பொன்னியின் செல்வன் - 1

 'பொன்னியின் செல்வன்’ நேற்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்க்கும் போது உணர்ந்த விஷயங்கள்:

1. மகிழ்மதிக்கும் சோழநாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாட்டின் மேல் மன்னர்களுக்கு இருக்கும் ஆசை, மோகம், வெறி எல்லாம் அக்கறை, அன்பு, பற்று என்றே காட்டப்படுகிறது. ரசிகர்களாலும் அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. (உடனே ‘பாகுபலியையும் பொன்னியின் செல்வனையும் எப்படி ஒப்பிடலாம்? அது கற்பனை, இது வரலாறு’ என்றெல்லாம் சொல்ல வேணாம். இரண்டுமே புனைவுதான்.)
2. சோழ மன்னர்கள் எல்லாரும் ஜாக்கி சானை விடப் பெரிய சாகச வீரர்களாக இருந்திருக்கிறார்கள்.
3. ரகுமான் (ஏ.ஆர்.) புதுசா யோசிக்கிறதையே விட்டுட்டாரு. அருண்மொழிவர்மனுக்கு வானதியின் ஞாபகம் வரும் காட்சியில் ஞானசம்பந்தரின் தேவாரப்பாடலை அழகாக இசைக்கிறார். (அது ‘இந்திரையோ இவள் சுந்தரியோ’ (காதலன்) பாடலைப் போலவே இருந்தாலும் கேட்பதற்கு சுகமான துணுக்காக இருக்கிறது.) வேறு எந்த இடத்திலும் இசையும், பாடல்களும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
4. ஆழ்வார்க்கடியானாக வரும் ஜெயராமைத் தவிர மற்ற எந்த நடிகரிடமும் ஒரு காலகட்டத்திய (பீரியட்) படத்துக்கான தனித்தன்மையான நடிப்பு இல்லை. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என எல்லாருமே மற்ற படங்களில் பேண்ட், ஷர்ட் போட்டு செய்வதைத்தான் இந்தப் படத்தில் வேறு உடைகளில் செய்கிறார்கள். ஐஸ்வர்யா ராய், திரிஷாவும் கூட அப்படித்தான். நட்சத்திரக் கலை விழா மாதிரி ஏகப்பட்ட நடிகர்கள் வந்து போகிறார்கள்.
5. ‘வந்தே பாரத்’ ரயில் இல்லாத காலத்திலும் வந்தியத்தேவன் நினைத்த மாத்திரத்தில் நினைத்த நாடுகளுக்கெல்லாம் செல்கிறார். ராணிகளும், இளவரசிகளும் கூட அப்படித்தான். அடிக்கடி ‘ராஜ ரகசியம்’ என்று பேசுகிறார்கள். ஆனால் படத்தில் வரும் எல்லாருக்குமே அந்த ரகசியங்கள் தெரிந்துதான் இருக்கிறது. இலங்கைக்குப் படகோட்டும் ஒரு சாதாரணப் பெண்ணுக்கு தஞ்சை அரண்மனையில் நடப்பதெல்லாம் தெரிந்திருக்கிறது. அவளை எல்லா மன்னர்களுக்குமே தெரிந்திருக்கிறது.
6. ‘கம்சவதை’ பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அற்புதமாயிருந்தது. கார்த்தி சம்பந்தப்பட்ட சேஸிங் காட்சிகள் எல்லாம் ‘திருடா திருடா’ படத்தை நினைவுபடுத்தியது. வழக்கமாக மணிரத்னம் படங்களில் தெரியும் perfection அல்லது excellence இந்தப் படத்தின் பல காட்சிகளில் இல்லை. ஆழ்வார்க்கடியான் அறிமுகமாகும் சைவ - வைணவ மோதல் காட்சி படு செயற்கைத்தனமானது. வசனங்கள் பல இடங்களில் அப்படித்தான் இருக்கிறது. மணிரத்னத்துக்கும் ஜெயமோகனுக்கும் சரியா sync ஆகலை.
7. ‘மூலக்கதை’ என்றுதான் கல்கியின் பெயரை டைட்டிலில் போடுகிறார்கள். எனவே நாவலின் இண்டு இடுக்கையெல்லாம் அப்படியே படத்தில் கொண்டு வரவேண்டும் என்கிற பதட்டத்தை ஓரமாக வைத்துவிட்டு, கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் குறைத்து உணர்வுகளை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியிருந்தால் படத்தில் மணிரத்னம் அழகாகத் தெரிந்திருப்பார்.
8. படம் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதால் இரண்டாம் பாகத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.
9. அடுத்து ஷங்கர் ‘வேள்பாரி’ நாவலைப் படமாக்கப் போகிறாராம். நம்ம எழுத்தாளர்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி வரலாற்று நாவல் எழுதத் தொடங்கி விடுவார்கள். 'வரலாறு முக்கியம் மட்டுமல்ல; பாவமும்தான்'.

No comments:

Post a Comment

கருத்துக்கள்