இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 2 - கணேஷ் சுப்ரமணி

பாரதிதாசனின் இதழியல்
பாரதிதாசனின் இதழியல் என்பது பாரதியில் இருந்தே தொடங்குகிறது. பாரதியின் கலகக் குரல், துணிவு, தீவிரம், போர்க்குணம் ஆகிய அனைத்தும் பாரதிதாசனின் இதழ்ப் பணிகளிலும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது; ஆனால் வேறுபட்ட சித்தாந்தத் தளங்களில். பாரதிதாசனின் தொடக்க காலப் பாடல்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுப் பாடல்களாக இருந்ததால், இதழ்களில் அவற்றைத் தனது சொந்தப் பெயரில் வெளியிட அவரால் இயலவில்லை.

மேலும் தான் வகித்து வந்த ஆசிரியப்பணி பாதிக்கப்படாமலிருக்கவும் அவருக்கு ஒரு புனை பெயர் தேவைப்பட்டது. பாரதி மீது தான் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக மதுரையிலிருந்து வெளிவந்த தேசோபகாரி எனும் இதழுக்குப் ‘புதுவை கே.எஸ்.பாரதிதாசன்’ என்ற புனை பெயரில் முதன்முதலில் அவர் கவிதை எழுதினார். பின்னர் அந்தப் பெயரே அவருக்கு நிரந்தர அடையாளமாகி நிலைத்துவிட்டது.
தொடக்க காலத்தில் தேசசேவகன், துய்ப்ளேச்சு, புதுவை கலைமகள், தேசோபகாரி, ஜனவிநோதினி, தேசபக்தன், ஆனந்தபோதினி, ஸ்வராஜ்யா ஆகிய இதழ்களின் வாயிலாகத் தேசப்பற்றை ஊட்டும் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். இவை மக்கள் மனத்தில் தேசப்பற்றை ஊட்டும் விதமாக அமைந்தன. இவை தவிர, 1930ஆம் ஆண்டில் தாய்நாடு எனும் இதழில் மறைமுக ஆசிரியராகவே விளங்கினார். இதில் அதிகார வர்க்க அடக்குமுறைகளுக்கு எதிராகத் தன் தீவிர எழுத்தாற்றலை வெளிப்படுத்தினார்.
தொடக்கத்தில் காந்தியம், தேசியவாதம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று போக்கு காட்டிய பாரதிதாசனின் எழுத்துகள், 1926ஆம் ஆண்டில் பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட பின்னர், மாற்றம் பெற்றன. மயிலம் ஸ்ரீசுப்பிரமணியர் துதியமுது பாடிய அதே கவிஞர், தீவிர நாத்திகராக மாறினார். பெரியாரின் குடியரசு இதழ் பாரதிதாசனுக்குள் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியது. நாத்திகரானது மட்டுமின்றி, தேசியவாதத்திலிருந்து விலகி, திராவிட இனவாதம் எனும் திசையில் பயணித்தார். இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் பெரும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். இது அவருடைய இதழ்ப்பணிகளில் சில பாதிப்புகளை எற்படுத்தியது. பாரதியைப் போன்றே தன்னுடைய கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு வசதியாகத் தனி இதழ் ஒன்றைத் தொடங்க விரும்பினார். இயக்கத் தோழர்களான நோயல், லகாஷ் ஆகியோருடன் இணைந்து 1930ஆம் ஆண்டு புதுவையிலிருந்து புதுவை முரசு எனும் வார இதழைத் தொடங்கினார்.
ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம், தமிழரசு, அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு, ஜோதி, குமரிமலர், தொழிலாளர் மித்ரன், முல்லை, சக்தி, ஊழியன், கிராம ஊழியன் போன்ற பல இதழ்களில் தமிழர் முன்னேற்றம், பெண் விடுதலை, திராவிடத் தேசியம் போன்ற கொள்கைகளைப் பறைசாற்றும் தம் படைப்புகளை வெளியிட்டார்.
பாரதிதாசனின் இதழியற் பணிகளில் ஆகப்பெரும் சாதனையாக மதிக்கப்படுவது குயில் இதழ். இந்தத் தினசரி இதழ் 1948 செப்டம்பர் பதிமூன்றாம் நாள் தொடங்கப்பட்டது. இந்நாளிதழ் சிறிது காலத்திலேயே நிறுத்தப்பட்டு, 1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாத இதழாக மீண்டும் வெளிவந்தது. 1961ஆம் ஆண்டு பிப்ரவரி இதழுடன் அதுவும் நின்று போனது. இவ்விதழ் வாயிலாகத் தான் ஏற்றுக்கொண்ட திராவிடத் தேசியம் மற்றும் ஆரிய எதிர்ப்புக் கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் பாரதிதாசன்.
பாரதிதாசனின் இதழியற் படைப்புகளின் பொதுவான உள்ளடக்கங்களாக அமைந்தவை தமிழ்நாடு, திராவிட நாடு, தமிழ் மொழி, உலக அமைதி, பெண் விடுதலை, ஆரிய எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், தொழிலாளர் உரிமைகள், இந்தி எதிர்ப்பு, பொதுவுடைமைக் கொள்கைகள், இலக்கியக் கருத்துகள் போன்றவை. இவற்றுள் பல கருத்துகள் பாரதியாரின் கொள்கைகளிலிருந்து முரண்பட்டவை. என்றாலும், தன் கொள்கைகளில் பாரதியார் காட்டிய அதே தீவிரம், பாரதிதாசனிடமும் முழுமையாகத் தென்படுகிறது. பிற்காலத்தில் பாரதியிடம் தென்பட்ட தடுமாற்றமும் இவரிடம் தென்படுகிறது. உதாரணமாக, இந்திய  சீனப் போரின்போது பாரதிதாசன் மறுபடியும் தேசியவாதக் கொள்கைக்கு வருகிறார். சீனாவுக்கு எதிரான தேசிய எழுச்சியை வலியுறுத்தி குயில் மாத இதழிலும், பிற தமிழ் இதழ்களிலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். சீனாவை எதிர்ப்பது தமிழர் கடன் எனும் கவிதையிலம் பாரதப் பாசறை எனும் நாடகத்தின் பகுதிகளிலும் பாரதிதாசனின் தேசியவாதக் கொள்கைகளை மீண்டும் காணமுடிகிறது.
படைப்பாளுமை ஒப்பீடு
ஆளுமை நோக்கில் பார்க்கும் போது பாரதி மற்றும் பாரதிதாசனின் இதழியற் பணகிளில் பல ஒற்றுமைகள் தென்பட்டாலும், சிற்சில வேற்றுமைகளும் தோற்றம் காட்டுகின்றன. பாரதிக்கு வாய்த்த ஆங்கிலக் கல்வி மற்றும் பன்மொழியறிவு (1904ஆம் ஆண்டு இதழியற் பணிக்கு வரும்போதே அவருக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி, வடமொழி ஆகிய நான்கு மொழிகளில் தேர்ச்சியுண்டு.) காரணமாக அவருடைய இதழ்ப் பணிகள் உலகளாவிய சிந்தனைகளுடன் அமைந்தன. பிற மாகாணங்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள், அயல்நாடுகளின் அரசியல், கலை, இலக்கிய, கலாச்சாரப் போக்குகள் என விரிவான தளங்களில் நின்று தனது ஆற்றலைத் தீவிரமாக வெளிப்படுத்தினார்.
பாரதியின் இந்த உலகளாவியப் பார்வை அவருடைய படைப்பாளுமையிலும் பெரும் தாகம் செலுத்தியது. உலக அளவில் நிகழ்ந்து வந்த புத்திலக்கியப் போக்குகள் அவரைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்தன. வசன கவிதை முயற்சியில் அவர் இறங்கியதற்கும் இதுவே காரணம். யாப்பிலக்கண ஒழுங்கமைவுக்குள் அமைந்த மரபுக் கவிதைகள் இதழ்களின் பத்தியமைப்புக்குள் அடங்குவதற்குச் சிரமம் கொள்ளும். அதற்குரிய மாற்று வடிவமாக யாப்பை மீறிய கவிதை வடிவம் அவரை ஈர்த்தது. புதுவகை இலக்கிய வடிவங்களைத் தமிழில் சோதித்துப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
பாரதிதாசனின் இதழ்ப்பணிகள் பெரும்பாலும், தமிழ், தமிழர், தமிழ்நாடு, திராவிட நாடு எனும் எல்லைகளுக்குள் அடங்கி நிற்பவை. புத்திலக்கிய வடிவங்களில் பாரதிக்கு இருந்த தீவிர ஈடுபாடு பாரதிதாசனுக்கு இல்லாமற் போனதற்கு இதுவும் முக்கியக் காரணமாகலாம். அவர் தமிழ் இலக்கிய மரபுகளை விட்டு விலகிச் செல்ல விரும்பாதவராகவே தோன்றுகிறது.
நிறைவு
பாரதி  பாரதிதாசன் இருவருடைய கருத்தமைவுகளும், கொள்கைகளும் ஒன்றிலிருந்து ஒன்று விலகியவையாக, முரண்பட்டவையாக இருந்த போதிலும், பாரதிதாசனின் படைப்பாக்கத்தில் பாரதியின் சில ஆளுமைகள் ஊடுருவிச் செல்கின்றன.
இதழியற் பணிக்குத் தேவையான துணிவும், நெஞ்சுறுதியும், படைப்பாற்றலும், புதுமை வேட்கையும் பாரதியிடம் இயல்பாகவே காணப்பட்டன. பாரதிதாசன் இவற்றைத் தன்னியல்பாகவும், பாரதியிடமிருந்தும் பெற்றுக் கொண்டார்.
புதுவகை இலக்கிய வடிவங்கள் குறித்த சிந்தனைகளை இதழியற் பணிகள் பாரதிக்குக் கற்றுக் கொடுத்தன. ஆனால் பாரதிதாசனுக்கு இந்த விஷயத்தில் தமிழ் இலக்கிய மரபும், பாரதியும் மட்டுமே போதுமானவையாக இருந்தன.

உதவிய நூல்கள்
1.    பாரதியார் கவிதைகள், பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன், சென்னை, 1991.
2.    இதழாளர் பாரதி, பா.இறையரசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட்., சென்னை, 1995.
3.    பாரதி தரிசனம்  1, பதிப்பாசிரியர்: ஸி.எஸ்.சுப்பிரமணியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட்., சென்னை, 1986.
4.    பாரதியம், தொகுப்பு: மீரா, பாரதி மண்டலம், சிவகங்கை, 1983.
5.    பாரதிதாசனின் இதழ்ப் பணிகள், மா.அண்ணாதுரை, பூங்கொடி வெளியீடு, ஈரோடு, 1990.
6.    தமிழனின் ஒரே கவிஞன், சாலய் இளந்திரயன், சாலினி இளந்திரயன், சென்னை, 1991.
7.    பாரதிதாசன் கவிதைகள்  4, பாரி நிலையம், சென்னை, 1977.

No comments:

Post a Comment

கருத்துக்கள்