காட்டு மல்லி வாசம் - கணேஷ் சுப்ரமணி

வெற்றிமாறனின் விடுதலை படத்துக்காக இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி பலரையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக இளையராஜா பாடியிருக்கும் காட்டு மல்லி பாடலில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாக ராஜாவின் ரசிகர்கள் சிலாகித்துப் போயிருக்கிறார்கள். இந்தக் காட்டு மல்லி பாடலைப் பற்றி சாரு நிவேதிதாவின் பதிவொன்றைக் கண்டேன். மனிதருக்கு இளையராஜா மீது ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் நொந்து போய் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். சாருவின் மற்ற பதிவுகளில் ராஜாவைப் பற்றித் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாவற்றிலுமே இளையராஜாவைத் திட்டியிருக்கிறார். ஒரு பதிவில் அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். பாப் மார்லி, கத்தார் ஆகியோரைக் குப்பை என்று இளையராஜா திட்டியிருக்கிறாராம். அவர்களின் இசை ராஜாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் விமர்சிக்கக் கூடாதா? பிடிக்காதவர்களைத் திட்டும் உரிமை சாருவுக்கு மட்டும்தான் சொந்தமா?

சாருவின் மற்றொரு பதிவில் இளையராஜா மீது தனக்குப் பெரிய மதிப்பு இல்லை என்றும், கமல், மணிரத்னம் படங்களுக்கு அவர் அமைத்த இசை மட்டுமே தனக்குப் பிடிக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன படங்கள் ஹே ராம் மற்றும் குணா. ஹே ராம் படம் பற்றி அவர் முன்பு எழுதிய விமர்சனத்தில் இளையராஜாவைத் திட்டியிருந்ததாக ஞாபகம். இப்போது திடீரென்று அந்தப் படத்தின் இசை மீது எப்படி நல்ல மதிப்பு உருானது என்று புரியவில்லை. அதிருக்கட்டும். அவர் சொன்ன இரண்டு படங்களும் வெளியாகி ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் அவரைச் சற்றும் கவராத இளையராஜாவின் இசையில் தற்போது உருவான காட்டு மல்லி பாடலை ஏன் அவ்வளவு மனம் நொந்து கேட்டார் என்று புரியவில்லை. ராஜாவின் பாடல்களிலேயே மிகவும் மட்டமான பாடல் என்று அதை ரேட்டிங் செய்திருக்கிறார்.

அத்துடன் இதே பாடல் பற்றி றியாஸ் குரானா என்பவர் (அவரை நண்பர் என்று குறிப்பிட்டிருந்தார்.) எழுதிய பதிவைத் தன்னுடைய வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். குரானாவின் பதிவில் உடன்பாடு இருப்பதால்தான் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சாருவின் பதிவை விட அவருடைய நண்பர் குரானாவின் பதிவு இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கிறது. விடுதலை படத்தின் மூன்று பாடல்களையும் கேட்ட பிறகு அவர் எழுதிய பதிவைப் பார்த்து இளையராஜாவின் ரசிகர்கள் திட்டித் தீர்த்து விட்டார்களாம். குரானாவுடைய பதிவின் சாரம் இதுதான். எண்பதுகளின் பிற்பகுதியில் கேட்கவே சகிக்காத ஒரே மாதிரியான பாடல்களைத் தந்து மக்களைப் பெரியளவில் சோதித்தவர் இளையராஜா. அந்தப் பாடல்களை இப்போது கேட்டாலும் காதுகளுக்குக் கரகரப்பாக இருக்கிறது. இப்படியான மீளமுடியாத பெருந்துயரிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியது ஏ.ஆர்.ரகுமான். அவர்தான் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு தாங்கமுடியாத சித்ரவதைக்குள்ளாகியிருந்த இசை ரசிகர்களைக் காப்பாற்றினார். ரகுமான் வராமல் போயிருந்தால் திரையிசை என்ற ஒன்றே (ராஜாவால்) அழிந்து போயிருக்கும். அது மட்டுமின்றி கேட்பதற்கே காது கூசும் சகிக்க முடியாத தன்னுடைய குரலில் பல பாடல்களைப் பாடி, காதில் பஞ்சை வைத்துக் கொண்டு திரியும் அளவுக்கு மக்களை டார்ச்சர் செய்தார் இளையராஜா. தன்னுடைய சித்ரவதையைக் காட்டுமல்லி பாடலின் வழியாகத் தற்போதும் தொடர்கிறார். அந்தப் பாடல் ராஜாவின் குரலில் தொடங்கும்போதே ஆயுர்வேத கசாயம் அருந்தியதைப் போல முகம் சுளித்துப் போனது. தற்கொலைப் படைகளைத் தவிர வேறு யாரும் அந்தப் பாட்டை முழுதாகக் கேட்க முடியாது. இப்படிப் போகிறது அந்தப் பதிவு.

இளையராஜா பாடுவது பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கும் விமர்சனம் உண்டு. அவர் மட்டுமல்ல; ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தனுஷ், விஜய், சிம்பு, கமலஹாசன் ஆகியோரும் தங்களுடைய படங்களில் பல பாடல்களைப் பாடுகிறார்கள். இவர்கள் யாருமே சிங்கர் மெட்டீரியல் கிடையாது. அவர்களுக்கான கலைக்களம் அதுவல்ல. ஒரு மாற்றத்துக்காக மட்டும் சில பாடல்களில் அவர்களின் குரலை ரசிக்கலாம். ரகுமான் அறிமுகமான முதல் பத்தாண்டுகளில் அவர் இசையமைத்த பல பாடல்கள் அற்புதமானவை. அந்தப் பாடல்களைக் கேட்டாலே அவை ரகுமான் இசையமைத்தவை என்று அடையாளம் கண்டுகொள்ள முடியும். அந்த இசையும், ஒலிகளும் அவருக்கான ப்ராண்ட் அடையாளங்களாக இருந்தன. அப்போது அவர் அதிகப் பாடல்கள் பாடியதில்லை. ஆனால் தற்போது வெளிவெரும் பாடல்களைக் கேட்டதுமே யாருடைய இசை என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு எல்லோருடைய பாடல்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. (இது உண்மையாயிருக்கலாம்; அல்லது என்னுடைய காதில் குறையிருக்கலாம்) அதனால் ரகுமான் மாதிரி பெரிய இசையமைப்பாளரின் ப்ராண்ட் நேம் பாடலைக் கேட்கும்போதே ரசிகர்களுக்குத் தெரிய வேண்டும் என்பது வணிகத் தேவை. எனவே ரகுமான் தன் படங்களில் அதிகம் பாடுகிறார். அல்லது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரைப் பாடச் சொல்லிக் கேட்கலாம். இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்தது.

எண்பதுகள் மற்றும் தொண்ணுறுகளில் தான் இசையமைத்த படங்களின் டைட்டில் பாடல்களைப் பெரும்பாலும் இளையராஜாவே பாடியிருப்பார். அப்போதெல்லாம் இசையமைப்பாளர் யார் என்று தெரிந்து கொண்டு படம் பார்க்க வந்தவர்கள் குறைவு. அவர்களுக்கு இது இளையராஜா இசையமைத்த படம் (ப்ராண்ட் நேம்) என்று தொடக்கத்திலேயே உணர்த்தி படத்தின் மீதான மதிப்பை உண்டாக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த நோக்கத்தில் தயாரிப்பாளர்கள் இளையராஜாவை டைட்டில் பாடலைப் பாடச் சொல்லி வற்புறுத்தியிருக்கலாம். இந்த நகர்வில்தான் இளையராஜா நிறைய பாடல்களைப் பாடினார். அவற்றில் பல பாடல்கள் அவருடைய குரலுக்குப் பொருத்தமாகவும் அமைந்தன.

சரி குரானாவுக்கு வருவோம். எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்தே இளையராஜாவின் இசை சரியில்லை என்று சொல்லும் குரானா (சாருவும்தான்) எதற்காக தற்போது வரை அவரின் இசையில் வெளிவரும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடமிருந்து நல்ல பாடல்கள் வர வாய்ப்பில்லை என்று அப்போதிருந்தே தெரிந்து வைத்திருக்கும் அவர் ஏன் 2023இல் விடுதலை படத்தின் மூன்று பாடல்களைக் கேட்க வேண்டும்? (ராஜாவின் ரசிகனான நானே இரண்டு பாடல்களைத்தான் கேட்டேன். குரானா பாவம்! எத்தனை வெறுப்புடனும் மரண வலியுடனும் மூன்று பாடல்களைக் கேட்டிருப்பார்!) அப்படி அவரைக் கேட்கச் சொல்லி நரக வேதனைக்கு ஆளாக்கியவர்கள் யார்? அப்படி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவர்கள் மீது அவர் ஏன் வழக்கு தொடுக்கக் கூடாது? காட்டு மல்லி பாடல் தொடங்கும் போதே ராஜாவின் குரல் காதுகளை இம்சிப்பதாகச் சொல்லும் குரானா ஏன் அந்தப் பாடலை முழுதாகக் கேட்டார் என்று தெரியவில்லை. அப்படிக் கேட்பது தற்கொலைக்குச் சமம் என்று அவரே தன்னுடைய பதிவில் சொல்கிறார். குரானா தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களில் ஈர்ப்பும் சொக்க வைக்கும் தன்மையும் குறைந்துதான் இருக்கிறது. அவருக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களின் பாடல்களைப் போலவே செயற்கையான சத்தங்களைத்தான் அவரும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அதைத் தாண்டி ஏதாவது அற்புதங்களை அவர் நிகழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்பை வைத்திருக்கிற ஏராளமான பேர்களில்தான் ஒருவனாகத்தான் நானும் இருக்கிறேன். (ஒருசில பாடல்களிலும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற சில படங்களிலும் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துமிருக்கிறார்) இப்படியான உணர்வுடன் ராஜாவின் புதிய பாடல்கள் வெளிவரும்போது அவற்றைத் தேடிக் கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மிகாத் மிகாத் என்பவரின் பதிவையும் பகிர்ந்திருக்கிறார் சாரு. அந்தப் பதிவும் ஏறத்தாழ குரானாவின் பதிவைப் போலவே காட்டு மல்லி பாடலைக் காட்டுத்தனமாக விமர்சிக்கும் பதிவுதான். கிழடு தட்டிய குரல் என்று இளையராஜாவை விமர்சிக்கும் அந்தப் பதிவிலும் வன்மம்தான் தெரிகிறது. பிடிக்காத இசையை, பிடிக்காத குரலை தேடிப் பிடித்து (முழுப்பாடலையும்) கேட்க என்னால் முடிவதில்லை. இவர்களால் எப்படி முடிகிறது என்று புரியவில்லை; தற்போதைய தொழில் நுட்பப் புரட்சி யுகத்தில் கேட்டு ரசிப்பதற்கு லட்சக்கணக்கான பாடல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவரவருக்குப் பிடித்த இசையைக் கேட்பதற்கான வாய்ப்பு திறந்தேயிருக்கிறது. இத்தனைப் பாடல்களுக்கு மத்தியில் இளையராஜாவின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்கும் ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவரைத் திட்ட வேண்டும் என்கிற உறுதியான முடிவுடன் அவரின் பாடல்களைத் தேடுபவர்களும் இருக்கிறார்கள். சரி விடுங்கள். கற்பூர வாசம் மட்டுமல்ல; காட்டு மல்லி வாசமும் சிலருக்குத் தெரிவதேயில்லை.

2 comments:

கருத்துக்கள்