இளையராஜா 50 - கணேஷ் சுப்ரமணி

அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.

இளையராஜாவின் இசை வரலாறு என்பது திரையிசையின் வரலாறுதான். இந்த மையப்புள்ளியைக் கொண்டுதான் முன்னும் பின்னுமான இசை வரலாற்றை எழுத முடியும். தமிழ்த்திரையிசையின் தொடக்க காலககட்டமான முப்பது மற்றும் நாற்பதுகளில் சினிமா இசை என்பது கர்னாடக இசை மரபும் நாடக இசைப் பாணியும் கலந்த ஒன்றாகவே இருந்தது. இதில் பாடகர்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஐம்பதுகளில்தான் இது மாற்றம் பெறுகிறது. இந்துஸ்தானி இசையும், மேற்கத்திய இசையும் தமிழ்த் திரையிசையில் கலந்து ஒரு புதிய இசைப்பாணி உருவானது. இதனை உருவாக்கியதில் எஸ்.வி.வெங்கட்ராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஜி.லிங்கப்பா போன்ற இசையமைப்பாளர்களின் பங்கினை மறக்க முடியாது. என்றாலும் எம்.எஸ்.விஸ்வநாதனும் கே.வி.மகாதேவனும்தான் இந்த இசைப்பாணியைப் பெருமளவு வளர்த்தவர்கள். அவர்களுக்கு முன்னரே இந்த இசைப் பாணி இந்தியில் அறிமுகமாகி வளர்ந்திருந்தது. அதைத் தமிழுக்கேற்ப அவர்கள் மெருகேற்றித் தந்தார்கள். தமிழுக்கான தனித்ததொரு இசை வடிவம் இளையராஜாவுக்குப் பின்னரே உருவாகிறது. அதற்கு முன்னர் சராசரியாக மூன்றரை நிமிடங்கள் இருந்த பாடல்களை நான்கரை நிமிடங்களாக மாற்றினார். இரண்டு சரணங்களுக்கும் தனித்தனியான இடையிசை அமைக்கும் பாணியை உருவாக்கினார்.

இளையராஜா அறிமுகமான எழுபதுகளில் தமிழ்த்திரையிசையில் ஒரு பெரிய தேக்கம் நிலவியது. எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் போன்ற பெரும் இசையமைப்பாளர்களின் தலைசிறந்த பாடல்கள் வெளிவந்த காலமாயினும், ஏதோவொரு மாற்றத்துக்காகத் தமிழ்க்காதுகள் காத்திருந்தன. அன்னக்கிளி மூலம் அந்தக் காத்திருப்பு நிறைவுக்கு வந்தது. அதில் தொடங்கிய பெருவெள்ளம் அடுத்த இரு பத்தாண்டுகளுக்குப் பாய்ந்தது. நிறைய படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டன. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் அவருடைய இசைக்காகக் காத்திருந்தனர். மோகன், ராமராஜன் போன்ற நாயகர்கள் உருவாகி வளர்ந்தது இளையராஜாவால்தான். பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சியில் இவருடைய பாடல்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் - சிவாஜிக்குப் பிறகு எண்பதுகளில் ரஜினி – கமல் எனும் இருநிலை நாயகப் பிம்பம் உருவானதில் இளையராஜாவுக்கு முக்கியப்பங்கு உண்டு. பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் பாடல்களை நம்பியே படம் எடுத்து வெற்றியும் பெற்றார்கள். தமிழ் சினிமாவில் இசையால் தனிப்பெரும் ராஜ்ஜியம் ஒன்றை அவர் நடத்திக் காட்டினார்.

தமிழ் சினிமா இசையின் பொற்காலம் என்றால் அது எண்பதுகள்தான். இந்தப் பொற்காலம் தனியொரு மனிதனால் நிகழ்ந்தது என்பதே அதிசயம்தான். இக்காலத்தில் எம்.எஸ்.வி, சங்கர் – கணேஷ், கங்கை அமரன், சந்திரபோஸ், டி.ராஜேந்தர் என்று பலரும் இசையமைத்தாலும் இந்தப் பொற்கால இசையின் மையமாக இளையராஜா இருந்தார். நாயகர்களைப் புகழ்ந்து புனையப்பட்ட பாடல்களுக்கு மத்தியில் இளையராஜாவைப் புகழ்ந்து பாடல்கள் எழுதப்பட்டன. ஊரெங்கும் போகும் உன் ராகங்களே, ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு, நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா, புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது, எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே, இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே, சின்னத் தாயவள் தந்த ராசாவே, ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல, இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் என்று எண்ணற்ற பாடல்கள் ராஜாவின் புகழ்பாடின. அவர் இசையமைக்காத படத்திலும் கூட (சோலையம்மா) அவரின் புகழ் பாடும் பாடல் இடம்பெற்றது. மக்கள் கைதட்டி அவற்றை ஏற்றனர். வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. டைட்டிலில் அவருடைய பெயருக்கு முன்னால் புதுப்புது பட்டங்கள் இடம்பெற்றன. ராகதேவன், மேஸ்ட்ரோ, இசைக்கோ, இசைஞானி, (பார்த்திபன் ஒரு படத்தில் இசை அல்லது இளையராஜா என்று டைட்டில் போட்டார்) என்றெல்லாம் பலப்பல பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. இவற்றுக்கெல்லாம் தான் தகுதியானவர் என்பதைத் தன் இசையால் அவர் தொடர்ந்து நிரூபித்தார்.

தன்னுடைய பாடல்களுக்குப் பொருத்தமான பாடகர்களை அவர் தேர்ந்தெடுப்பது வியக்க வைக்கும் ஒன்று. வேறு பாடகரை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தனை கச்சிதமான தேர்வுகளாக அவை இருந்தன. பெரும்பாலும் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், ஜானகி, சுசீலா போன்ற பாடகர்கள் அவருடைய மெட்டுக்களுக்குக் குரல் தந்தார்கள். என்றாலும் இளையராஜாவின் இசைக்கு மட்டுமேயான தனிக்குரல்களாக இல்லாத பொதுமைத் தன்மை அவர்களிடம் இருந்தது. தன்னுடைய இசைக்கெனவேயான பிரத்தியேகக் குரலுக்கான தேடல் அவரிடம் இருந்தது. எண்பதுகளில் உமா ரமணன், ஜென்சி, ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் போன்றவர்களை அவர் அப்படி உருவாக்கினார். அதே போல் தொண்ணூறுகளில் மனோ, அருண்மொழி, மின்மினி, சுவர்ணலதா போன்றவர்களைத் தன்னிசைக்கான தனித்த குரல்களாக அவர் உருவாக்கினார்.

தான் இசையமைத்த படங்களைத் தாண்டி, அவற்றுக்கான தகுதியைக் கடந்து செல்லக் கூடிய இசையையும் பாடல்களையும் அவர் தந்தார். சிறிய, பெரிய படங்கள் என்றெல்லாம் பாராமல் எல்லாவற்றுக்கும் உயர்தரமான – பல நேரங்களில் உலகத்தரமான – இசையை அவர் கொடுத்தார். திரைக்கதையை உள்வாங்கி பாடல்களை உருவாக்குவதில் அவரின் ஆற்றல் மிகப்பெரியது. அதாவது பாடலைக் கேட்கும் போதே திரைக்கதையின் கூறுகளை உணர முடிகிற அற்புதத்தை அவர் பல படங்களில் சாதித்துக் காட்டினார். கேப்டன் பிரபாகரன் படத்தில் பாசமுள்ள பாண்டியரு பாடல் இன்றளவும் புகழ்பெற்ற ஒன்று. ஊர் மக்கள் மகிழ்ச்சியாகப் பாடும் ஒரு கொண்டாட்டப் பாடல்தான் அது. அதற்குத் தேவையான உற்சாகமும் துள்ளலும் அதில் சரியாக இருக்கும். ஆனால் சரணத்தில் மனோ, சித்ராவின் குரல்களுக்குப் பின்னணியில் வரும் கோரஸ் ஆலாபனையில் மெல்லிய சோகம் தெரியும். கொண்டாட்டமான பாடலில் எதற்காக இந்த சோகத்தைக் கொண்டு வருகிறார் என்ற கேள்விக்கான பதில் திரைக்கதையில் இருக்கிறது. படத்தில் அந்தப் பாடல் முடிந்ததும் அந்தக் கொண்டாட்டத்தில் இருந்த பலரும் கொல்லப்பட்டு இறந்து போகிறார்கள். அந்தச் சோகத்தைப் பாடலிலேயே கொண்டு வந்தது ராஜாவின் திரைக்கதை குறித்த பிரக்ஞை. இது போல பல பாடல்களைச் சொல்ல முடியும். காதலர்கள் பாடும் அழகான டூயட் பாடல்களுக்குள் மெலிதான சோகத்தைக் கலந்திருப்பார். இதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்தால் திரைக்கதையில் அந்தக் காதலர்கள் பிரிவையோ, இழப்பையோ சந்திப்பவர்களாக இருக்கும்.

பாடலின் முன்னிசையுடன் பல்லவியைத் துறுத்தலின்றி இணைப்பதும், பல்லவியின் கடைசி வார்த்தையுடன் இடையிசையை இணைத்து அதன் முடிவிலிருந்து சரணத்தைச் சரியாகத் தொடங்குவதில் அவருக்கு இணையாக இந்தியத் திரையிசை வரலாற்றிலேயே யாரும் இருந்ததில்லை. இந்த நுணுக்கமான இசைக் கோர்ப்பில் அவருக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் அவரே திகழ்கிறார்.

இளையராஜாவின் பாடல்களில் மிகப்பெரும் தனித்துவமாக அவரின் இடையிசைக் குறும்பாடல்களைச் சொல்லலாம். பாடல்களின் இடையிசைக்கு (பெரும்பாலும் இரண்டாவது இடையிசை) நடுவில் ஏதாவது நாட்டுப்புற, நாடோடிப் பாடல்களைச் சிறிய இசைத் துணுக்காகச் சேர்த்திருப்பார். செம்பருத்தி படத்தில் கடலில எழும்புற அலைகளை கேளடி பாடலுக்கு நடுவில் குடிசைக்கு குலவிளக்கு வேணுமுன்னு என்று வரும் நான்கு வரித் துணுக்குப் பாடலைக் கேட்க அத்துணை அற்புதமாக இருக்கும். இதெல்லாம் எப்படி நிகழ்கிறது? அவரின் படைப்பூக்கம் நிகழ்த்தும் அதிசயம்தான் இதெல்லாமும்.

இளையராஜா இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் உணர முடிகிற ஒரு விதத் தனிச்சுவை (flavour) மற்றொரு அதிசயம். காதல், சோகம், வருணனை, கொண்டாட்டம், தத்துவம், நகைச்சுவை என்று பலதரப்பட்ட பாடல்கள் ஒரே படத்தில் இடம் பெற்றாலும், அததற்குரிய உணர்வுகளை அவை கொண்டிருந்தாலும் அவற்றிற்கு இடையில் ஒருவித தனிச்சுவையை நம்மால் உணர முடியும். அந்தப் படத்துக்கு மட்டுமேயானதாக அது இருக்கும். பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வெளிவந்த, கிராமியக் கதைக்களம் கொண்ட, ஒரே இயக்குனரின் படங்கள்தான். ஆனால் பதினாறு வயதினிலே பாடல்களில் தெரியும் தனிச்சுவை கிழக்கே போகும் ரயில் பாடல்களில் இருக்காது. அதற்குத் தனியான ஒரு ப்ளேவரைத் தந்திருப்பார். ஒவ்வொரு படத்திற்கும் இதை எப்படிக் கொண்டு வருகிறார் என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

ராஜாவின் இசையை மூன்று கட்டங்களாகப் பார்க்கலாம். இதில் முதல் கட்டம் எழுபதுகளின் பிற்பாதியிலிருந்து எண்பதுகளின் பிற்பாதி வரையிலானது. இது அவரின் இசை தொடக்கத் தளத்திலிருந்து மேலெழும்பி விண்ணில் பாய்ந்த காலகட்டம். இரண்டாம் கட்டம் எண்பதுகளின் பிற்பாதியிலிருந்து தொண்ணூறுகளின் பிற்பாதி வரையிலானது. இது பழமையும் நவீனமும் கலந்து நிதானமாக இயங்கிய காலகட்டம். திரையிசை புதிய மாற்றத்திற்கு உள்ளான காலம். இசையமைப்பில் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலகட்டம். இசைக் கோர்ப்புக்கு இணையாக சப்தக் கலவையின் தரம் முக்கியமானதாக மாறியது. ரகுமானின் வருகையோடு தொடங்கிய இந்தப் பாணி பெரிதாக வளர்ந்தது. மூன்றாம் கட்டம் இரண்டாயிரத்துக்குப் பிந்தைய இருபத்தோராம் நூற்றாண்டுக் காலம். இசைக் கோர்வையைப் பின்னுக்குத் தள்ளி சத்தங்களால் இடத்தை நிரப்பும் பாணிக்குத் திரையிசை நகர்ந்துள்ளது. இன்று இசைக் கலைஞர்களே தேவையில்லாத நிலை உருவாகி, எந்திரங்கள், கணினி வழியாக உருவாக்கப்படும் இசைத் துணுக்குகளைக் கோர்த்து இசை உருவாக்கப்படுகிறது. இப்பாடல்களுக்கு ஆயுட்காலம் (validity) குறைவு. வாத்தியக் கருவிகளிலிருந்தும், கலைஞர்களிடமிருந்து உருவாகாத இந்தப் பாடல்கள் எவ்வளவு ஹிட்டானாலும் சில மாதங்களில், சில வாரங்களில் காணாமல் போய் விடுகின்றன. இந்த மூன்று கட்டங்களிலுமே இளையராஜா இருக்கிறார்; இசைக்கிறார். ஆயிரம் படங்களைத் தாண்டி ஐம்பதாண்டுகளைத் தாண்டி அவரின் இசைப்பயணம் தொடர்கிறது என்பதே யாரும் நிகழ்த்த முடியாத மாபெரும் சாதனை. திரையிசை மட்டுமின்றி How to name it, Nothing but wind, India 24 Hours, The music messiah போன்ற தனியிசை ஆல்பங்களும், சிம்பொனி இசையும், ரமண மாலை, திருவாசகம் போன்ற பக்திப் பாடல்களும் அவருடைய சாதனைப் பட்டியலில் வரிசை கட்டி நிற்கின்றன.

கருப்பு வெள்ளை காலத்திலிருந்து இன்று வரை கொண்டாடப்படுகிறவராக ராஜா இருக்கிறார். இன்றைய தலைமுறையும் அவரை ரசிக்கிறார்கள்; வியக்கிறார்கள். உண்மையில் தற்போதைய தமிழ்த் திரையிசை இளையராஜாவைக் கடந்து சென்று விட்டது. ஆனால் இன்றும் அவருடைய பழைய பாடல்களுக்குப் புதிய ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அவருடைய பாடல்களையும் பின்னணி இசையையும் வியந்து விவாதிக்கிறார்கள். ரேடியோவை கண்டுபிடித்தது மார்கோனி, அதைக் கேட்க வைத்தது இளையராஜா’, ‘ஒரு ஊருல ஒரு ராஜா – இன்று வரை அவர்தான் ராஜா என்றெல்லாம் இன்றும் கவிதை நயத்துடன் அவரைச் சிலாகிக்கிறார்கள். அவருடைய அரிதான பாடல்கள் தேடிப் பிடித்து கேட்கப்படுகின்றன.  ஷார்ட்ஸ், ரீல்ஸ்களிலும் அவருடைய இசை உணர்வுகளைக் கிளர்த்துகிறது. ஐம்பதாண்டுகளைக் கடக்கும் அவரின் இசை அடுத்த ஐம்பதாண்டுகளைக் கடந்தும் கேட்கும். அநேகமாக தற்போதைய சினிமா ஆளுமைகளில் இன்னும் ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் ஞாபகத்தில் வைத்திருக்கப் போவது ஒரே ஒரு பெயராகத்தான் இருக்கும். அது இளையராஜா.

பெஸ்ட் 50

ஆண்டு

பாடல்

படம்

1976

அன்னக்கிளி உன்னை தேடுதே

அன்னக்கிளி

1977

செந்தூரப் பூவே

16 வயதினிலே

1978

நினைவோ ஒரு பறவை

சிவப்பு ரோஜாக்கள்

1979

கண்மணியே காதல் என்பது

ஆறிலிருந்து அறுபது வரை

1980

என் வானிலே ஒரே வெண்ணிலா

ஜானி

1981

அந்தி மழை பொழிகிறது

ராஜபார்வை

1982

தும்பி வா தும்பக்குடத்தின்

ஓலங்கள் (மலையாளம்)

1983

நகுவா நயனா

பல்லவி அனுபல்லவி (கன்னடம்)

1984

ரோஜா ஒன்று முத்தம்

கொம்பேறி மூக்கன்

1985

பூமாலையே தோள் சேரவா

பகல் நிலவு

1986

தேவனின் கோயில்

அறுவடை நாள்

1987

ராஜராஜசோழன் நான்

ரெட்டை வால் குருவி

1988

வளையோசை கலகலவென

சத்யா

1989

கேளடி கண்மணி

புதுப்புது அர்த்தங்கள்

1990

மண்ணில் இந்த காதலின்றி

கேளடி கண்மணி

1991

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

தளபதி

1992

மணியே மணிக்குயிலே

நாடோடி தென்றல்

1993

எந்தன் நெஞ்சில் நீங்காத

கலைஞன்

1994

வனக்குயிலே

பிரியங்கா

1995

தென்றல் வந்து தீண்டும் போது

அவதாரம்

1996

செம்பூவே பூவே

காலாபாணி (மலையாளம்)

1997

என்னைத் தாலாட்ட வருவாளா

காதலுக்கு மரியாதை

1998

மீட்டாத ஒரு வீணை

பூந்தோட்டம்

1999

இளவேனிற்கால பஞ்சமி

மனம் விரும்புதே உன்னை

2000

நீ பார்த்த பார்வைக்கொரு

ஹே ராம்

2001

என் மனவானில் சிறகை

காசி

2002

ஒளியிலே தெரிவது

அழகி

2003

இளங்காத்து வீசுதே

பிதாமகன்

2004

உன்ன விட இந்த உலகத்தில்

விருமாண்டி

2005

காற்றில் வரும் கீதமே

ஒரு நாள் ஒரு கனவு

2006

ஆற்றின் கரையோரத்தே

ராசதந்த்ரம் (மலையாளம்)

2007

ஜானே தோனா

சீனி கம் (இந்தி)

2008

கல்லாய் இருந்தேன்

உளியின் ஓசை

2009

குன்னத்தே

கேரளவர்மா பழசிராஜா (மலையாளம்)

2010

ஆரோ பாடுன்னு தூரே

கத துடருன்னு

2011

ஜகதானந்தகாரகா

ஸ்ரீராமராஜ்யம் (தெலுங்கு)

2012

சற்று முன்பு பார்த்த

நீதானே என் பொன்வசந்தம்

2013

எ ஃபேரி டேல் (தீம்)

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

2014

ஈரமாய் ஈரமாய்

உன் சமையலறையில்

2015

புன்னமி புவ்வை

ருத்ரமதேவி (தெலுங்கு)

2016

ஹீரோ அறிமுக இசை

தாரை தப்பட்டை

2017

ஓலத்தின்

கிளின்ட்

2018

கேக்காத வாத்தியம்

மேற்குத் தொடர்ச்சி மலை

2019

மேரா தோ சாந்த் ஹே

ஹப்பி (இந்தி)

2020

நீங்க முடியுமா

சைக்கோ

2021

எந்த எந்த சூசினா

கமனம் (தெலுங்கு)

2022

மாயோனே மணிவண்ணா

மாயோன்

2023

ஒன்னோட நடந்தா

விடுதலை பாகம் 1

2024

தினம் தினமும்

விடுதலை பாகம் 2

2025

ஒரு மனைவியாய்

பேரன்பும் பெருங்கோபமும்


No comments:

Post a Comment

கருத்துக்கள்