குருதிக் காட்சிகளும் குற்றச் சமூகமும் - கணேஷ் சுப்ரமணி

'வாட்ஸ் அப்' எனும் விசித்திர பூதம் தொடர்ந்து காட்சிகளைத் துப்புகிறது. குருதி படிந்த சில காணொளிக் காட்சிகள் சிந்தனையை உறையச் செய்கின்றன. கைகள் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்து தலையைத் துண்டிக்கும் காட்சி, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நிறைந்த சாலை நடுவில் சிறை பிடிக்கப்பட்ட ஒருவரின் தலையைத் துண்டிக்கும் காட்சி, ஓர் இளம் பெண்ணை 'ஒழுக்க சீலர்கள்' பலர் சேர்ந்து பொது இடத்தில் கடுமையாகத் தாக்கி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தும் காட்சி, மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஏற முயலும் ஒருவரை ரயில் நசுக்கிச் சிதறடிக்கும் காட்சி என நீளும் பட்டியலை எழுதவே கைகள் நடுங்குகின்றன. ஆனால் இக்காட்சிகள், வாட்ஸ் அப்பில் விழித்து, வாட்ஸ் அப்பில் வாழ்ந்து, வாட்ஸ் அப்பிலேயே தூங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் செல்போன்களில் நிறைந்து கிடக்கின்றன.


திகில் படங்கள், அதிரடி ஆக்ஷன் படங்கள் போன்றவற்றில் ரத்தம் சிதறும் கொடூரமான வன்முறை மற்றும் கொலைக்காட்சிகளைத் தொடர்ச்சியாகக் கண்டு ரசித்த அனுபவம் நம் சமூகத்துக்கு உண்டு. அவையெல்லாம் நடித்துக் காட்டப்பட்ட போலிக்காட்சிகள். அதனாலேயே அவை சலிப்பை உண்டாக்கி நிஜம் நாடும் சமூக மனோநிலையை உண்டாக்கியிருப்பதன் வெளிப்பாடுகளாக மேற்சொன்ன காட்சிகளைக் கொள்ளலாம். கற்பனையை விட நிஜம் கொடூரமானது என்பார்கள். இக்காட்சிகள் கற்பனையல்ல, நிஜம் என்பதே அவற்றிற்குத் தேவையான கொடூத்தையும் அவற்றைப் பார்க்கத் தூண்டும் ஆர்வத்தையும் தருகின்றன.

அந்தக் காலத் திரைப்படங்களில் வாயில் வழியும் ஒரு துளி ரத்தம் பார்வையாளர்களிடம் பெரும் பதட்டத்தை உண்டு பண்ணும் வன்முறைக் காட்சியாக உணரப்பட்டது. பின்னர், உடலெங்கும் ரத்தம் வழியச் சண்டையிடும் காட்சிகள் சகஜமாயின. தற்போதைய சினிமாப் படங்களில் உடல் உறுப்புகள் சிதறுவதும், சதை அறுந்து விழுவதுமான காட்சிகள் எந்தவிதப் பதட்டமும் இன்றி பெரும்பான்மை இளைஞர்கள் கூட்டத்தால் ரசித்துப் பார்க்கப்படுகின்றன. ஹாலிவுட்டில் வெளியான பைனல் டெஸ்டினேசன் (Final Destination) வரிசைப் படங்கள் கொடூரமான மரணங்களை இயல்பாக ரசிக்கச் செய்யும் மனநிலையின் வெளிப்பாடுகள்.


என்னதான் திரைப்படங்கள் ரத்தக் காட்சிகளைக் குரூரமாக வெளிப்படுத்துவதில் போட்டி போட்டுத் திரையில் கொண்டு வந்தாலும், அவை போலியானவை எனும் உண்மை ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கின்றன. எனவே அவர்கள் நிஜம் நாடுகிறார்கள். திரைப்படங்களில் காணும் காட்சிகளை விட குரூரமான நிஜக் காட்சிகளைக் காணத் துடிக்கும் மனது எத்தனை கொடூரமானது! ஓர் உயிர் கொல்லப்படுவதை அல்லது இறப்பதைக் காணத்துடிக்கும் கண்கள் எத்தனை பயங்கரமானவை! காணொளி விளையாட்டுகளில் (Video games) எதிரியை ரத்தம் சிதற தாக்கி அழிப்பதில் குழந்தைகள் குதூகலம் கொள்கின்றன.


சமூகத்தின் கண்களையும் பார்வையையும் அவ்வளவு பயங்கரமானதாக மாற்றியிருக்கிறது உலகமயம் மற்றும் ஊடகப் பெருக்கம். தனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்கு முன்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளையே நீக்கி விட்டு ஒளிபரப்புவார்கள். ஆனால் தனியார் தொலைக்காட்சிகள் மனித மனத்தின் குரூரப் பசிக்குத் தீனி போடுகின்றன. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் திருச்சூரில் ஒரு யானை, தன்னுடைய பாகனைத் தூக்கி சுழற்றியடித்து மிதித்துக் கொல்லும் காட்சியைத் தனியார் தொலைக்காட்சியில் பார்த்து இரண்டு நாட்கள் தூங்க முடியாமல் தவித்திருக்கிறேன். இன்று அது போன்ற காட்சிகள் தினமும் ஏராளமாய் ஊடகங்களில் வலம் வருகின்றன. யாரும் தூக்கமின்றி தவிப்பதில்லை.


தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்தின் பெரும்பாலான அசைவுகள் தற்போது காணொளிக் காட்சிகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. எப்போதும் ஏதாவது ஒரு கேமரா நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய அனுமதியின்றி நம் ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப்படுகிறது. விபத்துகள், கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்குக் காற்று மட்டுமே சாட்சியாக இருந்த நிலை மாறி, இன்று கேமராக்கள் சாட்சிகளாகின்றன. அக்காட்சிகளைத் தன் இயல்பான அங்கங்களாகவே சமூகம் ஏற்கிறது. தான் பார்க்கும் அனைத்தையும் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்ளும் குழந்தைகளின் கண்கள் முன்னாலும் இக்காட்சிகள் ஏராளமாய் விரிகின்றன. அவை கையாளப்போகும் எதிர்கால உலகத்தைப் பற்றி நினைத்தால் பீதியாய் இருக்கிறது.


குற்றங்களைத் தன்னுள் நிறைத்துள்ள சமூகம், அவை காட்சிகளாகப் பரவுவதில் குற்ற உணர்ச்சி கொள்ளாதிருப்பது இயல்பானதுதான். தகவல் தொழில்நுட்ப யுகம் தணிக்கை (Censorship) என்பதை அர்த்தமற்றதாக்கியிருக்கிறது. குழந்தையின் முன்பாக அதன் தந்தையைத் தூக்கிலிட்டுக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், குருதிக் காட்சிகளைக் குழந்தைகளின் கண்முன் திரையிட்டு ஓலமிடும் குற்றச் சமூகத்திற்கும் என்னதான் வேறுபாடு? வாட்ஸ் அப், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் இது போன்ற காட்சிகளைத் தேடும் குரூர மனங்களின் பசிக்காக சினிமாவைப் போல் நிஜக் காட்சிகள் உருவாக்கப்பட்டால் என்னவாகும்? கற்பனைக்கெட்டாத கொடூரங்களுடன் நம்மை நெருங்குகிறது எதிர்காலம்.

கீற்று.காம், 08 செப்டம்பர் 2015

2 comments:

  1. Super எதார்த்தமான உண்மை

    ReplyDelete
  2. எமது ஊற்று வலைத் திரட்டியில் தங்கள் தளம் இணைக்கப்பட்டுவிட்டது.
    http://ootru.yarlsoft.com/
    http://ootru.atwebpages.com/
    தாமதத்திற்கு மன்னிக்கவும்
    தங்கள் ஒத்துழைப்பிற்கு ஊற்று நன்றி தெரிவிக்கின்றது.

    ReplyDelete

கருத்துக்கள்