தனியார் கல்வி தரமானதல்ல - கல்யாணி


கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் இரண்டாம் பகுதி

கே: மெட்ரிக் பள்ளிகளில் படித்தால் மட்டுமே வளர்ச்சியடைய முடியும் என்ற நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையை அடைய தனியார் பள்ளிகள் என்னவெல்லாம் செய்தார்கள்?

ப: தனியார் பள்ளி நடத்துபவர்கள் அரசியலில் தாக்கம் செலுத்தித்தான் இதை சாதித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆங்கில மோகம் என்பது இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அதற்கு அரசியல் காரணங்களும் இருந்தன. மொழிக்காக உயிர்த் தியாகம் செய்தது இங்குதான். ஆனால் இந்தியை எதிர்த்துப் போரிட்ட போது இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தைத்தான் முன்வைத்தார்கள். தமிழை முன் வைக்காமல் விட்டு விட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் அதிகப்படியான ஆங்கில மோகத்துக்கு இதுவே காரணம். இது ஓர் அரசியல் பிழை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆங்கில ஆதிக்கத்துக்கு வழிகோலுவதாக அமைந்து விட்டது. இருமொழிக் கொள்கை என்பதே தவறான ஒன்று. ஒரு மொழிக் கொள்கைதான் இருந்திருக்க வேண்டும்.

முன்பிருந்த சோவியத் நாட்டில் ரஷ்ய மொழி என்பது ஆட்சி மொழியாக இருக்கவில்லை. அங்குள்ள எல்லா மொழிகளுமே ஆட்சி மொழிதான். இங்கு இணைப்பு மொழி என்று ஒரு முறையை வைத்திருக்கிறோம். இந்த லிங்க் லாங்வேஜ் (Link Language) என்பதே தவறான முறை. இங்குள்ள ஒவ்வாரு இனமும் தனித்தனி தேசிய இனங்கள். தமிழ் ஒரு தேசிய இனம். கேரளாவில் இருப்பது தனி தேசிய இனம். எந்த மொழியில் நாம் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வேறு யாரோ தீர்மானிப்பதாக இருக்கக் கூடாது.

கே: இந்த நிலையை தனியார் பள்ளிகள் எப்படி தங்களுக்கு சாககமாகப் பயன்படுத்திக் கொண்டன?
ப: மக்களிடம் உள்ள ஆங்கில மோகத்தை அப்பள்ளிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. அத்துடன் பொதுத் தேர்வுகளில் ரேங்க் எடுக்கும் முக்கியத்துவத்தையும் மக்களிடம் தொடர்ந்து பறைசாற்றி தங்கள் சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டன. அது மட்டுமின்றி ஆங்கில மோகம் என்பதை ஒரு பண்பாட்டு ரீதியாகவே இங்கு விதைத்து விட்டனர். பண்பாட்டு ரீதியாக இடம்பெற்று விட்டபின் அதை உடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஆங்கிலம் என்பது ஒரு மொழியாகப் பார்க்கப்படுவதில்லை. ஆங்கிலம் படித்தவன் அறிவாளி என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். சொல்லப்போனால் தனியார் பள்ளிகள் என்றே சொல்லக்கூடாது. அவற்றை ஆங்கிலப் பள்ளிகள் என்றே சொல்ல வேண்டும்.

கே: இந்தச் சூழலில் சமச்சீர் கல்வியின் தாக்கம் எத்தகையதாக இருக்கும்?
ப: வேறுபாடுகளுடன் கூடிய கல்வியை தனியார் கல்விகள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்தன. இவற்றின் மூலமே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவற்றால் முடிந்திருக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் ஐநூறு மதிப்பெண்களுக்குப் படித்தால் மெட்ரிக் பள்ளி மாணவன் ஆயிரத்து நூறு மதிப்பெண்களுக்குப் படிக்கிறான். இது போன்ற வேறுபாடுகள் எல்லாம் உடையும் போது தனியார் பள்ளிகள் பெரும்பாதிப்பைச் சந்திக்கின்றன. சமச்சீர் கல்வியில் எல்லோரும் ஐநூறு மதிப்பபெண்களுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்று கொண்டு வருவதே ஒரு பெரிய மாற்றம்தான். ஆயிரத்து நூறு மதிப்பெண்களுக்குப் படிப்பதுதான் தரமான கல்வி என்ற தோற்றத்தை அவர்கள் உண்டாக்கி வைத்துள்ளனர். உண்மையில் தரத்தைப் பற்றிப் பேச தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு தகுதியே கிடையாது. அவர்களுடைய கல்விமுறை தரமானதல்ல.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஆகிய தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதனை நன்கு உணர முடிந்தது. பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் கல்லூரி அளவிலான பாடத்திட்டத்துடன் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ எனப்படும் மேனிலைக் கல்வி முறை தொடங்கப்பட்டது. இவற்றை பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று சொல்வதில்லை; சொல்லவும் கூடாது. பள்ளிக் கல்விக்கு அடுத்த நிலையில் உள்ள பாடத்திட்டத்தை இரண்டாகப் பிரித்து மேல்நிலைக் கல்வி வகுப்புகளாக நடத்துகின்றனர். அதாவது ப்ளஸ் ஒன் பாடத்திட்டத்தின் தொடர்ச்சியாக ப்ளஸ் டூ பாடத்திட்டம் இருக்கும். ஆனால் ப்ளஸ் டூ மட்டும் பொதுத் தேர்வு என்பதால் மெட்ரிக் பள்ளிகள் ப்ளஸ் ஒன் பாடங்களை நடத்துவதில்லை. உதாரணமாக இயற்பியலில் ப்ளஸ் ஒன் வகுப்பில் வெப்பவியல் இருக்கும். ப்ளஸ் டூவில் இருக்காது. மெட்ரிக் பள்ளி மாணவன் வெப்பவியல் படிக்கமால்தான் பள்ளிக் கல்வி முடித்து வெளியேறுவான். அதே போல் பத்தாம் வகுப்புக்கு முன் உள்ள ஒன்பதாம் வகுப்பு பாடங்களையும் நடத்துவதில்லை. ஆக, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உண்மையில் இரண்டாண்டுகளுக்குரிய பாடங்களை படிக்காமலேதான் வெளியேறுகின்றனர். அதாவது பனிரண்டு ஆண்டுகளில் பத்தாண்டுகளுக்குரிய பாடங்களை மட்டுமே அவர்கள் படிக்கின்றனர். இது எப்படி தரமான கல்வியாகும்?

கே: சமச்சீர் கல்விக்கு எதிராக தனியார் பள்ளிகள் கடுமையாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது போல் தற்போதைய புதிய அரசும் சமச்சீர் கல்விக்கு எதிராக இருக்கிறது. இது குறித்து?
ப: தனியார் பள்ளிகளின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் என்பது தேர்தலுக்கு முன்பே தொடங்கிவிட்டன. கடந்த ஜனவரி இருபத்தொன்பதாம் தேதியே தனியார் பள்ளிகளின் மாநில மாநாடு நடந்தது. அதில் போடப்பட்ட தீர்மானங்களில் முதன்மையானது சமச்சீர் கல்வியை நிறுத்த வேண்டும் என்பதுதான். இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நகல்கள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன. நாங்களும் தனியார் பள்ளி நடத்தி வருவதால் எங்களுக்கும் அனுப்பியிருந்தார்கள். (தீர்மானத்தின் நகல்களைக் காட்டுகிறார்.) இந்தத் தீர்மானத்தைக் கூட அவர்கள் முன்னிறுத்தும் ஆங்கிலத்தில் எழுதவில்லை. தமிழில்தான் எழுதியிருக்கிறார்கள்.

அதற்குப் பின்னர் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக வந்த ஜெயலலிதா சமச்சீர் கல்வி குறித்து யாருடனும் விவாதித்ததாகத் தெரியவில்லை. கல்வியாளர்களை அவர் கலந்து பேசியிருக்கலாம். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். குறைந்த பட்சம் அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட இது பற்றி விவாதிக்க வில்லை. அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாகவே பழைய பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு வினியோகிப்பதற்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு விட்டன. ஆக, அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தும் தங்களின் ‘லாபி’களின் மூலம் காரியத்தை சாதித்து விட்டார்கள் தனியார் பள்ளிக்காரர்கள்.

கே: அப்படியென்றால் தேர்தலுக்கு முன்பாகவே சமச்சர் கல்வி தொடர்பான ஒப்பந்தம் உருவாகி விட்டதா?
ப: ஆமாம். தேர்தலுக்கு முன்னரே இப்படி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகியிருக்க வேண்டும். இத கல்விக்காக செய்யப்பட்ட ஒப்பந்தமல்ல. சமச்சீர் கல்வியை நிரந்தரமாக தடை செய்வதற்கான முதல் கட்ட செயல்பாடுதான் அது. தங்களுடைய வணிக நோக்கிற்கு எதிரானதாக இருப்பதாலேயே சமச்சீர் கல்வியை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். பாடப்புத்தகங்கள் அச்சிடுவது முதல் பேனா, பென்சில் வழங்குவது வரை அனைத்திலும் அவர்களுக்கு கமிசன் கிடைக்கிறது. மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பு தொடர்பான எதையும் வெளியில் வாங்க முடியாது. எல்லாமே கல்வி நிறுவனத்திலேயே வாங்கியாக வேண்டும். பள்ளிக் கட்டணத்தின் மூலம் சம்பாதிப்பதை விட இதன் மூலம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் சம்பாதிக்கிறார்கள். பேனா, பென்சில், ஷூ, சீருடை என்று எல்லாவற்றையும் விற்கிறார்கள். தனியார் பள்ளிகளைப் பாருங்கள். அவைகள் எல்லாம் பள்ளிகள் மாதிரியா இருக்கின்றன? ஏதோ டிபார்ட்மென்டல் ஸ்டோர் மாதிரிதான் செயல்படுகின்றன.

தனியார் பள்ளிகள் அதிகம் எதிர்க்கும் இன்னொரு விசயம் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது. ஒவ்வொரு பள்ளியும் அதன் அருகில் உள்ள ஊர்களில் வசிக்கும் மாணவர்களுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்கிற அரசு ஆணையை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கே: மெட்ரிக் பள்ளிகளில் படித்து சுயமின்றி வளரும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?
ப: முதலாவதாக அவர்களுக்கு சமூக உணர்வு என்பதே இருக்காது. எந்த ஒரு நாட்டுக்கும் மனிதர்கள்தான் முதல் தேவை. பெரிய பெரிய டாக்டர்களோ, இஞ்சினியர்களோ அல்ல. இப்படிப்பட்ட கல்விமுறையில் பயின்று டாக்டராக உருபாபவர்கள்தான் நார்மல் டெலிவரியைக் கூட சிசேரியனாக மாற்றுபவர்களாக இருக்கின்றனர். அதாவது கல்விக்காக நிறைய பணத்தை செலவழித்து விட்டு பின்னர் அதைவிடப் பல மடங்கு லாபத்தை எப்படியெல்லாம் எடுக்க முடியும் என்றுதான் யோசிக்கிறார்கள். அவன் சோஷியலைஸ் ஆவதில்லை. அவனுக்கோ, அவனுடைய பெற்றோருக்கு அவன் நல்லவனாக வளர்வதில்லை. சமூகத்தில் உள்ளவர்களைப் புரிந்து கொள்பவனாக அவன் இருப்பதில்லை. ஏனென்றால் அவன் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட வர்க்க மாணவர்களுடன் மட்டுமே பயின்று, பழகி வருவதுதான் காரணம். சமூகத்தின் எல்லா தரப்பு மக்களிடமும் பழகுவதால் கிடைக்கும் அனுபவக் கல்வி அவனுக்குக் கிடைக்காமல் போகிறது. சிறு வயதில் சாதி, மத, வர்க்க வேறுபாடின்றி அனைவரிடமும் பழகக் கூடிய அந்த நல்ல அனுபவம் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இல்லாமலே போகிறது.


கே: இன்றைய கல்விச்சூழலில் ஆசிரியர்மாணவர் உறவு எப்படி இருக்கிறது?
ப: ஆசிரியர்மாணவர் உறவு என்பது அடிமைத்தனமானதாகத்தான் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு பயந்து இருக்க வேண்டிய நிலையில்தான் மாணவர்கள் இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் நட்புணர்வுடன் பழகக் கூடிய நிலை உருவாக வேண்டும். ஆனால் இங்கு ஆசிரியர்மாணவர் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. மாணவர்களுடன் நெருக்கமாயிருந்தால் நம்மை மட்டமாக நினைத்து விடுவான் என்று ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். திறமையும் அறிவும் இருந்தால் கண்டிப்பாக மாணவர்கள் மதிப்பார்கள்.

கல்வி முறையில் நட்பு பாராட்டுவது மிகவும் முக்கியம். தெருவில் ஒரு சிறுவனுடன் நீங்கள் பேசினால் சாதாரணமாகப் பேசுவான். நான் ஒரு ஆசிரியர் என்று சொல்லிப் பாருங்கள். உடனே கையை கட்டிக் கொண்டு பேசுவான். இந்த பயத்தை ஆசிரியர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அதனால் ஆசிரியர்மாணவர் உறவு ரொம்ப முக்கியம். எல்லோருமே தன்னுடைய ரோல் மாடல்களாகக் குறிப்பிடுவது ஆசிரியர்களைத்தான். பெற்றோர்களைக் கூட அல்ல. அந்த அளவுக்கு ஆசிரியரின் பணி முக்கியமானது. அதற்கேற்றாற்போல் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.


பேட்டி
கணேஷ் எபி 
பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment

கருத்துக்கள்