மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 3 - கணேஷ் சுப்ரமணி

அணிதலும் களை(த்)தலும்:
சங்க காலப் பெண்கள் தங்கள் தோற்றத்துக்குப் பொலிவூட்டும் வகையில் வித விதமான ஆடை, அணிகலன்களை அணிந்ததாகச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பஞ்சு, பட்டு, விலங்குகளின் மயிர் போன்றவற்றாலான அழகான ஆடைகளை அணிந்தனர். பலவிதமான கைவளைகள், மோசை எனும் மரகதக் கடைசெறி, பொன்னாலான சங்கிலிகள், பொன் ஞாண், காதணிகள், இடையில் மேகலை போன்றவற்றைப் பெண்கள் விரும்பி அணிந்ததாகத் தெரிகிறது.
ஆடை, அணிகலன்கள் தவிர தங்கள் உடலை அழகுபடுத்துவதிலும் பெண்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். சந்தனத்தால் மார்பில் தொய்யில் எழுதுதல், உடலுக்கு மஞ்சள் பூசுதல், கருத்து நீண்ட கூந்தலை கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகக் கோலம் செய்தல் (இது ஐம்பால் என்று அழைக்கப்பட்டது), பலவகையான மலர்களைச் சூடுதல், கண்களுக்கு மைதீட்டுதல் போன்ற பலவித அழகுபடுத்தல்கள் பெண்கள் வாழ்வில் ஒன்று கலந்திருந்தன.

ஒருத்திக்கு ஒருவன் எனும் கற்புக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டச் சமூகத்தில் இவ்விதமான அழகுபடுத்தல்கள் எல்லாம் கணவன் எனும் ஆணை நோக்கியதாகவும் அவனது ரசனை, விருப்பம் போன்றவற்றை நிறைவு செய்வதற்கானதாகவும் புனையப்பட்டன. இதனால் கணவனுடைய மறைவுக்குப் பின்னர் பெண்ணுக்கு இவற்றுக்கான தேவை மறைந்து விடுகிறது. அவளால் பேணி வளர்க்கப்பட்ட கூந்தல் மழிக்கப் படுகிறது. அழகான வண்ணமயமான ஆடைகள் மறுக்கப்படுகின்றன. கைவளை உள்ளிட்ட அணிகலன்கள் நீக்கப்படுகின்றன. மொத்தத்தில் சமூகத்தால் வரையறை செய்யப்பட்ட அழகுக்கூறுகள் ஏதுமில்லாமல், சமூக வெளியில் நடமாடவே தயங்கும் அழகற்ற உருவமாக அப்பெண் நிறுத்தப்படுகிறாள்.

'முலைபொலி யாக முருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வøயால் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர
ஆவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே'1
எனும் புறநானூற்றுப் பாடல் வரிகளில் கணவனை இழந்த பெண்ணின் கூந்தல் களையப்பட்ட செய்தி காணப்படுகிறது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுடைய பகை வேந்தர் இருவர் அவனால் இறந்துபட, அவர் தம் கைம்மை மகளிரின் கூந்தல் மழிக்கப்பட்டதை இப்பாடல் கூறுகிறது. இதற்கு உரை எழுதும் அவ்வை துரைசாமிப்பிள்ளை 'கணவனையிழந்த மகளிர் தம் கூந்தலைக் கொய்து கொள்ளும் வழக்கும் பண்டைத் தமிழ் வழக்காதல் துணியப்படும்' என்கிறார்.2
'கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி யுணவின் மனைவியோ டினியே'3

'கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போல'4
எனும் பாடல் வரிகளிலும் கைம்பெண்களின் கூந்தல் களையப்பட்ட செய்தி காணப்படுகிறது. கணவனை இழந்த பெண்ணின் அணிகலன்கள் களையப்பட்டதைப் பல சங்கப் பாடற்செய்திகள் உணர்த்துகின்றன.

‘ஊழினுருப்பு வெருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற’5
எனும் பாடலில் கணவனை இழந்த பெண்ணின் கையில் உள்ள வளையல்கள் நீக்கப்படுவது இடம் பெறுகிறது. அணிகலன்கள் களையப்பட்ட மகளிர் ‘கழிகல மகளிர்’ (அணிகலன்கள் நீக்கப்பட்ட மகளிர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்
சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்
கழிகல மகளிர் போல
வழிநினைந் திருத்த லதனினு மரிதே’6
எனும் பாடல் வரிகளில் இது புலப்படுகிறது. கணவனை இழந்த பெண்ணின் கூந்தல் மழிக்கப்பட்ட செய்திகள் புறநானூற்றின் 25, 261, 280, 250 ஆகிய பாடல்களில் இடம் பெறுகின்றன. இவற்றின் பின்னணியில் உள்ள ஆணாதிக்கச் சமூகத்தின் அசைவியக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. 


கணவனுடைய மறைவுக்குப் பின்னர் மனைவியின் அழகு தேவைப்படாது போவது மட்டுமின்றி சமூகத்தால் விரும்பப்படாத ஒன்றாகவும் மாறுகிறது. அப்பெண் வேறு ஆடவர் மீது விருப்பம் கொண்டு விடாமலிருக்கவும் சில முன்தயாரிப்புகள் சமூகத்தால் செய்யப்பட்டன. கணவனை இழந்த பெண் தன்னுடைய இன்ப நாட்டங்களையும் பாலுணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு வாழும் விதமான சில புலனொடுக்கக் குறிப்புகள் 'பண்பாடு' என்ற பெயரில் அவளுக்கு கட்டாயமாக்கப்பட்டன. பாயில் படுப்பதைத் தவிர்த்து, வெறுந்தரையிலோ அல்லது பறற்கற்கள் மீதோ படுத்துறங்குதல் போன்றவை கணவனை இழந்த பெண்களுக்கு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டன. 


வேறு ஆடவர் அப்பெண் மீது ஈடுபாடு கொண்டு விடாமலிருப்பதற்காக முன்னர்க் கூறப்பட்ட அணிகலன்களைக் களைதல், தோற்றப் பொலிவைக் குலைத்தல் போன்றவை பண்பாட்டுக் கூறுகளாகப் பெண் மீது திணிக்கப்பட்டன. இக்கூறுகளுக்குப் பொருளாதாரப் பின்னணியும் உண்டு. நிலவுடைமைச் சமூகத்தில் குடும்பத்தின் பொருளாதாரம் ஆணை மையமிட்டதாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. பெண்ணுக்கான பொருளாதாரச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டு, அவள் தன்னுடைய கணவனைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டாள். எனவே கணவன் இறந்த பின்னர் ‘மனையுறை’ மகளிர் உயிர் வாழத் தகுதியற்றவர்களாகின்றனர். அவர்கள் மனையினுள்ளே உறைந்து வாழ வேண்டியவர்களாகின்றனர். கணவன் இறந்த பிறகும் கூட அவள் வீட்டைத் தாண்டி வெளியே செல்வதை சமூகம் ஏற்கவில்லை. எனவே பெண்ணுடைய அழகை முழுமைப்படுத்துவதாகக் கற்பிதம் செய்யப்பட்ட அனைத்துக் கூறுகளும் அவளிடமிருந்து பறிக்கப்பட்டன. நீண்ட கூந்தல் வண்ண ஆடைகள் மற்றும் அணிகலன்களை இழந்து அவள் வீட்டை விட்டு வெளியே செல்லவே நாணுமாறு செய்யப்பட்டாள். 


ஆணாதிக்கச் சமூகம் இத்துடன் நின்றுவிடவில்லை. கணவனை இழந்த பெண் எதிரில் வருவதோ, பொதுக்காரியங்களில் கலந்து கொள்வதோ தகாத செயல்கள் என்பதான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டன. உளவியல் ரீதியாக அவள் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டாள். இவற்றால் இத்தகைய பெண்கள் வீட்டிற்குள் தாங்களாகவே அடைபட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டனர். (வீட்டினுள்ளும் கூட விருந்தினரை எதிர்கொள்ளுதல் கணவனைப் பிரிந்த/இழந்த பெண்களுக்கு மறுக்கப்பட்டது. அதாவது வீட்டுக்கு வெளியில் மட்டுமின்றி, வீட்டிற்குள்ளும் அவள் சமூக உறவுகளிலிருந்து விலக்கப் படுகிறாள்.) இதன் மூலம் அவர்கள் பொருளாதார பலமும் சுதந்திரமும் அடைவது தடுக்கப்படுகிறது. 


வீட்டைத் தாண்டி வெளியே சென்று வேலை பார்த்து தன்னுடைய, குடும்பத்தினுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழலும் அழிக்கப்பட்டு விடுகிறது. வீட்டிற்குள்ளேயே இருந்து தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமான தொழில்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கணவனை இழந்த சங்ககாலப் பெண்கள் பருத்தி நூல் நெய்யும் தொழிலில் ஈடுபட்டதால் அவர்கள் ‘பருத்திப் பெண்டிர்’ ('பருத்திப் பெண்டின் பனுவ லன்ன', புறம்: 125) என்று குறிக்கப்படுகின்றனர். தோற்றப் பொலிவைக் குலைப்பதன் மூலமாக தன்மீது ஈடுபாடு கொள்ளும் வேறு ஆடவர் மூலம் தன்னுடைய பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதும், அவள் வேறு திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் முற்றாக மறுக்கப்பட்டு விடுகின்றன.


மறுமை - ஆசைத் தூண்டல்கள்:
சங்க கால மக்கள் இறப்புக்குப் பின்னரும் வாழ்வு தொடர்வதாக  அதாவது மறுமைக் கோட்பாட்டினை  நம்பினர். அன்றைய தமிழர்கள் இறப்பை வாழ்க்கையின் முடிப்பாகக் கருதவில்லை. இறப்பு என்பது அடுத்த உலகத்தின் பயணம் என்று நம்பினர் என்கிறார் க.ப.அறவாணன்7. மகளிர்க்குக் கற்புநெறியை வலியுறுத்துவதில் மறுமைக் கோட்பாட்டிற்கும் முக்கியப் பங்கு இருந்துள்ளது.


கணவன் இறந்த பின்னர் மகளிர் மேற்கொள்ளும் கற்பு நெறி சார்ந்த செயல்பாடுகளை வைத்தே அவளுடைய மறுமை வாழ்வு அமையும் என்பதான கருத்துகள் பரவலாக்கப்பட்டிருந்தன. கைம்மை நோன்பிருக்கும் நிலையை விரும்பாது விலக்கி, கணவன் இறந்ததும் உடனுயிர்விட்டோ, உடன்கட்டையேறி உயிர்விட்டோ தன் கற்பு நெறியைப் பேணும் மகளிர் தேவருலகத்தை அடைவர் என்று உளவியல்பூர்வமாகத் தூண்டப்பட்டனர். கணவன் இறந்தவுடன் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் பெண் தேவருலகத்தை அடைந்து இன்பமடைவாள் என்ற நம்பிக்கையும் சங்க காலத்தில் பரவலாக்கப்பட்டிருந்தது.


கணவனை இழந்ததும் உயிர்விடாது, கைம்மை நோன்பு நோற்றுக் கடைக்கற்பு நெறி பேணும் பெண்களுக்கும் மறுபிறப்பில் பலன்கள் உண்டு. அப்பெண்கள் மறுபிறப்பில் மீண்டும் தத்தம் கணவரையே அடைந்து இன்புற்று வாழ்வர் என்று கூறப்பட்டது. ‘அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்’ என்று மணிமேகலை இதனைச் சுட்டுகிறது. இம்மை மட்டுமின்றி மறுமையிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பினர் சங்க கால மகளிர்.
‘இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே’8
எனும் குறுந்தொகைப் பாடலில் தலைவியின் இந்த மனநிலை வெளிப்படுகிறது. இந்த உளநிலையைக் கற்பு நெறி உருவாக்கத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கணவன் இறந்ததும் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இறப்பு விழைவு மனநிலையை பெண்களிடம் உருவாக்கியது ஆணாதிக்கச் சமூகம்.


நிறைவு:
தாய்மைச் சமூகம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பெண் உடைமைப் பொருளானாள். நிலைவுடைமைச் சமூகத்தில் ஆணாதிக்கம் வலுப்பெற்று பெண் அடிமையானாள். பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரத்தை முடக்கும் நோக்குடன் கற்பு நெறியைக் கட்டமைப்புச் செய்து வலுப்படுத்தியது ஆண் மையச் சமூகம். சங்க காலச் சமூகத்தில் பெண்களின் கற்பொழுக்கம் ஆணின் இறப்பையொட்டியே வெளிப்படும் விதமாகக் கருத்தாக்கம் செய்யப்படுவது கணவனுக்குப் பின்னர் மனைவியின் வாழ்வியற் சுதந்திரத்தை முடக்கும் நோக்குடையது. இதனடிப்படையில் உடனுயிர் மாயும் தலைக்கற்பும், உடன்கட்டையேறி உயிர்விடும் இடைக்கற்பும் பெண்ணுக்குப் புகழ் சேர்க்கும் உயர்ந்த நெறிகளாக வலியுறுத்தப்பட்டன.


இக்கருத்தாக்கங்களின் வாயிலாக கணவன் இறந்ததும் மனைவி தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் சாவு விழைவு மனநிலை சமூகத்தால் தூண்டப்பட்டது.
பொதுவாக, பெண் மீதான அடக்குமுறைகள் அனைத்தும் ஆணாதிக்கச் சமூகத்தின் அசைவியக்கத்தினால் பண்பாட்டுக் கூறுகளாகப் படிமப்படுத்தப் படுகின்றன. பொற்காலமாகப் போற்றப் படும் சங்க காலமும் இதற்கு விதிவிலக்கல்ல. சங்க இலக்கியங்களில் காணலாகும் சில குறிப்புகளை நுணுகி ஆராயும் போது இது தெளிவாகப் புலப்படுகிறது. 


பெண்ணுடலுக்கான அழகு எது என்பதை முடிவு செய்வதுடன் அதற்கான அணிகலன்களையும் ஆணாதிக்கச் சமூகமே வடிவமைத்துப் பெண்களை ஏற்கச் செய்கிறது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட பெண்ணழகு என்பது ஒரே ஓர் ஆணை  அதாவது கணவனை  மட்டுமே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டது எனும் கருத்தியலும் பெண் உளவியலில் பதிவு செய்யப்பட்டது. பெண்ணுடலின் அழகுக்கான தேவை முடிந்த பின்  கணவன் இறந்த பின் 
அவ்வழகு அழிக்கப் பட்டது; கூந்தல் மழிக்கப்பட்டது; அணிகலன்கள் களையப்பட்டன. அவள் சமூக உறவுகளிலிருந்து விலக்கப்பட்டு வீட்டிற்குள்ளாகவும் தனக்குள்ளாகவும் ஒடுக்கப்பட்டாள்.


குறிப்புகள்:
1.    கல்லாடனார், புறநானூறு  25, 1014.
2.    புறநானூறு, உரை: அவ்வை துரைசாமிப் பிள்ளை, கழக வெளியீடு, சென்னை, 1967, பக்.75.
3.    தாயங்கண்ணியார், புறநானூறு  250.
4.    ஆளூர் மூலங்கியார், புறநானூறு  128.
5.    பெருஞ்சித்தரனார், புறநானூறு  237.
6.    மாறோக்கத்து நப்பசலையார், புறநானூறு  280.
7.    க.ப.அறவாணன், தமிழ் இலக்கியச் சமூகவியல், தமிழ்க் கோட்டம், புதுச்சேரி, 1992, பக்.71.
8.    அம்மூவனார், குறுந்தொகை49.

No comments:

Post a Comment

கருத்துக்கள்