அடங்க மறுத்த முதல் சிறுத்தை - கணேஷ் சுப்ரமணி

    

உழைக்கும் மக்களால்தான் வரலாறு நகர்கிறது. ஆனால் இந்திய நிலைமையில் வரலாறு என்று எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை. அவர்களின் பாத்திரம் மறைக்கப்பட்டோ அல்லது திரிக்கப்பட்டோதான் வரலாற்றுக் கதைகள் எழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பாகப் பட்டியல் இன மக்களுக்கு வரலாறு என்பதே மறுக்கப்பட்ட ஒன்றுதான். சாதியக் கட்டுமானத்தின் அடுக்குகள் எல்லாமும் ஒடுக்குமுறைகளால் நிரம்பியவை.

சனாதனச் சமூகம் கட்டமைத்த இந்தப் படிநிலைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களை உள்ளடக்கும் தத்துவமாகப் பவுத்தம் முதல் அடி எடுத்தது. இருபதாம் நுற்றாண்டில் மக்களை மையப்படுத்தும் நவீனச் சிந்தனைகள் தோன்றிய பின்னர் இந்தப் பாதையில் அம்பேத்கர் தோன்றினார். புத்தரோ அம்பேத்கரோ தனிமனிதர்கள் அல்லர். அவர்கள் மக்களிலிருந்து மக்களால் மக்களுக்காகத் தோன்றியவர்கள். அடக்கு முறைக்கு ஆளான மக்கள் திரளிலிருந்து அப்படியான எழுச்சிக் குரல்கள் தோன்றய வண்ணமே இருக்கும். அந்தக் குரல்கள் நெறிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் ஆட்சி அதிகாரம் என்னும் கருத்தியலுடன் தோன்றி்ய குரல் மதுரை மண்ணில் இருந்து உதித்தது. அந்தக் குரல் மாவீரன் மலைச்சாமி என்று அழைக்கப்படும் மலைச்சாமியின் கலகக்குரல். மதுரையில் அவனியாபுரம் என்றும் ஊரிலிருந்து நீர் மேலாண்மை சார்ந்த மடைப்பணி செய்யும் குடும்பப் பின்னணியில் 1956ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்த அவரின் வாழ்க்கையே வீரம் செறிந்த ஒரு வரலாறுதான்.

நாம் பிறப்பதற்கு முன் இருந்த சாதியை இறப்பதற்கு முன் அழித்தே தீரவேண்டும் என்கிற எழுச்சிக் குரலுடன் சாதிய அடக்குமுறைக்கு எதிராக உதித்த அவர், சமூக நீதி, தலித் மக்களின் சமூக விடுதலை என்கிற கருத்தியலுடன் நின்றுவிடாமல், தலித் மக்களின் ஆட்சி அதிகாரம் என்கிற அடுத்த கட்ட நிலைப்பாட்டுடன் இயங்கினார்.

அவனியாபுரத்தில் அரசுப் பள்ளியில் படித்த காலத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பு பட்டியல் இனத்தவர்க்கு அரிதாயிருந்ததைக் கண்டார். வாய்ப்பு பெற்றவர்களும் சாதிய ரீதியிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததை உணர்ந்தார். அப்போதே அவரின் எதிர் சிந்தனை உருப்பெறத் தொடங்கிவிட்டது. மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் பட்டம் பயின்று பின்னர் சட்டக் கல்வி படித்தார். இந்தக் காலகட்டத்தில் அவருடைய கலகச் சிந்தனைகள் செயல்வடிவம் பெறத் தொடங்கின.

சாதியப் பிடிமானங்கள் வேர் விடுவதற்குத் தோதான வெளியாக நிலவுடைமைச் சமூகம் இருந்ததை உணர்ந்தார். நவீனமடைதல் வழியாக சாதிய இறுக்கத்தை உடைக்க முடியும் என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது. அதற்குக் கல்வியறிவு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். தான் சார்ந்த வடக்குப் பச்சேரி, பெரிய பச்சேரி ஆகிய ஊர்களின் பெயர்களை பெரியார் நகர் என்று மாற்றினார். அந்தப் பருவத்தில் மரபு மீறல் சிந்திப்பைத் திராவிடர் கழகத்தின் தொடர்பு அவரிடம் உருவாக்கியது.

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றிச் சிந்தித்த அவர் மனத்தில் பாலின ரீதியாக ஒடுக்கப்படும் பெண்களின் விடுதலை பற்றிய கருத்தியலும் இயல்பாகவே படிந்தது. பெரியார் நகரில் சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் போன்றவற்றின் தேவையை மக்களிடம் எடுத்துரைத்தார்.

தலித் மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படும் வலுவான ஆயுதம் கல்வி என்பதை உணர்ந்து மாணவர் எழுச்சி மன்றம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, அதன் வழியாக பள்ளிப்பருவ மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல், கற்பதற்கான ஈடுபாட்டை உருவாக்குதல், இடைநிற்றலைத் தடுத்தல், தொடர்ந்து கல்வி கற்றலைக் கண்காணித்தல் போன்ற பணிகளைச் செய்தார். மருத்துவக் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து தன் மக்களுடன் உரையாடச் செய்து விளிம்புநிலை மக்களிடம் உயர்கல்விக் கனவுகளை விதைத்தார்.

அதே நேரம் வெறும் கல்வி என்பதோடு நின்றுவிடாமல், கல்வியின் வழியாக அரசியல் சிந்தனைகள், அதன் வழியாக சமூக விடுதலை, சமூக நீதி, சமத்துவம் போன்ற உயர் சிந்தனைகளை மக்கள் அடைய வேண்டும் என்கிற பாதையில் அவரின் சிந்தனையும் செயலும் சென்றன.

தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் மாணவர் அமைப்பு எனும் இயக்கத்தைத் தோற்றுவித்தது மலைச்சாமியின் போராட்ட வரலாற்றில் முதன்மையான படிநிலை. எழுபதுகளின் இறுதியாண்டுகளில் இது நிகழ்ந்தது. கல்லூரிகளில் பட்டியலின மாணவர்களுக்கு எதிரான சாதிய அடக்குமுறைகள் நிலவியதை அவர் கண்டார். பல கல்லூரி நிர்வாகங்கள் அதற்குத் துணையாக நின்றன. கல்வி நிறுவன வளாகங்களில் சாதிய மோதல்கள் பரவலாக நிகழ்ந்தன. இவற்றை எதிர்க்கும் அமைப்பாக மலைச்சாமியின் இயக்கம் தோற்றம் பெற்றது. அப்போது தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கான போராட்டம் வலுப்பெற்றிருந்தது. பெருமளவில் கல்லூரி மாணவர்கள் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.

இந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக அப்போதைய அதிமுக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. அதாவது 85 சதவீத வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே பட்டியல் சமூக மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பு சொல்லியது. பட்டியல் இன மாணவர்கள் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட மற்ற மாணவர்களின் உதவித் தொகையையும் இது பாதித்தது. இதனை எதிர்த்து மாபெரும் மாணவர் பேரணி ஒன்றை மலைச்சாமி ஒருங்கிணைத்து மதுரையில் நடத்தினார். உதவித்தொகையை மறுக்கும் அரசாணை கொளுத்தப்பட்டது. அரசின் தடுப்பு முயற்சிகளை மீறி இந்தப் போராட்டம் பெரும் வெற்றியடைந்து தமிழ்நாடு முழுக்கக் கவனத்தைப் பெற்றது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. தமிழ்நாட்டிலேயே அவனியாபுரத்தில்தான் முதல் வாடிவாசல் திறக்கப்படுகிறது. இந்தப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் பிடிப்பதைப் பொறுக்க முடியாமல் 1980இல் ஒரு சாதிய மோதல் திட்டமிடப்பட்டது. ஆனால் மலைச்சாமி கலவரக்காரர்களின் திட்டத்தை முன்கூட்டியே கணித்து, பெரியார் நகர் மக்களைத் திரட்டி இதனை முறியடித்தார். இந்த நிகழ்வில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுதலையாகி வந்த பின் தலித் எழுச்சி அரசியலில் முழுக்கவனம் செலுத்தினார்.

இந்தக் காலகட்டத்தில் தேசிய அளவிலான தலித் அரசியலில் மலைச்சாமியின் பெயர் அறிமுகமாகியது. எழுபதுகளில் தேசிய அளவில் சாதிய வன்முறைக்கு எதிராக மகர் சமூகத்தின் எழுச்சி பரவியிருந்தது. அதன் அடையாளமாக மகாராஷ்டிராவில் தலித் பேந்தர்ஸ் (1972) எனும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னரே (1956) ஆப்பிரிக்கக் கருப்பின மக்களால் வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராகத் தோன்றியிருந்த பிளாக் பேந்தர்ஸ் எனப்படும் கருஞ்சிறுத்தை தற்காப்புக் கட்சியின் (மால்கம் எக்ஸ் இந்தக் கட்சியின் கொள்கைகளை ஆதரித்தார்) தத்துவார்த்தச் செயல்பாடுகளில் உள்ள ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவே தலித் பேந்தர்ஸ் (ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்) இயக்கம் தோற்றம் கண்டது.

தலித் சோசியலிசம், சாதி அதிகார ஒழிப்பு, மார்க்சியம், பவுத்தம் ஆகியவற்றின் கலவையான கொள்கை கொண்ட அமைப்பாக இந்த இயக்கம் தன்னை அறிவித்தது. அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்றவர்களின் இந்தியச் சிந்தனை மரபுடன் கார்ல் மார்க்சின் சிந்தனைகளைக் தலித் பேந்தர்ஸ் இணைத்தது. சாதியத்தின் இருப்புடன் வர்க்க மோதல் என்கிற கருத்தியலை ஏற்றுக் கொண்டது.. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைந்த தலைவராக அம்பேத்கரின் துணைவியார் திருமதி. சவிதா அம்பேத்கர் இருந்தார். உண்மையான முழுமையான புரட்சி மட்டுமே தலித்துகளின் விடுதலையை சாத்தியப்படுத்தும் என்று இந்த இயக்கம் அறைகூவல் விடுத்து, ஆட்சி அதிகாரத்தின் வழியாக தலித் விடுதலையை அடையும் பாதையில் தன் நடையைத் தொடங்கியது. ரஷ்யப் புரட்சியின்போது உருவான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கருத்துநிலையைப் போல, பட்டியலின மக்களின் ஆட்சி அதிகாரம் என்கிற கருத்துநிலையை தலித் பேந்தர்ஸ் தன்னுடைய கொள்கையாக வடித்துக் கொண்டது.

பிராந்திய அளவில் தன்னுடைய இயக்கத்துக்கான சரியான தலைமைகளை அடையாளம் காணும் பணியில் தலித் பேந்தர்ஸ் இறங்கியது. தமிழ் மண்ணில் அதற்கான சரியான தேர்வாக மலைச்சாமியை அடையாளம் கண்டுகொண்டது. மாணவர்களைக் கொண்டு பெரிய போராட்டக் களத்தைக் கட்டியமைத்து வெற்றி கண்ட மலைச்சாமியை தலித் பேந்தர்ஸ் இயக்கத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான அருண் காம்ளே சந்தித்து தமிழ்நாட்டில் தங்கள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, தலித் பேந்தர்ஸ் எனும் தேசிய அரசியல் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் மலைச்சாமி நிறுவினார். பேந்தர் மலைச்சாமி என்றே அவர் அடையாளம் காணப்பட்டார். பாரதிய தலித் பேந்தர்ஸ் எனும் பெயரில் செயல்பட்ட இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. குறிப்பாக, மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி கிராமத்தில் சாதி இந்துக்கள் வாழும் பகுதியில் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்கள் தண்ணீர் எடுத்தார்கள் என்ற காரணத்தைச் சொல்லி உருவான மோதலில் காட்டு ராசா எனும் தலித் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட காட்டு ராசாவுக்கு நீதி கோரியும் மலைச்சாமி, 1983இல் மதுரையில் நடத்திய பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரணி, பட்டியலின மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகளுக்காகத் தொடர்ந்து இந்த இயக்கம் தன்னுடைய குரலை எழுப்பியது. இயக்கத்தின் சார்பாக தலித் விடுதலை எனும் இதழும் வெளிவந்தது.

வாழ்க்கையே போராட்டக்களமாக வாழ்ந்த மாவீரன் மலைச்சாமி 1989இல் மறைந்தார். பட்டியலின மக்களின் ஆட்சி அதிகாரம் என்கிற அவரின் உரத்த குரல் ஓய்ந்தது. தலித் பேந்தர்ஸ் இயக்கம் பின்னாளில் தொல். திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் எனும் அரசியல் கட்சியாகப் பரிணமித்து தற்போதைய தமிழ் நாட்டு அரசியலில் தலித் மக்களுக்கான குறிப்பிடத்தக்கப் பிரதிநிதித்துவ அமைப்பாக இயங்குகிறது. நாடாளுமன்றம் வரை இதன் குரல் ஒலிக்கிறது. தலித் பேந்தர்ஸ் ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் போராட்ட வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.


'தி இந்து தமிழ் திசை' நாளிதழில்10 மார்ச் 2023 அன்று வெளியான கட்டுரையின் முழுமையான பிரதி. நன்றி: தி இந்து தமிழ்

1 comment:

  1. மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் தோழர்.
    நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பேராசிரியர் சு.வேங்கடராமன் "எழுதப்பட்ட இலக்கிய வரலாறு எல்லாம் இலக்கிய வரலாறு அல்ல. அவையெல்லாம் இலக்கிய நூற்களின் பட்டியல் தொகுப்பு" என்பார். அதுபோல இங்கே பாடத்திட்டங்களின்வழி கற்பிக்கப்படுகிற வரலாறு எல்லாம் எழுதப்பட்ட வரலாறுதான். அவற்றுள் எழுதுபவரின் எண்ணங்களை ஏற்றி உரைத்த வரலாறே மிகுதி. மாபெரும் வேலூர்ப் புரட்சியையும், சிப்பாய் புரட்சியையும் கலகமாகத்தான் இங்கே கற்பிக்கப்படுகிறது; கற்பிக்கப்பட்டு வருகிறது.
    எழுதப்பட்ட பெரும்பான்மை வரலாறுகள் மன்னர்களின் வாழ்வுப் பெருமிதங்களாகவே விஞ்சி நிற்கிறது. இன்றைய இந்தியப் பாசிசச் சூழலும் அப்படிப்பட்ட நிலையை நோக்கியே நகர்த்துகிறது. இதுபோன்ற சூழலில் இப்படிப்பட்ட கட்டுரைகள் வருவது பெருஞ்சிறப்பு. திரு. மலைச்சாமி அவர்கள் கடந்து வந்த போராட்ட வாழ்வியலை அவருடன் பயணித்த எங்கள் ஊரைச் சேர்ந்த வங்கி அலுவலர் திரு. மு. வேலுச்சாமி, அறிவியல் அறிஞர் முனைவர் மு.மயில்வாகணன் அவர்களின் வாய்மொழிவழி அறிந்திருக்கிறேன். இன்று உங்ககளின் எழுத்துகள் அதைத்‌ தீர்க்கமாகப் பதிவுசெய்துள்ளன. மக்களின் போராட்டக் குணத்தை இன்றைய உலகமயமாக்கலின் வித்தைகள் மழுங்கடித்து தூர்ந்துபோகச் செய்ய முழு மூர்க்கத்துடன் செயலாற்றி வரும் நிலையில், இதுபோன்ற தனிமனிதர்களின் உண்மையான போராட்ட வாழ்வியலைச் சமூகத்திற்கு உரக்க உரைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அவ்வகையில் உங்கள் இத்தகு மெய்மை வரலாற்றுக் கருத்துகளை கட்டுரையாக நிறுத்திக்கொள்ளாமல் நூலாக விரியுங்கள் தோழர்.
    வாழ்த்துகள்....

    ReplyDelete

கருத்துக்கள்