ஒரு நண்பனின் மரணம் - கணேஷ் சுப்ரமணி

நள்ளிரவுக்கு நிமிடங்கள் மீதமிருக்கும்

ஓர் அகால வேளையில் குற்றொலியுடன்

அலைபேசித் திரையில் வந்து சேர்ந்தது

நண்பனின் மரணம்.

 

பீதிகளைத் தந்த பத்தாங் கிளாஸ் பரிட்சைக் காலத்தில்

வீதியில் வழிந்த விளக்கொளியில்

கணக்குப் பாடம் சொல்லித்தந்தவனின்

கணக்கு முடிந்த செய்தி கனக்கச் செய்தது.

 

எங்கள் வீட்டின் ஜன்னலருகில்

ஒலிக்கும் சைக்கிளின் மணியோசை

எனக்காகக் காத்திருக்கும் அவன் இருப்பைச் சொல்லும்.

 

சைக்கிளின் முன்புறக் கம்பியில் என்னை வைத்து

முகத்தின் வியர்வை என் முதுகில் வழிய

மூச்சிரைக்கக் கோசாகுளம் கிணற்றுக்குக்

குளிக்கக் கூட்டிச் சென்று

தண்ணீரில் தள்ளி தத்தளிக்க வைத்துக்

கற்றுத் தந்தான்.

 

முதல்நாள் பார்த்த ரஜினி படத்தின்

கதையை பிரமிப்பு களையாமல் முழுக்கச் சொல்லி

தன் சிலிர்ப்புகளை எனக்குள் கடத்தினான்.

 

கால வெள்ளம் எங்களைத்

தனித்தனியே தள்ளிச் சென்றது.

அமெரிக்கன் காலேஜ் வாசலில் நான்

காலரைத் தூக்கித் திரிந்த போது

சென்ட்ரல் தியேட்டர் வாசலில் அவன்

கர்ச்சீப் விற்றுக் கொண்டிருந்தான்.

 

மணமேடையில் வாழ்த்துச் சொல்ல வந்தவனின்

வார்த்தைகள் வறண்டு தெரிந்தன.

சந்திப்புகள் அரிதான பின்

அவரவர் விவகாரங்களில் உழன்று

நினைவுகளில் முகங்கள் மங்கிப் போயின.

 

போன வருசம் மகளின் சடங்குக்குச் சொல்ல வந்தவன்

தளர்ந்து போய்த் தடுமாறி நின்றான்.

நமக்கு இத்தனை வயதாகிவிட்டதா?’ என்ற கேள்வி

இரண்டு நாட்கள் மூளையைக் குடைந்தது.

 

விசேசத்துக்குப் போக முடியாமல் போனில்

வெற்றுக் காரணங்களை அடுக்கிய போது

சின்னதொரு புன்னகையில்

அத்தனையையும் நொறுக்கினான்.

 

அப்படியானதொரு

நண்பன் ஒருவன் இன்றில்லை எனும்

பெருமை யுடைத்துஇவ் வுலகு.

 

நினைவுகளில் உறைந்துவிட்ட பால்யம்

ஒற்றைத் தகவலாக எஞ்சி நிற்கிறது.

 

நண்பனின் மரணம்

அத்தனை சீக்கிரம் தீர்ந்துவிடாத வலி.

அது அவனுடைய முடிவை மட்டும் சொல்லாமல்

நம்முடையதையும் சேர்த்துத்தான் முன்னறிவிக்கிறது.

 

விடியலின் நிசப்தத்தைக் கிழிக்கும் பறவைகளின்

ஓசைகளுக்கு நடுவில் எங்கோ சன்னமாகக் கேட்டது

சைக்கிளின் மணியோசை.

எனக்காகத்தான் காத்திருக்கிறான்

இப்போதும்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்