இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 1 - கணேஷ் சுப்ரமணி

மகாகவி பாரதியார், புரட்சிக்கவி பாரதிதாசன் இருவரும் தமிழின் தனிப்பெரும் கவிஞர்கள் என்பதில் ஐயமேதும் இருப்பதில்லை. ஆனால் இருவரும் இந்தியத் தேசியம் து திராவிடத் தேசியம், ஆரியம் து திராவிடம், சமஸ்கிருத அபிமானம் து சமஸ்கிருத எதிர்ப்பு, கடவுள் ஏற்பு து கடவுள் மறுப்பு என்று முரண்பட்ட சித்தாந்தங்களின் அடையாளங்களாகச் சுட்டப்படுபவர்கள். என்றாலும் கூட இவ்விரண்டு ஆளுமைகளும் ஒன்றாகச் சந்திக்கும் சில புள்ளிகளும் உண்டு. அதற்குச் சிறந்த அடையாளமாக விளங்குவது புதுச்சேரி கனக சுப்புரத்தினம் தனக்கு வைத்துக் கொண்ட புனைபெயர். இருவருமே இதழியற் பணிகளில் ஈடுபட்டவர்கள். அவ்விதழ்ப் பணிகளினூடாக இருவரின் ஆளுமை உறவுகளை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
மகாகவி x புரட்சிக்கவி
பாரதிதாசனால் கனவிலும் ஏற்றுக் கொள்ள முடியாத பல கருத்துகளுக்குச் சொந்தக்காரர் பாரதியார். ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து, படைப்புகளுக்கு அப்பாற்பட்டு பாரதியின் மீது தாசனுக்குத் தனி ஈடுபாடு இருந்தது. தன்னுடைய இறுதிக் காலத்தில், ‘பாரதி என்ற கவிஞனை விட பாரதி என்ற மனிதன் உயர்ந்தவன்’1 என்று பாரதிதாசன் கூறியது முக்கியமானது. எனினும் 1940களில் பாரதிதாசன் தனக்கு வைத்துக் கொண்ட புனைபெயரைப் பயன்படுத்துவதில் தயக்கம் கொள்ளுமளவிற்குப் பாரதியிடமிருந்து விலகிச் சென்றுள்ளார். இந்த விலகல் நேர்ந்ததற்குக் காரணம் எது? இந்தக் கேள்விக்குப் பதில் பாரதியின் படைப்புகளுக்குள்ளும், பாரதிதாசன் ஏற்றுக்கொண்ட திராவிடவாதக் கொள்கைகளுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. என்றாலும், இந்த விலகல் அகவயமானதன்று; புறவயமானது.
பாரதியார் உலகமனைத்தையும் இந்தியத் தேசியவாதம் மற்றும் இந்து சமய மீட்சிவாதம் எனும் கருத்தமைவுகளின் வழியாகப் பார்த்தவர். காக்கைச் சிறகினில் கூட நந்தலாலாவைக் கண்டதும், ருஷ்யப் புரட்சியைப் பராசக்தியின் கடைக்கண் பார்வையுடன் முடிச்சுப் போட்டதும், பெண் விடுதலையைப் பெரிய கடவுள் காக்கச் சொன்னதும், ஈசன் வந்து சிலுவையில் மாண்டதாகப் பாடியதும், இதன்வழிப்பட்டவையே.
‘முப்பது கோடி முகமுடையாள் என்று பாடிய அதே பாரதி, பின்னர் இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை’2 என்று குறுகுகிறார். இது மட்டுமல்லாது, ‘ஹிந்துக்களாகிய நாமெல்லாரும் ஒரே கூட்டம். ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே குலம், ஒரே குடும்பம், ஒரே உயிர்’ என்கிறார். மேலும், ‘தமிழில் அபிமானமுள்ளவன் ஹிந்து தர்மத்தைக் கைக்கொண்டு நிற்பவன். அதுவே தமிழ் அபிமானியைச் சோதிக்கும் வழி’ என்றும் எழுதுகிறார். இவையனைத்துமே பாரதிதாசனுக்குக் கொஞ்சமும் ஏற்புடையவை அல்ல.
தொடக்கக் காலகட்டத்தில், அதாவது 1920களில் பாரதிதாசனும் கடவுள் துதிப்பாடல்கள், தேசியவாதப் பாடல்கள் போன்றவற்றைப் பாடியவர்தான். இவையெல்லாம் பாரதிக்குத் தாசன் எனும் அவருடைய புனைபெயருக்குப் பொருத்தமானவையாகத் தோற்றமளிக்கின்றன. இக்காலகட்டத்தில் பாரதிதாசனுக்குள் பாரதி எனும் கவிஞர் தீவிர ஆதிக்கம் செலுத்துகிறார். ஆனால் 1930க்குப் பின்னர் பாரதிதாசன் மெல்ல மெல்ல தன்னுடைய தேசியவாதக் கொள்கை, கடவுட் கோட்பாடு போன்றவற்றில் இருந்து விலகி எதிர்த் திசையில் பயணிக்கிறார். திராவிட இனவாதக் கொள்கை மீது அவர் கொண்ட ஈடுபாடு அவரை அடியோடு மாற்றியமைக்கிறது. தேசியவாதத்தை மறுக்கிறார். கடவுட் கோட்பாட்டைக் கடிந்துரைக்கிறார். தமிழன் என்றும், திராவிடன் என்றும் இனத் தேசியம் பேசத் தொடங்குகிறார். வடமொழியையும் ஆரியரையும் கடுமையாகச் சாடுகிறார். இவை பாரதிதாசன் கவிதைகளின் பாடுபொருட்களாக ஆகின்றன.
தாசனுக்குள் பாரதி
பாரதிதாசன் படைப்புலகிற்குள் அடியெடுத்து வைத்தபோது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை போன்ற கவிஞரிடமும் காணப்பட்ட மென்மையும், மிதவாதத் தன்மையும் இயல்பாகவே போர்க்குணம் மிக்க பாரதிதாசனிடம் பெரிதான ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. பாரதியிடம் இருந்த வேகமும், தீவிரமும்தான் அவரை வசீகரித்தது. இது மட்டுமல்லாது, பாரதியாரைப் புதுச்சேரியில் சந்தித்துப் பழகும் வாய்ப்பு அவரை மேலும் ஆட்கொண்டது. பாரதியார் மட்டுமின்றி, தீவிரவாதப் போக்குடைய அரவிந்தர், வ.வே.சு.அய்யர் போன்றோருடனும் நெருங்கிப் பழகியதால் பாரதிதாசனின் படைப்பு மனம் தீவிரவாதப் போக்குடன் நெருங்கிச் சென்றது.
கனகசுப்புரத்தினம் எனும் மனிதனுக்குள் இருந்த கவிஞனுக்குத் தேவைப்பட்ட கலகக்குரல் பாரதியாரிடம் தென்பட்டதால் வெகு இயல்பாகப் ‘பாரதிதாசன்’ உருவானார். பாரதி எனும் அக்கினிக் குஞ்சு பாரதிதாசன் காட்டில் பற்றியெரியத் தொடங்கியது. (பாரதிதாசனுக்குள் பாரதி விதைத்த இந்த நெருப்பைப் பின்னர் பெரியாரியம் மேலும் விரிவாக வளர்த்தெடுத்தது.) இவ்வாறு உருவான துணிவும் , நெஞ்சுறுதியும்  பாரதியாரைப் போலவே பாவேந்தரையும் இதழியல் துறை நோக்கி இழுத்தன. இவ்விரு கவிஞர்களின் இதழ்ப்பணிகளில் பலதரப்பட்ட கருத்து முரண்கள் இருந்தாலும், இவர்களின் எழுத்துகளிலும் தென்பட்ட தீவிரம் தமிழ் இதழியல் துறையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
பாரதியின் இதழியல்
பாரதியார் நேரடியாக இதழியல் துறையில் பணியாற்றத் தொடங்கியது 1904ஆம் ஆண்டில் என்றாலும், அதற்கு முன்பாக எட்டயபுரம் ஜமீனில் பணிபுரிந்தபோதே அக்கால இதழ்களுடன் அவருக்குப் பரந்த அறிமுகம் இருந்தது. எட்டயபுரம் ஜமீன்தாருக்கு அக்காலத்திய ஆங்கில இதழ்களையும், தமிழ் இதழ்களையும் படித்து விளக்கிக் கூறும் பணியில் அவர் இருந்தார்.
எட்டயபுரம் ஜமீனிலிருந்து வெளியேறிய பாரதி, சிறிது காலம் மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவிட்டுப் பின்னர் சுதேசமித்திரன் இதழில் பணியில் சேர்ந்தார். அங்கு ஆங்கிலச் செய்திகளையும், கட்டுரைகளையும் தமிழில் மொழி பெயர்த்துத் தருவதும், அச்சுப் பிழை திருத்துவதும் மட்டுமே அவரது பணியாக இருந்தது. அவ்விதழில் பாரதி தலையங்கம் எழுதுவதை அதன் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய அய்யர் அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிகிறது. அதற்குக் காரணம் பாரதியின் தீவிரப் போக்கு.
சுதேசமித்திரனுக்குப் பின்னர் சக்கரவர்த்தினி எனும் இதழில் பணியாற்றியபோதும், பின்னர் 1906 செப்டம்பர் முதல் இந்தியா இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய போதும்தான் அவருடைய உண்மையான கருத்துச் சுதந்திரமிக்க எழுத்துகளைக் காணமுடிகிறது. பாரதியின் அதிதீவிரப் போக்குடைய எழுத்துகளால் இந்தியா இதழ் பிரிட்டிஷ் இந்திய அரசின் அடக்குமுறைக்கு ஆளாகிப் பெரும் சிரமங்களைச் சந்தித்தது. பின்னர் நின்றும் போனது.
இந்தியா இதழ் நின்று போவதற்கு முன்பாகவே பாரதியார், பாலபாரதா ஆர் யங் இண்டியா எனும் ஆங்கில இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். இது தவிர, விஜயா, கர்மயோகி, தர்மம், சூரியோதயம் ஆகிய இதழ்கள் மூலம் தம்முடைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியைச் செய்துவந்த அவர், மீண்டும் 1915 முதல் சுதேசமித்திரனில் எழுதத் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகள் காரணமாகப் பல நேரங்களில் தன் பெயரை வெளிப்படுத்தாது, புனைபெயர்களில் இதழ்ப்பணிகளை மேற்கொண்டார்.
பொதுவாக, ஆங்கிலேய அரசின் அடக்குமுறை, சுதேசியம், சுய ஆட்சி, காங்கிரஸ், அயல் நாட்டு எழுச்சிகள், சாதிப் பிரிவினை, இந்து மதம், தமிழ் மொழி, பெண்கள் முன்னேற்றம் ஆகிய பொருட்களிலேயே பாரதியாரின் கட்டுரைகள் அமைந்திருந்தன. இதழ்களின் வாயிலாகப் பெற்ற பரந்துபட்ட தகவலறிவின் காரணமாகப் பிறநாட்டுக் கலை, இலக்கியப் போக்குகள் குறித்தும் பல ஆழமான கருத்துகளை வெளியிட்டார். இதனால் இலக்கிய வடிவம் குறித்த மரபுவழிப்பட்ட கருத்தமைவுகளில் இருந்து விலகி, புதுவகை இலக்கிய ஆக்கங்கள் குறித்து விரிவாகச் சிந்தித்தார். இதன் விளைவாக மொழிபெயர்ப்பு, சிறுகதை, கருத்துப் படங்கள், பயணக்கட்டுரை எனப் பலவாறான முயற்சிகளில் ஈடுபட்டார்.
பாரதியார் 1910ஆம் ஆண்டுக்குப் பிறகு இதழ்களில் எழுதியவற்றில் அவருக்கேயுரிய தீவிரம் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக இந்திய விடுதலை குறித்து அவர் அதிகம் எழுதவில்லை. இக்காலக் கட்டத்தில் அவர் இந்து மதம், சமஸ்கிருத மொழி என்று ஆன்மீகப் பாதையில் செல்கிறார். தன்னுடைய முந்தைய கருத்துகளிலிருந்தும் முரண்பட்டு எழுதுகிறார்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்