விந்தன் நாவல்களில் சாவெண்ணங்கள்

மனித வாழ்வில் சாவு என்பது தவிர்க்க முடியாமல் இணைந்த ஒன்று. என்றாலும், சாவு குறித்த மதிப்பீடுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும். சிலருக்கு அச்சமூட்டக் கூடியதாகவும் மற்றும் சிலருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் விளங்குவதால், சாவு குறித்து ஒவ்வொரு கால கட்டத்திலும் விரிவாகச் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு மனிதனின் மனம் மரணத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு அவன் வாழும் சூழல், எதிர்கொள்ளும் நிகழ்வுகள், இயல்பான உளநிலை ஆகியவை முக்கியக் காரணிகளாய் அமைகின்றன. இவ்வாறு சாவை  நோக்கி ஈர்க்கப்படும் மனத்தின் கூறுகளை எழுத்தாளர் விந்தன் எழுதிய ஆகிய நாவல்களின் வழியே இந்தக் கட்டுரை ஆய்கிறது.

விந்தனின் படைப்புச் சூழல்:
பிற இலக்கியங்களைக் காட்டிலும் தனிமனித உளவியற் சித்திரிப்புகளுக்கு அதிக இடமளிப்பது நாவல் இலக்கியம்தான். என்றாலும், விந்தன் நாவல்களில் நுணுக்கமான உளவியற் சித்திரிப்புகளைக் காண முடியவில்லை. ஆனால் நாவல்களில் அவர் படைக்கும் மாந்தர்கள் சாவின் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பதை உணர முடிகிறது. தன் மனத்தில் தோன்றிய சாவு குறித்த தொடர்ச்சியான எண்ணங்களைத் தன்னுடைய மாந்தர்களின் வழியே அவர் வெளிப்படுத்துகிறார்.
 

விந்தனின் வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளாலும் போராட்டங்களாலும் நிரம்பியது. வறுமையான சூழலில் வளர்ந்த அவர், உணவகத் தொழில், இதழியற் பணி, திரைத்துறைப் பணி, பதிப்புப் பணி எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுப் பெருமளவு தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து மறைந்து போனவர். தான் சந்தித்த வாழ்வியல் அவலங்களிலிருந்து தன்னை விடுவிக்கும் சாவின் மீது அவருக்கிருந்த இயல்பான ஈர்ப்பு அவருடைய படைப்புகளில் வெளிப்படுகிறது.
 

‘புத்தகப்பூங்கா’ எனும் பதிப்பகத்தைத் தொடங்கிய விந்தன், அதன் மூலம் வெளியிட்ட முதல் நூலே ‘சாவே வா’ (எழுதியவர்: இளங்கோவன்) என்பதாகும். புதுமைப்பித்தன் பற்றி விந்தன் அவர் ஒரு கட்டுரையில், ‘உலகத்தில் மனிதன் இறப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாளுகிறான். விஷம் குடிப்பது, வெந்தணலில் வீழ்வது, குளத்தில் மூழ்குவது, கோபுரத்தின் உச்சியிலிருந்து குதிப்பது, தூக்குப் போட்டுக் கொள்வது, நாக்கைப் பிடுங்கிக் கொள்வது, கத்தியின் துணையை நாடுவது, காரிலோ ரயிலிலோ மாட்டிக் கொள்வது இப்படி எத்தனையோ வழிகள்’1 என்று மரணத்தைத் தேர்வு செய்யும் வழிமுறைகளை வகைப்படுத்துகிறார். மரணம் குறித்து அவர் மனத்தில் தோன்றிய தொடர்ச்சியான எண்ணங்களை இவை உணர்த்துகின்றன.
விந்தன் தன்னுடைய நாவல்களில் படைத்துள்ள மாந்தர்களின் வழியாகத் தன் பாதிப்புகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறார். ‘ஏழை எளியவர்கள், துன்பப்படுவோர் விடும் பெருமூச்சில் இருந்து என் நாவல் பிறக்கிறது’2 என்று அவர் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத் தக்கது. அவருடைய மாந்தர்கள் மரணத்தின் மேல் கொண்டுள்ள ஈர்ப்பானது, அப்பாத்திரங்களின் எண்ணங்கள், இயல்பான உரையாடல்கள், நிகழ்வுகள் ஆகிய கூறுகளின் வழியே வெளிப்படுகிறது.
 

சாவெண்ணங்களும் விந்தனின் மாந்தர்களும்:
மனிதனுடைய மனத்தில் உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும் சாக வேண்டும் என்கிற விருப்பமும் ஒன்றையொன்று ஆதிக்கம் செய்யச் சண்டையிட்டுக் கொண்டிருப்பவை என்பது சிக்மண்ட் ஃப்ராய்டின் கருத்து. ‘ஏதேனும் சில காரணங்களால் சாக வேண்டுமென்ற விருப்பம், உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையை வெற்றி கொள்ளுமேயானால், மனிதனின் வாழ வேண்டும் என்ற ஆசை குறைந்து பலனற்றுப் போய்விடுகிறது. இதன் விளைவாகச் சாவதுதான் ஒரு சிறந்த வழிமுறை என்ற முடிவுக்கு வருகிறான்’3 என்கிறார் ஃப்ராய்ட்.
 

விந்தன் நாவல்களில் கதை மாந்தர்கள் இவ்விரண்டு முரண் எண்ணங்களிடையேயான போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் மனநிலை உடையவர்களாகத் தென்படுகின்றனர். ‘பாலும் பாவையும்’ நாவலில் வரும் அகல்யா, கனகலிங்கம், ‘கண் திறக்குமா?’ நாவலில் வரும் செல்வம், செங்கமலம், சித்ரா ஆகிய பாத்திரங்கள் இதற்குச் சான்றுகளாக விளங்குகின்றன. இதில் அகல்யாவும் செங்கலமும் தற்கொலை செய்து இறந்து போகிறவர்கள். இப்பாத்திரங்களின் மனத்தில் தோன்றும் சாவு விழைவு எண்ணங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணிகளில் பொருளாதாரப் பின்புலமே முதன்மையான பங்கு வகிப்பதை உணர முடிகிறது.
 

பொருளாதாரப் பின்புலம்:
மனிதன் தன்னுடைய வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பெரும்பாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருளாதாரம் சார்ந்தே அமைகின்றன. விந்தனின் மாந்தர்களில் செல்வம், செங்கமலம், கனகலிங்கம் போன்றவர்களுக்கு சாவு எண்ணங்கள் தோன்றுவதன் பின்னணியில் பொருளாதாரமே முக்கியப் பங்கு வகிக்கிறது. பொருள் தேடும் பணி ஒன்றையே வாழ்வின் நோக்கமாகக் கொண்ட மனிதச் சமூகத்தின் சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள இயலாத செல்வம், ‘இந்த அழகான உலகத்திலிருந்து என்னைப் போன்றவர்களுக்குச் சீக்கிரம் விடுதலையளிக்கும் அந்த மரணம் நீடூழி வாழட்டும்’4 என்று கூறுவதிலும், பாரிஸ்டர் பரந்தாமனிடம், ‘நல்ல விஷம் ஏதாவது இருந்தால் ஒரு துளி கொடுங்களேன்’5 என்று கேட்பதிலும் இது வெளிப்படுகிறது.
 

தான் ஏழை என்பதாலேயே தன்னைக் காதலித்து ஏமாற்றிய சிவகுமாரனுடன் சேர்ந்து வாழ முடியாமல், அதே நேரம் அவனுடைய மரணத்தை அறிந்து தாங்கவும் முடியாத செங்கமலம் கிணற்றில் விழுந்து இறந்து போகிறாள். தான் விரும்பிய வாழ்வை அடைய முடியாததால் உண்டான ஏமாற்றத்தின் முடிவு அவளை இறப்பதற்கு இட்டுச் செல்கிறது. இதற்கு முதற்காரணம் அவளின் பொருளாதார வறுமை நிலையாகும்.
 

வாழ்வு குறித்துத் தெளிவாகவும், ஆக்கப் பூர்வமாகவும் சிந்திக்கும் கனகலிங்கமும், வேலையிழந்த நிலையில் துவண்டு போகிறான். தன்னுடைய கொள்கைக்கு விரோதமான பணியை மேற்கொள்ள வேண்டிவரும் சூழ்நிலையில் வாழ்வின் மீதே வெறுப்பு கொள்கிறான். ‘பிழைக்காவிட்டால் செத்துத்தானே போகப் போகிறேன்? போனாற் போகிறேன். மனத்துக்குப் பிடிக்காத தொழிலைச் செய்து பிழைப்பதை விடச் செத்துப் போவது எவ்வளவோ மேல்’6 என்று அவன் கூறுவதில் இவ்வெறுப்பு தெரிகிறது.
 

சமூக வெறுப்பும் எதிர்ப்பும்:
தான் வாழும் சமூகச் சூழல் தன்னுடைய மனநிலையுடன் ஒத்துப் போகாத நிலை தோன்றும் போது மனிதனுடைய மனத்தில் சாவு குறித்த எண்ணங்கள் எழுகின்றன. சமூகத்தின் மீது வெறுப்பு கொள்ளும் அவன் அதற்கு எதிர்வினையாகத் தன் சாவை முன்வைக்கத் துணிகிறான். அதாவது தன்னுடைய சமூக எதிர்ப்பைச் சாவின் மூலம் வெளிப்படுத்த எண்ணுகிறான். இதில் பொருளாதாரக் காரணிகளே பெரும்பங்கு வகித்த போதிலும், பொருளாதாரம் சாராத வேறு கூறுகளும் இத்தகைய எண்ணங்களைத் தோன்றச் செய்கின்றன.
 

செல்வம் மிகுந்த வீட்டுப் பெண்ணான அகல்யா, தன்னுடைய காதலன் இந்திரனால் வஞ்சிக்கப்பட்டுப் பின் கனகலிங்கத்தை நாடி, அவனையும் இழந்த நிலையில் சாவை நாடுகிறாள். கற்பு எனும் மதிப்பீட்டால் அவள் வாழ்வு அளக்கப்பட்டுச் சமூகத்தால் நிராகரிக்கப்படுகிறது. “என்னைப் போல வழி தவறியவர்களுக்கு வேறு எதில் முடிவு இருக்கிறது? சாவில்தான்”7 என்றும், “கடைசியில் சமூகத்தின் அனுதாபத்தை நான் செத்துத்தானா பெற வேண்டும்? சாகாமல் பெற முடியாதா?”8 என்றும் அவள் எழுப்பும் கேள்விகள் அவளுடைய மரணத்தின் பின்னணியில் சமூகத்திற்கும் அதன் மதிப்பீடுகளுக்கும் உள்ள இடத்தைச் சுட்டுகின்றன.
 

காதலனால் வஞ்சிக்கப்பட்டு ஒரு குழந்தையையும் ஈன்றெடுத்துப் பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் செங்கமலத்தின் முடிவிலும் சமூக மதிப்பீடுகளின் ஆதிக்கம் தென்படுகிறது.
 

உறவுச்சூழல்:
சமூகம் மற்றும் அதன் உட்கூறான குடும்பம் ஆகியவற்றுக்கிடையில் நிகழும் ஊடாட்டத்தினால் உறவுகளுக்குள் சிக்கல்கள் எழுகின்றன. இச்சிக்கல்கள் இவ்விரு அலகுகளுக்குளும் அடங்கியுள்ள தனிமனிதனின் உளவியலைப் பாதிக்கின்றன. இதிலிருந்து விடுபட மனிதனுக்குச் சில நேரங்களில் சாவு அவசியமாகத் தோன்றுகிறது.
 

தன் அண்ணன் செல்வம் சிறைக்குச் சென்ற பின், தாயாரையும் இழக்கும் சித்ரா, வேறு குடும்ப உறவுகளற்ற சூழலில் தாய்மாமன் வீட்டில் அடைக்கலம் ஆகிறாள். அங்கு மாமன் மகன் சிவகுமாரனால் மனவேதனைக்கு உட்படுத்தப்பட்டுப் பின்னர் அங்கிருந்து மீண்டு, தன் அண்ணனைச் சந்திக்கிறாள். அப்போது அவனிடம், “இன்னொரு தடவை நீங்கள் சிறைக்குப் போக நேர்ந்தால் எங்கிருந்தாவது எனக்கு ஒரு துளி நல்ல விஷமாகப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும்”9 என்று கேட்கிறாள்.
இங்குக் குடும்ப அமைப்பிற்குள்ளான பாதுகாப்பான உறவுகளை இழந்து சமூக வெளியில் நிறுத்தப்படும் சித்ராவின் வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில், அவள் அவ்வெளியை விட்டு நீங்குவதற்குச் சாவு குறித்துச் சிந்திக்கிறாள். அதாவது மனித வாழ்வு சமூக உறவுகளால் கட்டப்பட்டு இருப்பதையும், அக்கட்டுகள் குலையும்போது மனித மனம் குறிப்பாகப் பெண்மனம்  பலவீனப்பட்டு சாவு நோக்கி நகர்வதையும் சித்ராவின் நிலை உணர்த்துகிறது.
 

நிறைவு:
மனித மனத்தில் தோன்றும் சாவு குறித்த எண்ணங்கள் அம்மனிதனின் வாழ்வுச் சூழலிலிருந்து எழுபவை. ஒரு படைப்பாளியின் வாழ்வுச் சூழல்களுக்கேற்ப இச்சாவெண்ணங்கள் படைப்பின் வழியே வெளிப்படும். விந்தன் நாவல்களில் தென்படும் சாவு குறித்த எண்ணங்களும் அப்படிப்பட்டவையே. தன் வாழ்வின் அனுபவங்களும் அவை உண்டாக்கிய எண்ணங்களும் தான் படைத்த கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுவதை உணர்ந்தே படைக்கிறார் விந்தன். ‘துன்பங்களிலிருந்து பிறப்பது நாவல்’ எனும் அவருடைய கருத்து இதனை அரண் செய்கிறது.
 

குறிப்புகள்:
1.    மு.பரமசிவம், விந்தன்  இந்திய இலக்கியச் சிற்பிகள், சாகித்திய அக்காதெமி, சென்னை, 2001, பக்.88.
2.    மேலது, பக்.91.
3.    வாழ்வியற் களஞ்சியம், தொகுதி  பத்து, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988, பக்.59.
4.    விந்தன், கண் திறக்குமா?, அருந்ததி நிலையம், சென்னை, 2000, பக்.88.
5.    மேலது, பக்.88.
6.    விந்தன், பாலும் பாவையும், ராஜராஜன் பதிப்பகம், சென்னை, 2000, பக்.188.
7.    மேலது, பக்.88.
8.    மேலது, பக்.188.
9.    விந்தன், மு.நூல், பக்.128.

No comments:

Post a Comment

கருத்துக்கள்