டிராகன் - கணேஷ் சுப்ரமணி

கல்லூரியைக் களமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் அசலான கல்லூரி வாழ்க்கையை இவை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. எந்தக் கிரகத்திலும் இல்லாத கல்லூரிகள்தான் சினிமாவில் காட்டப்பட்டு வந்துள்ளன. அதிலும் நாற்பத்தைந்து வயதைக் கடந்த கதாநாயகர்களும் தலையில் விக்குடன் கல்லூரிக்குப் போகும் காட்சியைக் காணும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நம் ரசிகர்கள். இப்போ சொல்ல வந்தது அதுவல்ல. சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற டிராகன் திரைப்படம் பற்றி.

வழக்கமாகக் கல்லூரிப் படங்களில் காதல், போதை, அடிதடி, நகைச்சுவை போன்ற அம்சங்கள் கண்டிப்பாக இருக்கும். இவற்றுக்குத் தோதாக, இருபாலர் படிக்கும் கல்லூரிகள் மட்டுமே சினிமாவில் களமாகும் தகுதியைப் பெற்றுள்ளன. அதிலும் கலைக் கல்லூரிகள்தான் பெருமளவு காட்டப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில்தான் இன்ஜினியரிங் கல்லூரிகள் சினிமாவில் வருகின்றன. பொதுவாகக் கல்லூரியைக் களமாகக் கொண்ட படங்கள் உணர்த்தும் விஷயங்களில் சில:

1. கல்லூரி வாழ்க்கை என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமே

2. பாடப்புத்தகங்கள், கற்பித்தல், தேர்வுகள், மதிப்பெண்கள், வருகைப்பதிவு இவையெல்லாம் மாணவர்கள் மீது ஏவப்படும் கட்டற்ற வன்முறை

3. பேராசிரியர்களும் முதல் பென்ச் மாணவர்களும் காமெடி கன்டென்ட்கள். முதல்வருக்கு இதில் முன்னுரிமை உண்டு

4. அரியரும் அடிதடியும் மாணவனுக்கான அடிப்படைத் தகுதிகள்

5. பட்டப்படிப்புக்கும் முன்னறேற்றத்துக்கும் சம்பந்தமில்லை. டிகிரி முடிக்காமல் இருப்பதெல்லாம் வளர்ச்சிக்கான தடையே இல்லை

இப்படி பெரும்பாலான படங்களில் காட்டப்படுவது போன்ற கல்லூரி வாழ்க்கையைத்தான் டிராகனும் சொல்கிறது. ஆனால் இதில் வரும் நாயகனும் கல்லூரிக் காலத்தில் பொறுப்பில்லாமல் மேற்சொன்ன தகுதிகளுடன் திரிந்தாலும், படிப்பு முடிந்து ஆறாண்டுகளுக்குப் பின்னர், ஒரு நிர்ப்பந்தத்தால் தன் தவறை உணர்நது அதைச் சரிசெய்ய மீண்டும் கல்லூரியில் படித்து 48 அரியர்களை முடிக்கிறான்.

இளைஞர்களுக்குப் படிப்பின் அவசியத்தை இந்தப்படம் வலியுறுத்துகிறது; அரியர் வைத்திருப்பது எல்லாம் கெத்து இல்லை; நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேறுவதுதான் கெத்து என்று இந்தப்படம் சொல்வதாகப் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்படும் விஷயமும் உணர்த்தப்படும் விஷயமும் எதிரெதிரானவை.

கல்லூரிப் படிப்பை முடிக்காத ராகவன் போலிச் சான்றிதழ் கொடுத்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேருகிறான். 48 அரியர்களுடன் நான்காண்டு காலக் கல்லூரிப் படிப்பை முடிக்கும் ராகவன் எதையுமே கற்றிருக்க வாய்ப்பில்லை. வேலைக்குச் சேர்ந்த பிறகு தன் திறமையாலும் கடின உழைப்பாலும் அவன் பதவி உயர்வுகளைப் பெற்று வேகமாக முன்னேறுகிறான். அதாவது, அவனுடைய வளர்ச்சிக்கு அந்த 48 அரியர்கள் எந்தவிதத்திலும் தடையாக இல்லை. கல்லூரியில் சரியாகப் படிக்காமல், ஒழுங்காக டிகிரி முடிக்காமல் திரிந்தாலும் திறமையிருந்தால் வாழ்வில் முன்னேறலாம் என்கிற கருத்தைத்தான் இந்தப்படமும் உணர்த்துகிறது. பட்டம் என்பது ஒரு official qualification என்ற அளவில் அவசியம். ஆனால் அதற்கும் ஒருவனுடைய வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்பதைத்தான் இந்தப்படம் உணர்த்துகிறது.

மற்றபடி, முதல் இருபது நிமிடங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒரு வணிகப்படத்துக்குத் தேவையான சுவாரஸ்யமான திரைக்கதைக்காக மட்டும் பாராட்டப்பட வேண்டிய படம்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்