நிக்காஹ் எனும் திருமணம்


தமிழ் சினிமாவில் இஸ்லாம் அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய சித்திரிப்புகள் எப்போதும் ஒரே மாதிரியான சாயலைக் கொண்டவை. அவை பெரும்பாலும் தீவிரவாதம், வன்முறை போன்றவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும். அல்லது மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காக மிகையான நற்குணங்களுடன் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பொதுவான பார்வையில் வீதிகளிலும், பொது இடங்களிலும் அருகில் நடமாடும் சாமானிய இஸ்லாமியர்களை பதட்டத்துடன் பார்க்கச் செய்யும் மனநிலையை உருவாக்குவதில் தீவிரத்துடன் இயங்கி வந்துள்ளன தமிழ்த் திரைப்படங்கள்.

இஸ்லாமியரைப் பற்றிய அவர்களின் இயல்புக்கு மாறான சித்திரிப்புகளைக் காட்சிப் படிமங்களாக மக்கள் மனத்தில் உருவாக்குவதில் பெரும்பான்மை இந்துத்துவம் வெற்றி பெற்றே வந்துள்ளது. திரைத்துறையைப் பொருத்தவரை கதை மற்றும் கருத்து உருவாக்கத்தில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவு அல்லது பெரும்பாலும் இருந்ததேயில்லை. இந்தச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த இயக்குனர் அனீஸ் இயக்கி வெளிவந்துள்ள 'திருமணம் எனும் நிக்காஹ்' எனும் திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
 

ஒரு தனிப்பட்ட இனத்தின் பண்பாட்டுப் பதிவுகளாகத் திரைப்படங்கள் வெளிவருவது அரிதான நிகழ்வு. அப்படிப் பண்பாட்டுப் பதிவுகளாகக் காட்டிக் கொண்டு வெளிவரும் படங்கள் எப்போதும் வணிகச் சாயம் பூசப்பட்டவை. கவுண்டர், தேவர், வன்னியர் போன்ற ஆதிக்கச் சாதிகள் இது போன்ற காரியங்களுக்குப் பெரிதும் பயன்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் பிராமணர்களின் பண்பாட்டுப் பதிவுகளுக்கு எல்லாக் காலத்திலும் தனியிடம் உண்டு.
 

பல காலமாகத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து ஓர் அங்கமாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களின் மிகைப்படுத்தப்படாத பண்பாட்டுப் பதிவுகள் சினிமாவில் இதுவரை வந்ததில்லை. கான்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தி சினிமாவிலும் கூட இப்படியான பதிவுகள் சொல்லிக் கொள்ளும்படியாக வாய்க்கவில்லை. மலையாளத்தில் உண்டு. அனீஸ் இயக்கியுள்ள 'திருமணம் எனும் நிக்காஹ்' கண்டிப்பாக ஓர் இஸ்லாமியப் பண்பாட்டுப் பதிவு.
 

அதிலும் அய்யங்கார் இனத்தைச் சேர்ந்த நாயகன், நாயகியை மையப்படுத்தி இஸ்லாமியப் பண்பாடுகளைக் காட்சிப்படுத்தியிருப்பது இயக்குனரின் மிகப்பெரும் சாமர்த்தியச் செயல். ஒரு காதலுக்காக விஜயராகவாச்சாரி எனும் நாயகன் அபூபக்கராகவும் விஷ்ணுப்ரியா எனும் நாயகி ஆயிஷாவாகவும் நடமாட வேண்டிய சூழலின் சுவாரஸ்யங்கள்தான் இதன் எளிய கதை. ஆனால் சில காலமாக இஸ்லாம் மீதான ஒரு குறிப்பிட்ட மனநிலைக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ் மனங்களுக்கு ஒரு மாற்றுப் பார்வையைத் தர இத்திரைப்படம் முயற்சிக்கிறது.
 

காதல் என்பது எதிரெதிர் பாலினரிடம் தோன்றும் இயல்பான உணர்வு. பாலினம் எதிரெதிராய் இருப்பது போலவே எதிரெதிர் பண்பாட்டின் அடிப்படையில் தோன்றும் காதலில் அழுத்தம் கூடுகிறது. ஐயங்கார் இனத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் முஸ்லீம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு அதனாலேயே ஈர்க்கப்படுகின்றனர். அந்த ஈர்ப்பினால் இருவரும் இஸ்லாமியரின் பண்பாடு, பழக்கவழக்கங்களைத் தேடித்தேடிக் கற்கின்றனர். இந்த உளவியல் முரண் அவர்களின் காதலுக்குத் தனிச்சுவையை அளிக்கிறது. ஆனால் தான் காதலித்தது தன் இனத்தைச் சேர்ந்தவரைத்தான் என்று தெரியவரும் போது அந்தக் காதலில் இருந்த ஈர்ப்பு மறைந்துபோய்ப் பிரிகின்றனர். இந்த நுட்ப உளவியலை இயக்குனர் சரியாகக் கையாண்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு அது குழப்பத்தைத் தருகிறது.
 

மேலோட்டமாய்ப் பார்த்தால் வழக்கமான காதல் கதையாகத் தோன்றினாலும் முழுமையான பார்வையில் இந்தக் காதல் படத்தின் மையச்சரடாகத் தோன்றவில்லை. கதையை நகர்த்திச் செல்லும் ஒரு கருவியாக மட்டுமே காதலை அனீஸ் இயக்குகிறார். இஸ்லாமியர்களின் பலம், பலவீனம், மத நம்பிக்கை, வழிபாடு, தத்துவம், உணவு முறைகள், ஆடை அணிகள் என எதையும் விட்டுவிடாமல் எல்லாப் பண்பாட்டுக் கூறுகளையும் முழுமையாக வணிக சினிமா வரலாற்றில் பதிவு செய்யும் அரிய முயற்சியாகவே இப்படம் நிறைகிறது. இஸ்லாமியர்களின் பொதுவான மனவுணர்வுகளையும் இயக்குனர் சில இடங்களில் சித்திரிக்கத் தவறவில்லை. ஒரு கிரிக்கெட் போட்டியில் ஜாகீர் கான் பந்துவீசுவதை மட்டும் இரண்டு இளைஞர்கள் பார்த்து ரசிப்பது போன்ற காட்சி ஒரு சான்று. ஒன்றிரண்டு இடங்களில் எதிர் பண்பாட்டைக் கிண்டல் செய்வதைத் தவிர்த்திருக்கலாம். 'உடம்பு சுகமில்லேனா கூட நாங்க வெஜிடபிள் பிரியாணி எல்லாம் செய்ய மாட்டோம்' என்னும் வசனம் அந்த வகை. படத்திற்குத் தேவையான சரியான இசையை ஜிப்ரான் தந்திருக்கிறார்.
 

படத்தின் மிகுந்த ரசனைக்குரிய காட்சி கடைசியில் டைட்டில் போடும்போது திரையில் ரயிலுடன் நகரும் காட்சிதான். மதம், முரண், வரலாறு, அரசியல், பாலுறவு என அனைத்தையும் கடந்து இயல்பான உறவுநிலைகளைக் கொண்டாடும் மனிதர்களின் எளிமையான மனங்களைக் காட்சிப்படுத்தியபடி ரயில் நகர்ந்து செல்வது அழகு. காலமும் அந்த ரயிலைப் போலத்தான்; அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் உண்மை உறவுகளுடன் நகர்கிறது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்