ஆசிரியம் - கணேஷ் சுப்ரமணி

மாவீரன் அலெக்ஸாண்டருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் அவன் அளவுக்கு அதிகமாகவே வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தான். அதைக் கண்ட அனைவருக்கும் பெரும் வியப்பு. அவனிடம் கேட்டார்கள். 'இவ்வளவு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கு என்ன காரணம்? தந்øதாயானதில் உண்டாகும் இயல்பான உணர்வெழுச்சியா? இந்தப் பூமிக்கு மீண்டும் ஒரு மாவீரன் பிறந்து விட்டான் என்றா? நீ மிச்சம் வைத்த நாடுகளையும் வெற்றி கொள்ள ஒரு பேரரசன் பிறந்து விட்டான் என்றா?' என்றெல்லாம். அலெக்ஸாண்டர் சொன்னான்: 
'அவற்றையெல்லாம் விடப் பெரிய காரணம், என் ஆசிரியர் உயிருடன் இருக்கும் போதே எனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்பதுதான். என்னைப் போலவே அவனுக்கும் என் ஆசிரியரிடம் பாடம் கற்கும் பேறு வாய்த்திருக்கிறதே'. உலகத்தையே தன் காலடியில் பணிய வைத்த அலெக்ஸாண்டரைத் தன்னிடம் பணிய வைத்த அந்த ஆசிரியர் அரிஸ்டாட்டில்.

ஆசிரியராயிருப்பது அத்தனை மகத்தானது. மாணவர்களால் கொண்டாடப்படும் சிறந்த ஆசிரியர்கள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராயிருந்து ஓய்வு பெற்ற போது, அவரை மாணவர்கள் ஒரு சாரட் வண்டியில் அமர வைத்து, குதிரைகளுக்குப் பதிலாகத் தாங்களே தோளில் சுமந்து ரயில் நிலையம் வரை அழைத்துச் சென்றார்கள். மாணவர்களின் மனத்தில் நல்ல ஆசிரியருக்கென ஓர் உயர்ந்த இடம் எப்போதும் உண்டு.


ஆசிரியருக்கான மதிப்பைத் தர மாணவர்கள் எல்லாக் காலத்திலும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அம்மதிப்புக்கான தகுதியைத் தங்களிடம் ஏற்படுத்திக் கொள்வதில் சில வேளைகளில் ஆசிரியர்கள் தவறுகிறார்கள். மாணவர்களின் உரிமைகள், தன்மானம் பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ளாத ஆசிரியர்களுக்காக இன்றும் பல மாணவர்கள் கேன்டீனில் வடை வாங்குவது, கைப்பையைச் சுமந்து போய் மேசையில் வைப்பது, தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.


வியாபாரமாகிப் போன கல்விச் சூழலில் ஆசிரியர்களின் இடம் சிக்கலான பாதையில் தவிக்கிறது. அறிவு என்று பொதுப்புத்தியில் திணிக்கப்பட்ட ஒன்றை நோக்கி மாணவர்களைத் தள்ளும் உடலுழைப்பாளர்களாக ஆசிரியர்கள் மாறிவருகின்றனர். அதிக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்கும் இயந்திரங்களாக ஆசிரியர்கள் சிறப்பாகவே செயல்படுகின்றனர். இன்றைய கல்விச்சூழல் மாணவர்களிடம் உண்டாக்கும் அழுத்தம் ஆசிரியர்கள் மீதான வெறுப்பாகவும் வெளிப்படுகிறது.

 
வகுப்பறையில் ஆசிரியையைக் குத்திக் கொல்லும் ஒன்பதாம் வகுப்பு மாணவனையும், கல்லூரி முதல்வரை ஆயுதங்களால் தாக்கிக் கொல்ல முயன்ற மாணவர்களையும் இப்படிப்பட்டச் சமூகம் தரிசிப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. தங்களை வடிவமைப்பவர்களாகவோ அல்லது தங்களின் அடையாளங்களை மேம்படுத்துபவர்களாகவோ ஆசிரியர்களை நினைப்பதற்கு இன்று பெரும்பாலான மாணவர்கள் தயாரில்லை. இது ஆசிரியர்  மாணவர்  கல்வி எனும் முப்பெரும் நிலைகளிலும் இறுகிப் பிணைந்து விட்ட சிக்கல்.


டாக்டர். அம்பேத்கர் தன்னுடைய ஆசிரியரின் பெயரைத்தான் தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டார். இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத அவருடைய ஆளுமை அவருடைய ஆசிரியரின் பெயரால் அறியப்படுகிறது. இன்றும் தன்னுடைய ஆசிரியரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் மாணவர்கள் உண்டு. ஆனால் அப்படியெல்லாம் நினைக்கப்படத் தகுதியற்ற ஆசிரியர்களும் இன்று அநேகம். ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை எனும் செய்தியைப் படிக்கும் போது, ஆசிரியரின் சொற்களை எந்தளவுக்கு அந்த மாணவன் முக்கியமானதாகப் பாவித்திருக்கிறான் என்கிற எண்ணம் வரும். ஆனால் அந்த ஆசிரியர்?


ஆசிரியர்களின் தரமும், உயர்ந்த ஆளுமைப் பண்புகளும் பெருமளவு மாறிப் போயிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் சட்டென நினைவுக்கு வருவது நியமனங்களில் நடக்கும் முறைகேடுகள். அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியராவதற்கு பணமும் கட்சிகளில் செல்வாக்கும் அவசியமான தகுதி என்றாகி வரும் சூழலில் மகோன்னதமான ஆசிரியர்களைத் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது அப்பாவித்தனமான சமூகமாகத்தான் இருக்க முடியும். ஓர் ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு வரலாற்று ஆதாரமாக விளங்கும், அவுரங்கசீப் தன்னுடைய ஆசிரியருக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வருகிறது. இன்றைய மாணவர்களிடம் கேட்டால் அது போன்ற ஆயிரம் கடிதங்கள் குவியும்.


தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் எழுதிய 'என் சரித்திரம்' நூலில் தன்னுடைய ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பற்றித்தான் அதிகம் எழுதியுள்ளார். அது தவிர அவருடைய வரலாற்றை 'மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம்' என்ற பெயரிலும் நூலாக எழுதினார். அந்நூலில் தன் ஆசிரியரின் பெயரைக்கூட குறிப்பிடாமல் பிள்ளையவர்கள் என்றே குறிப்பிடுவார். அதைப் போன்ற குருகுலக் கல்வியின் மதீப்பீட்டு எச்சங்கள் இன்றைய மாணவர்களுக்குத் தேவையில்லைதான். ஆனால் ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவில் அடிப்படை அம்சங்களையே அழித்தொழிக்கும் கார்ப்பரேட் கல்விச் சூழல் தற்போதையது.


கல்வி வியாபாரத்தில் கோலாச்சும் தனியார் நிறுவனங்கள் மாணவன் எனும் வாடிக்கையாளரிடம் கல்வியைக் கூவி விற்கும் விற்பனைப் பிரதிநிதிகளாக ஆசிரியர்களை மாற்றியுள்ளன. ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் எனும் உயரிய விழுமியம் இருந்த இடத்தில் இன்று அவரிடமிருந்து கொடுத்த பணத்திற்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ளுதல் எனும் அதல பாதாளத்தில் கல்விச் செயல்பாடு வீழ்ந்துள்ளது.


இச்சூழலில் ஒரு விற்பனைப் பிரதிநிதிக்குரிய மதிப்பைத் தாண்டி ஆசிரியர் மீதான மதிப்பு உயரத் தேவையில்லை என்பதான நிலையைக் கார்ப்பரேட் உலகம் உருவாக்குகிறது. ஆசிரியர்களும் பழைய மதிப்பீடுகளிலிருந்து மாறவில்லை. வகுப்பிலும் வெளியிலும் மாணவர்கள் தன்னிடம் பயந்து நடுங்கிப் பேச வேண்டும் என்னும் மதிப்பீடுகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னும் வாழ்கிறார்கள். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' எனும் பழைய குருகுலக் கல்விக்கால வரிசையமைப்பை இன்றைய மாணவர்கள் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மேற்கண்ட வரிசையமைப்பு உருவானதில் சாதியத்தின் பங்கு உள்ளது. தெய்வத்துக்கும் முன்னதாக, கற்றுக் கொடுக்கும் உயர்நிலையில் இருக்கும் குரு உயர்சாதியைச் சேர்ந்தவர் என்கிற நிலை அப்பொழுது இருந்தது. எனவே குரு (குரு இனம்) என்பவர் உயர்வாகப் போற்றப்பட வேண்டியவர் எனும் கருத்து உருவாகி, அதுவே இன்று வரை ஆசிரியர்களின் மனத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆசிரியப்பண் புனிதமான பணி எனும் கருத்தியலை வளர்த்துக் கொண்டு அதன் வழியாகத் தம்மைப் புனிதர்களாய் வழிபடும் மாணவர்களை எதிர்பார்க்கிறார்கள். உடைபட மறுக்கும் இந்தப் புனிதங்கள் ஆசிரியர் சமூகத்தின் பலவீனம்.


கார்ப்பரேட் மயம், பழைய குருகுல மதிப்பீடுகள் போன்றவற்றைத் தாண்டி இயல்பான, குறைந்த பட்ச கண்ணியத்துடனான ஆசிரியர்  மாணவர் உறவு குறித்த விழுமியங்களைக் கட்டமைக்க வேண்டியது தற்போதைய கல்விச்சூழலில் அவசியம். வேகமாக மாறிவரும் மாணவர் சமூகமும், பெரும்பாலும் மாறாத ஆசிரியர் சமூகமும் அதனைப் புரிந்து கொள்ளும் விதமான சமூகக் கருத்தியல்களை உருவாக்க வேண்டியது கல்வியின் தேவை. உலகமயம் கொண்டு வரும் கல்விச் சவால்களை எதிர்கொள்ள இந்தப் புரிதல் அவசியம். இறுதியாக, கல்விச்சேவை, புனிதப்பணி என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இயல்பான கற்பித்தல் பணியில் அறிவை விரிவு செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.

1 comment:

  1. உடைபட மறுக்கும் இந்தப் புனிதங்கள் ஆசிரியர் சமூகத்தின் பலவீனம். Well said maappi. This article is written with very good analytical perception. Good one.

    ReplyDelete

கருத்துக்கள்