இந்தியப் பெண் - கணேஷ் சுப்ரமணி


இந்தியா
அற்றை நாளில்
இது ஆண்களின் தேசம்.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
கணவன் செத்ததும் மனைவியைத்
தீயில் தள்ளிச் சுட்டெரித்த தேசம்.

தந்தை, கணவன், மகன் என்று
அடுத்தடுத்து
ஆண்களுக்கு அடிமைப்பட்டு
அழிவதற்கே பிறந்தவள் பெண்ணென்று
ஆணவமாய் ஆணையிட்ட ஆண்களின் தேசம்.

பெண்ணைச் சுற்றிச் 
சதிகள் பல செய்து
நதிகளுக்கு அவள் பெயர் வைத்த
விசித்திர தேசம்.

காலங்களும்
காட்சிகளும் மாறின.

இன்று
சதிகளைத் தாண்டி
விதிகளை வென்று
ஆற்றல் காட்டுகிறாள்
இந்தியப் பெண்.

இந்தியா
இற்றை நாளில்
இது பெண்களின் தேசம்.

அரசுப் பணிகளிலும் 
அனைத்துப் பணிகளிலும்
பெண்களின் கூட்டம்தான்.  இனி
இட ஒதுக்கீடு கேட்க வேண்டியது
பரிதாபத்துக்குரிய என் இனம்தான்.

எங்கு சென்றாலும்
எல்லாச் சலுகைகளும்
பெண்களுக்குத்தான்.

சாலை விதிகள் எதுவும்
சேலை சுடிதார்களுக்கில்லை.
‘ஸ்ப்ளென்டர்களை’ விரட்டிப் பிடிக்கும்
வெள்ளைச் சட்டை போலிஸ்
‘ஸ்கூட்டிகளை’ கண்டு கொள்வதேயில்லை.

பெண்ணென்றால் அழகு
இந்தியப் பெண்ணென்றால்
பேரழகு

பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம் பெண்
ஒவ்வொரு பருவத்திலும்
பெண்ணழகு குறைவதேயில்லை.

அழகு மட்டுமல்ல;
பெண்ணென்றால் அறிவும்.

அருந்ததி ராயும் அவள்.
ஐஸ்வர்யா ராயும் அவள்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் அவள்.
பெரியார் சொன்ன புரட்சிப் பெண்ணும் அவள்.

பெண் ஒன்றும் மாடல்ல;
மஞ்சள் பூசிய
மூக்கணாங்கயிறைக்
கழுத்தில் சுமந்து திரிய.

சக்தியின் வடிவான பெண்ணை
பக்தியின் பெயரால்
அடிபணிய வைக்கிறார்கள்.

ஆசிரமங்கள் எல்லாம் பெண்களால் கொழுக்கின்றன.
மாமியார்களின் பேச்சை கேட்காத பெண்கள் கூட
சாமியார்களின் பேச்சை மறுப்பதில்லை.

இந்நிலை எல்லாம் மாறும்.
இன்றைய பெண்களின் கையில்
ஒரு வலுவான ஆயுதம்.
அதன் பெயர் கல்வி.

கல்வி கொண்டு
களம் சென்று
காலத்தை வெல்கிறார்கள்.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதரெல்லாம் இன்று
வேலைக்குப் போகும் பெண் வேண்டுமென்று
கல்யாணச் சந்தையில் கரமேந்தி நிற்கிறார்.

பெண்
யாருக்கும் அடிமையாய்
வாழப் பிறந்தவள் அல்ல.
யாரையும் வென்று 
ஆளப்பிறந்தவள்.


அருள் ஆனந்தர் கல்லூரியில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த 'இருப்பாய் பெண்ணே நெருப்பாய்' எனும் பெண்ணியக் கவிரயங்கில் வாசித்தது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்