மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 2 - கணேஷ் சுப்ரமணி

சங்க இலக்கியத்தில் உடனுயிர் மாய்தல்:
சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் மற்றும் கைம்மை நோன்பு நோற்றல் குறித்த செய்திகள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் உடனுயிர் மாய்தல் குறித்த செய்திகள் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. போர்க்களத்தில் இறந்துபட்ட சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய மன்னர்களின் மனைவியர், தத்தம் கணவர்களின் மார்பில் வீழ்ந்து உயிர் மாண்டதாகப் புறநானூற்றில் ஒரு பாடலில் கூறப்படுகிறது.
‘உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே’1
இப்பாடலின் வழியாக, தலைவன் இறந்தவுடன் உயர்குடி மகளிர் தன்னுயிரைப் பேணுதல் தகாது எனும் அறம் நுண்மையாகப் போதிக்கப்படுகிறது. அக இலக்கியமான குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலில் தலைவனைப் பிரியும் நிலை நேருமாயின் அடுத்த கணமே தன்னுயிர் தன்னை விட்டுப் பிரிந்துவிட வேண்டும் என்று விரும்பும் ஒரு தலைவியின் உளநிலை சித்திரிக்கப்படுகிறது.


‘உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே’2
இப்பாடல் தவிர, தோழி கூற்றாக அமைந்த மற்றொரு குறுந்தொகைப் பாடலில் ஆண் குரங்கு இறந்துபட்டதும் கைம்மைத் துன்பத்துக்கு ஆளாக விரும்பாத பெண் குரங்கு ஒன்று உயர்ந்த மலையில் இருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.


‘கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்’3
எனும் அப்பாடலில் விலங்குகளின் செயல்பாடுகள் குறித்த கற்பிதங்களின் வழியாகவும் தலைவியர்க்குத் தன்னுயிர் நீக்கும் அறம் போதிக்கப் பட்டதையே இப்பாடல் உணர்த்துகிறது.
 
கடைக்கற்பும் சாவு விழைவும்:
கணவன் மறைவுக்குப் பின்னர் சாவைத் தழுவுதல் எனும் நிலைப்பாட்டை மனைவி தேர்ந்தெடுப்பதில் கடைக்கற்பு எனப்படும் கைம்மை நோன்பு நோற்றலுக்கும் முக்கியப் பங்கு இருந்துள்ளது. கணவன் மறைவுக்குப் பின்னும் உயிர்வாழும் பெண்ணுக்குத் தலை மழிக்கப்படும்; அழகு ஆபரணங்கள் பறிக்கப்படும்; சுவையான உணவுகள் மறுக்கப்படும்; பிற உலகியல் இன்பங்கள் அனைத்திலிருந்தும் அவள் விலக்கி வைக்கப்படுவாள். இந்த இழிந்த வாழ்க்கையின் மேல் கொண்ட அச்சமும் வெறுப்பும் அப்பெண்ணை இறப்பு நோக்கித் ண்டின.


கணவன் இறந்ததும் தீயில் வீழ்ந்து உயிர்விடும் இந்த இடைக்கற்பு நிலை பற்றிச் சில புறநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இப்பாடல்களில் கைம்மை நோன்பிருக்கும் கடைக்கற்பு இழிவானதாகச் சுட்டப்படுகிறது. பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தன் கணவனின் ஈமத்தீயில் விழுந்து உயிர்விடும் முன்பாக, அங்குக் கூடியிருந்த சான்றோரை நோக்கிக் கைம்மை நோன்பிருந்து உயிர்வாழ்வதன் இழிவை விளக்கியுரைப்பதாகப் புறநானூற்றுப் பாடல் (246) ஒன்று கூறுகிறது. அவள் தீப்பாய்ந்து உயிர்விட்ட போது, அக்காட்சியை நேரில் கண்டவராகிய மதுரைப் பேரலவாயர் சொல்லியதாகவும் ஒரு பாடல் (247) புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. வேணாட்டுத் தலைவனான ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவனுடைய உரிமை மகளிர் (மனைவியர்) உடன்கட்டையேறி இறந்ததாகக் குட்டுவன் கீரனார் பாடலில்4 (240) குறிப்பு காணப்படுகிறது. 


இப்பாடற் செய்திகள் யாவும், கணவனின் மறைவுக்குப் பின்னர் மனைவி தன்னுடைய சீரிய கற்பு நெறியை உயிர் விடுதல் மூலம் உலகிற்குப் பறைசாற்றிச் செ(õ)ல்வதே தலையாய அறம் என நிறுவப்பட்டிருந்த நிலையைத் தெரிவிக்கின்றன. தன்னுடைய இறப்பை மனம் விழைந்து ஏற்றுக் கொள்ளுதல் எனும் நிலை நோக்கிப் பெண்ணின் உளவியலைச் செலுத்துவதிலும், உயிர் நீக்கும் வினைக்கு அவளைத் தயார் படுத்துவதிலும் பண்பாடு சார்ந்த சில கூறுகளும் பங்காற்றியுள்ளன. அவற்றுள்  முக்கியமானவை கைம்மை நோன்பும் மறுமை நம்பிக்கையும்.


கணவனின் இறப்புக்குப் பின்னர் மனைவி கைம்மை நோன்பிருக்கும் நிலை மூன்றாம் நிலை கற்பாகக் குறிப்பிடப்படுகிறது. முதலிரு கற்பு நிலைகளும் மகளிருக்கு உயிர் விடுதல் எனும் தீர்வைப் பரிந்துரை செய்யும் நிலையில். இம்மூன்றாம் நிலைக் கற்பு அவளுக்கு உயிர் வாழ்தல் எனும் தீர்வைப் பரிந்துரை செய்கிறது. ஆனால் உயிர் விடுதல் எனும் முதலிரண்டு கற்பு நெறி நோக்கி கணவனை இழந்த பெண்ணின் மனதைச் செலுத்துவதில் இம்மூன்றாம் நிலைக் கற்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.


சங்க இலக்கியங்களில் கைம்மை நோன்பு குறித்தச் செய்திகள் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன. புறநானூற்றில் 125, 143, 224, 237, 242, 246, 248, 249, 250, 253, 261, 272, 280, 326, 353 ஆகிய பாடல்களிலும், நற்றிணையில் 272, 353 ஆகிய பாடல்களிலும் கணவனை இழந்த கைம்பெண்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இப்பாடற் செய்திகளின் வழியாக கைம்மை நோன்பிருக்கும் மகளிரின் இழிநிலை அறியப்படுகிறது. கணவனை இழந்த பெண்களை ஆளில் பெண்டிர் (நற்றிணை353), கழிகல மகளிர் (புறம்280), படிவ மகளிர் (நற்றிணை246), வயவற் பெண்டிர் (புறம்246), பருத்திப் பெண்டிர் (புறம்125), தொடிகழி மகளிர் (புறம்238) எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்ள் சுட்டுகின்றன.


சங்க காலத்தில் கைம்பெண்கள் இழிவான நிலையிலேயே சமூகத்தில் வைக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது. கைம்பெண்களின் நிலை ‘கைம்பெண்கள் நெய்யுண்பதில்லை; தண்ணீர்ச் சோற்றைப் பிழிந்து எடுத்துக் கொண்டு, அதனுடன் அரைத்த எள்ளையும், புளியையுங் கூட்டி வெந்த வேளைக் கீரையுடன் அவர்கள் உண்ணுவர்’ என்று குறிப்பிடுகிறார் கே.கே.பிள்ளை.5 கணவனை இழந்த மகளிர் மட்டுமின்றி, கணவனைப் பிரிந்த மகளிரும் தங்களுடைய பிரிவையே எண்ணியபடி துயரில் ஆழ்ந்திருக்கும் படி வலியுறுத்தப்பட்டதை,
‘அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய 
மென்றுகி லல்குன் மேகலை நீங்கக் 
கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் 
மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் 
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்’6
எனும் சிலப்பதிகார வரிகளின் மூலம் உணர முடிகிறது. 


கணவன் மறைவுக்குப் பின்னர் மனைவி தன்னுடைய அல்லது குடும்பத்தினுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் வேலைக்குச் செல்வதையோ அல்லது வேறு ஆடவரைச் சார்ந்திருப்பதையோ ஆண் மையச் சமூகம் விரும்ப வில்லை. பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் என்பது சமூகத்தின் ஆண் மையத்தை தகர்த்து விடும் என்பதால் அது மறைமுகமாகச் சில பண்பாட்டுக் கூறுகளின் மூலம் தடுக்கப்பட்டது. கணவனை இழந்த பெண்ணின் தோற்றப் பொலிவைக் குலைக்கும் நோக்கிலான பண்பாட்டுக் கூறுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 


புனையப்பட்ட பெண்ணழகு: 
பிற விலங்குகளைப் போலல்லாமல் மனிதனுக்கு மட்டுமே அழகு குறித்த பிரக்ஞை உண்டு. இப்பிரக்ஞை உடைமைச் சமூகத் தோற்றத்துக்குப் பின்னர்த் தோன்றியது. பெண்ணின் அழகு என்பது ஆண் மையச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது. இதில் பெண்ணுடலுக்கு மென்மை எனும் பண்பு பெரிதும் வலியுறுத்தப் படுகிறது. பெண் குறித்த இலக்கிய வர்ணனைகளில் சிறிய இடை என்பது முக்கியப் பங்கு வகிப்பது இதனால்தான். அனிச்சம் பூவின் காம்பைக் களையாமல் தலையில் சூடியதால் அதன் சுமையைத் தாங்க முடியாமல் முறிந்து போகும் அளவுக்கு மென்மையான இடைதான் பெண்ணுக்கு அழகு என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (‘உண்டி சிறுத்தல் பெண்டிர்க்கு அழகு’ என்பது போன்ற சொல்லாடல்கள் உருவானதும் இந்தப் பின்னணியில்தான்.) பெண்ணுக்கும் ஆணுக்குமான சமூகப் போராட்டத்தில் பெண்ணை வெல்வதற்கு இத்தகைய கருத்துக் கட்டமைப்புகள் ஆணுக்குத் தேவையாயிருந்தன. உடலளவில் போட்டியாளரின் வலிமையைக் குன்றச் செய்வதன் மூலம் அவரை எளிதில் வென்று தன்னுடைய ஆளுகைக்கு உட்படுத்தும் ஆண் மையச் சமூகத்தின் முயற்சிகளுக்கு அழகு குறித்த கற்பிதங்கள் உறுதுணையாயிருந்தன.


அழகு எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கற்பிதங்களின் மூலம் பெண்ணின் உடல் வலிமையை குன்றச் செய்வதுடன் நின்று விடவில்லை. அவளை இன்னும் பலவீனப்படுத்தும் நோக்கில் சில கருத்தாக்கங்கள் முன்வைக்கப் பட்டன. பெண்ணுடைய அழகு என்பது இயற்கையான தோற்றம் மற்றும் உடலமைப்போடு முழுமை பெற்று விடுவதில்லை என்று கூறப்பட்டதுடன், அது முழுமை பெறத் தேவையான மேலும் சிலகூறுகள் முன்வைக்கப்பட்டன. நீண்ட கூந்தல் வளர்த்தல், கூந்தலில் வாசமிக்க மலரணிதல், உடலுக்கு மஞ்சள் பூசுதல், கைவளை, காதணி போன்ற அணிகலன்கள் அணிதல், ஓசை எழுப்பும் காற்சிலம்பு அணிதல் போன்றவை அழகு என்ற பெயரில் பெண்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டன.


இடையில் மேகலை எனும் அணிகலன் அணிந்தனர். இது 32 கோவை முத்துக்கள் சேர்ந்த அழகிய வேலைப்பாடமைந்த அணிகலன் என்று குறிப்பிடப்படுகிறது. தலையில் செந்திரு அல்லது தெய்வ உத்தி எனப்பட்ட அணிகலனை அணிந்தனர். இதனை நச்சினார்க்கினியர் ‘சீதேவி’ என்று குறிப்பிடுகிறார். மணமான பெண்கள் தாலி, தோடு, வளையல் போன்றவற்றை அணிந்தனர். இவையின்றி பெண்ணழகு முழுமையடையாது என்று பெண்கள் நம்ப வைக்கப்பட்டதுடன் இவை எதுவுமின்றி அவர்கள் வெளியில் செல்லவே நாணுமாறு செய்யப்பட்டனர். சங்க இலக்கியங்களில் இத்தகைய அழகு சார்ந்த வர்ணிப்புக் கூறுகளைப் பல இடங்களில் காண முடிகிறது. ஆண்பெண் இடையிலான இயல்பான எதிர்பாலின ஈர்ப்பு இங்கு சில வரையறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அழகு படுத்தல்களின்றி ஓர் ஆணின் மனதை ஈர்க்க முடியாது என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுவதன் மூலம் பெண்கள்  இந்த ஒப்பனைகளை முழு மனதுடன் ஏற்கச் செய்யப்பட்டனர்.


குறிப்புகள்:
1.    கழாத் தலையார், புறநானூறு62.
2.    சிறைக்குடி ஆந்தையார், குறுந்தொகை57.
3.    கடுந்தோட் கரவீரன், குறுந்தொகை69.
4.    குட்டுவன் கீரனார் பாடிய அப்பாடலில் கோடேந்தல்குற் குறுந்தொடி மகளிரொடு ஆய் அண்டிரன் தேவருலகத்தையடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்வுரிமை மகளிர் உடன்கட்டையேறி உயிர்விட்டனரா அல்லது உடனுயிர் மாய்ந்து இறந்தனரா என்று தெளிவாக அறிய முடியவில்லை. ஆய் அண்டிரனின் உடம்பு எரிபடும் ஈமத்தீயில் விழுந்து அவர்கள் உயிர் நீத்ததாக அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை தன்
உரையில் குறிப்பிடுகிறார். புறநானூறு (இரண்டாம் தொகுதி), கழக வெளியீடு, திருநெல்வேலி, 1972, பக்.89.
5.    கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, பக்.141.
6.    இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், சிலப்பதிகார மூலமும், அந்திமாலை சிறப்புச் செய்காதை 4751, அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், 1978, பக்.125.

No comments:

Post a Comment

கருத்துக்கள்