மொழி என்பது மக்களிடையே தகவல் பரிமாற்றப்
பணிகளுக்காக உருவான வழிமுறை என்பது ஓர் எளிமையான விளக்கம். ஆனால் இந்த
தகவல் பரிமாற்றத் தன்மை நிலவியல், தட்பவெப்பம், மனித உடற்கூறுகள்
போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும் தன்மை உடையது. அதாவது ஒரு மொழியின்
உருவாக்கத்தில் இக்கூறுகள் முக்கியப் பங்கு வகிப்பவை. இது மட்டுமல்லாது,
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது வேறுசில கூறுகள் சார்ந்ததாகவும் அமைகிறது.
அவை பொருளாதாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு உள்ளிட்டவை.
இவ்வனைத்து கூறுகளின் தாக்கத்திடையே மொழி பற்றிய விளக்கங்கள்
சிக்கலானவையாகின்றன. பல நூற்றாண்டுகளைக் கடந்து மொழி குறித்த விவாதங்கள்
தொடர்கின்றன.
உலகின் மூத்த
மொழிகளுள் ஒன்றாக மதிக்கப் பெறும் தமிழ் மொழியின் மகாகவிகளுள் ஒருவராகக்
கருதப்படுபவர் பாரதி.தேசியம், பெண் விடுதலை, அரசியல், சமூகம், கலை,
அறிவியல் என்று பலதரப்பட்ட பொருட்கள் குறித்து விரிவாகச் சிந்தித்தவர்
பாரதி. மொழி குறித்த அவருடைய சிந்øனைகளைத் தொகுத்துப் பார்க்கும் போது,
அவற்றில் சில முரண்பாடுகள் தென்படுகின்றன.
தன்னுடைய கவிதைகளால்
பெரும்புகழ் கொண்டவர் பாரதி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவருடைய கவிதைகளில்
காணப்படும் உணர்ச்சிப் பெருக்கு அவருடைய சிந்தனையோட்டத்தை ஆராய்வதில் சில
சிரமங்களைத் தருகிறது. பொதுவாக, கவிதையை விட உரைநடையில் உணர்வுகளின்
தாக்கம் குறைவு. பாரதியின் உரைநடையும் அப்படியே. அவருடைய மொழிச்
சிந்தனைகளைக் கணிப்பதில் கவிதைகளை விட உரைநடையே பேருதவியாய் அமையும். இந்த
அடிப்படையில் பாரதியின் உரைநடை வழியாக அவருடைய மொழிக் கொள்கைகளை விளக்க
முடியும்.
பாரதி: காலம், மொழி, சூழல்:
ஒரு மொழியின் கட்டமைப்பில்
அறிவுக்கும் உணர்ச்சிக்கும் சம பங்கு உண்டு. எனவேதான் மனித வாழ்வில்
மொழியின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 'மக்களின் அன்றாட
வாழ்வில் அறிவுடன் உணர்ச்சியும் இடம் பெற்று விளங்குவது போல், மொழியிலும்
அறிவின் கூறுகளும் உணர்ச்சியின் கூறுகளும் அமைந்துள்ளன'1. பயன்பாட்டில்
மிகுந்த இறுக்கம் காட்டும் மொழி வளர்வதில்லை. இதற்கு நல்ல சான்று
சமஸ்கிருதம். இம்மொழி வியத்தகு இலக்கிய வளர்ச்சியையும் வளத்தையும்
கொண்டிருந்தாலும் அனைத்து மக்களுக்குமான பரவலான பயன்பாட்டுக்கு உள்ளாகாமல்
அன்னியமாகி நின்றதால் நிலைத்து நிற்க முடியாமல் போயிற்று.
மக்களின்
பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இறுக்கம் தளர்த்தி, நெகிழ்வு காட்டும் மொழி
பரவலான வளர்ச்சியைப் பெறும். இதற்குச் சான்றாக ஆங்கில மொழியைக் கூறலாம்.
இம்மொழி நீண்ட கால மொழி வரலாற்றையோ, இலக்கிய வளத்தையோ கொண்டிராவிட்டாலும்,
உலகின் பெரும்பாலான நாடுகளில் தகவல் தொடர்பியல் அடிப்படையில் மிகுந்த
ஆதிக்கம் செலுத்தும் மொழியாக வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கு முக்கியக்
காரணம் அதன் நெகிழ்வுத் தன்மை (ஊடூஞுதுடிஞடிடூடிtதூ). எந்த மொழிச்
சொல்லையும் ஏற்றுக்கொண்டு, தனக்குள் எளிதாக உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை
ஆங்கில மொழிக்கு உண்டு. இறுக்கம் மற்றும் நெகிழ்வு எனும் இவ்விரு இருமை
எதிர்வுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது தமிழ் மொழி.
தான் வாழ்ந்த
குறுகிய காலத்திற்குள் இம்மூன்று மொழிகளுடனும் உறவு கொண்டிருந்தவர் பாரதி.
மொழி பற்றிய அவரின் சிந்தனைகள் இம்மூன்று மொழிகளின் வழியேதான் தோற்றம்
பெற்றவைகளாக உள்ளன.
1882 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியின்
தாய்மொழி தமிழ். மகனைப் பொறியாளர் ஆக்கும் ஆர்வத்துடன் அவரின் தந்தை,
பாரதியை கல்வி கற்க அனுப்பியது ஆங்கிலக் கல்விக்கூடத்தில்.
குலவித்தையாலும், காசியில் பெற்ற கல்வியாலும் அவர் தேர்ச்சி பெற்றது வட
மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் இந்தியில். இவை தவிர, அவருக்கு பிரெஞ்சு
மொழியும் தெரியும் என்றாலும், அவருடைய மொழிக் கொள்கைகளில் அம்மொழி
பெரியளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை.
பாரதி வாழ்ந்தது 1882 முதல் 1921
வரை. திருநெல்வேலி இந்து கல்லூரியில் கல்வி, காசியில் சில காலம் கல்வி,
எட்டயபுரம் ஜமீனில் பணி, மதுரையில் ஆசிரியப்பணி என்று நகர்ந்து கொண்டிருந்த
அவருடைய வாழ்வு, 1904ஆம் ஆண்டில் சுதேசமித்ரன் இதழில் உதவியாசிரியராய்ப்
பணியில் சேர்ந்த பிறகு மாற்றம் பெற்றது. அவரது எழுத்துகள் தீவிரமடைந்தன. பின்னர்
இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் வாயிலாகத் தம் எண்ணங்களை உரத்துச் சொன்னார்
பாரதி. சுதந்திரப் போராட்ட காலமாதலால் இயல்பாகவே தேசிய உணர்வு மிக்க
அவருடைய கட்டுரைகளில் தேசியத்துக்கும், பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வுக்கும்
மட்டுமே அதிக இடம் தரப்பட்டுள்ளது. இவை தவிர, அயல்நாட்டு எழுச்சிகள்,
பிற மாகாணங்களின் அரசியல் போக்குகள், பெண் விடுதலை, சமூகம், தத்துவம், கலை
போன்றவை குறித்தும் பல கட்டுரைகளை அவர் எழுதினார். இவற்றுள் மொழி குறித்த
கட்டுரைகள் குறைவு என்றாலும், அவருடைய பிற கட்டுரைகளின் மொழி நடை
வாயிலாகவும் அவற்றுள் தென்படும் சிற்சில கருத்துகள் வாயிலாகவும் அவருடைய
மொழிச் சிந்தனைகளை அறியமுடிகிறது.
இதழ்களில் பாரதி பயன்படுத்திய மொழிநடை
குறிப்பிடத்தக்கது. அக்காலத்திய இதழ்களின் வாசகர்களாக இருந்தவர்கள்
பெரும்பாலும் சாதி மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த மேட்டுக்குடி
மக்கள். அவர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பும், அதன் விளைவாக
இதழ்கள் வாசிக்கும் பழக்கமும் இருந்தது. இதழ்களில் பாரதி பயன்படுத்திய
மொழியும் அவர்களை நோக்கியதாகவே இருந்தது. பெருமளவில் சமஸ்கிருதம், ஆங்கிலம்
போன்ற பிற மொழிச் சொற்கள் நிரம்பியதாக அவருடைய தமிழ் உரைநடை
அமைந்திருந்தது.
தாய்மொழிக் கொள்கை:
பாரதியின் தமிழ்ப்பற்று உலகறிந்தது. தாய்மொழி என்பதற்கும் அப்பாற்பட்டு, தமிழின் வளமையையும் இனிமையையும் நேசித்துப் பாடியவர் அவர்.
"வான மளந்த தனைத்து மளந்திடும்
வண்மொழி வாழிய வே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே"2 என்றெல்லாம்
தமிழின் வண்மையையும் திண்மையையும் வியந்தவர் பாரதி. ஆனால் அவருடைய
கவிதைகளில் இனிக்கும் தமிழ், அவருடைய கட்டுரைகளில் உவப்பானதாக இல்லை.
வலிந்து எழுதப்பட்ட வடமொழிச் சொற்கள், கிரந்த எழுத்துகள் என்று
அமைந்துள்ளது அவருடைய உரைநடை.
"இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான
அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நஷத்திரம், லக்னம் முதலியன
பார்த்தல், க்ஷவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட நம்மவர்
மாஸப் பொருத்தம், பக்ஷப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம்
இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது."3 இப்படியெல்லாம் அமைகிறது
அவருடைய உரைநடை. இது மட்டுமின்றி ஆங்கிலச் சொற்களின் கலப்பும் மிகுதியாகக்
காணப்படுகிறது. தமிழ் இதழ்கள் வாசித்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் ஆங்கில
மோகம் இதற்கு முக்கியக் காரணமாயிருக்கலாம். அது மட்டுமின்றி அவர் காலத்திய
தமிழ் மொழியில் கலைச் சொற்களின் பற்றாக்குறைக்கும் இதில் பங்குண்டு என்று
கூறலாம். "ஹைகோர்ட்டில் காலியான இரண்டு ஸ்தானங்களிலே ஒன்றில் மிஸ்டர்
மில்லர் நியமனமாய் விட்டார். மற்றொன்றிலே ஸ்ரீசங்கரன் நாயர்
நியமிக்கப்படுவாரென நாமெல்லாம் எதிர்பார்த்திருந்தோம். இதற்கு முன் இந்த
ஸ்தானத்தில் இரண்டு தடவை ஆக்டிங் வேலை பார்த்து, மிகுந்த சாமர்த்தியம்
காட்டி ஜனங்களின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாகி நிற்கும்
மிஸ்டர் நாயரைக் கவர்மென்டார் இந்தச் சமயத்தில் மறந்து விடுவார்களென்று
எவரும் நினைக்கவேயில்லை."4
பாரதியின் மொழி நடை இவ்வாறு பிறமொழிக்
கலப்புடன் காணப்பட்டாலும் அவரின் தாய்மொழிப் பற்று அவருடைய கட்டுரைகளில்
கருத்துகளாக வெளிப்படுவதையும் காணமுடிகிறது. தமிழ் மொழியைப் பேண வேண்டிய
பொறுப்புணர்வு தமிழர்களிடம் இல்லையே என்று ஆதங்கம் கொள்கிறார்.
"ஆனால்
தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த எம்மவர்களோ இந்தப் பாஷையின் இனிமையைப்
பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றேனும் சிறிதும்
முயல்வதில்லை."5 இது மட்டுமின்றி, பிற மாகாண மக்களின் மொழிப் பாதுகாப்புணர்வுடன் தமிழர்களின் நிலையை ஒப்பிட்டுக் குறைபட்டுக் கொள்கிறார். "தெலுங்கர்,
மலையாளத்தார், கன்னடர் எல்லோரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு
வருஷாந்திரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும்
பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ்நாட்டிற்கு விளையவில்லை."6 பாரதி
தன்னுடைய தாய்மொழியான தமிழின் மீது அளவிறந்த பற்றுக் கொண்டிருந்தாலும்,
தான் சார்ந்திருந்த இதழ்களின் வாசகர்களுக்காக தமக்கு எளிதில் கைவந்த கலப்பு
மொழி நடையைப் பயன்படுத்த வேண்டிய நிலையிலிருந்தார்.
பாரதியின் வடமொழிச் சார்பு:
1898
ஆம் ஆண்டு தன்னுடைய தந்தை இறந்த பிறகு பாரதி காசிக்குச் சென்றார்.
அலகாபாத் சர்வ கலா சாலையிலும், காசி இந்து கலா சாலையிலும் கல்வி பயின்றார்.
இதன் விளைவாக, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றார்.
இந்தோ ஆசிய மொழிகளான இவ்விரு மொழிகள் பற்றிய பாரதியின் சிந்தனைகளில் சில
முரண்பாடுகள் தென்படுகின்றன.
1916 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில் ஸ்ங்கீத விஷயம் என்ற தலைப்பில் சமஸ்கிருத கீர்த்தனைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதில்,
"தீக்ஷிதரின்
கீர்த்தனைகள் பச்சை சமஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப்
போல் கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையவை. வேறுபல நல்ல லக்ஷணங்களும்
இருந்த போதிலும், சமஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் இவை நமது
நாட்டுப் பொது ஜனங்கள் ரசானுபவத்துடன் பாடுவதற்குப் பயன்பட மாட்டா."7 என்கிறார். ஆனால் 1920ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் எழுதும் போது இதற்கு முரணாக, "இந்தியா முழுமைக்கும் பொதுவான சங்கீதம் ஸம்ஸ்கிருத பாஷையிலேதான் அமைந்திருக்குமென்பது சொல்லாமலே விளங்கும்."8 என்று
இசைத் துறையில் சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தை ஆதரித்துப் பேசுகிறார்.
இம்முரண்பாடு காலம் அவரிடம் ஏற்படுத்திய மாற்றத்தைத் தெரிவிக்கிறது. சங்கீதம்
மட்டுமின்றி பிற பொருட்கள் குறித்து எழுதும் போதும் பாரதியின்
எழுத்துகளில் சமஸ்கிருதச் சார்பு நிலை தென்படுகிறது. தமிழில் கலைச்
சொல்லாக்கப் பணிகளில் சமஸ்கிருதச் சொற்களைப் பெரிதும் பயன்படுத்தலாம்
என்பது அவருடைய கொள்கை.
சமஸ்கிருதம் மட்டுமல்லாது, இந்தி மொழி பற்றியும்
தனது கட்டுரைகளில் அதிகம் பேசுகிறார். தனது தேசியவாதப் போக்கின் காரணமாக,
ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியா முழுமைக்குமான பொது மொழியாக இந்தியை
முன்வைத்துப் பேசுகிறார். இந்தியா இதழில் 'ஹிந்தி பாஷை பக்கம்' என்ற
தலைப்பில் வாரந்தோறும் தன் கருத்துகளை வெளியிட்டார்.
"தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும்".9 என்பது
அவருடைய கொள்கை. ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் அனைவரையும்
ஓரணியில் திரட்ட வேண்டும் என்ற தேசிய ஒருமைப் பாட்டு உணர்வின் காரணமாகவும்
படித்த தமிழர்களிடையே காணப்பட்ட ஆங்கில மோகத்திற்கு எதிரான மாற்று மொழி,
இந்தியா முழுவதற்குமான பொதுமொழியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன்
அவர் இந்தி மொழியை ஆதரித்தார் எனலாம்.
பாரதியும் ஆங்கிலமும்:
பாரதி
சிறு வயதிலேயே ஆங்கிலக் கல்வி பயின்றார். சுதேசமித்திரனில் அவர் செய்து
வந்த மொழிபெயர்ப்புப் பணி அவருடைய ஆங்கில மொழிப் புலமையை மேலும்
கூர்மைப்படுத்தியது. உலகளாவிய சிந்தனைகளையும், தகவலறிவையும் அவர் ஆங்கில
மொழியின் வாயிலாகவே பெற்றார். ஆனால் அவர் காலத்தில் படித்த, நடுத்தர
மற்றும் மேட்டுக்குடி மக்களிடம் காணப்பட்ட ஆங்கில மோகம் அவருக்கு
உவப்பானதாக இல்லை.
"இங்கிலீஷ் படித்த வக்கீல்களும் இங்கிலீஷ் பள்ளிக்
கூடத்து வாத்தியார்களும் தமது நீதி ஸ்தலங்களையும் பள்ளிக் கூடங்களையும்
விட்டு வெளியேறினவுடனே, இங்கிலீஷ் பேச்சை விட்டு தாம் தமிழரென்பதை அறிந்து
நடக்க வேண்டும். பந்தாடும் போதும் சீட்டாடும் போதும் ஆசாரத்
திருச்சபைகளிலும், வருணாசிரம சபைகளிலும், எங்கும் எப்போதும் இந்தப்
பண்டிதர்கள் இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால் உடனே தேசம்
மாறுதலடையும்".10 என்று ஆங்கில மோகத்துக்கு எதிராகச் சீறும் பாரதிக்கு
இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாக ஆங்கிலம் முன்னிறுத்தப்படுவதை
ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனை இந்தியப் பண்பாட்டிற்கு அன்னியமான மொழி
என்றே உறுதிபடக் கூறுகிறார்.
"இப்போது நமக்குள் அதிகமாகப் பழக்கமுற்று
வருகின்ற இங்கிலீஷ் பாஷையே பொதுமொழியாகிவிடக் கூடாதோயென்றால் அது
ஆசாத்தியமும், மூடத்தனமுமான நினைப்பாகும். இங்கிலீஷ் பாஷை அன்னியருடையது.
நமது நாட்டிற்குச் சொந்தமானதன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினர்களுக்கும்
ஸ்திரமாகப் பதிந்துவிடும் இயற்கை உடையதன்று".11
என்று ஆங்கிலம் பொதுமொழி என்பதை ஒதுக்கித் தள்ளுகிறார்.
ஆங்கிலத்தை
ஒரு மொழி என்ற அளவில் இந்தியர்கள் கற்றுக் கொள்வதைப் பாரதி ஒரு குறையாகக்
கருதவில்லை. ஆனால் ஆங்கில மோகத்தால் தாய்மொழி ஒதுக்கப்படும் நிலையை அவரால்
பொறுத்துக் கொள்ள இயலவில்லை. பல்வேறு மாநில மொழிகள் பேசப்படும் இந்தியாவில்
ஆங்கில மொழி பொதுவான மொழியாக முன்னிறுத்தப்பட்டால் ஆங்கிலேய
எதிர்ப்புணர்வும் இந்தியத் தேசிய உணர்வும் மக்கள் மனத்தில்
மழுங்கடிக்கப்படும் என்று அவர் அஞ்சினார். எனவேதான் அதற்குரிய மாற்றாக
இந்தியை முன்வைத்தார்.
நிறைவு:
பாரதியின் மொழிக் கொள்கைகள் தமிழ்,
வடமொழி (சமஸ்கிருதம் மற்றும் இந்தி) ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சார்ந்து
அமைந்துள்ளன. தமிழ்மொழி மீது அளப்பரிய பற்று கொண்டிருந்த பாரதியின் தமிழ்
உரைநடை சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் கலந்த கலப்பு நடையாகவே காணப்படுகிறது.
தான் சார்ந்திருந்த இதழ்களின் வாசகர்களை நோக்கமாகக் கொண்டு அவர் இத்தகைய
நடையில் எழுதினார். சமஸ்கிருத மொழி குறித்த பாரதியின் கருத்துகளில்
முரண்பாடுகள் காணப்பட்டாலும், அம்மொழி மீது அவருக்கிருந்த பற்று அவருடைய
கட்டுரைகளில் தெளிவாக வெளிப்படுகிறது. தேசியவாதக் கொள்கை மீது கொண்ட
தீவிர ஈடுபாட்டின் காரணமாக இந்திய முழுவதற்கும் பொதுவான மொழியாக இந்தியை
ஏற்றுக்கொண்டு அதனை இதழ்கள் வாயிலாகத் தொடர்ந்து வலியுறுத்தியும்
வந்துள்ளார் பாரதியார். தேசியவாத உணர்வுக்கு எதிராக மக்கள் மனத்தில்
அடிமைத் தனத்தை ஆங்கில மோகம் ஏற்படுத்துவதாக எண்ணினார் பாரதி. அதனைப்
பொதுமொழியாக அவரால் சிறிதளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மொத்தத்தில்
தன் தாய்மொழியான தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்தாலும் தன்னுடைய
தேசியவாதக் கொள்கையின் காரணமாக ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியையே அவர்
முன்வைத்தார்.
குறிப்புகள்:
1. மு.வரதராசன், மொழி வரலாறு, கழக வெளியீடு, சென்னை, 2004, பக்.15.
2. பாரதியார் கவிதைகள், பதிப்பாசிரியர்: சீனி விசுவநாதன், சென்னை, 1991, பக்.62.
3. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், சென்னை, 1998, பக். 18.
4.
பாரதி தரிசனம்1 (பாரதியாரின் இந்தியா பத்திரிகைக் கட்டுரைகள்),
பதிப்பாசிரியர்: ஸி.எஸ்.சுப்பிரமணியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)
லிட், சென்னை, 1986, பக். 98.
5. இதழாளர் பாரதி, பா. இறையரசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 1995, பக்.254.
6. பாரதியார் கட்டுரைகள், பக்.216.
7. மேலது, பக்.232.
8. இதழாளர் பாரதி, பக்.177178.
9. பாரதி தரிசனம், பக்.443.
10. பாரதியார் கட்டுரைகள், பக்.217218.
11. பாரதி தரிசனம், பக்.444.
No comments:
Post a Comment
கருத்துக்கள்