இணைய வெளியில் ஆசிரியர்கள் - கணேஷ் சுப்ரமணி


சட்டென்று மாறிய வானிலையைப் போல் கொரோனா காலம் கல்விச் சூழலை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. ஆசிரியர்களைச் சற்று விலகியிருக்கச் சொல்லிவிட்டு, தொழில்நுட்பம் கல்விப்பணியைக் கையிலெடுக்கிறது. இது ஒன்றும் திடீர் மாற்றமில்லைதான். தொன்னூறுகளில் கல்விப் பணிகளில் கணினி பயன்படத் தொடங்கிய போதே இந்தச் சூழ்நிலை வெளித் தெரியாமல் கருக்கொண்டு விட்டது. இணையப் பயன்பாடு பரவலாகத் தொடங்கிய இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் கல்வியில் மேலோங்கியது. இப்படி மெல்ல மெல்ல நடந்த ஓர் அசைவியக்கம் கொரோனாவால் திடுக்கென்று வேகம் பெற்று கல்வியமைப்பிலிருந்து வகுப்பறைகளை அவசரமாக நீக்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைக்கு மின்வழிக் கல்வித் தொழில்நுட்பத்தை நிர்வகிப்பவர்களாக ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்கள் இல்லாமலும் கற்பித்தல் பணி நிகழ்வதற்கான சூழமைவு உருவாக்கப்பட்டுவிட்டது.

130 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் கல்விச் சந்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரியது. தொடர்ந்து அதிகரிக்கும் மாணவர்களால் அது மேலும் விரிவடைகிறது. இதை நன்கு உணர்ந்தவர்கள் கார்ப்பரேட் எனப்படும் பெருமுதலாளிகள். அவர்கள்தான் தற்போதைய இந்தியக் கல்விச் சந்தையை இயக்குபவர்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வகுக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் பெரும்பாலும் அம்முதலாளிகளின் நலன்களைக் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. அல்லது (நேரடியாகவோ மறைமுகமாகவோ) அவர்களின் ஆலோசனைப்படியே வடிவமைக்கப்பட்டவை.

முதலாளிகளைப் பொருத்தவரை உற்பத்தி பெருக வேண்டும். அதைப் பணம் கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். ஆனால் அந்த உற்பத்திக்கான உழைப்பைத் தரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். அதற்குத் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தொழில்நுட்ப யுகத்தில் முதலாளிகள் வலுப்பெற்றிருக்கிறார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் பலம் குறைந்திருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆனால் அதற்கு நேர் முரணாக மனித வளத்தின் தேவை குறைந்து கொண்டே வருகிறது. வேலையிழப்பு, வேலையின்மை போன்றவை மிகப்பெரும் சிக்கல்களாக உருவெடுக்கின்றன. தொழிற்சங்கங்கள் நலிவடைந்திருக்கின்றன. தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போயிருக்கின்றன.

கல்விச் சந்தையில் தொழிலாளர்களின் இடத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் இடத்தைத் தொழில்நுட்பம் பதிலீடு செய்வதைக் கல்வி முதலாளியம் விரும்புகிறது. அதற்கு மாணவர்கள் முக்கியம். ஏனென்றால் அவர்கள்தான் வாடிக்கையாளர்கள். அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அது ஊக்குவிக்கிறது. நிறைய புதிய படிப்புகளை உருவாக்குகிறது. உதாரணமாக, பாரம்பரியச் சமையல் கலை வல்லுனரிடம் ஒருவன் சமையல் கற்பதைத் தடுத்து, அதே சமையல் கலையைக் கல்வி நிறுவனங்களிடமிருந்து கற்கச் சொல்கிறது. அப்படிச் செய்வதன் நோக்கம் கல்விச் சந்தையின் விரிவாக்கம்தானே தவிர கல்வி வளர்ச்சி அல்ல. அந்தச் சந்தையில் முதலாளிகளுக்குக் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை ஆசிரியர்களுக்கும் கல்வி நிறுவன உள்கட்டமைப்புகளுக்கும் செலவிடும் சிரமத்தைத் தொழில்நுட்பம் குறைக்கிறது.

வகுப்பறையில்லாக் கல்வி’, ‘ஆசிரியரில்லாக் கல்வி போன்ற நடைமுறைகளைத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்துகிறது. மின்வழிக் கல்வியால் நிகழப் போகும் அபரிமிதமான இணையச் சேவை நுகர்வை அறுவடை செய்ய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தயாராகிவிட்டன. கொரோனாவால் பல தொழில்கள் முடங்கிப் போயிருக்கும் நிலையில், கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் ஆன்லைன் வகுப்புகளால் கடந்த மூன்று மாதங்களில் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. Unacademy, vidyakul, Byjus, Khan academy, Doubtnut, Extramarks போன்ற பல நிறுவனங்கள் மின்வழிக் கல்விச் சந்தையில் குதித்துள்ளன. குறிப்பாக, இவை பள்ளிக்கல்வி, நுழைவுத் தேர்வுகளைக் குறிவைத்து இயங்குகின்றன. சிறந்த தொழில்முறை ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை ஆயிரக்கணக்கான காணொலிக் கோப்புகளாக உருவாக்கித் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் (மாணவர்கள்) தருகின்றன. இது போன்ற சூழல் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கல்வி கற்பித்தலில் ஆசிரியர்களின் பங்கைக் குறைக்கும் விதமான முயற்சிகள் அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்களும் தகவல் வடிவில் (data) மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக, திறன்மிகு வகுப்பறைகள் (smart classrooms), கணினி வழி கற்றல், மின் தொகுப்புகள் (e-content), நுண் கற்பித்தல் (micro teaching) போன்றவை உயர்கல்வி நிலையங்களில் பெரிதளவில் வலியுறுத்தப்பட்டன. இவை தவிர பள்ளிக் கல்வியிலும் இணைய வழிக் கற்றலுக்குக் (e-learning) குழந்தைகளைப் பழக்கப்படுத்த ஏராளமான களங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு மாணவன் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லாமல் அங்கு கற்றுத்தரப்படும் அனைத்துப் பாடங்களையும் கூகுள் (google), யூடியூப் (youtube) வழியாக எளிதாகப் பெற முடியும். ஒரு கல்வி நிறுவனம் மாணவனை நேரில் பார்க்காமலே அவனிடம் கட்டணத்தைப் பெற்று இந்த முறையில் கல்வியை வழங்கி, அவனுடைய கற்றல் திறனை மதிப்பிட்டுச் சான்றிதழ்களை வழங்க முடியும். இப்படியான ஒரு கல்வி முறை பரவலடையும் போது அங்கு ஆசிரியருக்கு என்ன வேலை?

பள்ளி / கல்லூரிகளுக்குச் சென்று பலதரப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் போன்றவர்களுடன் பழகி, உரையாடி, உணவு உண்டு கல்வி பயின்ற இதுநாள் வரையிலான தலைமுறை ஒரு புறம். இவை எதுவுமின்றி மனிதர்களுடனான உறவுகள் அற்ற, கணினி அல்லது அலைபேசி திரையின் முன்னால் அமர்ந்து கல்வி கற்கத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறை ஒரு புறம். இந்த இரண்டு தலைமுறையினருக்கும் இடையிலான முரண்கள் அடுத்த சில ஆண்டுகளில் பேருருக் கொள்ளும். ஸ்கூல் பேக், புத்தகங்கள், பேனா, பென்சில், ரப்பர், வீட்டுப் பாடம், லீவ் லெட்டர் சீருடை, மதிய உணவு, மரங்கள், பறவைகள், அணில்கள், தேன்கூடு போன்ற சொற்கள் கல்விச் சாலைகளில் புழங்கிய காலம் முடிவுக்கு வருகிறது. ஸ்மார்ட் போன், சாப்ட்வேர், டேட்டா, ஆப், காட்ஜெட், ரீசார்ஜ் போன்ற சொற்களே இனி மாணவர்களின் மொழியை நிரப்பும்.

இதற்கு முன்பு பள்ளிகளில் காலத்தின் அவசியத்தைக் கற்றுத் தந்தார்கள். இனி காலத்துடன் டேட்டாவின் (data) அவசியமும் கற்றுத்தருவார்கள். ஒரு மணி நேர ஆன்லைன் வகுப்பு பயனுள்ளதாக இல்லையென்றால் அம்மாணவனுக்கு ஏறத்தாழ 400 எம்பி (MB) டேட்டா வீண். ஆனால் இணையச் சேவை வழங்கும் முதலாளிக்கு லாபம்தான். மனிதர்களுடன் பழகாமல் கற்கும் கல்வி நிச்சயம் மனிதக் குலத்துக்கான கல்வியாக இருக்காது. இன்னொரு மனிதனின் மகிழ்ச்சியை, வலியை, கோபத்தை, அழுகையை, சிரிப்பை உணராமல் ஒரு மாணவன் கற்கும் கல்வி என்ன மாதிரியானதாக இருக்கும்? இந்தக் கேள்விக்கான பதில் என்னவாக இருந்தாலும் இனி கல்வி என்பது இப்படித்தான் இருக்கப் போகிறது.

மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரை நேரில் பார்க்காமலே மானசீகமாக அவரிடம் வித்தை கற்கும் ஏகலைவனைப் போல் கல்வி கற்க மாணவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த மானசீகத்தின் பாத்திரத்தைத் தொழில்நுட்பம் ஏற்கிறது. அதனால் துரோணர் வேலையிழக்கிறார். மின்வழிக் கற்றலில் மாணவர்கள் கற்பதில் இருக்கும் சிரமங்கள் பெருமளவு உணரப்படுகிறது. அவற்றையெல்லாம் தொழில்நுட்பம் எளிதாகச் சரி செய்யும். என்னதான் தொழில்நுட்பம் வழியாகக் கற்றாலும் வகுப்பறையில் ஆசிரியரிடம் கற்பது போல் வருமா என்கிற வாதமெல்லாம் அடுத்தடுத்த தொழில்நுட்பச் சாத்தியப்பாடுகளால் வலுவிழந்து தேய்ந்து மறையும். தொழில்நுட்பத்தால் தர முடியாத மேம்பட்ட கற்றல் சூழலைத் தர முடிந்தால் மட்டுமே ஆசிரியர் இனம் பிழைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறான திறன்மிகு ஆசிரியர்கள் உருவாவதும் எப்போதோ தடுக்கப்பட்டுவிட்டது.

கல்வியியல் முறைகளில் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்து, அதைத் தாண்டிய அறிவு நுண்மை, சிந்தனைப் பரிமாற்றம், ஆக்கத்திறன் போன்றவை இல்லாதவர்களாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் தொழில்நுட்பத்தைத் திறம்படக் கையாள்வதே சிறந்த ஆசிரியருக்கான திறன்களாக உணரத் தொடங்கிவிட்டார்கள். பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட ஆசிரியர் – மாணவர் உறவு என்பது இனி வேறு மாதிரியானதாக இருக்கும்; அல்லது அப்படி ஒன்றே இருக்காது.

இந்தியாவில் இணையப் பயன்பாட்டு வெளிக்குள் வராத மக்கள் தொகை இன்னும் அதிகம். இன்னமும் பெரும்பான்மை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதி என்பது சாத்தியப்படாத நிலையே இருக்கிறது. ஆனால் அவர்களும் மின்வழிக்கல்விக்குத் தங்களைத் தயார்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு நகர்த்தப்படுகிறார்கள். மெதுவாக நிகழ்ந்து வந்த இந்த நகர்வு கொரோனாவால் வேகமெடுத்துள்ளது. இணையவழிக் கல்வியில் கற்பதும் கற்பிப்பதும் அதில் பயிற்சியோ பழக்கமோ இல்லாத மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய சவால்தான்.

குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிவுற்ற, கிராமப்புற ஏழை மாணவர்களின் சிரமங்கள் அதிகார மையங்களின் கவனத்துக்கு வராதவை. ஸ்மார்ட் போன் வாங்கவும், அதை ரீசார்ஜ் செய்யவும் வசதியில்லாத மாணவர்கள், செல்போன் அலைவரிசை சரியாகக் கிடைக்காத பகுதிகளில் வசிப்பவர்கள், மின்வழிக் கற்றலுக்குரிய தொழில்நுட்பப் பயிற்சி பெறாதவர்கள் ஆகியோர் இந்தப் புதிய கல்விச் சூழலில் விளிம்பை நோக்கித் தள்ளப்படுவார்கள். அவர்கள் மேற்சொன்ன அனைத்து வாய்ப்பு, வசதிகளையும் பெற்ற மாணவர்களுடன் போட்டியிட்டாக வேண்டிய நிலை துரதிர்ஷ்டவசமானது. பெரும் போராட்டாங்களுக்குப் பின் சாத்தியமாகியுள்ள பெண் கல்வியும் மின்வழிக் கல்வியால் பாதிப்பை எதிர்கொள்கிறது. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண் பிள்ளைக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தரத் தயாராயில்லாத நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களில் பெண் கல்வி பின்னடைவைச் சந்திக்க நேரிடுகிறது. இப்படியான பல்வேறு முரண்களைச் சமநிலைப்படுத்த வேண்டிய கடினமான பொறுப்பு ஆசிரியர்களுக்கு உருவாகியுள்ளது.

புகைப்படத் தொழில்நுட்பம் வந்த போது ஓவியக்கலையின் இருப்பு கேள்விக்குறியானது. அப்போது நவீன ஓவியம் என்கிற பெயரில் புகைப்படத் தொழில்நுட்பத்தால் தர முடியாத படைப்புகளை உருவாக்கி ஓவியக்கலை தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இன்று ஆசிரியர்கள் முன்னால் இருப்பதும் இந்த மாதிரியான சவால்தான். ஆனால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது கூகுள், யூடியூப் போன்ற வலுவான எதிரிகளை. இது மனிதவளத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையிலான போட்டி. உண்மையில் போராட்டம் என்று கூட சொல்லலாம். ஆசிரியர்களின் இருக்கைகளை நிரப்ப அல்லது காலி செய்ய தொழில்நுட்பம் மிகுந்த பலத்துடன் வருகிறது. அதைத் தடுக்க முடியாது. ஆனால் ஜெயிக்க முடியும். ஆசிரியர்கள் அதற்குத் தயாராகித்தான் ஆக வேண்டும். தொழில்நுட்பம் வானில் இருந்து வந்ததல்ல. மனித மூளையில் உருவானதுதான்.

பூமிப் பரப்பில் வசிக்கும் உயிரினங்களில் மிகுந்த ஆற்றல் மிக்கது மனித இனம்தான். ஆனால் மனிதன் தன்னை விடப் பேராற்றல் மிக்க ஒன்றை உருவாக்குவதில் அலாதி இன்பம் கொள்பவன். அப்படி அவன் உருவாக்கிய இரண்டு விஷயங்களில் ஒன்று கடவுள்; மற்றொன்று தொழில்நுட்பம்.

5 comments:

  1. சற்று மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை. ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி சாத்தியமில்லை.

    ReplyDelete
  2. Dear prof, salute you for your wonderful reflaction (reflection +action)

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி சாத்தியமே

    அதாவது ஒரு முறை பதிவு செய்யப்பட்ட வீடியோவை பல ஆண்டுகள் பயன்படுத்தலாம். பிறகு ஆசிரியருக்கு அங்கு என்ன வேலை.
    35 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை மாறி விடும். அங்கு ஆசிரியர் தேவையே இல்லாமல் போகலாம் அல்லவா?
    இதைத் தான் ஆசிரியர் கணேஷ் சுப்ரமணி குறிப்பிடுகிறார்.

    by
    இ.துரைப்பாண்டியன்
    மதுரை

    ReplyDelete
  4. தற்போதைய இணைய வழிக் கல்விச்சூழல் தற்காலிகமானதாக இருக்குமென்று நினைக்கிறேன். பள்ளி/ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் எவருமே தற்போதைய இணைய வழிக் கல்வி முறையை விரும்புவில்லை. மாணவர்களும்கூட இதை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. பெருந்தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பழைய நிலைமைக்குக் கல்விச்சூழல் மாறும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு. அதேவேளையில் பல்கலைக்கழக/ கல்லூரி படிப்புகளில் இணைய வழிக் கல்வி முன்னைய நிலையை விட வேகம் பெறவும், கட்டாயமாக்கப்படுவதற்குமான சாத்தியங்கள் ஏராளம்.

    ReplyDelete

கருத்துக்கள்