கருப்புப் பணமும் வெள்ளித் திரையும்

சுவிஸ் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களுடைய
பணத்தின் மதிப்பு இருபத்தைந்து லட்சம் முதல் எழுபத்தைந்து லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் பத்து கோடி வரை ஒதுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்களுக்கே தெரியும்; அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்பதும், கொண்டு வர மாட்டார்கள் என்பதும்.

ஊழலை ஒழிக்க வேண்டும்; சுவிஸ் வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் இந்தியப் பணத்தை மீட்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்தெல்லாம் பார்த்தார்கள். (அவர்களுடைய போராட்டங்களுக்கு முதலில் உற்சாகமாய்த் திரண்ட கார்ப்பரேட் வாசிகள் பின்னர் ஜகா வாங்கினார்கள். வேறுவழியின்றி அவர்களும் கடையை காலி செய்துவிட்டு மருத்துவமனையில் போய்ப் படுத்துக் கொண்டார்கள்.) கருப்புப் பணத்தை எதிர்க்க இவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதக் கூட்டத்தில் இளைய தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிராகப் பேசினார். இந்தி நடிகர் அமீர் கானும் இந்த வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொண்டு தன்னை கருப்புப் பணத்துக்கு எதிரானவராகக் காட்டிக் கொண்டார்.

கருப்புப் பண உருவாக்கத்தில் சினிமா துறையினரின் பங்கு எல்லோரும் அறிந்ததுதான். சுவிஸ் வங்கிகளில் இருப்பது நம்முடைய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் மக்கள் வளத்தைச் சுரண்டிச் சேர்த்த பணம்தான். ஆனால் கருப்புப் பண முறைகேடுகளைப் பெரிய குற்றம் என்றெல்லாம் நினைக்காமல் அதை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை மக்களிடத்தில் உருவாக்கியது சினிமா.

கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்கிற கருத்துடன் தமிழில் சிவாஜி, கந்தசாமி எனும் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களும் கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரும் நடிகர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு வெளிவந்தவை. சிவாஜி படம் வெளியான முதல் வாரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டின் விலை சராசரியாக முந்நூறு ரூபாய். இதில் திரையரங்கு உரிமையாளர்கள் நியாயமாக கேளிக்கை வரி செலுத்தி விற்க வேண்டிய டிக்கெட்டின் விலை ஐம்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டால், மீதம் இருநூற்றைம்பது ரூபாய் கணக்கில் வராத கருப்புப் பணம்.

இந்தப் பணம்தான் சூப்பர் ஸ்டார், சன் டி.வி., ஷங்கர் ஆகியோரின் கருவூலங்களில் கோடிகளாகப் போய் விழுகிறது. ஆக, ஒவ்வொரு சாதாரண ரசிகரும் கூடுதலாகச் செலுத்திய இருநூற்றைம்பது ரூபாயின் மூலம் கருப்புப் பணச் சந்தையில் நேரடியாகப் பங்கு கொள்கிறார். அதாவது சாதாரண மற்றும் எளிய பிரிவைச் சேர்ந்த மனிதர்களையும் கூட கருப்புப் பணத்துடன் நேரடியாகப் பிணைப்பதில் சினிமா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பிணைப்பே கருப்புப் பணம் எனும் குற்றச் செயலை இயல்பானதாக ஏற்கும் உளப்பாங்கை மக்களிடம் உண்டாக்குகிறது.

அதனால்தான் கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தைச் சம்பளமாக வாங்கும் விஜய் போன்ற நடிகர்கள் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிராகப் பேசும் வேடிக்கையைக் கண்டு அவரது ரசிகர்கள் பெருமையும் புளகாங்கிதமும் அடைய முடிகிறது. தலைவனின் படத்தை முதல் வாரத்திற்குள் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் வரும் ரசிகர்களை திரையரங்க உரிமையாளர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என்று ஒரு பட்டாளமே ஒன்றுகூடிக் கொள்ளையடிக்கிறார்கள். சினிமாத் தொழிலைக் காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் இந்தக் கொள்ளையை அரசும் அங்கீகரிக்கிறது. ‘முந்நூறு ரூபாய் குடுத்து ஓபனிங் ஷோ பார்த்தேன்’ என்று தான் கொள்ளையடிக்கப்பட்டதை பெருமையாகப் பேசும் உலகின் ஒரே இனமாகத் தமிழினம் மாறிப் போயுள்ளது.

இப்படி ரசிகர்களிடமிருந்து அநியாயமாய்ப் பணத்தைப் பிடுங்கும் சினிமாக்காரர்கள் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்கும் மக்களைக் குற்றவாளிகள் என்று குமுறுகிறார்கள். அதாவது ‘திருட்டுத் தனமாய் வீட்டில் படம் பார்க்காதே. தியேட்டருக்கு வந்து நாங்கள் உன்னுடைய பணத்தைத் திருட அனுமதி’ என்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசுகளும் மக்களுக்குச் சாதகமாய் இருப்பதில்லை. முந்தைய அரசு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஒப்புக்கு ஒரு காரணத்தைச் சொல்லி வரிவிலக்கு வழங்கியது. தற்போதைய அரசு யூ சான்றிதழ் போன்ற வேறு காரணங்களைச் சொல்லி வரிவிலக்கு தருகிறது. திரையுலகினர் நடத்தும் பாராட்டு விழாக்களுக்காக இரு அரசுகளும் மாறி மாறி மக்கள் பணத்தை வாரி வழங்குகின்றன.

சாதாரணமாக ஒருவர் பெட்டிக்கடை வைத்தால் கூட விற்பனை வரி, வணிக வரி என்று எல்லா வரியும் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிற அரசு, கோடிக்கணக்கில் முதலீடு செய்து அதை விடப் பல மடங்கு லாபத்தை அள்ளும் சினிமாக் காரர்கள் மட்டும் வரி செலுத்தத் தேவையில்லை என்று சொல்வது என்னதான் நியாயமோ தெரியவில்லை. கருப்புப் பணப் பெருக்கம் என்பது மக்களைக் கொள்ளையடிப்பதில்தான் அடங்கியுள்ளது. கண்முன்னே அப்பணியை அப்பட்டமாய்ச் செய்யும் சினிமாவை எதிர்ப்பதுதான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முதல் படியாய் இருக்க முடியும்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்