புத்தகம்

மாணவர்களுக்கு வகுப்பறை எல்லாம்
பள்ளியறை என்றால்
புத்தகங்கள்தான்
தலையணை!

அம்மா பாடாத தாலாட்டை
ஆசிரியர் பாடும் போது
அவர் கைகளில் வீணையாய்
தவழ்வது புத்தகம்.


கல்லூரி நேரம் முடிந்தவுடன்
மாணவர் கைகளில்
சுழலும் விஷ்ணு சக்கரம்.


நெரிசல் நிறைந்த பேருந்துகளில்
காதல் கடிதத்தைக்
கச்சிதமாய் மறைத்து
ஜன்னல் வழியே
உரிய இடத்தில் சேர்க்கும்
அஞ்சலகம்.
 

பள்ளி நாட்களில்
மறைவாய் ஒளித்து வைத்த
மயில் இறகு
குட்டிகளை ஈனும்
பிரசவ அறை.
 

புத்தக வாசனை
சிலருக்கு ஆகாது.
பிடித்துப் போனவருக்கு
நாசியை விட்டுப் போகாது.

புத்தகத்தின் உண்மைநிலை
உணர்ந்தால் அதன் மீது
காதல் வளரும்.
 

புத்தகத்தின் பணி
தூக்கம் தருவதல்ல,
ஊக்கம் தருவது.
 

மார்க்சின் மூலதனமும்
டார்வினின் பரிணாமும்
உலகுக்கு அறிமுகமானது
புத்தகங்களின் வழிதான்.
 

புத்தகம் இல்லையென்றால்
நமக்கு வள்ளுவன் ஏது?
பாரதி ஏது?
கவியிற் சிறந்த கம்பனின்
இன்ப வெள்ளம் ஏது?
 

அம்பேத்கர்
அமர்த்யா சென்
அருந்ததி ராய்
அனைவரின் சிந்தனைகளும்
வெளிப்பட்டது
புத்தகங்களாகத்தான்.
 

புத்துலகம் காண
புத்தகங்கள் அவசியம்.
 

பைபிள்
கீதை
குரான்
ஒவ்வொரு மதமும்
ஒவ்வொரு புத்தகத்தைப்
புனிதம் என்கின்றன.
ஆனால்
புத்தகம் என்றாலே புனிதம்தான்.
அதில் மனிதம் அடங்கியிருந்தால்.
 

புத்தகம் என்பது தீப்பொறி.
விளக்கை ஏற்றுவதும்
வீட்டை எரிப்பதும்
எடுத்தாளும் மனிதர் கையில்.
 

புத்தகம்
அறிவைக் கூர்மைப்படுத்துவது.
 

ஆம்.
ஊசியை விட கூர்மையானது நூல்.
 

வினாவிலிருந்து விடையையும்
விடையிலிருந்து வினாவையும்
எழுப்புவது புத்தகம்.
 

அடிமைச் சமூகத்திலிருந்து
விடுபட
அறிவு கொண்டு போராட வேண்டும்.
இப்போரில் வலிமையான ஆயுதம்
புத்தகங்கள்தான்.
 

புத்தகத்தின் மதிப்பு
உணராதவர்
உருப்பட வழியேது?
 

அழியாத உண்மைச் செல்வம்
அறிவுதான்.
அதைச் சம்பாதிக்கத்
தேவையான மூலதனம்
நூலகத்தில் குவிந்து கிடக்கிறது.
 

பத்மநாபசாமி கோயிலின்
பாதாள அறைகளை விட நம்
நூலக அறைகளில்
பொக்கிஷங்கள் அதிகம்.
 

அவற்றைப்
பாதுகாக்க வேண்டாம்
பயன்படுத்துவோம்.
 

நூலகம் என்பது தனி உலகம்.
நீங்கள் அதிகம் செல்லாத
செல்ல விரும்பாத
புது உலகம்.
 

உள்ளம் விழைந்து
உள்ளே நுழைந்து பார்.
அதன் அற்புதம் புரியும்.
நீ காணாத உலகம் ஒன்று
உண்டென்று தெரியும்.

ஆம்.
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது.



- அருள் ஆனந்தர் கல்லூரியில் 2010ஆம் ஆண்டு நடந்த
'கற்க கசடற' எனும் கவியரங்கத்திற்காக எழுதியது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்