மூன்றாம் விடுதலைப் போர் - கணேஷ் சுப்ரமணி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை இப்படிச் சொல்வதில் தவறில்லை. 1947க்கு முன்னர் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக நடந்த இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சமூக விடுதலையடையாமல் அரசியல் விடுதலையால் பயனில்லை என்று பெரியார் இந்திய நாட்டின் சுதந்திர நாளைப் புறக்கணித்தார். அது அரசியல் விடுதலைப் போர். பின்னர் சுதந்திர இந்தியாவில் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக 1965இல் மொழி விடுதலைப் போரை நிகழ்த்தி வெற்றி பெற்ற வரலாறு நமக்குண்டு. தற்போது பண்பாட்டு விடுதலைப் போர் ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள்; குறிப்பாக மாணவர்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டம் மாணவர்களின் போராட்டமாக உருப்பெறவில்லை. ஏனென்றால் அக்காலத்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பெரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கக் கூடிய அளவில் இருக்கவில்லை. கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. அதிலும் போராட்டம் என்றால் நெஞ்சு நிமிர்த்தி களத்தில் குதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பு இன்னும் குறைவு. எனவே இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு சொல்லும்படியானது இல்லை.

1965இல் நடந்த மொழிப் போராட்டக் காலத்திய நிலைமை வேறுபட்டது. கல்வி பரவாலாகத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்திய மக்களிடம் இந்தி மொழி திணிக்கப்படுவதை வீரியத்துடன் எதிர்த்தது தமிழகம். அப்போராட்டத்தைக் கையிலெடுத்து இந்தியாவை அதிர வைத்தவர்கள் தமிழக மாணவர்கள். தமிழ்நாட்டில்  அனேகமாக இந்தியாவிலேயே  மாணவர் சமூகம் போராடிப் பெற்ற முதல் பெரும் வெற்றி என்று அதைச் சொல்லலாம்.

2017இல் மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. அமெரிக்க நிறுவனமான பீட்டாவால் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உண்டான தடையை உடைக்க மாணவர்களும் இளைஞர்களும் களத்தில் குதித்தார்கள். மொழிப் போராட்ட காலத்தை விட, தற்போது மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அத்துடன் கண நேரத்தில் பல பேருடன் தகவல்களைப் பரப்ப அவர்கள் கைகளில் செல்போன்கள் இருந்தன. மதுரையில் தொடங்கிய போராட்டம் (மொழிப் போராட்டம் வீரியம் பெற்றதும் மதுரையில்தான்!) சென்னையில் உச்சம் தொட்டது.

ஜல்லிக்கட்டு என்பது போராட்டத்தில் குதித்த பெரும்பாலான இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை அல்ல. அதற்கு முன்னர் அவர்களை நேரடியாகப் பாதித்த ஊழல், பண மதிப்பு நீக்கம், வேலையிழப்பு போன்ற பிரச்சினைகளுக்காகக் கூட ஒன்றுபடாத ஒரு பெருந்திரளை ஜல்லிக்கட்டு எனும் விளையாட்டு எப்படி ஒன்று சேர்த்தது? இந்தப் போராட்டத்தில் தாங்கள் எப்போதும் பாலாபிஷேகம் செய்து வழிபடும் நடிகர்களை அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை; கொடி பிடித்துக் கொண்டாடும் அரசியல் தலைவர்களையும் சேர்த்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் தமிழ்நாட்டுக்குப் புதிது.

மற்ற மாநில மக்களைக் காட்டிலும் அந்நிய மொழி, அந்நியப் பொருட்கள், அந்நியப் பண்பாடு என எதையும் எளிதாகச் சுவீகரித்துக் கொள்ளக் கூடியவர்கள் தமிழர்கள். அத்துடன் அவற்றை மோகிப்பவர்கள். ஆனால் இந்தப் போராட்டத்தில் அப்படியான கருத்தமைவுகளையும் உடைத்தார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு எதிரான முழக்கங்கள் அதிர்ந்தன. தமிழன் என்கிற அடையாளத்தையும் பண்பாட்டுக் குறியீடுகளையும் அவர்கள் உயர்த்திப் பிடித்தார்கள்.

ஜல்லிக்கட்டை ஆயுதமாக்கி, தங்கள் மீது காலங்காலமாக நடத்தப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தை அவர்கள் எதிர்த்தார்கள். தங்கள் மொழியை இந்தி, ஆங்கிலம் (தற்போது மீண்டும் சமஸ்கிருதம்) போன்ற அந்நிய மொழிகள் ஆதிக்கம் செய்வதன் வலி அவர்களுக்கு இருக்கிறது. தங்கள் ஆறுகளை மற்ற மாநிலங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் சூறையாடுவதால் உண்டான கோபம் அவர்களுக்கு இருக்கிறது. விவசாயம் உள்ளிட்ட தங்கள் பாரம்பரியத் தொழில்களும் உற்பத்தி முறைகளும் பன்னாட்டு நிறுவனங்களால் களவாடப்படுவதற்கு எதிரான சீற்றம் அவர்களுக்கு இருக்கிறது. தங்கள் குழந்தைகள் குடிக்கும் பாலிலிருந்து, உணவு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புகள் என ஒவ்வொன்றும் வளர்ந்த நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். சமீப காலமாக அதன் வெப்பம் மெல்ல மெல்ல உயர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கொதிப்பாய் வெளிப்பட்டது. இந்தக் கொதிநிலை இந்தியாவில் பல மாநிலங்களிலும் இருக்கிறது. தமிழ்நாடு எனும் எரிமலை வெடித்து விட்டது. இன்னும் சில எரிமலைகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

கோலாகலப் போராட்டம்:
ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் கத்தியை நம்பவில்லை. கத்தி முனையை விட வலிமையான பேனா முனையையும் (மீடியாக்களை) நம்பவில்லை. தங்களுடைய செல்போன்கள் வழியாகத் தகவல்களைப் பரப்பினார்கள். ஒரு போராட்டத்தின் வெற்றி மேலும் மேலும் ஒன்று சேர்வதிலும் பரவுவதிலும் இருக்கிறது. அப்படிப் பரவச் செய்ய அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் போதுமானதாயிருந்தது.

கத்தியின்றி ரத்தமின்றி ஓர் அகிம்சைப் போராட்டத்தை உலகத்துக்குக் கற்றுக் கொடுத்தது இந்தியா. தற்போது தமிழ்நாடும் இன்னொரு போராட்ட வடிவத்தைத் தந்துள்ளது. பழைய போராட்ட வடிவங்களையெல்லாம் தமிழ் இளைஞர்கள் உடைத்தெறிந்தார்கள். கைகளை உயர்த்தி அதிகார வர்க்கத்தை எதிர்த்து தொண்டை வற்ற கோஷமிட்டு அவர்கள் களைப்படையவில்லை. அவர்கள் முகங்களில் கோபமோ, இறுக்கமோ இல்லை. ஆள்பவர்களின் இரக்கத்தைக் கோரும் விதமான உண்ணாவிரதம், அழுகை, தற்கொலை மிரட்டல்கள், பொதுமக்களைப் பாதிக்கும் மறியல்கள் போன்றவற்றை அவர்கள் தூக்கியெறிந்தார்கள். ஒன்றிரண்டு சம்பவங்கள் அப்படி நடந்தாலும் அவை கவனத்தைப் பெறவில்லை.

போராட்டக் களத்தில் அவர்கள் ஆடினார்கள்; பாடினார்கள்; இசைக் கருவிகளை முழக்கினார்கள்; விழிப்புணர்வு நாடகங்களை நடித்துக் காட்டினார்கள்; ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டார்கள். மொத்தத்தில் போராட்டத்தைக் கொண்டாடினார்கள். அதிகாரத்துக்கு எதிரான அவர்களின் கோஷங்களில் நகைச்சுவை தெறித்தது. உடனிருந்த இளம் பெண்களிடம் கண்ணியம் காத்தார்கள். வேளா வேளைக்கு உணவு உண்டார்கள். தங்கள் குப்பைகளைத் தாங்களே அப்புறப்படுத்தினார்கள். போராட்டத்தைக் கடமையாகக் கொண்டு கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பேணினார்கள். அவர்களிடம் பொதுவாகவே ஓர் அற உணர்வு தென்பட்டது.

இப்படியொரு போராட்ட வடிவம் புதிது. இதுதான் முதலிரண்டு நாட்களுக்குப் பிறகு குடும்பம் குடும்பமாக மக்களைப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சினிமாவுக்கும் பீச்சுக்கும் செல்பவர்களைப் போல மக்கள் போராட்டத்துக்குச் சென்றார்கள். தங்கள் வீட்டு இளம் பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும் மகிழ்ச்சியுடன் களத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நூறு, ஆயிரம் பேர் என்று தொடங்கிய போராட்டம் லட்சங்களைத் தாண்டியது. போராட்டக்காரர்களின் தேவைகளைத் தனிப்பட்ட மனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் பூர்த்தி செய்தன. இந்த இளைஞர்களுக்கு அதிகார வர்க்கத்தின் மீதான கோபம் இருக்கிறது. அதே நேரம் போராட்டத்திற்காகத் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. எத்தனைச் சிரமங்கள் எதிர்வந்தாலும் வாழ்தல் அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதன் ஓர் இனிப்பான அங்கமாகப் போராட்டத்தை மாற்றிக் காட்டினார்கள்.

போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவர்கள் தடுமாறினார்கள். தொடக்கத்தில் இப்போராட்டத்தின் பெரும் பலமாக இருந்தது தலைமை என்று ஒன்று இல்லாதது. ஆனால் இறுதிக் கட்டத்தில் அதுவே பலவீனமானது. போராட்டத்தை எங்கு, எப்படி, எப்பொழுது முடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அதைப் பயன்படுத்திக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் தடியடிக்கு ஆளானார்கள். ஒரு பெருந்திரளின் போராட்டம் அறவழியிலேயே நிறைவு பெறுவதை அதிகார வர்க்கம் ஏற்றுக்கொள்ளாது என்பது காவல்துறை உதவியுடன் உணர்த்தப்பட்டது.

மாணவர்களின் போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கியது. அது மாணவர்களின் பெரும் வெற்றியாகப் போற்றப்பட்டது. ஆனால் இந்தப் போராட்டத்தின் வெற்றி இலக்கை அடைந்ததில் இல்லை; போராடியதிலேயே இருக்கிறது. அதாவது பேராட்டம் வெற்றி என்பதை விட, போராடியதே வெற்றிதான். இந்தக் கட்டுரையை முடிக்கும்போது இறுதியாக, கவிஞர் வைரமுத்துவின் ஒரு பழைய பாடல் வரிகள்  நினைவுக்கு வருகின்றன.
‘பூலோகம் சுகமே! இந்தப் பொய் வாழ்க்கை சுகமே!
பூந்தோட்டம் சுகமே! போராட்டம் சுகமே!’

No comments:

Post a Comment

கருத்துக்கள்