மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 1 - கணேஷ் சுப்ரமணி

மனிதன் சாவை நாடும் மனநிலையும் சூழலும் தனித்துவம் வாய்ந்தவை. ‘உலகின் முக்கியப் பிரச்சினையே தற்கொலைதான்’ என்றார் ஆல்பர்ட் காம்யூ. ஒரு மனிதன், தன்னுடைய சாவை விழைந்து ஏற்பதற்குத் தனிப்பட்ட மனநிலை மட்டுமின்றி, அவன் வாழும் சமூகத்தின் நிர்ப்பந்தமும் முக்கியக் காரணமாகின்றது. அதாவது, ஒரு மனிதன் தன்னுடைய சாவை நாடிச் செல்வது தனிமனிதப் பிரச்சினையன்று; சமூகப் பிரச்சினை. சங்க இலக்கியத்தின் சில இடங்களில் அக்கால மகளிர் தங்களுடைய சாவை விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்வுகளைக் காணமுடிகிறது. சடங்கு வயப்பட்ட இந்நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சமூக அசைவியக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
மனிதன் சமூக உறவுகளால் கட்டப்பட்டவன். சமூக இயக்கத்தின் அடித்தளமாய் விளங்குவது பொருளாதாரம். மேல்கட்டுமானம் சார்ந்த சமூக உறவுகள் அனைத்தும் அடித்தளமான பொருளாதாரத்தாலேயே நிர்ணயிக்கப்படுபவை. ‘வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும், அப்போது ஓங்கிய நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தனை முறையும் இதிலிருந்து இன்றியமையாதவாறு பெறப்படும் சமூக அமைப்பு முறையும்தான் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றின் அடிநிலையாகின்றது. இந்த அடிநிலையிலிருந்து மட்டுமே அந்த அரசியல், அறிவுத்துறை வரலாற்றினை விளக்க முடியும் என்பர்.’1

சமூகம் - பொருளாதாரம் - பெண்:
ஆதிகாலத் தாய்மைச் சமூகத்தில் பெண் மனிதவளத்தைப் பெருக்கும் ஜீவாதார சக்தியாக மதிக்கப்பெற்றாள். ஆணாதிக்கச் சாயல்கள் ஏதும் படியாத அச்சமூகத்தினை தொடர்ந்து, பின்னர் வந்த உடைமைச் சமூகத்தின் தோற்றம் பெண் வகித்து வந்த சமூகப் பாத்திரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மனிதவள உற்பத்தி என்பது பெண்ணை மட்டுமே சார்ந்ததன்று எனும் உண்மை ஆணாதிக்கச் சமூகத்தை உருவாக்கியது. அதாவது, பெண் மையம் தகர்க்கப்பட்டு ஆண் மையச் சமூகம் தோற்றம் பெற்றது. இதனையே ‘தாயுரிமை தூக்கியெறியப் பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி’ என்பார் ஏங்கெல்ஸ்.2

நிலவுடைமைச் சமூகத்தின் பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் முழுக்க முழுக்க ஆணை  குடும்பத் தலைவனை  மையமிட்டதாக கட்டமைப்புச் செய்யப்பட்டது. அதாவது, சமூக இயக்கத்தின் அடித்தளமான பொருளாதாரத்திற்கு ஆணையே சார்ந்து நிற்க வேண்டிய நிலைக்குப் பெண் உள்ளாக்கப்பட்டாள். அவள் தனித்து நின்று பொருளாதார பலத்தை அடைந்து விடாமலிருக்கும் படியான சமூகச் சட்டகம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. இச்சட்டகத்தை உடைத்து அவள் வெளியேறி விடாதபடி  வெளியேற விரும்பியும் விடாதபடி  சமூகக் கருத்தமைவுகள் உருவாக்கம் பெற்றன. ஆண் மையச் சமூகம் தன் வெற்றியை ஈட்டியது; பெண் அடிமையானாள். ஆண் தன்னுடைய உழைப்பின் மூலம் பெற்ற உற்பத்திப் பொருட்களையும் உடைமைகளையும் தனக்குப் பிறந்த மக்களுக்கே உரிமைப்படுத்தும் நோக்குடன் ‘ஒருத்திக்கு ஒருவன்’ (ஒருவனுக்கு ஒருத்தி அல்ல.!) எனும் கற்புக் கோட்பாட்டை உருவாக்கினான். இதன் வளர்ச்சிப் போக்கில் பெண்ணும் ஓர் உடைமைப் பொருள் ஆனாள். 

சங்க காலச் சமூகத்தில் பெண்:
சங்க இலக்கியங்களின் வழி அறியலாகும் சங்க காலத் தமிழ்ச் சமூகம் நிலம் சார்ந்த உடைமைச் சமூகம். சங்க இலக்கிய மரபுகளனைத்தும் நிலம் சார்ந்து உருவாக்கம் பெற்றவை. அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கள் சார்ந்த உற்பத்தி உறவுகளே சங்கச் சமூகத்தை இயக்கியவை. ‘மாடுகளை உடைமையாக்கி வைத்து வளர்த்த முல்லை நாகரிகத்திலேதான் மேய்ச்சலுக்கு மாடுகளைக் கொண்டு சென்று திரும்பும் கணவனுக்காகக் காத்து இருக்கும் மனைவியையும் கற்பு ஒழுக்கத்தின் ஆரம்பத்தையும் காணலாம்.’3 சங்க இலக்கியங்களில் மரபுகளின் ஆதிக்கம் பெருமளவு காணப்பட்ட போதிலும், இடையிடையே சிற்சில வாழ்வியற் தகவல்களும் தென்படவே செய்கின்றன. சங்க கால மகளிர் நிலையைத் தெரிவிக்கும் ஆனந்தப் பையுள், உவகை கலுழ்ச்சி, தாபத நிலை, முதுபாலை போன்ற புறப்பொருட் துறைகளில் அமைந்த சில பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

சங்க காலத்தில் கற்பு எனும் கருத்தாக்கம் ஆண் மையச் சமூகத்திற்கு இணக்கமான பெண் உளவியலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. கணவனின் மறைவுக்குப் பின், தன்னுடைய கற்பொழுக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக மூன்று வகைக் கற்பு நிலைகள் மனைவியுடைய தேர்வுக்கு முன்வைக்கப் பட்டன. தலைக்கற்பு எனப்படும் உடனுயிர் மாய்தல், இடைக்கற்பு எனப்படும் உடன்கட்டை ஏறுதல், கடைக்கற்பு எனப்படும் கைம்மை நோன்பிருத்தல் ஆகிய இம்மூன்று கற்பு நிலைகளும் ஓர் ஆணின் இறப்பையொட்டி அவனுடைய மனைவி(யர்) தேர்ந்தெடுக்கும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப் பட்டுள்ளன. கணவன் உயிரோடிருக்கும் போது மனைவி பேணும் கற்பொழுக்கத்தை விட அவன் இறந்த பிறகு அவள் மேற்கொள்ளும் கற்பொழுக்க நிலைப்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

சங்க கால நிலவுடைமைச் சமூகத்தில் பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அவள் ஆணை மட்டுமே  குடும்பத் தலைவனை  மட்டுமே சார்ந்து நிற்கும் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அறியமுடிகிறது. அவள் பொருளாதாரத்தில் தற்சார்பு அடைந்துவிடாதபடி பண்பாட்டு மரபுக் கூறுகள் ஆணாதிக்கச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டன. இவ்வாதிக்க மரபுகளின் தாக்கம் தொடர்ந்து பெண் உளவியலில் செலுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் தான் ஆணுக்கு அடிமை என்று நம்பவைக்கப்பட்டாள்.

மனையுறை மகளிரும் ஆடவர் உயிரும்:
சங்க காலச் சமூகத்தில் குடும்பம் எனும் அமைப்பு பொருளாதார அடிப்படையில் ஆணை  குடுப்பத் தலைவனை  மையமாகக் கொண்டது. அதாவது, பெண்ணின்  குடும்பத் தலைவியின்  பொருளாதாரம் ஆணைச் சார்ந்து அமையுமேயன்றி, தனித்து முயன்று பொருள் தேடும் உரிமை அவளுக்கு முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலை கணவன் இறந்த பிறகு மனைவியின் பொருளாதார நிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ எனும் தருக்க விதிப்படி, கணவனை இழந்த பெண்ணுக்குச் சாவு எனும் தீர்வு முன்வைக்கப்படுகிறது.

குடும்பப் பொருளாதாரம் ஆணை மட்டுமே சார்ந்தது என்பதையே ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ எனும் சங்க இலக்கியத் தொடர் சுட்டுகிறது. ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ எனும் தொடர், கணவனின் மறைவுக்குப் பின்னர் மனைவி உயிரற்றவள்  அல்லது உயிர் வாழத் தகுதியற்றவள்  எனும் கருத்தை முன்வைத்து, சாவை நோக்கி அப்பெண்ணின் மனப்பாங்கைச் செலுத்துகிறது. இங்கு ‘மனையுறை’ என்னும் சொற்பதம் வீட்டைத் தாண்டிச் சென்று பொருளாதாரத் தற்சார்பு அடைவது கற்புடை மகளிருக்கு அழகல்ல எனும் கருத்தைச் சுமந்து நிற்கிறது.

இத்தகைய தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மூலம் தமக்கு விதிக்கப்பட்ட கற்புநெறிகளின்படி உயிர்வாழ்வது அல்லது உயிர்நீப்பதே தங்கள் தலையாய அறம் என்று மகளிர் நம்பவைக்கப்பட்டனர். அதிலும் உயர்குடி மகளிரின் கற்பு சார்ந்த நிலைப்பாடு சமூகத்தால் பெரிதும் கவனிக்கப்பட்டதால் அவர்கள் தலைக்கற்பு எனும் உயரிய நெறியைத் தேர்ந்தெடுத்து உயிர் விடுவதையே தம் பிறவிக்குரிய கடமையாகவும் பெருமையாகவும் கருதினர் (அ) கருத வைக்கப்பட்டனர். ஆணாதிக்கச் சமூகம் வரையறுத்த கற்பு அறங்களைப் போற்றிப் பேணி, அவற்றின் வழி தன்னுடைய கடமைகளை நிறைவேற்றி முடிப்பதே பெண்ணுக்குப் பெருமையளிக்கும் செயல் என்று அக்காலப் பெண்கள் நம்ப வைக்கப்பட்டனர். தொடர்ச்சியான இந்தச் சமூக அசைவியக்கத்தின் மூலம், கணவன் இறந்தவுடன் தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளும் மனத்துணிவு பெண்களுடைய மனத்தில் உருவாக்கப்பட்டது.          

ஆடவர் இறப்பும் மகளிர் கற்பும்:
சங்க இலக்கியங்களில் மரபுகளின் ஆதிக்கம் பெருமளவு காணப்பட்ட போதிலும், இடையிடையே சிற்சில வாழ்வியற் தகவல்களும் தென்படவே செய்கின்றன. சங்க காலப் பெண்களின் நிலையைத் தெரிவிக்கும் ஆனந்தப்பையுள், உவகைக் கலுழ்ச்சி, தாபதநிலை, முதுபாலை போன்ற புறப்பொருட் துறைகளில் அமைந்த சில பாடல்கள் புறநானூற்றில் காணக் கிடைக்கின்றன. சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.
1.    தலைக்கற்பு - கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல்
2.    இடைக்கற்பு - கணவன் இறந்ததும் ‘சான்றோர்’ முன்னிலையில் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விடுதல். அதாவது உடன்கட்டையேறி உயிர் விடுதல்
3.    கடைக்கற்பு - கணவன் மறைவுக்குப் பின்னர் உலகியல் இன்பங்களைத் துறந்து கைம்மை நோன்பு நோற்றல்.

இம்மூவகைக் கற்பு நெறிகளில் முதல்நிலைக் கற்பான உடனுயிர் மாய்தல் எனும் தலைக்கற்பு நெறி, கணவன் இறந்தவுடன் ஒரு கணம் கூட உயிர்வாழ்வது மனைவியின் கற்பு வாழ்வுக்கு இழுக்கு எனும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இக்கற்பு நெறி உயர்குடி மகளிரின் மனதைப் பெரிதும் ஆட்கொண்டிருந்ததை அறியமுடிகிறது.

குறிப்புகள்:
1.    பிரடெரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (1888 ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை), முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1975, பக்.20.
2.    பிரடெரிக் ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அயல்மொழிப் பதிப்பகம், மாஸ்கோ, பக்.129.
3.    சி.தில்லைநாதன், இலக்கியமும் சமுதாயமும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1937, பக்.9.




No comments:

Post a Comment

கருத்துக்கள்