மொழி

சிக்கலான தலைப்பை எளிதாகக் கையாண்டிருக்கும் படம். மொழி என்பது ஆய்வாளர்களுக்கு இன்னும் தீர்ந்துவிடாத புதிர். அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பான முதலீடு. தமிழ் சினிமாவுக்கோ வரிவிலக்கு பெற வசதியான மற்றுமொறு தமிழ்ப்பெயர்.

ராதா மோகனின் ‘மொழி’க்கு வருவோம். வாழ்வு குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இரண்டு மேல்தட்டு வர்க்க இளைஞர்களின் (படத்தின் தயாரிப்பாளர் என்பதால், பிரகாஷ்ராஜையும் இளைஞர் என்று இயக்குனரைப் போல பார்வையாளர்களும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.) சேஷ்டைகளுடன் தொடங்கும் கதை,


காது கேளாத, வாய் பேச இயலாத பெண்ணின் (ஜோதிகா) அக உலகில் பயணித்து தன் தளத்தை விரித்துக் கொள்கிறது. அவளுடைய காதலை அடைய நாயகன் (பிரித்திவிராஜ்) படு(த்)தும் பாடுகளில் சில ரசிக்க வைக்கின்றன. இவற்றின் முடிவில் பெரிதான சினிமாத்தனங்கள் ஏதுமின்றி காதல் வென்று படம் முடிகிறது. படத்தின் மையப் பொருளாகக் கூற முனைவது நாயகியின் மொழிதான். ஆனால் அவளின் மொழியானது நாயகனுடைய பார்வையிலேயே விளக்கப்படுகிறது. அவனுடைய செயல்களுக்கான நியாயங்கள் தொடர்ச்சியான காட்சிகளில் நகர்த்திச் செல்லப்படுகின்றன.

நாயகியின் (சைகை) மொழியைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சி நாயகனுக்குத் தரப்படுவது போல் பார்வையாளருக்கும் தரப்படுகிறது. இதற்குப் பின்னதான காட்சிகளில் அவளுடைய சைகைகளை மற்றொரு பாத்திரத்தின் மூலம் ‘மொழி பெயர்ப்பது’ பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது திரைக்கதையின் குறிப்பிடத்தக்க நுட்பம். பிறக்கும் போதே காது கேளாமல் பிறக்கும் குழந்தைகளால் வாய் பேச இயலாமற் போவது நடைமுறை. அவை எந்தச் சொல்லையும் கேட்க முடியாமல் போவதால் தன்னுடைய வாயுறுப்புகளால் ஒலிகளைக் கோர்த்துச் சொற்களாக உருவாக்க முயல்வதில்லை.


சொற்களைத்தான் உருவாக்க முடியாதேயன்றி, ஒலிகளை உருவாக்க அக்குழந்தைகளால் முடியும். ஆனால் படத்தில் நாயகியின் பாத்திரம் எந்தக் கட்டத்திலும் (கடைசியில் அழுகின்ற காட்சி தவிர) ஒலி எழுப்புவதல் மூலம் தன் உணர்வை வெளிப்படுத்தவில்லை.  அவளுடைய ‘மொழி’யில் இந்த அளவுக்கு அதீதமான தேவையில்லாத ஒன்று. இது வாய் பேசாதவர்கள் உண்டாக்கும் சில  பொதுவான மொழித் தளத்தில் பொருளற்ற  ஒலிகளைப் புறக்கணிக்கும் வணிக சினிமாவின் வழக்கமான அழகியல்.
 

ஓர் இளைஞனுக்கு உடற்குறைபாடுள்ள ஒரு பெண் மீது தோன்றும் காதலின் உன்னத உணர்வு ஏதும் பார்க்கும் மனத்தில் உண்டாகாதது இயக்குனரின் சறுக்கல். தமிழ் சினிமா நாயகர்களைப் பொறுத்தவரை, உடற்குறைபாடுள்ள பெண்ணாயிருந்தாலும் அவள் மீது அவர்களுக்குக் காதல் வர வேண்டுமென்றால், அவள் அழகானவளாயிருக்க வேண்டும்; ஜீன்ஸ், டி சர்ட் போட்டு செல்ல நாய்க்குட்டியுடன் வாக்கிங் போக வேண்டும்; வெளி நாட்டுத் தெருக்களில் ஓடியாட வேண்டும். இவற்றை மீறிய நடைமுறை யதார்த்தங்கள் தேவையில்லாதவை.
 

வெகுசனத் தமிழ் சினிமா நடிப்பு எனும் வரையறைக்குள்ளிருந்து சிறந்த நடிப்பாற்றலை ஜோதிகா வெளிப்படுத்தியிருந்தாலும், காது கேளாத வாய் பேசாத ஒரு பெண்ணின் நிஜத் தோற்றம், பாவனைகள் போன்றவற்றிலிருந்து பெரிதும் விலகியதாகவே உள்ளது நாயகியின் பாத்திரம். இது படத்தின் நாயகனுக்கும் வெகுசனப் பார்வையாளனுக்கும் மட்டுமே தேவையான ‘யதார்த்தம்’.
 

யாருடைய பார்வையில் காட்சிகள் மாறுகின்ற என்பதில் இயக்குனர் சில இடங்களில் குழம்பியிருக்கிறார். காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்லும் நாயகனுடைய பார்வையில் குழாயடிச் சண்டை, தெருவோர ஆர்ப்பாட்டக் கூட்டம் போன்றவை காட்டப்படுகின்றன. அப்போது நிசப்தத்தைக் கையாளும் இயக்குனர், அதே காட்சியில் நாயகனைக் காட்டும் போதும் அந்த நிசப்தத்தைப் பேணியிருக்க வேண்டியதில்லை. (அந்த நீண்ட நேர நிசப்தக் காட்சி தியேட்டருக்குள் செல்போனில் பேசுபவர்களுக்குப் பெரிதும் உதவியாயிருந்தது.) இன்னும் நுட்பமாகச் சொல்வதென்றால் ஜோதிகாவின் பார்வையில் நகரும் அனைத்துக் காட்சிகளிலும் நிசப்த உத்தியைப் பயன்படுத்தி ‘மொழி’ யின் தரத்தை உயர்த்தியிருக்க முடியும். ஆனால் பூச்சாடியை உடைக்கும் ஒரு காட்சியில் மட்டும் அந்த உத்தியைப் பயன்படுத்துவதன் காரணம் புரியவில்லை.
 

இசை உண்டாக்கும் அனுபவத்தை ஸ்பீக்கரின் ஸ்பரிசம் வழியே நாயகியின் அக உலகிற்குக் கடத்தும் காட்சி புதுமை. கணவனை இழந்த பெண் (சொர்ணமால்யா) மீது பிரகாஷ்ராஜ் கொள்ளும் தீடீர் காதல் எந்த வித அலட்டலும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கல்யாணத்தில் முடிவது அழகு.
 

மவுனத்தைச் சரியாகக் கையாளத் தெரிந்தவன்தான் சிறந்த இசைக் கோர்ப்பாளனாக இருக்க முடியும். வணிகச் சமரசங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இளையராஜாவுக்கு அடுத்தபடியாக உயர்வான இசைக் கோர்ப்புகளைத் தருபவராக வித்யாசாகரைச் சொல்லலாம். சில இடங்களில் தடுமாறியிருந்தாலும் அவருடைய பக்குவப்பட்ட இசை பல இடங்களில் படத்துக்குக் கைகொடுக்கிறது. காற்றின் மொழியே பாடல் அவ்வளவு இனிப்பான பாடல்.
 

வசனங்களில் வெடித்துச் சிரிக்கத் தேவையில்லாத நகைச்சுவையை இழையோட விடுவது ராதாமோகனுக்கு கைவந்த கலை. இந்தப் படத்திலும் அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். பல இடங்களில் பார்வையாளர்கள் சிரித்தாலும், சில இடங்களில் பாத்திரங்களே சிரித்துக் கொள்கின்றன. இயக்குனரின் முந்தைய இரு படங்களில் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினரின் போலி மதிப்பீடுகள் மீதான கிண்டல் இந்தப் படத்தில் இல்லை. நேர்த்தியான தொழில்நுட்பங்களின் உதவியுடன் படம் முழுக்கத் தென்படும் ‘பூர்ஷ்வா அழகியல்’ சற்றே எரிச்சலூட்டுகிறது.
 

இவற்றையெல்லாம் தாண்டி மொழி ஒரு முக்கியமான படம்தான். என்றாலும், ராதா மோகன் எனும் நல்ல திரைக்கதையாளனிடம் எதிர்பார்ப்பது இது மட்டுமல்ல; இன்னும்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்