தரிசனம் - கணேஷ் சுப்ரமணி

கோயிலுக்குள்
இருபது ரூபாய் தந்தேன்.
கடவுள் தெரிந்தார்.

கோயில் வாசலில்
இருபது ரூபாய் தந்தேன்
கடவுளாகத் தெரிந்தேன்.

மூன்றாம் விடுதலைப் போர் - கணேஷ் சுப்ரமணி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை இப்படிச் சொல்வதில் தவறில்லை. 1947க்கு முன்னர் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக நடந்த இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சமூக விடுதலையடையாமல் அரசியல் விடுதலையால் பயனில்லை என்று பெரியார் இந்திய நாட்டின் சுதந்திர நாளைப் புறக்கணித்தார். அது அரசியல் விடுதலைப் போர். பின்னர் சுதந்திர இந்தியாவில் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக 1965இல் மொழி விடுதலைப் போரை நிகழ்த்தி வெற்றி பெற்ற வரலாறு நமக்குண்டு. தற்போது பண்பாட்டு விடுதலைப் போர் ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள்; குறிப்பாக மாணவர்கள்.