பெண்களுக்குத் தனிக்கல்லூரி தேவையில்லை - கல்யாணி

கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாம் பகுதி

கே: டியூசன் எடுப்பதைப் பற்றி சொல்லுங்கள்.

ப: டியூசன் எடுப்பதுதான் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை. இலங்கையில் இதைச் செய்தார்கள். வேலையில் இருந்து கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை சஸ்பென்ட் செய்வது அங்கு நடைமுறையில் இருக்கிறது. இங்கும் அதற்கென்று தனிச் சட்டம் எல்லாம் தேவையில்லை. ஏற்கனவே சட்டத்தில் அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. முன்பு ஒரு சட்டம் இருந்தது. ஒரு ஆசிரியர் இரண்டு மாணவர்களுக்கு மேல் டியூசன் எடுக்கக் கூடாது. அதற்கும் குறைந்தபட்ச ஊதியத்துக்கு மேல் வாங்கக் கூடாது என்றிருந்தது. இன்றும் டியூசன் எடுப்பதைத் தடுப்பதற்கான சட்ட வழிமுளைகள் இருக்கின்றன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

இன்று ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியரும் தனியாக டியூசன் நடத்துவதில்லை. தனியாக ஒரு இணைப் பள்ளிக்கூடமே (parallel school) நடத்துகின்றனர். அதிலும் ஓய்வின்றி இரண்டு, மூன்று ஷிப்ட் பாடம் நடத்துகிறார்கள். அதனிடையே பள்ளிக்கூடத்தில் வந்து ஓய்வெடுக்கிறார்கள். மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் யாரும் டியூசன் எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் பள்ளியில் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். டியூசன் எடுக்க அவர்களுக்கு நேரமோ, ஓய்வோ இல்லை.

டியூசன் என்பது மாணவர்களின் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும் தடுக்கிறது. சந்தேகம் வரும் முன்பே அதனைத் தெளிவாக்கி விடுகிறார்கள். இதனால் பாடம் குறித்து சிந்திப்பதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடுகிறது. பாடத்தை படிப்பது, யோசிப்பது, ஐயுறுவது, பதிலைத் தேடுவது என்பதான பிராசஸ் (Process) ரொம்ப முக்கியம். ஆனால் டியூசனில் இதற்கு வேலையில்லை. சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகளை யோசிக்க வேண்டிய அவசியமே மாணவனுக்கு இல்லை. எல்லா கேள்விகளுக்கும் ரெடிமேட் ஆன்சர் (Readymade answer) வைத்துக் கொண்டு கற்றுக் கொடுக்கிறார்கள். கேள்வி கேட்கும் மனப்பான்மையும், ஆய்வுச் சிந்தனைகளும் இல்லாமல் போவதற்கு டியூசன் முறை முக்கியக் காரணம்.

கே: ஆனால் கற்றல் குறைபாடு உள்ள மாணவனுக்கு டியூசன் அவசியம்தானே? அதை எப்படி மறுக்க முடியும்?
ப: உண்மைதான். ஆனால் அப்படி கற்றல் குறைபாடு உள்ள மாணவன் அதே பள்ளி ஆசிரியரிடம்தான் டியூசன் படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லையே. தனியாக முழுநேரமாக டியூசன் தொழிலில் இருப்பவர்களிடம் படிக்கலாமே. பணியில் இருக்கும் ஆசிரியர் டியூசன் எடுப்பது என்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட விசயம். அதை ஊக்குவிப்பது தவறு என்கிறேன். நான் பணியில் இருந்த போது என்னுடைய முதல் இடமாற்றமே இதனால்தான் வந்தது. டியூசன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்டித்ததற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு என்னை ‘டிரான்ஸ்பர்’ செய்ய வைத்தார்கள்.

கே: கல்விமுறையில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ப: மாற்றுவது என்பதெல்லாம் அவ்வளவு சுலபமானதல்ல. எதையும் கட்டாயப்படுத்தி சாதிக்க முடியாது. லெனின் சொன்னது போல் மோட்சத்துக்குப் போவதாயிருந்தாலும் யாரையும் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்க முடியாது. நல்ல கல்வி என்பதை மக்கள் மனமாற்றத்தின் மூலம்தான் ஏற்கச் செய்ய முடியும். எனவே தற்போதுள்ள கல்விமுறையை அப்படியே புரட்டிப் போடுவது தீர்வாக முடியாது. சீர்கேடுகளை சரி செய்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்களை கொண்டு வந்து மக்களை ஏற்கச் செய்வதுதான் சரியான வழிமுறையாயிருக்க முடியும்.

கே: பள்ளி என்பது வெறும் கட்டிடமாயிருக்க முடியாது. வேறு என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ப: பள்ளிக்கூடம் என்பது பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியது. சீனாவில் எல்லாம் மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் நேரத்தை விட வெளியில் இருக்கும் நேரம்தான் அதிகமாயிருக்கும். எல்லா நேரமும் வகுப்பறைகளில் அடைத்து வைத்து பாடம் சொல்லிக் கொண்டிருப்பது சரியான நடைமுறையல்ல. பிள்ளைகள் வெளியே போக வேண்டும். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் சுழற்சி முறையில் வாரம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். வெளியில் செல்வதென்றால் சுற்றுலா செல்வதல்ல. அந்தந்த மாவட்டத்தின் முக்கிய இடங்கள், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம், வயல்வெளிகள் என்று கூட்டிச் செல்வது அவனுடைய அறிவை விசாலமாக்கும். ஓராண்டில் ஒவ்வொரு மாணவனும் பெருளவிலான அனுபவ அறிவை இதன் மூலம் பெற முடியும். பாடத்திட்டம் மட்டுமே கல்வியல்ல.

விளையாட்டுக் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். உடற்கல்வி வகுப்புகளுக்கான பாட வேளைகள் அதிகரிக்கப்பட்டு மைதானத்திலும் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக வேண்டும். இதை நடைமுறைப்படுத்த விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அவற்றைக் கொண்டு உயர்கல்வியில் முன்னுரிமை தரப்பட வேண்டும். அப்படிச் செய்தால் பள்ளிகள் உடற்கல்வி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கி விடும்.

மாநில அளவில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் கிடைக்கும் முக்கியத்துவம் பள்ளியளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எல்லா பள்ளிகளும் ஒரே தரத்தில் இல்லை. எனவே அந்தந்தப் பள்ளிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் திறமை உயர்கல்வியில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்தால் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

அதே போல் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து மற்ற பாடங்களில் குறைவாக எடுக்கும் மாணவர்களால் அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற முடிவதில்லை என்று சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மற்ற மாநிலங்களில் இப்படி இல்லை. ஆந்திராவில் எல்லா பாடங்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேசிய பொதுத் தேர்வுகளில் ஆந்திர மாணவர்கள் அதிகளவில் சாதிப்பதற்கு இதுவே காரணம்.

கே: தேர்வு முறை குறித்து சொல்லுங்கள். தற்போதைய தேர்வு முறை சரியானதா?
ப: தேர்வு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. செயல்முறைத் தேர்வுகளில் எல்லா மாணவர்களுமே ஐம்பதுக்கு ஐம்பது வாங்குகிறார்கள். பள்ளிக்குள்ளேயே வழங்கப்படுவதுதானே. எழுத்துத் தேர்வில் நூற்றைம்பதுக்கு முப்பத்தைந்து கூட வாங்காத பல மாணவர்கள் பிராக்டிகல் தேர்வில் ஐம்பதுக்கு ஐம்பதுக்கு எப்படி வாங்குகிறார்கள்? இப்படி வாங்க முடிந்தால் அந்தந்த பள்ளிகளுக்கு பிராக்டிகல் தேர்வு நடத்த தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இது மாணவர்களின் கல்வியறிவை வளர்க்காது.

கே: ஆசிரியர் பணி நியமனங்களில் நடக்கும் முறைகேடுகள் எந்தளவுக்கு கல்வியைப் பாதிக்கும்? தகுதிக்கும் திறமைக்கும் மதிப்பின்றி பணம் கொடுத்தால் பணியிடம் கிடைக்கும் எனும் நிலை உருவாகியுள்ளது. அப்படி வேலைக்கு வருபவர்களிடம் சிறந்த கற்பித்தலை எதிர்பார்க்க முடியாது. இது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குகிறது?
ப: கல்வியின் தரத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளில் இது ஒன்று. ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் போது தகுதியும் திறனும்தான் முக்கியம். இல்லையென்றால் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும். ஏற்கனவே அப்படிப்பட்ட நிலைதான் அரசுப் பள்ளிகளில் நிலவுகிறது. இதற்கு முன்னர் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) மூலம் நுழைவுத் தேர்வு வைத்து ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில் தேர்வாகி வந்தவர்கள் எல்லோரும் திறன் மிக்கவர்களாக இருந்தனர். பின்னர் தி.மு.க. ஆட்சியில் இந்தத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அவ்வளவு திறனற்றவர்களாக இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இன்று எல்லா பள்ளிகளிலும் பாடம் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது என்று எல்லா செயல்பாடுகளிலும் ஆசிரியர்களை டி.ஆர்.பி., நான் டி.ஆர்.பி. (டி.ஆர்.பி. அல்லாதவர்கள்) என்று வேறுபடுத்தி அடையாளம் காணமுடிகிறது. அவர்களுக்குள்ளேயே அப்படி பிரிந்துதான் இருக்கிறார்கள்.

ஆசிரியர் நியமனத்தில் இது போன்ற தகுதியையும், திறனையும் வலியுறுத்தும் தேர்வுகள் அவசியம். சாதாரணமாக அரசுப்பணியில் ஒரு கிளர்க் பணிக்குச் செல்வதென்றாலே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதித்தான் செல்ல முடியும். ஆனால் ஆசிரியர் பணிக்குச் செல்வதென்றால் இது போன்ற தேர்வுகள் அவசியம் இல்லை என்ற நிலை உள்ளது. கல்லூரி, பல்கலைக்கழக அளவில் கூட பேராசிரியர் பணியிடங்களுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படுவதில்லை.

பணம் வாங்கிக் கொண்டு நியமனம் செய்வதும் தவறு. அதற்காக வேலைவாய்ப்பு அலுவலக மூப்பு அடிப்படையில் நியமிப்பதும் தவறு. எப்போதோ படித்து முடித்து பதிவு செய்து விட்டு வேறு வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். பின்னர் சீனியாரிட்டி வந்ததும் அவர்களை அழைத்து வேலைக்கு அமர்த்துகிறார்கள். அவர்கள் பாடம் நடத்தும் திறனோ, அறிவோ பெற்றிருக்கிறார்களா என்பதைப் பற்றி யாரும் யோசிப்பதே இல்லை.

அது மட்டுமின்றி ஆசிரியர் பணியிடங்களும் சரிவர நிரப்பப்படுவதில்லை. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது அவர்களுடைய பிரச்சினைகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை இப்போதிருக்கும் அரசோ அல்லது கட்சிகளோ உணர்வதில்லை. ஆசிரியர்மாணவர் விகிதம் 1:20 இருக்க வேண்டும். ஆனால் தற்போது 1:40 ஆகிவிட்டது. இப்படி இருக்கும் போது எப்படி தரமான கல்வியை எதிர்பார்க்க முடியும்? இத்தகைய போக்குகள் எதிர்காலத்தில் கல்வித்துறையில் இன்னும் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

கே: ஓர் ஆண் குழந்தை கல்வி கற்பதற்கும் பெண் குழந்தை கல்வி கற்பதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?
ப: அப்படி எதுவும் இருப்பதாகக் கூற முடியாது. கல்வியில் ஆண், பெண் பாகுபாடே தேவையற்றது. என்னைக் கேட்டால் எல்லா கல்வி நிறுவனங்களுமே இருபாலர் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரிகளும் பள்ளிகளும் இயங்குவது தேவையில்லாதது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் போதுதான் பால்பாகுபாடு சார்ந்த பிரச்சினைகள் குறையும்.

கே: மாற்றுக் கல்வி என்றால் என்ன?
ப: மாற்றுக் கல்வி என்பது எல்லாவற்றையும் மாற்றுவதல்ல. இருக்கிற கல்வி முறையை அப்படியே மாற்ற வேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போதைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளைக் களைவதே மாற்றுக் கல்வி என்று எண்ணுகிறேன். இப்போதுள்ள கல்வி முறையில் உள்ள சரியான அம்சங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கே: கல்வியின் தரம் என்பதை எதை வைத்து முடிவு செய்யலாம். அதாவது தரமான கல்விக்கு அளவுகோல் எது?
ப: சிறந்த மனிதனை உருவாக்குவதுதான் நல்ல கல்வி. அதுதான் அடிப்படை. அறிவியல், வரலாறு என்று அவரவர் விருப்பம் சார்ந்த அறிவைப் பெறுவதெல்லாம் அதற்குப் பின்னர்தான். இப்போதுள்ள கல்வி முறை என்பது வேலை வாய்ப்பை நோக்கியதாக மட்டுமே உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் உயர் நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்களை மையமிட்டதாகவே தற்போதைய கல்வி முறை உள்ளது.

கே: கல்வியில் இட ஒதுக்கீடு என்பது அவசியமா?
ப: கண்டிப்பாக அவசியம். மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி இடங்களில் 85 சதவீதம் பேர் மெட்ரிக் பள்ளிகளில் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒட்டு மொத்த பள்ளி மாணவர்களில் அவர்கள் கிட்டத்தட்ட பதினைந்து சதவீதம் மட்டுமே. மீதமுள்ள பெரும்பான்மை மாணவர்கள் ஸ்டேட் போர்டு பள்ளிகளில் படிப்பவர்கள். ஆனால் வெறும் பதினைந்து சதவீதம் உள்ள மெட்ரிக் மாணவர்கள் எப்படி 85 சதவீத உயர்கல்வி இடங்களை ஆக்கிரமிக்க முடிகிறது? இவ்வளவுக்கும் மெட்ரிக் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் இருக்கின்றன. அப்படி இருந்தும் தனியார் பள்ளி மாணவர்கள் இவ்வளவு இடங்களைப் பிடிக்க முடிகிறது என்றால் ஏதோ குறை இருக்கிறது என்றுதான் அர்த்தம். அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இரண்டு ஆண்டு பாடங்களை படிக்கவிடாமல்தானே தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துகின்றன? இது போன்ற நிலை இருக்கும் வரை இட ஒதுக்கீடு மிக அவசியம்.

பேட்டி
கணேஷ் எபி 
பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment

கருத்துக்கள்