ஜே.கே. எனும் மனிதனின் வாழ்க்கை - கணேஷ் சுப்ரமணி



'உங்களுக்கெல்லாம் தமிழைத் தெரியும்; ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும்' என்று ஜெயகாந்தன் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அவருடைய படைப்புகளைப் போலவே இந்தச் செருக்கும் அவருடைய அடையாளமாக இறுதிக் காலம் வரை இருந்தது.

அவருடைய எழுத்துகள் தனித்துவமானவை என்று சொல்வது சம்பிரதாயமான மதிப்பீடாக இருந்தாலும் அவற்றை அப்படிச் சொல்வதுதான் சரியாக இருக்கிறது. தன்னுடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாக அவர் நினைத்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஓர் இடம் இன்றும் நினைவில் நிற்கிறது. ஹென்றி நடந்து செல்லும் வழியில் ஒரு மரத்திலிருந்து பழம் ஒன்றைப் பறித்துச் சாப்பிடுவான். அதைப் பற்றி அவர் எழுதும் போது அந்தப் பழத்தின் சுவை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்பார். இதைப் படித்தபோது காரணம் தெரியாமல் என் கண்கள் கசிந்தன. ஒரு பழத்தின் சுவையை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்று எழுத முடிகிற எழுத்தை தனித்துவமானது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?

ஜெயகாந்தன் எனும் பெயர் எனக்கு அறிமுகமானது அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை படித்த போது. அப்போது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பாடமாக இருந்தது. அந்த நாவலைப் படித்து விட்டு அதன் திரை வடிவத்தைப் பார்த்த போதுதான் நாவல் என்பது எதையும் எழுத்தில் சாத்தியப்படுத்தும் மிகப் பிரம்மாண்டமான இலக்கிய வடிவம் என்பது புரிந்தது.

நாவலின் தொடக்கம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அவருடைய உன்னைப் போல் ஒருவன் நாவல் மூலமாகத்தான் உணர்ந்தேன். இருபதாண்டுகளுக்கு முன்னர் படித்த அந்த நாவலின் தொடக்க வரிகள் இன்றும் நினைவிலிருந்து அகலாமல் இருப்பவை. 'தங்கம் வெகுநாளைக்குப் பிறகு அன்றுதான் தலைவாரிப் பின்னிப் பூச்சூடிக் கொள்ள ஆசைப்பட்டாள்' என்னும் அவ்வரிகள் மறக்காமலிருப்பதற்கு அந்நாவலை எங்களுக்கு நடத்திய பேராசிரியர் சுதானந்தா, இத் தொடக்க வரியை மட்டும் ஒரு மணி நேர வகுப்பு முழவதும் அவர் நடத்தினார். அத்தனை ஆழமான வரியுடன் நாவலைத் தொடக்கும் கலை ஜெயகாந்தனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.

சித்தாந்தங்களைத் தாண்டி மனத்தில் பட்டதைப் பட்டெனச் சொல்லும் பக்குவம் (அல்லது பக்குவமின்மை) அவருக்கு இருந்தது. அதனால்தான் அவரால் எந்தச் சித்தாந்தத்திலும் நிலைத்து நிற்க முடிந்ததில்லை. மார்க்சியத்தில் தொடங்கிய அவர் பின்னாளில் காஞ்சி சங்கர மடத்தில் முக்தியைத் தேடிக் கொண்டிருந்தார். ஏராளமாக எழுதிக் குவித்த அவர் கடைசி சில ஆண்டுகள் எழுதாமல் விரதம் இருந்ததும் நல்லதுதான். ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர போன்ற இன்னும் சில படைப்புகளிடமிருந்து அவருடைய வாசகர்களைப் பிழைக்க வைத்திருக்கிறார். ஏனேன்றால் அவர் எழுதாத கடந்த சில ஆண்டுகள் அவர் அப்படியான மனநிலையில்தான் இருந்தார்.


மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை தன்னுடைய கடைசி காலத்தில் சிந்துசமவெளி நாகரிகம் பற்றி ஒரு மிகப்பெரும் நாவலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அம்முயற்சியை சாவு தோல்வியடையச் செய்தது. ஜெயகாந்தன் எழுதாவிரதம் இருந்த கடந்த இருபதாண்டுகள் உலகம் ஒட்டுமொத்தமாக உருமாறிய காலகட்டம். அதை அவரும் அவதானித்துக் கொண்டுதான் இருந்திருப்பார். இப்படியான சூழலில் ஒரு பெரும் படைப்பை அவர் உருவாக்கியிருந்திருக்கலாம் என்கிற வாசக ஏக்கமும் மனத்தின் ஒரு மூலையில் இருக்கத்தான் செய்கிறது.

புதுமைப் பித்தனுடன் அவரை ஒப்பிட்டுப் பேசிய போது ஜெயகாந்தன் கோபப்பட்டிருக்கிறார் 'அவரைப் போல எழுத நான் எதற்கு' என்று. ஜெயகாந்தனைப் போல் எழுத இனி ஒருவர் உருவாகப் போவதில்லை. உருவாகத் தேவையுமில்லை. தனித்துவம் நாடிய அவருடைய வெளி யாராலும் நிரப்பப்பட முடியாதது. சிங்கம் போன்ற எழுத்தாளர் என்று அவரைக் குறிப்பிடுவார்கள். அவர் உண்மையில் அப்படித்தான் வாழ்ந்தார். எந்த ஓர் அதிகார மையத்திற்கும் அடிபணியாத கம்பீரம் அவருடையது. அவருடைய இழப்பு மனத்தைக் கனக்கத்தான் செய்கிறது. இந்தச் சிங்கத்திற்கு பார்ட்-2, பார்ட்-3 எல்லாம் கிடையாது என்பதால்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்