பத்மாவத் (இந்தி) - கணேஷ் சுப்ரமணி

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, திரைக்கலையின் உச்சபட்சங்களைத் தொடக் கூடியவர். கருத்தியல் நிலையில் பார்த்தால் அவரின் படங்கள் (பிளாக் எனும் திரைப்படத்தைத் தவிர) இந்தியாவின் பண்பாடு குறித்த பழம் பெருமிதங்களைப் பேசுபவை. மிகுந்த சர்ச்சைகளுடன் வெளிவந்த பத்மாவத் திரைப்படமும் அப்படியானதுதான்.

ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்த ஆணுடல் சார்ந்த வீரத்தையும், பெண்ணுடல் சார்ந்த புனிதத்துவத்தையும் பேசுபொருளாகக் கொண்ட இந்தப்படம், கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் பழைய வழக்கத்தை ஒப்பறற்ற உயர் பண்பாடாக வலியுறுத்துகிறது. ஆனால் காலம் இதையெல்லாம் தாண்டி எங்கோ சென்றுவிட்டது.

கருத்தியல் முரண்களைத் தாண்டி பன்சாலியின் படங்கள் பிரமிப்புடன் ரசிக்கத்தகுந்தவை. ஒவ்வொரு காட்சிச் சட்டகத்தையும் (frame) தேர்ந்த சிற்பியைப் போல் அவர் செதுக்குகிறார். அவருடைய தேவ்தாஸ் திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பும், நெகிழ்வும் இன்றும் நினைவில் இருக்கிறது. பத்மாவத் படத்திலும் அதுமாதிரியான உணர்வலைகளை உண்டாக்கப் பெருமுயற்சி எடுத்துள்ளார்.

அவருடைய படங்களின் இசை தனித்துத் தெரியும். இந்தியத்தனத்துடனான மரபிசையைத் தன் படங்களின் அடையாளமாக உருவாக்கிக் கொண்டார். இசை மீதான அவரின் தீராத தாகம் அவருடைய படங்களைப் பார்க்கும் போது நன்றாகவே உணர முடியும். அப்படியான பெருந்தாகம் கொண்ட படைப்பாளிகளைத் திருப்தி செய்ய எந்த இசை மேதையாலும் முடியாது.

அவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்குப் பெரும் இசை விருந்தாக அமைந்தவைதான். ஆனாலும் அவருடைய எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் இசையாக மொழிபெயர்ப்பதில் மற்ற (இஸ்மாயில் தர்பார் உட்பட) இசையமைப்பாளர்களிடம் ஏதோ ஒரு போதாமையை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் ஒரு கட்டத்தில் தானே இசையமைக்கும் பணியில் இறங்கினார். இது பற்றி ஒரு பேட்டியில், 'என்னுடைய தாஜ்மகால்களை நானே உருவாக்க வேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டார்.

பத்மாவத் படத்தில் ஓர் இசை அற்புதத்தை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார். பார்த்துப் பார்த்து அவர் உருவாக்கிய காட்சிகளுக்குப் பொருத்தமான ஓசைகளையும், இசைக் கோர்வைகளையும் உருவாக்கி காதுகளின் வழியாக கதைக் களத்துக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்லும் மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

பத்மாவத் சொல்ல வரும், மதம், குலம் மற்றும் பெண்ணுடல் சார்ந்த அரசியல் நிலைகளைத் தாண்டி, திரை அழகியலுக்காகவும் இசை அழகியலுக்காகவும் பார்க்கத் தகுந்த படம். 

No comments:

Post a Comment

கருத்துக்கள்