சமண மரபில் இறப்பும் அதற்குப் பின்னரும்

மனித வாழ்வு சாவுடன் கட்டப்பட்டது. உலகளவில் சாவு மற்றும் அதற்குப் பின்னதான நிலை குறித்த தேடலில்தான் சமயச் சிந்தனைகள் வளர்ச்சியடைந்தன. ஒவ்வொரு சமயமும் தன்னுடைய தத்துவக் கட்டமைப்புக்குள் சாவு குறித்து ஆராய்ந்துள்ளன. சமண சமய மரபில் நின்று சாவு மற்றும் அதற்குப் பிந்தைய மனித வாழ்வின் இருப்பு அல்லது இன்மை குறித்த கோட்பாடுகளை ஆராயும் இச்சிறு ஆய்வுக்கு ஒப்பீட்டளவில் பிற சமயச் சிந்தனைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியச் சிந்தனை மரபில் சமணம்:
சமண சமயம் அதன் முதல் தீர்த்தங்கரராகக் கருதப்படும் விருஷப தேவர் எனப்படும் ஆதிநாதரால் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்றாலும் கி.மு. 600ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் பார்சுவநாதரால் இச்சமயம் தோற்றுவிக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. 'யமுனைக் கரையிலும் மேற்கு கங்கை வட்டாரத்திலும் ஆரிய இனக்குழுக்கள் உபநிடதங்களை யாத்துக் கொண்டிருந்த அதே வேளையில் கிழக்கிந்திய வட்டாரத்தில் தாந்திரிகமும், சார்வாகமும், ஆசீவகமும், சமணமும், பவுத்தமும் அடுத்தடுத்து தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன.'1 இதனை மேலும் விரிவுபடுத்தியவர் வர்த்தமான மகாவீரர். சமண சமயம் தோன்றிய காலகட்டத்தில் இந்தியச் சிந்தனையில் வேத மரபின் ஆதிக்கம் பெரிதும் நிலவியது.2 இவ்வேத மரபுகளுக்கு முரணாக சமணமும் பவுத்தமும் தோற்றம் பெற்று வளர்ந்தன. இவை தவிர நிறுவனமாக்கப்படாத உலகாயதம் உள்ளிட்ட பிற மரபுகளும் நிலவின. இவையனைத்தும் வேத மரபுக்கு மாற்றான சிந்தனைகளை முன்வைப்பதில் ஒன்றுபட்டாலும், தம்முள் சில முரண்பாடுகளைக் கொண்டவை.
 

உலகாயதம் x சமண, பவுத்தம்:
சமண மற்றும் பவுத்தச் சிந்தனைகள் இறப்பு மற்றும் அதற்குப் பின்னதான நிலைபாடுகளில் உலகாயதச் சிந்தனையிலிருந்து மாறுபடுகின்றன. உலகாயதம் வைதீக மரபுக்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தது. இச்சிந்தனைப் போக்குகளை மறுக்கும் நோக்கில் உபநிடதங்களில் உலகாயதச் சிந்தனைகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் சாவுக்குப் பின்னர் உடலுடன் ஆன்மாவும் அழிந்து விடுவதாக உலகாயதம் கூறுவதாகக்3 குறிப்பிடப்படுகிறது. என்றாலும் இதில் தெளிவான நிலைப்பாடின்றி, குழப்பமான தப்பித்தல் பான்மையுடன் சஞ்சய பேலாதி போன்ற பின்னர் வந்த உலகாயத மரபையொட்டிய சிந்தனையாளர்கள் கூறிய கருத்துகளையும் ஒதுக்கிவிட முடியாது. சாவுக்குப் பின் மனிதன் செல்லுவானா மாட்டானா?4 தெரியாது என்கிறார் அவர்.
 

இந்நிலையுடன் ஓரளவு நெருங்கிப் பின்னர் உலகாயத மரபிலிருந்து முற்றாக விலகிய சிந்தனைகளை முன்வைக்கின்றன சமணமும் பவுத்தமும். இவ்விரு சிந்தனைகளும் உடலின் அழிவுக்குப் பின்னரும் தொடரும் ஆன்மாவின் அழிவற்ற தன்மையைப் பேசுகின்றன. விரிவு கருதி பவுத்தத்தை விலக்கிவிட்டு சமண மரபை மட்டும் முன்வைத்து இக்கட்டுரை தொடர்கிறது.
 

வைதீக மரபும் சமணமும்:
இந்தியச் சிந்தனை மரபில் வைதீக மரபுக்கு முரணாகத் தோன்றிய சமயங்கள் அவைதீகச் சமயங்களாகக் கொள்ளப்படுகின்றன. சமணமும் கூட அப்படித்தான். என்றாலும் இறப்புக்குப் பின் உயிர்களின் நிலை குறித்த கருத்தமைவுகளில் வைதீக மரபும் சமண மரபும் நெருக்கம் கொள்கின்றன. சாவுக்குப் பின்னர் உயிர்கள் அடுத்தடுத்து புதிய பிறவிகளை அடையும் எனும் பிறவிக் கோட்பாடு வேதங்களில் எங்கும் காணப்படவில்லை. ஆனால் வேதங்களின் பகுதிகளான பிரமாணங்களிலும், உபநிடதங்களிலும் பிறவிக் கோட்பாடு காணப்படுகிறது.5 இவை சமணத்தின் தோற்றத்திற்கு முற்பட்டவை. எனவே பிறவிக் கோட்பாட்டை வைதீக மரபிலிருந்து சமணம் உள்வாங்கித் தனக்குள் வளர்த்தெடுத்துக் கொண்டதாகக் கூறலாம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பெருங்கதை உள்ளிட்ட சமண சமயக் காப்பியங்கள் அனைத்திலும் பிறவிக் கோட்பாடு அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது.
 

வைதீக மரபில் உபநிடதங்களுக்குப் பின்னர்த் தோன்றிய பகவத் கீதையில்தான் ஆன்மாவின் அழிவற்ற தன்மை குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. 'உடல் பெற்ற ஆத்மா சிறு வயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை'6 (அத்தியாயம் 2, பதம் 13) என்கிறது கீதை. மனித உடல் அழிவதும்  அதாவது இறப்பதும்  உடலைப் பிரியும் உயிர் மற்றொரு உடலைச் சென்றடைவதும் திகைப்படையத் தேவையில்லாத இயல்பான நிகழ்வுதான் என்பது கீதையின் உட்பொருள். ஓரிடத்தில் உடலை விட்டுப் பிரியும் உயிர், வேறோரிடத்தில் வேறொரு உடலைச் சேரும் பிறவிக் கோட்பாட்டைக் காற்று வாசனையைச் சுமந்து செல்லும் இயல்பான நிகழ்வுடன் உவமைப்படுத்துகிறது கீதை.7
 

சீவன் அல்லது ஆத்மா அல்லது உயிர் என்பது ஓருடலிலிருந்து பிரிந்து வேறொரு உடலைச் சென்றடைவதைச் சமணமும் ஏற்றுக் கொள்கிறது. உயிரானது வேறு வேறு பிறவிகளை எடுப்பதற்கு உடலின் பருவ மாற்றங்களை உவமைப்படுத்தும் பகவத் கீதையைப் போன்றே, அதனை மேலும் இயல்பானதாக்கிச் சாவை உறக்கத்துடனும், உயிர் மறுபிறவி எடுப்பதை உறங்கி விழிப்பதுடனும் பொருத்திப் பார்க்கிறார் சமணராகக் கருதப்படும் திருவள்ளுவர்.8
 

உடல் அழிந்த பின்னர் உயிரானது வேறுபல உடல்களின் வழியாகப் பிறவிகளைக் கடந்து செல்லும் என்பதில் வைதீக மரபுடன் ஒன்றுபடும் சமணம், அந்த உயிரானது இறுதியில் வீடு பேற்றை அடையும் நிலையில் மாறுபாட்டைக் காட்டுகிறது. என்றாலும் அம்மாறுபாடு முற்றிலும் விலகிய ஒன்றாக இல்லை.
 

உயிர் அல்லது ஆத்மா பல பிறவிகளைக் கடந்து இறுதியில் பரமாத்மாவாகிய இறைவனை அடைகிறது என்பது வைதீகச் சிந்தனை மரபு. ஆனால் சமணத்தில் இவ்வாறு பல பிறவிகளைக் கடக்கும் சீவன் (உயிர்) இறுதியில் 'அலோகாகாசம்' எனும் உலகை அடைவதாகக் கூறுகின்றது. அலோகாகாசம் என்பது சமணர்களின் புண்ணிய பூமி அல்லது இன்ப பூமி. அங்குள்ள பொன்னெயில் வட்டத்தில்தான் அநாதி அருக பரமன் வீற்றிருக்கிறான் என்பது சமணர் கொள்கை என்று தன்னுடைய நூலில் கி.லெக்ஷ்மணன் குறிப்பிடுகிறார்.9 இங்கு அநாதி பரமன் என்பதை வைதீகத்தின் பரமாத்மாவுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் சமணரின் கடவுட் கோட்பாடு என்பது அது நிறுவன சமயமான பின்னர் உருவானது கருத இடமுண்டு.
 

அடிப்படையில் கடவுள் மறுப்பு வாதமாகத் தோன்றிய சமணம், சமயங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் வென்றாக வேண்டிய நோக்கில் கடவுட் கோட்பாட்டைப் பின்னாளில் ஏற்றது. அதே போன்றே வைதீக சமய மரபில் ஒன்றியிருந்த மக்களைத் தம்பால் ஈர்க்கும் நோக்கில் பிறவிக் கோட்பாடையும் சமணம் பொருத்திக் கொண்டிருக்கலாம்.
 

நிறைவு:
வேத மரபுகளை மறுத்து மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்த உலகாயதச் சிந்தனைகளை உள்வாங்கித் தோன்றிய சமணம், நிறுவனமாதற் பொருட்டு, தன்னுள் சில இறுக்கங்களைத் தளர்வு செய்து கொண்டது. வைதீக மரபின் மறுபிறவிக் கோட்பாட்டை உள்வாங்கி உலகாயத மரபிலிருந்து விலகியது. இறப்புக்குப் பின்னர் உயிர் அடையும் நிலை பற்றியக் கருத்தமைவுகளில் அது வைதீகத்துடன் பெரிதும் நெருங்கி நிற்கிறது.
 

குறிப்புகள்:
1.    James Gardener, Encyclopedia: Religions of the world, Volume-2, Indian Publishers distributors, Delhi, 2003, P.197.
2.    ந.முத்துமோகன், இந்தியக் கதை: ஏகம்  அநேகம்  சாதியம், பாரதி புக் ஹவுஸ், மதுரை, 2003.)
3.    'உணர்வானது (சட) பூதங்களில் தோன்றி அவற்றிலேயே ஒடுங்குகிறது. சாவுக்குப் பிறகு உணர்வு நிலவுவதில்லை. ஆன்மாவுக்கு உருவமுண்டு. அது நான்கு பூதங்களால் ஆனது. ஆண் பெண் கூட்டுறவில் தோன்றியது. உடல் அழிந்ததும் இதுவும் அழிகிறது' என்பன போன்ற உலகாயதச் சிந்னைகள் பிருகத், ஆரண்யக முதலான உபநிடதங்களிலும் பின்னர்த் தோன்றிய பிடகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கூறுகிறார். (உலகாயதம், தமிழில்: சிங்கராயர், சவுத் விஷன், சென்னை, 1999.)
4.    தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, மேலது, பக்.776.
5.    'வேதங்களின் முற்பகுதியாகிய மந்திரப் பகுதியிலே மறுபிறப்பு பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லையாயினும் பிற்பகுதியாகிய பிரமாணத்திலே சிற்சில குறிப்புகள் காணப்படுகின்றன. இவையே பின்னர் மறுபிறப்பு பற்றிய கொள்கைகள் விருத்தியடைந்து நிறைவு பெறுவதற்கு அத்திவாரமாயின'. (கி.லக்ஷ்மணன், இந்திய தத்துவ ஞானம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2002, பக்.106.)
6.    பகவத் கீதை, ஆங்கிலத்தில்: அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா, தமிழில்: ஆத்ம தத்வதாஸ், பக்தி வேதாந்த புத்தக நிறுவனம், சென்னை, 2002, பக்.98.
7.    பகவத் கீதை, மேலது, பக். 123.
8.    திருவள்ளுவர், திருக்குறள்  339.
9.    கி.லக்ஷ்மணன், மு.நூல், பக். 186.

No comments:

Post a Comment

கருத்துக்கள்