மாமன்னன்: எதிர்வினைகளும் எதிர்பாராத வினைகளும் - கணேஷ் சுப்ரமணி

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு நிகழ்ந்த எதிர்வினைகளை, படம் வெளியாவதற்கு முன், திரையரங்கில் வெளியான பின், ஓடிடி தளத்தில் வெளியான பின் என்று மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்த்துத் தமிழ்ச் சமூகத்தின் பொது உளநிலையை அலசலாம். இந்த எதிர்வினைகளின் பின்னால் உள்ள உளவியல் பெரும்பாலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததும்தான். அதைப் பற்றிக் கடைசியில் பேசலாம். அதற்கு முன் படத்தைப் பார்க்கலாம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைச் சொல்வதைத் தன்னுடைய நோக்கமாகவும், பாணியாகவும் கொண்டு திரையில் இயங்கும் மாரி செல்வராஜ் இயக்கிய மூன்றாவது படம் மாமன்னன். முந்தைய படங்களைப் போலவே இதிலும் திரைக்காட்சிகளைக் குறியீடுகளால் நகர்த்திச் சொல்கிறார். அதிலும் குறிப்பாக, வளர்ப்புப் பிராணிகளைக் குறியீடுகளாக்குவதைத் தன்னுடைய திரைக்கலையாக அவர் கைக்கொள்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நாயையும், கர்ணன் படத்தில் குதிரையையும் அவ்வாறு பயன்படுத்திய மாரி செல்வராஜ், மாமன்னன் படத்தில் நாயையும் பன்றியையும் எதிரெதிர் களங்களுக்கான குறியீடுகளாகப் பயன்படுத்துகிறார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சாதிய ஆதிக்கத்தின் கோரப்பற்களில் சிக்குண்டு வலிகளை ஏற்றவர்களாக, ஏற்பவர்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாகப் படத்தில் பன்றி சுட்டப்படுகிறது. பன்றி வளர்க்கும் அதிவீரன் (உதயநிதி) அதை ரசனையுடன் செய்கிறார். தமிழ் சினிமாவிலேயே (அனேகமாக இந்திய சினிமாவிலேயே) முதல் முறையாக இந்தப் படத்தில்தான் பன்றிக்குட்டி ஜீன்ஸ் அணிந்த கதாநாயகியின் தோளில் தவழ்ந்து கொஞ்சுகிறது.

சிறுவயதில் கோயில் குளத்தில் குளித்த காரணத்திற்காக, (வயதான) சாதிவெறியர்களால் கல்லடி பட்டு, தன் நண்பர்களைப் பலி கொடுக்கும் அதிவீரன், அந்த வலிகளை நெஞ்சில் சுமந்தபடியே வளர்கிறான். தன்னுடைய தந்தையைப் போல் சாதிய அடக்குமுறைகளை ஏற்றுக்கொண்டவனாக அவன் இல்லை. சிறுவனாக இருக்கும்போதிலிருந்தே எதிர்ப்புக் குணம் கொண்டவனாக வளர்கிறான். அவனுக்குக் கிடைக்கும் தற்காப்புக் கலைப் பயிற்சியும், பின்னர் அந்தக் கலையைப் பயிற்றுவிக்கும் பணியும் அவனுக்குத் தேவையான அந்த எதிர்ப்புணர்வையும், போர்க்குணத்தையும் அவனிடம் வளர்க்கிறது.

அதிவீரனுக்கு ஒரு கனவுப் படிமம் இருக்கிறது. சிறகு முளைத்த பன்றி எனும் அந்தப் படிமத்தை ஓவியமாக வரைகிறான். அந்த ஓவியத்தில் காணும் பன்றிக்குட்டி, அழகான, சாதுவான விலங்காக இருக்கிறது. சாதிக் கொடுமைகள் ஒழிந்து, சாதியாதிக்கம் மறைந்து தன்னுடைய மக்கள் அடைய வேண்டிய சமூக விடுதலையைப் பன்றிக்குட்டியின் சிறகு எனும் குறியீடாகக் கொள்ள முடியும்தான். ஆனால் அப்படியில்லாமல் தொடர்ச்சியான சாதிக் கொடுமைகளிலிருந்து விலகி, தப்பித்துச் செல்வதற்கான ஆயுதமாக ஓவியத்தில் காணும் அந்தச் சிறகு தெரிகிறது. ஆனால் சமூக விடுதலையும் சாத்தியப்படவில்லை. தப்பித்துச் செல்வதும் நடக்கவில்லை. நிறைவேறாத கனவாகவே அது தொடர்கிறது.

அடுத்தடுத்து, தனக்கும் தன் இனத்திற்கும் நிகழும் சாதிய ஒடுக்குமுறைகளைக் காணும் வீரன், அதை எதிர்ப்பவனாக, ‘அடித்தால் திருப்பியடிஎன்கிற தன்மான உணர்வு கொண்டவனாகப் பரிணமிக்கிறான். ஆனாலும் சிறகு முளைத்த சாதுவான பன்றிக்குட்டியைப் போல, சூழலிலிருந்து விலகித் தப்பித்துத் தனியே செல்பவனாகவே அதிவீரன் இருக்கிறான். ஆனால் சாதிச்சமூகம் அவனை விடவில்லை. நீண்ட காலமாகத் தன்னுடைய தந்தைக்கு எதிராக நிகழ்ந்த சாதிய இழிநிலையையும், அவமானத்தையும் உணர்ந்து அதற்கெதிராகச் சீறுகிறான்.

அவன் வளர்த்த பன்றிகள் ஆதிக்க சாதியின் வேட்டை நாய்களால் கடித்துக் குதறி கொல்லப்படுகின்றன. அந்தக் கட்டத்தில் சிறகு முளைத்த பன்றி எனும் தன்னுடைய கனவுப் படிமத்தின் அபத்தம் அவனுக்குப் புரிகிறது. போர்க்களத்தில் உதவாத கற்பனைச் சிறகுகளைக் களைகிறான். மீண்டும் ஓர் ஓவியம் வரைகிறான். அதில் காணும் பன்றி சாதுவாக இல்லை. வெறியுடன் தாக்க வரும் வேட்டை நாய்க்கு எதிராகச் சீறுகிறது. உடல் மயிரைச் சிலுப்பிக் கொண்டு கூர்மையான பற்களுடன் திருப்பியடிக்கத் தயாராகும் விலங்காக அதனை வரைகிறான். அதிவீரனின் படிநிலை மாற்றத்தை உணர்த்தும் காட்சி அது.

எதிர்தரப்பில் சாதியாதிக்கத்தின் அடையாளமாக ரத்தினவேலு (பகத் பாசில்) சிரித்த முகத்துடன் வருகிறார். ஆனால் அவருடைய சிரிப்பில் அடங்கியிருக்கும் சாதியாணவம் சில காட்சிகளில் வெறியுடன் சீறுகிறது. இடைநிலை சாதியாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவமாக அவருடைய பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. ஆண்ட பரம்பரை என்பதான பெருமிதத்துடன் குதிரைகளையும், வேட்டை நாய்களையும் வளர்க்கும் ரத்தினவேலுவின் சாதிப்பற்று தொடர்ந்து காட்சிப்படுகிறது.

தான் வளர்த்த நாய், பந்தயத்தில் தோற்றுப் போனதைத் தாங்க முடியாமல் அதை இரும்புக்கம்பியால் ரத்தம் சிதற அடித்துக் கொல்லும் காட்சியில் ஆண்டாண்டு காலமாக இடைநிலைச் சாதியாரின் மனதில் மண்டிக் கிடக்கும் சாதியுணர்வு அப்பட்டமாகத் தெரிகிறது. தன்னுடைய நலனுக்கும், கெளரவத்திற்கும் பிரச்சினையாகத் தான் வளர்க்கும் விலங்கே வரும்போது அதை வெறிகொண்டு அழிக்கும் சாதி வன்முறைவாதியான ரத்தினவேலு, பின்னாளில் தன்னுடைய நலனுக்காக, தேர்தல் வெற்றி எனும் கவுரவத்திற்காகத் தன் சொந்த சாதிச் சங்கத்தின் (தான் காலில் விழுந்த) தலைவரையே இரும்புக்கம்பியால் அடித்துக் கொல்கிறார்.

குடிப்பெருமையையும் குலப்பெருமையையும் பேணிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் ஆதிக்கச் சாதியின் பிற்போக்கு மனநிலையுடன் வாழும் ரத்தினவேலுவின் வன்முறைக் களமாக அவருடைய வீட்டின் மாடிப்பகுதி காட்டப்படுகிறது. காய்ந்த சருகுகள் சுத்தப்படுத்தப் படாமல் மண்டிக் கிடக்கும் தளம், வீணாகிப் போன பழைய பொருட்கள் நிறைந்த, கண்ணாடிகள் உடைந்த மாடியறை ஆகியவைதான் அவருடைய சாதியரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் இடங்களாக இருக்கின்றன. தன்னுடைய சாதியாணவம் அடிவாங்கும் பதட்டமான சமயங்களில் நீண்டகாலமாக இயங்காமல், பழுதடைந்து நிற்கும் காரில் அவர் தஞ்சமடைகிறார்.

அதிவீரனின் நிலைக்கு எதிர்நிலையில் ரத்தினவேலு இருப்பதைப் போல இன்னொரு எதிர்நிலையில் மாமன்னன் (வடிவேலு) இருக்கிறார். அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிட்ட நிலையிலும் கூட, சாதியாதிக்கத்தை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு மற்ற சாதியினரின் முன்னால் உட்காரக் கூட முடியாமல் நின்றபடி அவமானங்களைச் சகித்துக் கொள்பவராக அவர் இருக்கிறார். அதிவீரனிடம் இருக்கும் எதிர்ப்புக் குணம் கொஞ்சமும் அவரிடம் இல்லை. சாதியின் முன் அடங்கியும் பணிந்தும் வாழப் பழகிக் கொண்டுவிட்ட அவர் அதிவீரனால் வெறுக்கப்படுகிறார். தன்னுடைய தந்தையின் அப்படியானதொரு இழிவாழ்வை விரும்பாத வீரன் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிடுகிறான்.

 பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ரத்தினவேலுவின் வீட்டில்தான் முதல்முறையாகத் தன் தந்தையிடம் வீரன் பேசுகிறான். அப்படி அவன் பேசும் முதல் வார்த்தையே, ‘அப்பா நீ உக்காருப்பா என்பதுதான். மற்ற சாதியினரின் முன்னால் தன் தந்தையை உட்கார வைப்பதற்கே பெரும் போராட்டத்தை அவன் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அப்படியான இழிநிலையில்தான் மாமன்னன் வாழ்ந்து பழகியிருக்கிறார். தன் இனத்துக்கு எதிரான அடக்குமுறைகளின் போதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாமல் வதங்குகிறார். ஒரு கட்டத்தில் சிறகு முளைத்த பன்றியைப் போல் அவரும் களத்தை விட்டுத் தப்பித்துச் செல்பவராக மாறுகிறார்.

சாதிக் கொடுமைகளால் உள்ளம் நொந்து போகும் போதெல்லாம் மாமன்னன் மலை மேல் நின்றபடி, பிரம்மாண்டமாய் மினுமினுக்கும் பெருநகரத்தின் ஒளியைக் காண்பது போல ஒன்றிரண்டு காட்சிகள் படத்தில் வருகின்றன. சட்டமன்ற உறுப்பினரான பின்னர், சாதியமைப்பு இறுகிப் போன கிராமத்தை விட்டு நகரத்திற்குக் குடிபெயர்கிறார். சேலம் எனும் பெருநகரத்தில் அவர் வசிக்கும் வீடு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகிய ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறது. அதுதான் அவரின் தப்பித்தல் (Escapism) மனநிலை. அவருடைய அரசியல் பதவி பன்றிக்குட்டிக்கு முளைத்த சிறகைப் போன்றதுதான்.

அவரின் வீட்டுக்கருகில் ஒரு தொழிற்சாலையும் ரயில் பாதையும் இருக்கின்றன. நிலவுடைமைச் சமுகம் கட்டிக்காத்த சாதியமைப்பின் இறுக்கத்தைக் கொஞ்சமாவது இளகச் செய்தது முதலாளித்துவமும் அதன் விளைவான தொழிற்சாலைகளும்தான். எல்லாச் சாதியினரும் இணைந்து வேலை செய்த தொழிற்சாலைகளும், இணைந்து பயணித்த ரயில்களும், இணைந்து வாழ்ந்த நகரங்களும் தீண்டாமை போன்ற சாதிக் கொடுகமைகளைத் தளரச் செய்தன என்பது சமூக வரலாறு. (ஒரு காட்சியில், தன்னுடைய சாதியாணவம் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் நிலையில் ரத்தினவேலு, மலையுச்சியிலிருந்து பெருங்கோபத்துடன் நகரத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடுகிறார்) சாதிக் கொடுமைச் சூழலிலிருந்து தப்பித்துச் செல்லும் மாமன்னனுக்கு நகரம் வசதியானதாக இருக்கிறது. ஆனாலும் சாதி அங்கும் அவரை விடாமல் துரத்துகிறது.

ரத்தினவேலுவின் வீட்டில் மற்றவர்களின் முன்பு உட்கார முடியாமல் கூனிக் குறுகி மகனுடைய கண்முன்னால் பெரும் மனவலியுடன் மாமன்னன் நிற்கிறார். அங்கு அதிவீரனால் நிகழும் எதிர்பாராத கிளர்ச்சிநிலை அவரிடம் மாற்றத்தை உண்டாக்குகிறது. அதிவீரனின் எதிர்ப்புக்குணம் மாமன்னனையும் பற்றிக் கொள்கிறது. அவரும் மாறத் தொடங்குகிறார். தான் சார்ந்த அரசியல் கட்சியோ, அதன் கொள்கைகளோ, தான் வகிக்கும் சட்டமன்றப் பதவியோ தன்னுடைய நிலையை எந்த வகையிலும் மாற்றிவிடவில்லை என்பதை உணர்கிறார்.

தாக்கும் நோக்கத்துடன் தன் வீட்டை நோக்கி வரும் எதிராளிகளைச் சந்திக்க, ஜனநாயக அரசியல் தனக்குத் தந்த பதவியை மறந்து, கையில் வாளையும் துப்பாக்கியையும் ஏந்தி, மகனுடன் சேர்ந்து திருப்பியடிக்கத் தயாராக உட்கார்ந்திருக்கிறார். தனக்கு முன்னால் இடைஞ்சலாக இருக்கும் டேபிளை ஒதுக்கித் தள்ளுகிறார். அதிலிருந்த கோப்புகளும், ரப்பர் ஸ்டாம்பும் (பதவி) தரையில் விழுகின்றன. கூர்மையான பற்களுடன் உடல் மயிரைச் சிலுப்பிக் கொண்டு வேட்டை நாயை எதிர்த்து ஆக்ரோஷமாகச் சீறும் பன்றியாக அவர் உருவெடுக்கிறார்.

ஏதோவொரு உணர்வெழுச்சியில் தன் மகனைப் போல, திருப்பியடிக்கும் நிலைக்கு வரும் மாமன்னன், அதற்கு அடுத்தகட்ட பரிணாமத்தையும் அடைகிறார். சாதிக்கு எதிரான போர்க்களத்தில் கைத்துப்பாக்கி, கூர்வாளை விட வலுவான ஆயுதம் ஜனநாயகம் என்பதைத் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியால் கண்டுணரும் அவர், தன் மகனுக்கும் அதைப் புரியவைக்கிறார். முதலமைச்சரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் போது காரில், கைத்துப்பாக்கியை எடுக்கும் அதிவீரனிடம், ‘இனிமேல் இது உனக்குத் தேவைப்படாது, இது இல்லாமலே இவர்களை உன்னால் ஜெயிக்க முடியும் என்று சொல்வதில் படத்தின் மைய நோக்கம் உணர்த்தப்படுகிறது. தவறு இழைப்பவராக, தவறைப் புரிந்துகொண்டு வருந்துபவராக, விடுதலைக்கான பாதையை அடையாளம் காண்பவராக மாமன்னன் அடையும் பரிணாமத்தைத்தான் மாரி செல்வராஜ் கதையாக்கியிருக்கிறார்.

இத்தனை காலமாகத் தன்மானத்தை இழந்து, சாதிய இழிநிலையை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவிட்ட தன் தவறுகளை உணரும் காட்சியில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன் மனைவி வீராயியின் காலைத் தொட்டு தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார் மாமன்னன். இதே போன்று தன்னுடைய சுயநலத்திற்காக சொந்த சாதிச் சங்கத்தாரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ரத்தினவேலு, அதற்கு முன்னதாக, தன் மனைவியை அணைத்துக் கொள்கிறார். சாதியத்திடம் எளிதாக அடிபணியும் அவரால் பெண்ணிடம் அப்படி நடக்க முடியவில்லை. சாதிய ஒடுக்குமுறைக்கு இணையானது பெண்ணுக்கு எதிரான ஒடுக்குமுறை. எல்லாச் சாதியிலும் பாலின ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றவளாகப் பெண் இருக்கிறாள். அதற்கு எதிரான உணர்வு, சூழல் தரும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெண்ணுக்குள் அடங்கியோ வெளிப்பட்டோ நிற்கும். ரத்தினவேலுவின் மனைவி ஜோதி உட்பட படத்தில் வரும் எல்லாப் பெண் பாத்திரங்களும் சாதியாதிக்கத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆதிக்கம் எப்படியெல்லாம் ஒருவனை (அல்லது ஒருத்தியை) இழிவுபடுத்தும் என்பதைப் புரிந்தவர்களாக அவர்கள் தெரிகிறார்கள்.

தன்னைப் போலில்லாமல் அடுத்த தலைமுறை எல்லாவித அடக்குமுறைகளிலிருந்தும் விடுபட வேண்டும் என்கிற ஏக்கம் ஒடுக்கப்படும் மக்களிடம் இருக்கிறது. அடுத்த தலைமுறை தன்னைப் போல அடங்கிப் போகிறவனாக இல்லாமல், அடங்க மறுப்பவனாக, எதிர்ப்பவனாக, கிளர்ச்சி செய்பவனாக உருவெடுக்க வேண்டும் என்கிற உணர்வு, பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் வெளிப்படுகிறது. மாமன்னன், அதிவீரன், வீராயி போன்ற பெயர்கள் அப்படியான கனவுடன் வைக்கப்படுகிறவைதான்.

சாதிக் கொடுமைகள் புரிந்த குற்றத்திற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரத்தினவேலுவை இருகரம் நீட்டி வரவேற்று, கட்சியில் இணைத்துக் கொள்ளும் தலைவராக, பல படங்களில் சாதிப்பெருமை பேசி நடித்த விஜயகுமாரைத் தேர்வு செய்ததே சாதிப்படங்கள் மீதான மாரியின் விமர்சனப் பார்வைதான். வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஆகியோர் இயக்குனரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து ஒத்துழைத்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு இது போன்ற களம் மிகவும் புதிது. எனினும் தன்னுடைய உழைப்பினால் அதை எதிர்கொண்டு படத்திற்குத் தேவையான சரியான இசைக் கோர்வைகளைத் தந்திருக்கிறார். சேலம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நடக்கும் கதையாக இருந்தாலும் எந்தவொரு காட்சியிலும் அந்தக் களத்துக்கான மொழிநடை இல்லை. படம் முழுக்க வடிவேலு மதுரைத் தமிழில்தான் பேசுகிறார். மற்ற பாத்திரங்களும் அப்படித்தான்.

என்னதான் தற்காப்புக்கலைப் பயிற்றுநராக இருந்தாலும் அதிவீரன், ஒரே நேரத்தில் பலருடன் சண்டையிட்டு வீழ்த்துவது போன்ற காட்சிகள் வணிக நோக்கில் இயக்குநர் கொண்ட சமரசமாகத் தோன்றுகிறது. முந்தைய தலைமுறையைப் போலல்லாமல், தற்போதைய புதிய தலைமுறை இளைஞர்கள், சாதியாதிக்க உணர்வகளைக் களைந்து, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகளைக் கொண்டவர்களாகப் படத்தில் காட்டப்படுவது நடைமுறைக்கு எதிரான கற்பனை.

புதிய பொருளாதாரக் கொள்கைகள், கார்ப்பரேட்டிசம் போன்றவற்றால் வேலையின்மை, வேலையிழப்பு போன்றவை அதிகரித்து வருகிறது. தற்போதைய இளைஞர்கள் படிக்கும் கல்வியும் எதிர்காலத்துக்கான முழு நம்பிக்கையை அளிப்பதாக இல்லை. இப்படியான சூழலில் நிச்சயமில்லாத எதிர்காலத்தைக் கொண்டுள்ள இளைஞர்கள், சில பிடிமானங்களைத் தேடித் தஞ்சமடைகிறார்கள். அவற்றில் மது, சினிமா, ஸ்மார்ட் போன் போன்றவற்றைத் தாண்டி, பெரிய போதையாக இருப்பது சாதி. தற்போதைய இளைஞர்களிடம் சாதி மேலும் இறுக்கம் கொண்டு பலமடைந்து வருவதே நிதர்சனம். இதை உடைத்துப் பேச வேண்டியது ஒரு படைப்பாளியின் தேவை. ஆனால் இப்படத்தில் கற்பனையான சாதியெதிர்ப்பு உணர்வு புதிய தலைமுறையின் முகங்களில் ஒட்டப்படுகிறது. ஆனால் அது ஒட்டவில்லை.

அதிவீரனின் தோழியாக வரும் லீலா (கீர்த்தி சுரேஷ்) ஒரு பொதுவுடைமைவாதியாகக் காட்டப்படுகிறார். அவரின் இலவசப் பயிற்சி மையம் அடித்து நொறுக்கப்பட்ட பின், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் மகன் உதவுவது (சாதாரண உதவியில்லை. சொந்தக் கட்சிக்காரர்களையே பகைத்துக் கொள்ளும் அளவிற்கான உதவி) நடைமுறையில் சாத்தியமா? ஆளுங்கட்சியைச் சார்ந்து இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகளின் மீதான விமர்சனமாக வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளலாம். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவரைக் கதைத் தலைவனாகக் கொண்ட படத்தில் அவர்களுக்கு எதிரான இடைநிலைச் சாதியாதிக்கத்தின் கோர முகம் காட்டப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட சாதியினரின் சாதியாதிக்க மனநிலை பற்றிச் சுட்டப்படவே இல்லை. (சமீபத்தில் வெளியான கழுவேத்தி மூக்கன் படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் இது பேசப்பட்டிருக்கிறது.)

சமத்துவம், சமூகநீதி போன்ற உயர்ந்த கொள்கைகளுடன் முதலமைச்சராக இருக்கும் ஒருவருக்கு, கட்சியில் இரண்டு தலைமுறையாக வளர்ந்திருக்கும் சாதிவெறி தெரியாமலே போயிருக்கிறது. அதைப் பெரியார் சிலை என்கிற ஒற்றைக் குறியீட்டுடன் இயக்குனர் கடந்து செல்கிறார். சாதிக்கொடுமைகளை அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்தப் படத்தில் அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் எதுவும் சொல்லப்படவில்லை. தேர்தல் அரசியல் வழியாக அடையும் தற்காலிகப் பெருமிதத்தைத்தான் கிளைமாக்ஸ் காட்சியாகக் கொண்டு படம் முடிகிறது.

இரண்டு மனிதர்கள் சமமாக நடத்தப்படாமல், ஒருவர் முன் இன்னொருவர் உட்காரக் கூட முடியாத நிலையை சாதியமைப்பு உருவாக்கியுள்ளதை இந்தப் படம் விமர்சிக்கிறது. ஆனால் கடைசிக் காட்சியில் பாதிக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாமன்னன் முன்னால் அனைவரும் நிற்பதாகக் காட்டிப் பெருமிதம் கொள்கிறது. நிற்பது, உட்காருவது போன்ற சாதாரண நடைமுறைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக மதிப்புகளை உடைத்தெறிவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியுமே தவிர, இது போன்ற தொலைநோக்கில்லாத வெற்றுப் பெருமிதங்கள் உதவாது. அதாவது சாதியம் உருவாக்கிய அதிகாரப் போதையை, அரசியல் அதிகாரம் எனும் போதையால் பதிலீடு செய்வது எப்படிச் சரியாகும்? எல்லா அதிகாரங்களும், அவை உருவாக்கும் வெற்றுப் பெருமிதங்களும் உடைத்தெறியப்படுவது ஒன்றே கொள்கை சார்ந்த தீர்வாக இருக்க முடியும்.

முதல் பத்திக்கு வருவோம். மாமன்னன் படம் வெளியாவதற்கு முன்னும் பின்னுமான எதிர்வினைகள் முக்கியமானவை. படம் வெளியாகும் முன்னரே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு முக்கியக் காரணமாகத் தேவர்மகன் படத்துடன் இதனை இணைத்துப் பேசிய மாரி செல்வராஜின் பேச்சு அமைந்தது. படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூட பலரும் பொங்கினார்கள். அவர்கள் பெரும்பாலும் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களின் படங்களை வெறுக்கிறவர்கள். சமூகத்தின் சாதிப் படிநிலைகளை ஏற்றுக் கொள்கிறவர்கள். தனக்கு மேல் இருக்கும் படிநிலைகளை எதிர்த்துக் கேள்வி கேட்காமல், தனக்குக் கீழும் சில படிகள் இருப்பதைக் கண்டு மனநிறைவு கொள்கிறவர்கள். தியேட்டரில் மாமன்னன் வெளியான போது இவர்களிடமிருந்து பெரிய எதிர்வினைகள் எதுவும் நிகழவில்லை. ஏனென்றால் இவர்கள் பெரும்பாலும் தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்க்கவில்லை; பார்க்க விரும்பவில்லை. ஆனாலும் படம் வெற்றி பெற்றது.

தியேட்டருக்குப் போய் படத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் ஓடிடியில் வெளியான பிறகு பார்த்தார்கள். அதற்குப் பின்னர், சாதி உணர்வாளர்களின் எதிர்வினை எதிர்பாராத வடிவத்தில் கிளம்பியது. படத்தில் சாதிவெறி, சாதியாணவம், சாதிப்பெருமையுடன் உருவாக்கப்பட்ட ரத்தினவேலுவின் பாத்திரத்தை அவர்கள் கொண்டாடினார்கள். ரத்தினவேலு வரும் காட்சிகளுடன் பழைய சாதிப்பெருமைப் படங்களின் பாடல்களை இணைத்து வீடியோக்களை வெளியிட்டு, சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பரப்பித் தங்களின் சாதியுணர்வுக்குத் தீனி போட்டுக் கொண்டார்கள். ரத்தினவேலுவைத் தங்கள் சாதியின் பிரதிநிதியாகவே கண்டார்கள். அவற்றையெல்லாம் பார்த்தபோது இப்படித்தான் தோன்றியது. ஒருவேளை அறுபதுகளில் சினிமா ரசிகர்கள் இப்படியிருந்திருந்தால் நம்பியார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருப்பார்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்