பாரம்: சுமையாகும் சுமைதாங்கிகளின் கதை - கணேஷ் சுப்ரமணி


குடும்பம் என்பது தனிச்சொத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பொருளாதார ஒப்பந்த அமைப்பு. இந்தப் பொருளாதார ஒப்பந்தத்தைப் பராமரித்து சொத்துரிமையை ரத்த சம்பந்தத்திற்குள்ளேயே கடத்திச் செல்வதற்காக உருவானவையே உறவுகள் எனும் பழகுநிலைகள்.

அதாவது உறவுகள் உருவாவதிலும், நீடிப்பதிலும் பொருளாதாரம் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு உறவுக்கு இடையிலும் வெளியில் சொல்லப்படாத பொருளாதாரத் தொடர்பு உள்ளுறைந்து இருக்கிறது. சொல்லப்போனால் இந்தப் பொருளாதாரத் தொடர்புதான் குடும்ப அமைப்பைப் பலப்படுத்துகிறது; உறவுகளைப் பேணுகிறது.

இந்தியச் சமூகம் விசித்திரமானது. குடும்ப உறவுகள் குறித்து மற்றெந்தச் சமூகங்களை விடவும் அதிக அக்கறை கொள்வது. இதில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து கடைசிக்காலம் வரையிலான வாழ்க்கையை நிறைவு செய்வது என்பது, அந்தக் குழந்தையுடன் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாக இல்லாமல், அதற்கு முந்தைய தலைமுறை (குறிப்பாக, தந்தை, தாய்மாமன், தாய்வழிப் பாட்டனார், தந்தை வழிப் பாட்டனார்) மனிதர்களையும் சார்ந்தது. அப்படியான வாழ்தலை இந்தியச் சமூகம் அதன் உறுப்பினர்களுக்குப் பழக்குகிறது.

இதனால் தன்னுடைய தேவைகளைத் தாண்டி, அடுத்த தலைமுறை அல்லது அடுத்தடுத்த தலைமுறைகளின் பொருளாதாரத் தன்னிறைவுக்காகவும் பொருள் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்திய ஆணுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணுக்கு உறுதுணையாய் இருந்து ஒத்துழைக்க வேண்டியது பெண்களுக்கு விதிக்கப்படுகிறது. இப்படியான சமூக உளநிலைதான், தனிமனிதனின் நிறைவாழ்வுக்கான கடமையிலிருந்து அரசுகள் விலகிக்கொள்வதை இயல்பானதாக ஏற்கிறது. அதாவது தன்னுடைய குழந்தையை வறுமையிலிருந்து காக்க வேண்டியது அரசின் கடமையல்ல; தன்னுடைய கடமையே என்கிற உளநிலை இந்திய மக்களின் மனத்தில் தேங்கியிருக்கிறது.

இப்படி உருவானதுதான் இந்திய மக்களின் சிக்கனமும் மிதமிஞ்சிய சேமிப்புப் பழக்கமும். குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பேண வேண்டிய கடமையைத் தலையில் சுமக்கும் ஒவ்வொரு ஆடவருக்கும் வினைதான் உயிர். அந்தக் கடமையிலிருந்து தவறும் ஆண் உயிர் வாழத்தகுதியற்றவனாகப் பழிக்கப்படுகிறான். இது ஒரு நிலை என்றால், குடும்பத்தின் பொருளாதாரக் கடமைகளை நிறைவேற்ற உழைத்து உழைத்துப் பின் கிழப்பருவம் எய்தும் போது ஓர் ஆண் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேறு நிலை.

நன்றாக உழைக்க முடிகின்ற காலத்தில் அப்பா மகனுக்குத் தேவையானவராக இருக்கிறார். முதுபருவத்தில் உழைக்க முடியாமல் போகும் காலத்தில் மகன் அப்பாவுக்கு தேவையானவனாக இருக்கிறான். இதுதான் முதலில் குறிப்பிட்ட பொருளாதார ஒப்பந்தம். இதன் மேல்தான் உறவுகள் கட்டப்படுகின்றன. அம்மா, அப்பா, மகன், மகள், தாய்மாமன், அண்ணன், தம்பி, தங்கை, கணவன், மனைவி என்று எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும். இந்தச் சமன்பாடு குலையும்போது குடும்ப உறவுகள் சிக்கலாகின்றன. பெண் சிசுக்கொலையின் பின்னால் உள்ள பொருளாதாரச் சிக்கலை இந்த இடத்தில் யோசித்துக் கொள்ளலாம்.

ஓர் ஆண், குடும்பப் பொருளாதாரத்திற்குத் தன்னாலான பங்களிப்பைச் செய்ய இயலாத நிலை முதுமையால் வரும் போது அவன் தேவையற்றவனாகிறான். அவனுடைய மரணம் குடும்ப உறுப்பினர்களாலேயே பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலை உருவாகும்போது மரணத்துக்கு முன்பே நரகத்தைத் தரிசிக்கிறான். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றம் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் ஓய்வு பெற்ற குடும்பத் தலைவர்களின் முதுமைப் பருவக் கண்ணீர்க் கதைகள் இயல்பூக்கத்துடன் படைப்பாக்கம் கொள்வது அரிதானது.

அப்படியான ஒரு மனிதரின் அந்திமத்தைக் காட்சிகளாக்குகிறது ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கியுள்ள பாரம். தேசிய விருது பெற்றும் வெகுமக்களின் கவனத்திற்கு வராமல் போயிருக்கும் இந்தத் திரைப்படம் பற்றிப் பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் படைப்புகளில் அதிகம் பேசப்படாத, ஆனால் சமூகத்தில் இயல்பாக நடைபெறும் குற்றச் செயலை இந்தப்படம் பேசுகிறது. மனிதக் கொலைக்குத் துணியாத சாதாரண மக்களையும் கூட, எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இன்றி கொலைக் குற்றம் புரியச் செய்வதைத் தனக்கான களமாக இத்திரைப்படம் கொள்கிறது.

கருப்பசாமி. தன் குடும்பத்தைக் காப்பதற்காகப் பாடுபடும் எண்ணற்றக் குடும்பத் தலைவர்களின் பிரதிநிதி. அவருடைய பாத்திரத்துக்குக் காவல் தெய்வத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதே அதற்கான குறியீடுதான். வயதான காலத்தில் வருமானம் ஈட்ட உடல் வலு குறைந்த நிலையில் காவல் காரனாக (செக்யூரிட்டி) வேலை பார்க்கிறார். இங்கு காவல் காரன் பணி என்பதும் குறியீடுதான். திருவிழாவில் தன்னுடைய பேத்திக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து புல்லாங்குழல் வாங்கும் அளவில் கூட அவருடைய பொருளாதார நிலை இல்லை.

கருப்பசாமியின் தங்கை மகன்கள் தாய்மாமன் என்கிற அவருடைய உறவைப் பெரிதும் மதிக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் தாய்மாமன் என்கிற உறவு நிலை மிகுந்த சிக்கல் நிறைந்தது. பல நேரங்களில் இரட்டைச் சுமையைத் தலையில் சுமக்க வேண்டிய உறவு அது. தங்கை மகன்களுக்குத் தன் மீது இருக்கும் மதிப்பு தன்னுடைய மகனுக்கு இல்லாமல் போன கருப்பசாமியின் சங்கடம் படத்தில் உணர்த்தப்படுகிறது.

கருப்பசாமியின் தங்கையாக வரும் பெண் கணவனை இழந்தவர். குடும்பத்தைக் காக்க வேண்டிய காலத்தில் தங்கையின் கணவர் இறந்து போனதால் தங்கையின் குடும்பத்தையும் சேர்த்துக் காக்க வேண்டிய பொறுப்பைக் கருப்பசாமி கைக்கொண்டிருக்கலாம். இதுவே கருப்பசாமியின் மகன் செந்திலுக்குத் தன் தந்தை மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அத்தை மகன்களிடம் செந்தில் எப்போதும் வெறுப்பை உமிழ்பவராகவே படத்தில் காட்டப்படுகிறார்.

இரண்டு குடும்பங்களின் பாரத்தைச் சுமந்த கருப்பசாமி, ஒரு விபத்தில் அடிபட்டு நடக்க முடியாத நிலையை அடைகிறார். மருத்துவமனை, தங்கை வீடு, மகன் வீடு என்று அவர் ஒரு பார வண்டியில் அலைக்கழிக்கப்படுகிறார். ஒரு வழியாக மகனுடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் அவர் கிடத்தப்படுகிறார். அறுவை சிகிச்சை செய்தால் அவரைக் குணப்படுத்தலாம் என்கிற நிலையில் அதற்குச் செலவு செய்ய செந்தில் முன்வரவில்லை.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் செலவின்றி அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இருப்பதாக அவருக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குத் தேவையான ஆவணங்களைத் திரட்டுவதற்கு நேரத்தையோ, உழைப்பையோ தரவும் கூட அவர் விரும்பவில்லை. கருப்பசாமி அவருக்குத் தேவையற்ற பாரமாகவே தெரிகிறார். படத்தில் எந்தவொரு காட்சியிலும் அவர் தன்னுடைய தந்தையைத் தொடவில்லை. தோளில் சுமக்க வேண்டிய பாரத்தைத் தாங்கிப் பிடிக்கக் கூட அவர் தயாராயில்லை.

செந்திலுக்குக் கருப்பசாமி சுமக்க முடியாத பாரம் அல்ல; சுமக்க விரும்பாத பாரம். அந்தப் பாரம் இறங்குவதற்கு ஒரே வழியாக அவர் கருப்பசாமியின் மரணத்தை உணர்கிறார். படுக்கை நோயாளிகளைக் கொல்வதற்கென்று இருக்கும் ராஜன், மீனா அக்கா ஆகியோரின் உதவியுடன் விஷ ஊசி போட்டு கருப்பசாமியை மரணிக்க வைக்கிறார். இயல்பாகவே போராட்டக் குணம் மிக்கவரான கருப்பசாமியின் தங்கை மகன் வீராவின் முலமாக இந்தக் கொலைச் சம்பவம் ஊடகங்களில் வெளிப்பட்டுப் பேசுபொருளாகிறது.

'தலைக்கூத்தல்' (தலைக்கு ஊற்றல்) என்கிற பெயரில் இயல்பாக நடைபெறும் சம்பவமாக அது விவாதிக்கப்படுகிறது. நல்லெண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்க வைத்து இளநீர் குடிக்கச் செய்வது பரவலாக அறியப்பட்ட ஒரு முறை. இதைத் தவிர, செம்மண்ணில் தண்ணீரைக் கலந்து படுக்கை நோயாளிகளின் வாயில் திணிப்பது, பன்னை வாயில் வைத்து அமுக்குவது, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் வகையில் முறுக்கு தருவது, பாலில் முள்ளை வைத்து வாயில் ஊற்றுவது போன்ற நடைமுறைக் கொலை உத்திகள் பற்றி இயல்பாகப் பேசுகிறார்கள். இம்மாதிரியான முறைகளில் மரணிக்கச் செய்வதில் உதவுவதற்கென்று இருக்கும் ஆட்கள் அது பற்றிய குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது கருணைக் கொலை. மருத்துவத்தால் கைவிடப்பட்ட நிலையில், மிகுந்த வலியும், வேதனையும் கொண்ட நோயாளிகளை மட்டுமே அவ்வாறு இறக்கச் செய்வதாகச் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அந்நோயாளிகளுக்கு மரணம் என்பது விடுதலை. அதற்காகப் பணம் கூட பெறுவதில்லை என்று சொல்கிறார் ஓர் பெண்மணி. அதை ஒரு புண்ணிய காரயமாக நினைத்துச் செய்வதாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் மேற்கண்ட முறைகளைக் கடந்து, விஷ ஊசி போட்டுக் கொல்லும் நவீன முறையின் பரவலை இந்தப் படம் கவனத்துக்குக் கொண்டு வருகிறது. கருப்பசாமியை அவ்வாறு கொல்லும் காரியத்தை ராஜன் என்பவரும், அரசு மருத்துவமனையில் ஆயாவாக வேலை செய்யும் மீனா என்பவரும் செய்து முடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் செந்திலிடம் பேரம் பேசிப் பணம் பெறுகிறார்கள். அது கருணைக் கொலையல்ல. காசுக்காகச் செய்யப்படும் கொலை. தவிர, கருப்பசாமி மருத்துவத்தால் குணமாக்க முடியாத நிலையிலும் இல்லை. உண்மையில் அவருக்கு நடக்கும் விபத்து, தன்னுடைய பாரத்தை இறக்கி வைக்கக் காத்திருக்கும் செந்திலுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு. அதனால்தான் கருப்பசாமியைக் கொல்வதற்கு ராஜன் அவரை அணுகும்போது எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, குழப்பமோ இன்றி உடனடியாக ஒத்துக் கொள்கிறார்.

கருப்பசாமியின் கொலையில் தொடர்புடைய ராஜன், மீனா, செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். ஆனால் கடைசியில் அரசியல் தலையீடுகளால் இந்தப் பிரச்சினை கைவிடப்பட்டு கருப்பசாமியின் மரணம் இயற்கை மரணம் என்று வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இங்கு இயற்கை மரணம் என்பது இது போன்ற கொலைகள் நடைமுறையில் இயல்பானது என்பதைக் குறிக்கிறது.

மருத்துவத்தால் கைவிடப்பட்டு, படுத்த படுக்கையாய்க் கிடக்கும் வயோதிகர்கள், நோயாளிகள் போன்றவர்களைப் பராமரிப்பது எளிதானதல்ல. கூட்டுக் குடும்பங்கள் இருந்தவரை அது அத்தனைச் சிரமமான காரியமாக இருந்ததில்லை. ஆனால் முதலாளித்துவச் சமூகத்தின் விளைவான தனிக்குடும்பங்கள் உருவாகிப் பெருகிப் போயுள்ள தற்போதைய சூழலில் முதியவர்களைப் பராமரிப்பது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, செவிலியர்களை நியமிப்பது போன்ற முறைகள் வசதி படைத்தவர்களுக்கான வாய்ப்புகளாக உள்ளன. வசதியற்றவர்கள் தங்களால் முடிந்தவரைப் பராமரிக்கவே முயல்கிறார்கள். பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், முதியவர்களைப் பராமரிக்க மனம் இல்லாத செந்தில் போன்றவர்களே செயற்கையாக மரணத்தை வரவழைக்கும் முடிவுக்கு நகர்கிறார்கள்.

இது சரியா, தவறா என்கிற விவாதத்தை விட, இது நடக்கிறது என்பதே முகத்தில் அறையும் நிஜம். அதுதான் விவாதிக்கப்பட வேண்டியது. அப்படியான கேள்வியையே பாரம் எழுப்புகிறது. முதுமைப் பருவத்தில் பெண்ணுக்கு இருக்கும் குறைந்த பட்ச மதிப்பு கூட ஆணுக்குக் கிடையாது. வயதான காலத்தில் மனைவிக்கு முன்னதாகப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதே பெரும்பான்மை ஆண்களின் ஏக்கமாயிருக்கும். இதை உணர்த்தும் வகையில் படத்தில் கருப்பசாமியின் இறந்து போன மனைவியின் போட்டோவை அடிக்கடி காட்டுகிறார்கள்.

வீரா, தன்னுடைய தாய்மாமா கருப்பசாமியின் போட்டோவை ப்ரேம் செய்து கொண்டு வந்து தருகிறார். அது சிரித்த முகத்துடன் இருக்கும் அவருடைய இளமைக்காலப் படம். வீராவின் அம்மா (கருப்பசாமியின் தங்கை) அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘காவல் காரன் உடுப்பு போட்ட (சமீபத்திய) படம் எதுவும் கிடைக்கலையா?’ என்று கேட்கிறார். அதற்கு வீரா, 'அவர் சிரிச்ச மாதிரி இருக்கணும்னுதான் சின்ன வயசு போட்டோவைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார். அடிக்கடி காட்டப்படும் அவருடைய மனைவியின் புகைப்படமும் இளமைக்காலப் புகைப்படம்தான். இளம் வயதிலேயே மனைவியை இழந்து, வயோதிகம் அடைந்த பிறகு அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. ஒரு வகையில் செந்தில் தன்னுடைய சுயநலத்துக்காகத் தன்னுடைய தந்தையின் நரக வாழ்வை முடித்து வைக்கிறார்.

படம் தொடங்கும் போதும், முடியும் போதும், கருப்பசாமியின் காவல் காரப் பணி சீருடையான, பூட்ஸ், விசில், அதைத் தொடர்ந்து பேத்தியின் பிறந்த நாளுக்காக அவர் வாங்கிய புல்லாங்குழல், இறுதியாக அவருக்குப் போடப்பட்ட விஷ ஊசி ஆகியவற்றைக் காட்டுகிறார்கள். இளமைக் காலத்தில் குடும்பத்தைக் காக்கவும், வயதான காலத்தில் தன்னைக் காக்கவும், உழைத்த மனிதரை உணர்த்த பூட்சும், விசிலும் காட்டப்படுகின்றன. இறுதிவரை, அடுத்த தலைமுறை மீது அந்த மனிதர் கொண்டிருந்த அக்கறையையும் அன்பையும் புல்லாங்குழல் காட்டுகிறது. அப்படி வாழ்ந்த மனிதனுக்கு அவனுடைய குடும்பம் தந்த பரிசான மரணத்தைக் காலியான விஷ ஊசி உணர்த்துகிறது.

பாரம் வழக்கத்துக்கு மாறான திரைமொழியைக் கொண்டிருக்கிறது. பொதுவான திரை அழகியல் முறைகள் அனைத்தையும் திட்டமிட்டோ அல்லது கைவராமலோ தவிர்த்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி கருப்பசாமி கொலை சம்பவத்தை முடித்து வைக்குமாறு காவல் துறை அதிகாரியிடம் உள்துறை அமைச்சர் பேசும் காட்சியைத் தவிர வேறு எங்கும் சினிமாத்தனங்களே இல்லை. முடிந்தவரை யதார்த்தமான காட்சி உருவாக்கத்தைக் கவனத்தில் கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். ஸ்டுடியோ, வழக்கமான படப்பிடிப்புத் தளங்கள், துணை நடிகர்கள் போன்றவற்றைக் கூட தவிர்த்திருக்கிறார்கள். கூடுமான வரை நடிகர்கள் அல்லாத அசல் மனிதர்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். முக்கியப் பாத்திரங்களில் மட்டும் பாண்டிச்சேரி நிகழ்த்துக்கலைத் துறையைச் சார்ந்தவர்கள் பங்களித்திருக்கிறார்கள்.

செந்திலாக வரும் முத்துக்குமார் கச்சிதமான தேர்வு. எந்த மிகை உணர்ச்சியையும் காட்டாத அவருடைய முகம், அன்பு, பாசம் போன்ற அற உணர்வுகள் நீர்த்துப் போன அந்தப் பாத்திரத்துக்கு இயல்பாகப் பொருந்துகிறது. கருப்பசாமி (பேராசிரியர் ராஜூ), அவருடைய தங்கை பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் படத்திற்குச் சரியான அளவில் பங்களித்திருக்கிறார்கள். படம் முழுவதும் தெரியும் ஒரு வித அடர்ந்த ஒளியமைப்பு உணர்வுகளைச் சரியாகப் பார்வையாளனுக்குக் கடத்துகிறது. இது போன்ற படங்களின் தேவையைச் சரியாக உணர்ந்து இந்தப் படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குனர் வெற்றி மாறனும், யதார்த்த திரைமொழியில் படைப்பாக்கியிருக்கும் இயக்குனர் மும்பையைச் சேர்ந்த ப்ரியா கிருஷ்ணசாமியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். படத்தொகுப்பையும் இயக்குனரே கவனித்திருக்கிறார். பெரும்பாலான ஷாட்கள் நீளம் குறைக்கப்பட வேண்டியவை. ஆனால் காட்சிகளின் கனத்தைப் பார்வையாளன் உணர்வதற்கு அந்தத் தேவையற்ற நீளங்களும் அவசியம்தான்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்