத்துவது. மெட்ரிக் பள்ளிகளும் சில அரசுப் பள்ளிகளும் இப்படித்தான் மாணவர்களை நடத்துகிறார்கள். இப்படி கட்டுப்பாடுகள் அதிகம் செலுத்தப்படும் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். சொல்வதை மட்டும் அப்படியே செய்யும் மனப்பழக்கம் கொண்டவர்களாக மட்டுமே வளர்கிறார்கள். இது எப்படி தரமான கல்வியாக இருக்க முடியும்? மாணவர்களை மிரட்டி படிக்க வைத்து நல்ல மதிப்பெண் எடுக்க வைப்பதையே பள்ளிகள் செய்கின்றன. இது வெளியிலிருந்து பார்க்கும் போது வளர்ச்சி என்பதாகத் தோன்றுகிறது. இது எப்படி வளர்ச்சியாகும்?

நாங்கள் நடத்தும் பள்ளியில் இது போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. எந்த மிரட்டல், உ<ருட்டலுக்கும் அங்கு வேலையில்லை. கல்லூரிகளை வைத்தும் இதைப் புரிந்து கொள்ள முடியும். திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவரை விட மதுகை அமெரிக்கன் கல்லூரி, சென்னை கிருத்தவக் கல்லூரி போன்றவற்றில் படிக்கும் மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற வேறுபாடுகளை நான் படிக்கும் காலத்தில் நேரடியாக என்னால் உணரமுடிந்தது. கட்டுப்பாடுகள் மிகுந்த மெட்ரிக் பள்ளிகளில் படித்து நானூறு மதிப்பெண்களுடன் கல்லூரிக்கு வரும் மாணவர்கள், செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியடைவார்கள். ஆனால் கட்டுப்பாடற்ற அரசுப் பள்ளிகளில் படித்து குறைந்த மதிப்பெண்களுடன் வருபவன் எளிதாக முதல் வகுப்பில் தேர்ச்சியடைவான்.

சுயமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்பதுதான் கற்றலில் முக்கியமானது என்று நினைக்கிறேன். மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடே இந்த இனிஷியேட்டிவ்தான். விலங்குகள் எந்த முன் முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. மனிதன் மட்டுமே தன் நிலையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி சிந்தித்து அதை நோக்கிப் பயணிக்கும் திறன் பெற்றவன். ஆனால் இந்த அடிப்படைத் திறனையே நம் பள்ளிக்கல்வி முறை அழிக்கிறது. பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் பெறுவதைத் தாண்டி வேறு எதையும் சிந்தித்துச் செயலாற்றும் திறன் அற்றவர்களாக மாணவர்களை மாற்றிவிடுகிறது. குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கும் அந்தப் பண்பையே நம் பள்ளிகள் காலி பண்ணிவிடுகின்றன. கல்வி கற்றலில் சுதந்திரம்தான் ரொம்ப முக்கியம்.

கே: தாய்மொழிக்கல்வி குறித்து சொன்னீர்கள். ஆனால் இன்றையச் சூழலில் மாணவர்களுக்கு பன்முக அறிவு என்பது முக்கியமானது. சில குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்கள் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. இது போன்ற துறைகளில் சாதிப்பதற்கு ஆங்கிலக் கல்வி அவசியமில்லையா?
ப: என்னுடைய நண்பர் ஒருவர் ஜெர்மனிக்கு ஆய்வு மேற்படிப்புக்காகச் சென்றிருந்தார். அவருடைய துறை சார்ந்த நூல்கள் எல்லாமே அங்கு ஜெர்மனியில்தான் இருந்தன. இதனால் முதல் ஆறு மாதங்களுக்கு அவருடைய ஆய்வுக்குத் தேவையான அளவுக்கு ஜெர்மன் மொழியறிவைப் புகட்டியிருக்கிறார்கள். அதற்குப் பின்னர் அவரால் எளிதாக ஜெர்மன் மொழி நூல்களைத் தன் ஆய்வுக்குப் பயன்படுத்த முடிந்துள்ளது. இது போன்ற விசயங்களில் அந்த நாட்டுக்காரர்கள் ஆங்கிலத்தை நம்பிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தமிழ் மொழியில் இது போன்ற நிலையை உருவாக்க நாம் தவறி விட்டோம். உயர்கல்வி என்பது இங்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலைதான் உள்ளது. நாம் மொழியைக் கற்றுக் கொடுக்கும் விதமே மோசமாக உள்ளது. தமிழைக் கற்றுக் கொடுப்பது போலத்தான் ஆங்கிலத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.


பேட்டி
கணேஷ் எபி 
பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment

கருத்துக்கள்