ஆழ்துளைச் சமூகத்தில் அறம் - கணேஷ் சுப்ரமணி

அறம்: இரண்டாயிரமாண்டு தமிழ்ச் சொல். இச்சொல் காலந்தோறும் மாறுபடும் தனக்கான பொருண்மையைக் களைந்து தன்னுடைய இருத்தலைத் தேடி வரலாற்றில் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறது. இப்படியொரு சொல்லை சினிமாவுக்குத் தலைப்பாக்கிக் கொண்டதற்கான அடிப்படை நியாயத்தை நிறைவேற்றியிருக்கிறது கோபி நயினாரின் அறம்.

தமிழ் சினிமாவுக்கென்று நிறைய ‘அறங்கள்’ உள்ளன. சமூகத்துக்குத் தேவையான செய்திகளை அல்லது கருத்துக்களைச் சொல்வதான பாவனையில் ஏராளமான படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் பெரும்பாலும் அப்படங்களில் அது சொல்ல வரும் நோக்கத்துக்கு எதிரான காட்சிப் படிமங்கள் விரவியிருக்கும். எம்.ஜி.ஆர். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காதது முதல் சாதி வெறியைத் தூண்டும் காட்சிகளைப் படம் முழுவதும் நிரப்பி, இறுதிக் காட்சியில் ‘சாதி வேண்டாம்’ என்று அறிவுரை சொல்வது வரை எவ்வளவோ ‘தமிழ் சினிமா அறங்கள்’. அவை வணிக சினிமாவின் வாய்ப்பாடுகளை மீறாதவை. அதாவது அவற்றை ‘வணிக சினிமாவின் அறங்கள்’ என்றும் சொல்லலாம். அல்லது ‘சினிமாவின் வணிக அறங்கள்’ என்றும் சொல்லலாம். எப்படியாயினும் இப்படியான அறங்களைக் கோபி நயினார் தன்னுடைய அறத்தால் உடைக்கிறார்.

இன்றைய திரையரங்குகள் இளைஞர்களுக்கானவை. அதிலும் குறிப்பாகக் கையில் காசு புழங்கும் இளைஞர்களுக்கானவை. நடுத்தர மக்களோ, ஏழை எளிய மக்களோ இன்று குடும்பத்துடன் திரையரங்குக்குச் செல்லும் நிலையில் சினிமா இல்லை. பெரும் செலவு செய்து தன்னை நாடி வரத் தயாராயுள்ள இளைஞர்களை மட்டுமே குறி வைக்கிறது சினிமா. எல்லாப் படங்களும் அத்தன்மையுடனே வடிவமைக்கப்படுகின்றன. இந்த வாய்ப்பாடுகளை மீறும் படங்களுக்குத் திரையரங்கை அடைவது என்பதே பெருங்கனவு. ஆனால் இந்தக் கனவைச் சாதித்ததுடன்இ கலைப்படம் என்கிற வகைக்குள்ளும் சிக்கிவிடாமல் வணிக சினிமாவுக்கான தொய்வில்லாத காட்சியோட்டங்களால் பார்வையாளர்களை இருக்கையை விட்டு அசைய விடாமல் செய்யும் அறம் படத்தில் நகைச்சுவைக் காட்சிகள், காதல் காட்சிகள், குத்துப் பாடல்கள் என எதுவுமே இல்லை. அதாவது வெகுசன ரசிகர்களை தியேட்டருக்குள் இழுப்பதற்கான எந்த அம்சமும் இந்தப் படத்தில் இல்லை; நயன்தாராவைத் தவிர. வணிக நோக்கிலான சமரச சினிமா அறங்களை மிக எளிதாக மீறியிருக்கிறார் இயக்குனர்.

உயிரை விழுங்கும் ஓர் ஆழ்துளைக் கிணற்றைக் கொண்டு, ஆயிரமாயிரம் ஆழமான துளைகளைக் கொண்ட சமூகத்தின் அவலங்களைப் பேச முயற்சிக்கிறது இந்த சினிமா. அந்த அவலங்களைத் துடைக்க முயல்வதையே தனிமனிதனின் அல்லது சமூகத்தின் அறமெனச் சொல்கிறது. மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும், அவற்றை மீட்க நடக்கும் போராட்டமும், அவற்றைச் செய்தி சேனல்களில் நாம் பார்ப்பதும், பதைபதைப்பதும், அந்த நேரக் கொந்தளிப்பில் அரசையும் சமூகத்தையும் வசைபாடுவதும், பின்னர் அடுத்தடுத்த ‘பிளாஷ் நியூஸ்களில்’ மறந்து போவதும் இயல்பாகிப் போய்விட்ட ஒன்று. ஆனால் அந்த ஒரு வரிச் செய்தியை முழுப்படமாக்கி வெற்றி கண்டுள்ளது அறம் குழு.

படத்தின் முதல் அரை மணி நேரக்காட்சிகளில் இந்திய அதிகார வர்க்க அரசியல் விவரிக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா அருகில், மையங்களால் கண்டுகொள்ளப்படாத காட்டூர் எனும் ஒரு விளிம்பு நிலைக் கிராமத்தை கதையின் களமாகத் தேர்வு செய்து பார்வையாளனைப் பல கோணங்களில் யோசிக்கச் செய்கிறார் இயக்குனர். அந்தக் கிராமம் புல், பூண்டு கூட முளைக்காத வெம்மை நிலம். அம்மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை. ஆனால் தங்கள் கண் முன்னால் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ராக்கெட் பாயும் போது அதைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஏதோவொரு விதத்தில் அது தங்களுடைய வளர்ச்சிக்கானது என்று நம்புகிற எளிய மக்கள். அந்த நம்பிக்கையைத் தாண்டி வளர்ச்சி என்பதன் பரிமாணங்களைச் சிந்திக்கவிடாமற் பார்த்துக் கொள்ளும் அதிகார அரசியல் அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லைதான். ‘ராக்கெட் பற்றி தெரியுமா?’ என்கிற கேள்விக்கு ஒருவர் தன் கையில் இருக்கும் குவார்ட்டர் பாட்டிலைக் காட்டி, “எனக்கு இதைத் தவிர எதுவும் தெரியாது” என்கிறார். மையங்கள் விரும்புவதும் இதைத்தானே! அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் மனிதர்களாக நயினார் தேர்வு செய்து திரையில் காட்டும் அனைவரும் உடல் கருத்த, ஏழை, எளிய மற்றும் சிறுபான்மை மக்கள். அவர்கள் அனைவரும் அந்தக் கேள்விக்குச் சொல்லும் ஒரே பதில் ‘தெரியாது’ என்பதுதான்.

குடிக்கத் தண்ணீர் இல்லாத அந்த மக்களின் கைகளில் செல்போன்கள் சரளமாகப் புழங்குகின்றன. படத்தின் மையப் பாத்திரங்களாக வரும் கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சியில், ஒரு பெண் ஸ்கூட்டரில் காலிக் குடங்களை வைத்துக் கொண்டு தண்ணீரைத் தேடிச் செல்கிறாள். செல்போனையும் ஸ்கூட்டரையும் கொடுத்து, தண்ணீரைப் பிடுங்கிக் கொள்ளும் கார்ப்பரேட் இந்தியாவின் முகம் அந்தக் காட்சியில் தெரிகிறது.

குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபடும் ஓர் போலீஸ் அதிகாரி சொல்கிறார்: “கிணறா இருந்தா, இந்நேரம் அது விஷக் கிணறா இருந்தாலும் கூட நானே குதிச்சு குழந்தையை மீட்டிருப்பேன்”. காலங்காலமாக விவசாயத்துக்கோ அல்லது குடிநீர்த் தேவைக்கோ பயன்பட்டவை மனித உழைப்பில் விளைந்த கிணறுகள்தான். இப்படியிருந்த பல நூற்றாண்டுச் காலச் சமூகம்இ புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவு, பன்னாட்டு முதலாளியம், தொழில் நுட்ப வளர்ச்சி, நகரப் பெருக்கம் என, கடந்த முப்பது ஆண்டுகளில் மொத்தமும் மாறிவிட்டது. ஆயிரம் அடிகளைத் தாண்டி நிலத்தைத் துளைத்து போடப்படும் ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீரை மொத்தமாகத் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது முதலாளியம்.

ஒரு பெரிய நிறுவனமோ, அடுக்குமாடிக் குடியிருப்போ கட்டப்படும்போது, விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் நிலம் துளையிடப்பட்டு நீர் உறிஞ்சப்படுகிறது. அப்படிப் போடப்படும் ஓர் ஆழ்துளைக் கிணறு, அந்தப் பகுதியைச் சுற்றி பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கோ, விவசாயத்திற்கோ பயன்படும் பல கிணறுகளின் நீர் வளத்தை உறிஞ்சிக் கொள்கிறது. கிணறுகள் வறண்டு போகின்றன. அங்கு விவசாயம் வீழ்ச்சியைச் சந்திக்கிறது. கிராமப்புற மக்களின் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகளும், பொருளாதாரமும் கேள்விக்குள்ளாகிறது. விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறி விற்பனைக்கு வருகின்றன. படத்தின் ஒரு காட்சியில் புல்லேந்திரன் வீட்டடி மனையாய் மாறிய ஒரு நிலத்தில் ஊன்றப்பட்ட கற்களுக்கு பெயின்ட் அடிக்கிறார். ‘இந்தியாவின் ஆன்மா வாழும்’ கிராமங்கள் மீதான இப்பெரும் தாக்குதலைத் தடுக்க அரசுகள் அக்கறை கொள்வதில்லை; ஊடகங்கள் கண்டுகொள்வதேயில்லை.

நிலத்தின் அடியில் உள்ள நீரின் மீதான தங்கள் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதை அறியும் நிலையில் காட்டூர் மக்கள் இல்லை. அந்த நீர் போர்வெல் மூலம் உறிஞ்சப்பட்டு டேங்கர் லாரிகளில் பெரிய அபார்ட்மென்ட் கட்டிடங்களுக்குக் கொண்டு செல்லப்டுகிறது. மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் அடிப்படைத் தேவையான தண்ணீரை ஒரு சந்தைப் பொருளாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பன்னாட்டு முதலாளியம் மாற்றியுள்ளது. காசு கொடுத்து வாங்கும் பொருளாகத் தண்ணீரை ஏற்றுக் கொள்ளச் செய்து, நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்டமான தண்ணீர்ச் சந்தையை உருவாக்கியிருக்கிறார்கள். மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தியா போன்ற ‘வளரும்’ நாடுகளின் அரசுகளை இந்தத் தண்ணீர்ச் சந்தையின் முகவர்களாக மாற்றியிருக்கிறார்கள்.

படத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் அரசின் பிரதிநிதியால் தாகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தர முடியவில்லை. அதற்குப் பதிலாகக் குளிர் பானத்தைத் தருகிறார். இதை விடப் பூடகமாக அரசமைப்பை விமர்சித்துவிட முடியாது. அந்த மக்கள் தண்ணீரைத் தேடி வண்டிகளில் செல்லும்போது, ஒருவர் சொல்கிறார்: “தாகமே எடுக்காத மாதிரி ஒரு சொட்டு மருந்து கண்டுபிடிச்சா நல்லா இருக்கும”.  முதலாளியம் அதையும் செய்து சந்தையில் விற்கும் நாளைச் சந்திக்க நாம் அதிக நாள் காத்திருக்க வேண்டியிருக்காது.

நீரும் நிலமும் மட்டுமல்ல; அம்மக்களின் கனவுகளும் சுரண்டப்படுவதை இப்படம் காட்சியாக்குகிறது. சிறுமி தன்சிகாவின் அப்பா இளம் வயதில் திறன் மிக்க கபடி வீரர். ஆனால் அவருடைய கனவு களவாடப்பட்டு, திறமை ஒடுக்கப்பட்டு ஒரு பெயின்டராகத் தினக்கூலிக்கு அல்லாடுகிறார். ஆட்டக் களத்தில் எதிராளியின் கழுத்தை உடும்பைப் போல இறுக்கிப் பிடிக்கும் தன்னுடைய கபடித் திறனை அவரால் மனைவியிடம் மட்டுமே காட்ட முடிகிறது. காரணம் அவர் விளிம்பு நிலை மனிதர். மையத்தின் வெளியே நின்று அவரால் வேடிக்கை பார்க்க மட்டுமே இயலும். தில்லை நகருக்குள் நுழைய முடியாமல் ஊர் எல்லையில் சுற்றித் திரிந்த நந்தனாரைப் போல.

தன்னுடைய நிலைதான் மகன் முத்துவுக்கும் என்பதை அவர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். கடலில் நீந்துவதிலும், நீருக்குள் மூச்சை அடக்கியாள்வதிலும் தன் மகனுக்கிருக்கும் திறமை ஒப்பற்றது என்பதை அறிந்தும், அதை ஒடுக்குகிறார். தன்னுடைய கபடி விளையாட்டுத் திறனைப் போல, தன் மகனின் நீச்சல் திறனும் அவனுக்குள்ளேயே அடங்கி அழிந்துபோகக் கூடியது என்றே எண்ணுகிறார். நீந்துவதை விட்டுவிட்டு நன்றாகப் படிக்கச் சொல்லுமாறு மனைவியிடம் வற்புறுத்துகிறார். பெருங்கடலில் நீந்தும் முத்துவிடம் சிறிய தொட்டி நீரைக் காட்டி, ‘இனிமேல் இதுதான் உன் கடல்’ என்கிறாள் அந்தத் தாய். ஏழைச் சிறுவர்களின் கனவுகளைச் சுரண்டும் முதலாளியச் சமூகத்தை அடையாளப்படுத்தும் அரிய காட்சி அது.

படத்தில் எந்தவொரு நாயக பிம்பங்களும் இல்லை. மதிவதனி என்கிற அழகான பெயரில் மாவட்ட ஆட்சியராக வரும் நயன்தாராவும் படத்தின் நாயகியாக இல்லை. அந்தப் பாத்திரத்தையும் விழுங்கிக் கொண்டு சிறுமியை மீட்கும் போராட்டமே தொடக்கத்திலிருந்து இறுதி வரை பார்வையாளர்களின் உள்ளங்களை வியாபிக்கிறது. ‘வல்லரசு’ என்கிற பெருங்கதையாடலில் காட்டூர் மக்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. ‘இந்தியா வளர்கிறது’ என்கிற சக்தியிழந்து போன மந்திரத் தொடர் இன்னமும் அவர்களை வசீகரிக்கிறது. ஆனால் தங்களைத் தாங்களே உற்று நோக்கிவிட்டு அந்தத் ‘வல்லரசு இந்தியாவை’ அணுகுவதற்கு அவர்களுக்குப் பார்வையில்லை; நேரமும் இல்லை.

அம்மக்களிலிருந்து ஒரு சிறுமி அந்த ஊர் கவுன்சிலரின் நிலத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடுகிறாள். இந்தச் சிக்கலை ‘அதிகாரம்’ என்கிற தீவிர மனநோய் பிடித்த நம் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதைக் காட்சிகளாக்கி நகர்கிறது கதை. மாவட்ட ஆட்சியர் மதிவதனியைத் தவிர அரசாங்கத்தின் பிரதிநிதிகள் யாருக்குமே தொடக்கத்தில் அந்தச் சிறுமி மீள்வது குறித்த அக்கறை இல்லை. பின்னர் எம்.எல்.ஏ. தவிர மற்றவர்கள் கடமை என்கிற உயர்நிலையில் இல்லாவிட்டாலும், அவர்களுடைய வேலை என்கிற நிலையிலாவது மீட்புப் பணியில் உழைக்கிறார்கள். ஆனால் காட்டூர் மக்களுக்கு ராக்கெட் விடும் வல்லரசு இந்தியா மீது இருக்கும் நம்பிக்கை அந்த அரசு அதிகாரிகளின் மீது இல்லை. அவர்களைத் திட்டுகிறார்கள்; இடையூறு செய்கிறார்கள்; மீட்புப் பணியில் கயிற்றைப் பயன்படுத்தும் ‘டிஜிட்டல் இந்தியா’வின் அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கிண்டல் செய்கிறார்கள்.

மக்களிடமிருந்து மீட்புப் பணி உரிமையைப் பிடுங்கிக் கொண்டு, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், தீயணைப்புப் படையினர், காவல் துறை, மருத்துவர்கள் என எல்லோரும் மீட்புப் பணியில் பல மணி நேரம் ஈடுபடுகிறார்கள். ஆனால் தோல்வியடைகிறார்கள். அவர்களால் முடிந்தது, 36 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை 93 அடி ஆழத்திற்குக் கொண்டு செல்வதுதான். ‘இந்தி’ பேசும் மத்திய அரசு (பாதுகாப்புத் துறை) வந்து, அதிரடியாக மண்ணைத் தோண்டி, நிலத்தைப் பிளந்து சிக்கலை இன்னும் பெரிதாக்குகிறது. அந்தக் குழந்தையைப் பற்றிப் பேசும் போது அந்த அதிகாரி ‘வெறும் ஒரு உயிர்’ (Just one life) என்கிறார். எளிய மக்களுடைய வாழ்வின் மீதான அரசின் மதிப்பு இவ்வளவுதான்.

இந்தியா இப்படித்தான் இருக்கிறது. உண்மையில் இங்கிருப்பது இரண்டு இந்தியாக்கள். வளர்ச்சி பெற்ற ஒரு சிலருக்கான ‘ராக்கெட் இந்தியா’. வளர்ச்சிக்குத் தேவையான, ஆனால் அதற்குத் தொடர்பேயில்லாத பெரும்பாலோருக்கான ‘போர்வெல் இந்தியா’. ஒரு இந்தியா விண்ணைப் பிளந்து மேல்நோக்கிப் பாய்கிறது. இன்னொரு இந்தியா மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கி வீழ்கிறது. இதைப் படத்தில் பேசுகிறார்கள்; படமும் இதைத்தான் பேசுகிறது.

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் வெளியான ‘மலூட்டி’ (தமிழில் ‘சிங்காரச் சிட்டு’ எனும் பெயரில் டப் செய்யப்பட்டது.) எனும் திரைப்படம் இதே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டது. ஆனால் அப்படம் ஆழமான குழியில் விழுந்த ஒரு குழந்தை மற்றும் அதன் பெற்றோரின் உணர்ச்சிப் பேராட்டத்தைக் காட்சிகளால் உணர்த்தியது. வெளிப்படையான சமூக விமர்சனங்கள் எதுவும் இல்லாத ஒருவித நாடகப்பாங்கிலான படம்தான் அது. ஆனால் குழிக்குள் அந்தச் சிறுமி படும் துயரமும், வேதனையும், பயமும் பார்வையாளர்களின் மனத்தில் ஒரு சமூகக் கோபத்தை உண்டு பண்ணும்.

அறம் திரைக்கதையின் பெரும்பகுதியை, சிறுமியை மீட்கும் பெரும் போராட்டத்தில், மதிவதனி, தன்சிகாவின் பெற்றோர், ஊர் மக்கள், அதிகாரிகள், ஊடகங்கள் ஆகியோரின் மனநிலைகளே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அதன் வழியாகவே பார்வையாளரின் மனத்தில் பெரும் தாக்கத்தை இயக்குனரால் உண்டுபண்ண முடிந்திருக்கிறது. என்றாலும், முதலில் 36 அடி, பின்னர் 93 அடி ஆழத்தில், உடல் உறுப்புக்களைக் கொஞ்சமும் அசைக்க முடியாமல், கீழே இழுக்கும் புவியீர்ப்பு விசையின் அழுத்தத்தை உடலில் தாங்கிக் கொண்டு, அந்தரத்தில் தொங்கியபடி, வெளிச்சமில்லாத அந்தக் குழிக்குள், அம்மாவுக்குப் பயந்து ஜட்டியைக் கழட்டாமல் சிறுநீர் கழிக்க அஞ்சும் ஒரு சிறுமியின் பெருவலியையும் பல மணி நேரப் போராட்டத்தையும் அழுத்தமாகக் காட்சிப்படுத்த இந்தப் படம் தவறியிருக்கிறது.

ஆழ்துளைக் கிணறுகளுக்குள் குழந்தைகள் விழுவது பற்றிய செய்திக் குறிப்புகளையும், புள்ளி விபரங்களையும் படம் தருகிறது. பெரும்பாலும் பல மணி நேரப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்து குழந்தைகள் சடலமாக மீட்கப்படுவது அல்லது மீட்கப்பட்ட பின்னர் இறந்து போவது என்பதே முகத்தில் அறையும் உண்மையாக இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் சிறுமி உயிருடன் மீட்கப்படுகிறாள். ஒரு வேளை அந்தச் சிறுமி சடலமாக மீட்கப்படுவது போல் காட்டப்பட்டிருந்தால் பார்வையாளர் மனத்தில் அதிகார வர்க்கத்தின் மீதான ஒரு பெருங்கோபத்தை உண்டாக்கியிருக்க முடியும்தான். ஆனால் என்னதான் சினிமா என்கிற பிரக்ஞையுடனே பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட, அந்தக் குழந்தை உயிருடன் மீட்கப்படுவதையே மனம் ஏற்கிறது; அதையே கொண்டாடுகிறது. பார்வையாளர்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்திப் படுத்துவதற்கான முடிவாக அதை ஏற்றுக்கொண்டு விடலாம். ஒரு வேளை சிறுமியின் மரணத்தில் படம் முடிந்திருந்தால், தொடக்கத்திலிருந்து அரசின் மீதும், சமூகத்தின் மீதும் பார்வையாளனுக்கு உயர்ந்து வரும் கொதிப்பு, இறுதிக் காட்சியில் கோபி நயினார் மீது திரும்பியிருக்கக் கூடும். அப்படியான ஒரு கொதிநிலையை உண்டாக்கியதில் இயக்குனர் பெருவெற்றியைப் பெற்றுள்ளார்.

மற்றபடி, இடையிடையே வரக்கூடிய தொலைக்காட்சி விவாதம் சிக்கல் குறித்த  கூடுதல் புரிதலை உண்டாக்குவதற்கோ, திரைக்கதைக்கு வலு சேர்ப்பதற்கோ பயன்படவில்லை. விசாரணைக்குப் பின்னர் இறுதிக் காட்சியில் மதிவதனி எடுக்கும் முடிவும் யதார்த்த நிலையுடன் ஒட்டாததாகவே படுகிறது. ஓர் அதிகாரியாக அரசமைப்பின் ஓர் அங்கமாக இருந்து சாதிக்க முடியாத பணிகளைச் செய்து முடிக்க அவர் அரசியல் அதிகாரம் நோக்கி நகரும் அந்தக் காட்சி, ரசிகர்களின் கைதட்டலை வேண்டும் நாயக பிம்பக் காட்சியாக மட்டுமே எஞ்சுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி கோபி நயினாரின் அறம் நிச்சயமாகத் தமிழ் சினிமாவின் ஒரு புதிய சோதனை முயற்சி மட்டுமல்ல; சாதனை முயற்சியும்தான்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்