கார்ப்பரேட் இந்தியாவில் கல்வி - கணேஷ் சுப்ரமணி

'கற்க கடன்வாங்கி கற்பவை கற்றபின்
விற்க நல்ல விலைக்கு'
இந்த அரைகுறை வெண்பாவைப் போலத்தான் இருக்கிறது இந்தியாவில் கல்வி. கல்விக்குக் கடன் கொடுக்க எல்லா வங்கிகளும் போட்டி போடுகின்றன. அப்படி கடன் கொடுத்து வழங்கப்படும் கல்வி யாருக்கானது?
இந்தக் கேள்விக்கான பதில் பெருநிறுவனங்களின் வருடாந்திர வருமான அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்தியக் கல்விமுறை ‘கார்ப்பரேட்’ எனப்படும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் லாபம் ஈட்டும் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான கருவியாகவே மாறியுள்ளது.
விடுதலைக்கு முன்பாக ஆங்கிலேய அரசாங்கத்தில் குமாஸ்தா பணியிடங்களுக்காக இந்திய ஆட்களைத் தயார் செய்வதற்கு (இங்கிலாந்திலிருந்து குமாஸ்தாக்களை வரவழைத்து நியமிப்பது பெரும் செலவு பிடிப்பதாக இருந்தது.) மெக்காலே உருவாக்கிய கல்வி முறையின் நவீன வடிவத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது இந்தியக் கல்வி.
இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் இந்தியா விடுதலை பெற்றுவிட்ட நாடாக இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இருந்த இடத்தில் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. அன்றைய கல்வி குமாஸ்தா பணியிடங்களுக்கு ஆட்களைத் தயார் செய்ததைப் போல, இன்றைய கல்வி பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய இந்திய இளைஞர்களைத் தயார் செய்கிறது. அவ்வாறு வேலை செய்வதையே வாழ்வின் உயர்ந்த குறிக்கோளாகக் கொள்வதற்கு இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கிறது.
கல்வி கற்ற பின் இந்தியப் பெருநிறுவனங்களுக்கோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கோ தன்னை விற்றுக் கொள்வதில் பெருமை கொள்கிறது இந்தியாவின் இளைய தலைமுறை. இவர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பது அல்லது வெளிநாட்டுக்காக வேலை பார்ப்பதையே வாழ்வின் உயரிய கொள்கையாகக் கொண்டு கல்லூரிகளின் கருவூலங்களை நிரப்புகிறார்கள். ஒரு மருத்துவக் கல்லூரி மாணவருக்காக இந்திய மக்களின் பணம் லட்சக்கணக்கில் செலவிடப்படுகிறது. அப்படிப் படித்து முடித்துப் பட்டம் பெறும் அம்மாணவர் உடனடியாகச் செய்வது வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிப்பதுதான். இப்படி ஒரு தலைமுறையை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது மறு காலனியம்.
உயர்கல்வி முடிக்கும் மாணவர்களில் யார் தன்னை அதிக விலைக்குப் பெருநிறுவனங்களுக்கு விற்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அத்துடன் அவரே அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறார். அவரை உதாரண புருஷனாகக் கொள்ளும் இளம் மாணவர்கள் அவரைப் போன்றே தம்மை விற்பதற்குத் தயார்படுத்தத் தொடங்குகிறார்கள். பெற்றோர்களும் தம் பிள்ளைகளை அந்த இலக்கை நோக்கித் தள்ளுகிறார்கள். நடுத்தர வர்க்கம் கல்விக் கடன்களை வாங்கிக் குவிக்கிறது.
இன்றைய இளம் தலைமுறைக்குச் சேவை, பொதுநலம், போர்க்குணம் போன்றவை தலைமைப் பண்புகளாக வலியுறுத்தப்படுவதில்லை. பணம் ஈட்டுவதும், தான் சார்ந்த நிறுவனத்துக்குப் பணம் ஈட்டித் தருவதுமே அவர்களின் தலையாய குறிக்கோளாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இதைச் செய்வதற்குத் தேவையான தன்னம்பிக்கையை ஊட்டும் வேலையை ஊடகங்கள் செய்கின்றன. தன்னம்பிக்கைத் தொடர்கள் இல்லாத இதழ்கள் இன்று இல்லை. வெளியான வேகத்தில் விற்றுத் தீரும் தன்னம்பிக்கைப் புத்தக எழுத்தாளர்கள் யாரும் தன்மானம் பற்றித் தவறி கூட வாய் திறப்பதில்லை.
தன்மானம், சுயமரியாதை என்பதெல்லாம் இன்று வேலைக்காகாத ஆளுமைப் பண்புகள். இவற்றுக்குப் பதிலாக மென்திறன்கள் (Soft skills) மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. மென் திறன் என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வேலையாள் எப்படியிருக்க வேண்டும் என்று உலகப் பெருநிறுவனங்கள் உருவாக்கிய மதிப்பீடுகள் இளைஞர்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்படுகின்றன. ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் (stress management) என்ற பெயரில் எந்தச் சூழலிலும் உணர்ச்சிவசப்படாமல், கோபப்படாமல் இருப்பது எப்படி என்று சொல்லித் தரப்படுகிறது. அதாவது அடிபணிவது ஒன்றே மிகச்சிறந்த மனிதனுக்கான அடையாளமாக வலியுறுத்தப்படுகிறது.
தற்போதைய கல்வி முறை மூலம், மொழியை எப்படிப் பேச வேண்டும், ஆடை எப்படி அணிய வேண்டும், உணவை எப்படி உண்ண வேண்டும் என்று மாணவர்களின் நடை, உடை, பாவனை ஒவ்வொன்றிலும் சில நெறிமுறைகள் வலியுறுத்தப்படுகின்றன. இளைஞர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தோற்றம், நடவடிக்கை, செயல்பாடு, பாவனைகளை கார்ப்பரேட் உலகம் உருவாக்குகிறது. இவற்றை வலியுறுத்திக் கடைபிடிக்கச் செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் தனித்துவம் (individuality), அடையாளம் (identity), உண்மைத்துவம் (originality) போன்றவை சிதைக்கப்பட்டு ஒரு வித ஒற்றைத்தன்மை உருவாக்கப்படுகிறது. இளைஞர்களின் சிந்தனைகள் அனைத்தும் வேறு யாரோ உருவாக்கிய நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் ஆக்கத்திறனும் (creativity) பன்முகப் பார்வையும் இல்லாமற் செய்யப்படுகிறது. பெருநிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்கள் அனைவரும் ஒரே விதமான தோற்றம், நடவடிக்கை, சிந்தனைகளையே கொண்டுள்ளனர்.
நிறுவனங்களுக்குத் தேவையான இந்தப் பண்புகளை வளர்க்கும் வேலையில் ஊடகங்கள் மட்டுமின்றி, ஆன்மீகவாதிகளும் இறங்குகின்றனர். ‘அனைத்துக்கும் (பணத்துக்கு) ஆசைப்படு’ என்பதே இந்த கார்ப்பரேட் சாமியார்களின் உயர்ந்த பட்ச போதனை. எந்தச் சூழலிலும் கோபப்படாமல் போர்க்குணமற்று சாந்த சொரூபியாய் இருக்கும் கலையை யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் பயிற்றுவிக்கின்றனர். கார்ப்பரேட் வாசிகளின் பணத்தில் ஆசிரமங்கள் கொழுக்கின்றன. பணம் சம்பாதிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் எந்த நிகழ்வையும் கண்டு கொள்ளாமல் ஆத்ம அமைதியில் திளைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
காந்தி, பாரதி, பகத்சிங், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், காமராஜர் போன்றவர்கள் எல்லாம் காலாவதியாகிப் போன ஒரு யுகத்தின் ஆளுமைகள். இவர்களில் யாரும் இன்றைய இளைஞர்களின் ரோல் மாடல்கள் இல்லை. அவர்களுடைய ரோல் மாடல்களின் பட்டியல், பில்கேட்ஸ், முகேஷ் அம்பானி, இந்திரா நூயி, சுனில் மிட்டல், ஷாருக்கான் போன்றவர்களால் நிரம்பி நீளுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட சே குவேரா, இன்று அதே ஏகாதிபத்தியத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ மாறி ஸ்பென்சர் பிளாசா இளைஞர்களின் டி சர்ட்டுகளில் ஜொலிக்கிறார்.
கார்ப்பரேட் உலகம் கல்வியில் இரு பெரும் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. ஒன்று காசு இருப்பவர்கள் கற்கும் கல்வி (இது தனியார் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகள் போன்றவற்றில் கிடைக்கும். விலைதான் சற்று அதிகம்.) மற்றொன்று காசு இல்லாதவர்கள் கற்கும் கல்வி (இது அரசுப் பள்ளிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் கிடைக்கும்.) இந்த இரண்டு கல்வி முறைகளும் தெளிவாக போதிய இடைவெளியுடன் பிரிக்கப்பட்டுள்ளன.
இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், சமச்சீர்க் கல்வி போன்ற சம்பிரதாய நடவடிக்கைகள் அவ்வப்போது செய்தித்தாள்களின் பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவசக் கல்வி, பெரும் பொருட்செலவில் தனியார் கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் கல்வியுடன் போட்டி போட முடியாத பலவீனமான முனை மழுங்கிப் போன ஆயுதமாக பரிதாபக் காட்சியளிக்கிறது. அதாவது இலவசக் கல்வி கற்கும் ஒரு மாணவன், தனியார் நிறுவனங்களில் பயிலும் மாணவனுடன் பணம் சம்பாதிப்பதற்கான வேலைவாய்ப்புப் போட்டியில் பங்கேற்கவே முடியாது.
இந்தக் கல்வியமைப்பின் மூலம் புதுவிதமான வர்ணாசிரம சமூக அமைப்பு ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் படிநிலையில் வணிக நிறுவனங்களும் அவற்றின் பெருமுதலாளிகளும் இருக்கின்றனர். அடுத்த படிநிலையில் அவர்களுக்கு வேலை செய்வதற்காகக் கடன் வாங்கித் தனியார் கல்வி கற்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசுக் கல்வி பெற்றவர்களும், பெறாதவர்களுமான அடித்தட்டு மக்கள் மூன்றாவது படிநிலையில் இருக்கிறார்கள்.
 இப் படிநிலைகளில் இரண்டாமிடத்தில் இருப்பவர்களையே குறி வைத்து அடிக்கிறது இந்தியக் கல்வி. மருத்துவம், பொறியியல், மேலாண்மையியல், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றைக் கற்றுத் தரும் கல்வி நிறுவனங்கள் இவர்களைக் குறிவைத்துப் பணம் சேர்க்கின்றன. மனிதனுடைய சிந்தனை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், மெய்யியல், இலக்கியம் போன்ற படிப்புகள் இன்று மாணவர்க‌ளால் படிப்பதற்குரிய தகுதியை இழந்து வருகின்றன. சுயநிதிக் கல்லூரிகளில் இவற்றுக்கு இடமில்லை. தனக்கு மேலிருப்பவனைக் கேள்வி கேட்கத் தெரியாத தலைமுறையை மூன்றாம் உலகநாடுகளில் உருவாக்குவதில் உலக முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது.

கீற்று.காம், 03 பிப்ரவரி 2014

No comments:

Post a Comment

கருத்துக்கள்