மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெண் கல்விச் சிந்தனைகள் - கணேஷ் சுப்ரமணி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டம் இந்தியச் சமூகச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு முந்தைய காலகட்டத்தின் மதிப்பீடுகள் பெரும் சிதைவுகளையும், மாற்றங்களையும் சந்தித்த காலம் அது. வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் ஆதிக்கம், கிறித்தவச் சமயப் பரவல் போன்றவற்றால் இங்கு கல்வி முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. காலங்காலமாக இருந்து வந்த வேதக் கல்வி, குருகுலக் கல்வி போன்றவை மாற்றம் பெற்றன. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான ஒன்றாக இருந்த பார்வையும் மாறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி கற்ற சில இந்தியர்களால் புதிய கல்விச் சிந்தனைகள் மலர்ந்தன. தமிழ்ச் சூழலில் இப்புதிய சிந்தனைகளைப் பேரூற்றாகப் பெருக்கெடுக்கச் செய்தவர் பாரதியார். குறிப்பாகப் பெண் கல்வி குறித்த அவருடைய சிந்தனைகள் அன்றையச் சூழலில் மரபுகளை மீறியதாகவும் எதிர்காலச் சிந்தனைகளின் முன்னறிவிப்பாகவும் இருந்தன. ஆனால் அவருக்கு முன்பே தமிழ் மரபுகளிலிருந்து விலகாமல் பெண் கல்வி குறித்த சிந்தனைகளை முன்வைத்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

வேதநாயகம் பிள்ளை - காலமும் சூழலும்:

திருச்சிக்கு அருகில் உள்ள குளத்தூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த சவரிமுத்துப் பிள்ளை என்பவருக்கு மகனாக 1826 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தியாகப்பிள்ளை என்பவரிடம் ஆங்கிலக் கல்வி பயின்றார். அப்போதைய ஆங்கில அரசாங்க நீதி மன்றங்களில் பதிவுப் பொறுப்பாளர், மொழிபெயர்ப்பாளர், முறை மன்றத் தலைவர் எனப் பல அரசுப் பணிகளில் இருந்தார்.

வேதநாயகம் பிள்ளை வாழ்ந்தது இந்தியாவில் கல்வி பரவலாகாத காலகட்டத்தில். கல்வி என்பதே வேதக் கல்வி என்றிருந்த நீண்ட நெடிய மரபின் காலம் அது. கல்வி கற்கும் உரிமை குறிப்பிட்ட சில சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது. ‘சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களைப் பிராமணர்கள் பிராமணர்களுக்கு மட்டுமே கற்றக் கொடுத்தனர். வேதங்கள் தவிர, இலக்கணம், வானவியல், மருத்துவம், சட்டம், தர்க்கவியல் மற்றும் இசை போன்றவையும் கூட கற்றுக்கொடுக்கப்பட்டன. ஆனால் இவற்றைக் கற்கும் மற்றும் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. சில பிராமணர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்த அரசர்களுக்குச் சில வித்தைகளைக் கற்றுக்கொடுத்தனர். அவர்கள் ராஜகுரு என்று அழைக்கப்பட்டனர்’ (N.Subramaniyam, History of Tamil Nadu upto 1565, Udumalai, 1991) பிராமணர் அல்லாத மற்ற பிரிவினருக்கும் கல்விக்கும் தொடர்பேயில்லாத சூழல் நிலவியது. உயர் சாதி அல்லாத சாதிப் பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கேக் கூட கல்வி கற்க வாய்ப்பில்லாத சூழலில் வேதநாயகம் பிள்ளை பெண் கல்வி பற்றிக் குரலெழுப்பினார்.

பெண் கல்வி - சுருக்கமான வரலாறு:

1817 முதல் 1827 வரையிலான பத்தாண்டுகளின் கல்வியறிக்கையை அளித்த பம்பாய் ஆளுநர் எம். எஸ். எல்பின்ஸ்டோன் என்பவரின் அறிக்கையில் ஒரு பெண் கூடப் படித்ததாகக் குறிப்பிடப்படவில்லை. 1853ஆம் ஆண்டு பம்பாய் மாகாணத்தில் கல்வி கற்ற 35 ஆயிரம் மாணவர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 65 மட்டுமே. இது அக்காலத்தில் இந்தியாவில் பெண்கல்வியின் நிலையைத் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் கல்வியின் நிலை இதை விடப் பின்தங்கிய நிலையில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அறவே இல்லாதிருந்தது.

1709ஆம் ஆண்டிலேயே ஜீகன் பால்கு எனும் பாதிரியார் தரங்கம்பாடியில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். இந்தியாவிலேயே பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட முதல் பள்ளி அதுதான். ‘இந்தியாவில் 1813இல் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இந்தியர் மக்களுக்குக் கல்வி புகட்டும் பொறுப்பு கிழக்கிந்திய நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்குக் கல்வி புகட்டுவது என்கிற சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைக் கிறித்தவச் சமய நிறுவனங்களே (மிஷினரிகள்) முன்னெடுத்தன. முதலில் கிறித்தவ சமயத்துக்கு மாறிய பெண்களுக்கும், பின்னர் மற்ற பெண்களுக்குமாகக் கல்வியளிக்கும் பணியை கிறித்தவச் சமயத்தார் தொடங்கினர்’ (Mugibul Hasan Siddique, Women Education: A Research Approach, New Delhi, 1993).

தமிழ் நாட்டிலும் பெண் கல்விக்கான முன் முயற்சிகளில் கிறித்தவச் சமய நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் திருநெல்வேலியில் இங்கிலாந்தைச் சேர்ந்த சமய நிறுவனம் இதற்கான முதல் முயற்சியைத் தொடங்கியது. ‘ஸ்காட்டிஷ் சர்ச்’ எனும் அமைப்பு சென்னையில் பெண் கல்விக்கான முயற்சியை முன்னெடுத்தது (Revenue Consultations, Minute of Munro, Vol.277, 1822.) ஜீகன் பால்கு பாதிரியார் தொடங்கிய பெண்கள் பள்ளிக்கூடத்தைத் தொடர்ந்து, ஜேம்ஸ் ஹாக் என்பவர் 1819இல் நாசரேத்தில் ஒரு பள்ளியையும், 1820இல் முதலூரில் ஒரு பள்ளியையும் தொடங்கினார்.

பெண்கள் கல்வி கற்கப் பள்ளிக்கூடத்திற்கு வரும் சூழல் அப்போது இல்லாத நிலையில் கிறித்தவச் சமயத்தாருக்கு அது பெரும் சவாலாகவே இருந்தது. ‘பள்ளிக்கு வரும் பெண்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உணவு, உடை, கல்வி எல்லாம் இலவசமாக வழங்கினர். நீண்ட தூரங்களிலிருந்து கல்வி கற்க வரும் பெண்களுக்கென உறைவிடப் பள்ளிகளைத் தொடங்கினர். எழுத்துப் பயற்சி, வாசித்தல் பயிற்சி மட்டுமின்றி, பெண்களுக்குத் நெசவு, கூடை முடைதல், கயிறு திரித்தல், தையல் போன்ற பயிற்சிகளையும் அளித்து பெண்களைக் கல்வியின் பால் ஈர்க்கப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். சிறந்த மாணவிகளைத் தேர்ந்தெடுத்து உயர்கல்வியும் அளித்து, கற்பிக்கும் பணிகளில் அமர்த்தினர்’ (W.Anlet Sobithabai, Contemporary History of India, Trivandrum, 1874).

கிறித்தவச் சமயத்தார்களின் இத்தகைய முன்முயற்சிகளுக்குப் பிறகு, 1868இல் அப்போதைய இந்திய அரசாங்கம் முக்கிய நகரங்களில் பெண்களுக்கான அரசுப் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிட்டது. 1880இல்தான் சென்னையில் அத்தகைய பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது.1882- 83ஆம் ஆண்டுக்கான ‘இந்தியக் கல்விக் குழு’ (Indian Education Commission) இந்தியாவில் பெண் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கூறுகிறது (Report of the Education Commission, 1882).

வேதநாயகம் பிள்ளையின் சிந்தனைப் பின்புலம்:

கிறித்தவச் சமய நிறுவனங்கள், இந்திய அரசாங்கம் போன்றவற்றின் மேற்சொன்ன சில முயற்சிகளைத் தவிர பெண்கள் கல்வி கற்பதற்கான முன்னெடுப்புகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் பெண் கல்வி பற்றி உரக்கச் சொன்னவர் வேதநாயகம் பிள்ளை. கிறித்தவச் சமயப் பின்னணி, ஆங்கிலேய அரசாங்கத்தில் அவர் ஆற்றிய பணி, ஆங்கிலக் கல்வி வாயிலாக உலக இலக்கியப் போக்குகளை அவதானிக்கும் வாய்ப்பு போன்றவை அவரிடம் புதிய சிந்தனைகளையும் புதிய முயற்சிகளையும் உருவாக்கின. ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற பெயரில் தமிழில் முதல் நாவல் எழுதும் முயற்சி அதன் விளைவே. அந்த நாவலிலேயே பல இடங்களில் பெண் கல்வியின் அவசியத்தையும் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்தும் அவர் எழுதியிருக்கிறார்.

இந்த தேசத்தில் பெண்களை அடிமைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் நடத்துவது மிகவும் பரிதவிக்கத்தக்க விஷயமாயிருக்கிறது’ (பிரதாப முதலியார் சரித்திரம்) என்று அவர் கூறுவது அவருடைய சீர்திருத்தச் சிந்தனையின் வெளிப்பாடு.

பெண்மதி மாலை:

வேதநாயகம் பிள்ளை பெண் கல்வியை மட்டுமே முன்னிறுத்திப் பெண் கல்வி, பெண் மானம் போன்ற சிறு நூல்களை எழுதினார். அவை உரை நடையில் அமைந்தவை. அந்நூல்களில் அவர் வலியுறுத்தும் கருத்துகளின் படைப்பிலக்கிய வடிவமாக அவர் எழுதிய நூல் பெண் மதி மாலை. இந்நூல் பெண்ணுக்கான அறங்களைப் பேசுகிறது.

பெண் கல்வியை வலியுறுத்தினாலும் அவருடைய செய்யுட்களில் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்கிற நீதி போதனையைத் தருகிறார். அவரின் போதனைப்படி, ஒரு பெண்ணுக்கு வேண்டிய நடத்தை மற்றும் குணங்களாகக் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடலாம்.

Ø  பெண் கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும்

Ø  கணவனைத் தெய்வமாகத் தொழ வேண்டும்

Ø  வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்ய வேண்டும்

Ø  கல்வி கற்றாலும் கணவனுக்குக் கீழ்ப்படிதல் அவசியம்

Ø  கணவனுக்குப் பணி செய்து நடக்க வேண்டும்

Ø  கணவனின் உழைப்பில் பங்கேற்க வேண்டும்

Ø  வீட்டில் சுவையாகச் சமைக்க வேண்டும்

Ø  கணவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும்

Ø  மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது

Ø  ஆணுக்கு உதவியாக இருக்கவே பெண் படைக்கப்பட்டாள்

ஆங்கிலக் கல்வி வழியாக அவர் அறிந்த ஐரோப்பியச் சமூகத்தின் சில கூறுகளை இந்தியர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கம் வேதநாயகரின் பாடல்களில் தெரிகிறது. அதே சமயம் இந்தியச் சமூகத்தின் பிற்போக்குத்தனக் கூறுகளையும் முற்றாக விட்டுவிடக் கூடாது என்கிற மரபார்ந்த சிந்தனையும் கொண்டவராக விளங்கியுள்ளார். ஐரோப்பியப் பெண்களைப் போல இந்தியப் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற சிந்தனையை முன்வைக்கிறார். ஆனால் கணவனுக்கு அடங்கி நடப்பதில் அவர்கள் இந்தியப் பெண்களாகவே தொடர வேண்டும் என்பதே அவருடைய போதனையாயிருக்கிறது.

கற்ற பெண் - கல்லாத பெண்:

ஐரோப்பியச் சமூகம் மீதான உயரிய மதிப்பு வேதநாயகம் பிள்ளையிடம் இருந்தது. அக்காலத்திய ஆங்கிலக் கல்வி பயின்ற பலரிடமும் இருந்த சிந்தனைப் படிமம்தான் இது. பெண் கல்வி எனும் நீண்ட கட்டுரையில் ஓர் ஐரோப்பியப் பெண்ணின் குணங்களாகப் பலவற்றைப் பட்டியலிடுகிறார். அதற்கு எதிர்நிலையில் ஒரு பெண்ணின் குணங்களையும் பட்டியலிடுகிறார். ஐரோப்பியப் பெண்ணின் அந்த நற்குணங்களுக்குக் காரணமாகக் கல்வியைக் குறிப்பிடுகிறார். அதற்கு எதிர்நிலையில் சொல்லப்படும் பெண்ணின் குணங்களுக்குக் காரணமாகக் கல்வியறிவின்மையைச் சுட்டுகிறார். இதன் மூலம் கல்வியில்லாத இந்தியப் பெண்கள் கல்வி கற்பதன் மூலமே ஐரோப்பியப் பெண்களைப் போல் உயர்நிலை எய்த முடியும் என்னும் கருத்தை முன்வைக்கிறார்.

கல்வி கற்ற பெண் (ஐரோப்பியப் பெண்)

கல்வியறிவில்லாத பெண்

பொறுமையானவள்

தீமைகளின் உருவம்

அறிவு நிரம்பியவள்

வம்பு மொழி பேசுபவள்

அடக்கம் நிறைந்தவள்

பொய் பேசுபவள்

அழகானவள்

வீண் பழி பேசுபவள்

பொய் சொல்லாதவள்

கள்ளத்தனம் நிறைந்தவள்

தீயன செய்ய அஞ்சுபவள்

வஞ்சக மனம் கொண்டவள்

கடவுள் பக்தி நிறைந்தவள்

கணவனை மதிக்காதவள்

குடும்பச் சுமைகளைத் தாங்குபவள்

ஓயாமல் சண்டை போடுபவள்

ஆடம்பரச் செலவு செய்யாதவள்

குடும்பத்தைப் பேணாதவள்

அடக்கம் நிறைந்தவள்

பொய் பேசுபவள்

அடக்கம் நிறைந்தவள்

பொய் பேசுபவள்

குடும்ப விஷயங்களை வெளியில் பேசாதவள்

கணவனின் உறவினர்களை மதிக்காதவள்

யாரையும் பழித்துப் பேசாதவள்

அனைவரையும் குறை கூறுபவள்

உடற் தூய்மை உடையவள்

தூய்மை இல்லாதவள்

நேர்த்தியாக ஆடை அணிபவள்

அழுக்கான ஆடைகளை அணிபவள்

வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பவள்

வீட்டையும் அழுக்காக வைத்திருப்பவள்

கற்புடையவள்

தீய வழியில் செல்பவள்

அன்பானவள்

நன்கு சமைக்கத் தெரிந்தவள்

தையல், இசை போன்ற பிற வேலைகளிலும் தேர்ந்தவள்

கணவனை மதிப்பவள்

நகை, பணம் போன்றவற்றை விரும்பாதவள்

பிறருக்கு உதவி செய்பவள்

கற்புடையவள்

கணவனின் உறவினர்களைப் போற்றுபவள்

இப்பட்டியலில் கல்வி கற்காத பெண்ணைக் கல்வி கற்ற பெண்ணுடன் ஒப்பிட்டு பெண்கள் உயர்வெய்த கல்வி அவசியம் என்பதைக் கூற வருகிறார். ஆனால் அதற்கு ஐரோப்பியப் பெண்களை முன்மாதிரிகளாகக் கொள்கிறார்.

பெண்கள் கல்வி கற்பதனால், அவர்களுக்குக் கற்புடைமை முதலிய நற்குணங்களும் மிகுதியாகிக் கணவன் மேல் உண்மையான அன்பும் காதலும் உண்டாகுமே தவிர, அவர்கள் ஒருநாளும் கணவனுக்குத் தீமை செய்பவர்களாக மாட்டார்கள். நாம் இப்படிச் சொல்வது உண்மை என்பதற்கு எல்லாக் கல்வியும் உணர்ந்து கணவர்கள் மேல் மாறாத அன்பும் காதலுமுள்ள ஐரோப்பிய மாதர்கள் சான்றுகளாயிருக்கிறார்கள்’ (பெண் கல்வி)

இந்தியப் பெண்கள் ஐரோப்பியப் பெண்களைப் போலக் கல்வி கற்று உயர்ந்த பண்புகளை அடைய வேண்டும் என்று கூறும் அவர், ஐரோப்பியப் பெண்களைப் போல இந்தியப் பெண்கள் வேலைக்குச் சென்று பொருளீட்டுவதை மட்டும் வரவேற்கவில்லை. கல்வியின் நோக்கம் அறிவைப் பெருக்குவதே தவிர, வேலைவாய்ப்பைப் பெறுவதல்ல என்பதையும் அவர் பல இடங்களில் சொல்கிறார்.

பெண்களுக்குக் கல்வி கட்டாயமென்பதைச் சிலர் ஒப்புக்கொண்டாலும், பெண்கள் பலர் படித்து என்ன அலுவல் செய்யப் போகிறார்களென்றும், அவர்கள் படித்தால், ஆடவர்களுக்கடங்கி நடவாமல் கல்விச் செருக்கினால் கெட்டுப் போவார்களென்றும் வீணாக மறுக்கிறார்கள். தெய்வ அன்பும் நல்லறிவும் நற்குணங்களும் உண்டாவதற்காகக் கல்வி கற்பதேயல்லாது அலுவல் பார்ப்பதற்கோ?’ (பெண் கல்வி) என்று அவர் எழுதுவதில், நல்லறிவும், தெய்வ அன்பும், நற்குணங்களும் உள்ள பெண்கள் வேலைக்குச் செல்ல மாட்டார்கள் என்கிற கருத்தை உணர்த்துகிறார். பெண்கள் கல்வி கற்க வேண்டும்; ஆனால் வேலைக்குச் சென்று பொருளீட்டக் கூடாது என்பதே அவருடைய மன ஓட்டமாகத் தெரிகிறது.

நீதி கற்பித்தலும் உரைநடையும்:

வேதநாயகம் பிள்ளை தனக்கு வாய்த்த கல்வியறிவின் வாயிலாக மேற்கத்திய நாடுகளின் சிந்தனைப் போக்குகளை அறிந்துகொண்டதுடன் அவற்றைத் தமிழில் கொண்டுவரும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். காலங்காலமாக இருந்து வந்த செய்யுள் என்னும் படைப்பாக்க வடிவத்தை விட உரைநடையின் வீச்சும் பரப்பும் அதிகம் என்பதைச் சரியாகக் கணித்திருந்தார். உரைநடையின் அவசியத்தைப் போற்றுகிறார்.

நம்முடைய கருத்தைப் பிறர் அறியவும் பிறருடைய கருத்தை நாம் அறியவுமே கடவுள் நமக்கு வாயையும் மொழிகளையும் கொடுத்திருக்கிறார். நாம் பேசுகிற மொழிகளிலும் செய்கிற நூல்களிலும் நம்முடைய கருத்து நன்றாகப் பிறருக்கு விளங்காவிட்டால், அந்த மொழிகளைப் பேசாமலும், அந்த நூல்களைச் செய்யாமலும் ஊமை போல் பேசாமலிருந்து விடுவது மிகவும் நன்மை. குருடனுஞ் செவிடனுங் கூத்துப் பார்க்கப் போய்க் குருடன் கூத்தைப் பழித்தானாம். செவிடன் பாட்டைப் பழித்தானாம் என்பது போல் சில புலவர்களும் ஆசிரியக் கோலம் பூண்டு கொண்டவர்களும் உரைநடையான நூல்களையும் தாங்கள் செய்கிறதில்லை; பிறர் செய்கிற நூல்களையும் ஒப்புக்கொள்ளாமல், குற்றம் உண்டு பண்ணுவதே அவர்களுடைய இயற்கைக் குணமாயிருக்கிறது. கற்றவர், கல்லாதவர் முதலிய யாவர்க்கும் பயன்படும்படி கல்விமான்கள் உரைநடை வடிவான நூல்களைச் செய்து உரைநடை வடிவம் விளங்கச் செய்ய வேண்டுமென்பது நமது வேண்டுகோளாயிருக்கிறது’ (பெண் கல்வி)

காலங்காலமாக இருந்துவந்த செய்யுள் மரபை உள்வாங்கியவராக வேதநாயகம் பிள்ளை இருந்தாலும் உரைநடையின் மூலமே அதிகளவில் மக்களைச் சென்றடைய முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் பெண்மதி மாலை போன்ற செய்யுள் நூல்களின் வழியாகப் பெண்களுக்கு அவர் போதிக்கும் செய்திகளை, பெண் கல்வி, பெண் மானம் போன்ற உரைநடை நூல்களின் வழியாக வெளிப்படுத்தினார்.

ஆசிரியர் சொல்ல வரும் கருத்து தெளிவாக மாணவரை/ கேட்பவரைச் சென்று சேர வேண்டுமென்றொல், அக்கருத்தின் வெளிப்பாட்டு வடிவம் எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்னும் கல்வியியல் உத்தி வேதநாயகம் பிள்ளையின் எழுத்தில் தெரிகிறது. அவருடைய செய்யுள்களும் உரைநடை போன்று எளிமையான மொழிநடையிலேயே அமைந்துள்ளன. ஆசிரியப்பணியில் இல்லாவிட்டாலும் அவருடைய படைப்புகள் போதனை மற்றும் கற்பித்தல் வடிவத்திலேயே உள்ளன. பெண்களுக்குத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அறக்கருத்துக்களைப் போதிக்கும் போது, கல்வி கற்காத, கல்வி கற்க வேண்டிய பெண்களைத் தன்னுடைய மாணவிகளாகவும், தன்னை ஆசிரியராகவும் தன்னை நிறுவிக் கொண்டு கற்பிக்கும் விதமான மனப்பாங்கு அவருடைய எழுத்தில் தெரிகிறது.

தாய்மொழியில் போதனை:

தாய்வழியில் கல்வி கற்பதன் அவசியத்தைத் தற்போதைய கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சி மேம்பட்டுள்ளது அறிவியல்பூர்வமாகப் பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதை அவர்கள் தொடர்ந்து எடுத்துரைக்கிறார்கள். ஆங்கிலக் கல்வி கற்றவராயிருந்தாலும் வேதநாயகம் பிள்ளை தாய்மொழிக் கல்வியே கற்றலுக்குச் சிறந்தது என்பதை எடுத்துரைக்கிறார். கல்வியின் உள்ளடக்கம் முழுமையாகக் கற்பவனைச் சென்று சேர்வதே கற்றலின் அடிப்படை நோக்கம். தாய்மொழியல்லாத இன்னொரு மொழியில் கல்வி கற்பதில் இந்நோக்கம் சிதைகிறது.

பிள்ளை வரத்துக்குப் போய்க் கணவனைச் சாவக் கொடுத்தது போலவும், உடல் வலிக்கு மருந்து சாப்பிட உள்ள வன்மையும் போய்விட்டது போலவும், சிலர் ஆங்கிலம், இந்தி முதலிய பிற மொழிகளைப் படிக்கத் தொடங்கி, அந்த மொழியுந் தெரியாமல், சொந்த மொழியுந் தெரியாமல், பேசத் தெரியாதவர்களாகப் போய்விடுகிறார்கள். சிலர் பிற மொழிகளில் முழு அறிவுடையவர்களாயிருந்தும் சொந்த மொழியைப் படியாமல் இடைவழியில் விட்டுவிடுகிறார்கள். சொந்த மொழியில் பிழையில்லாமல் இரண்டு வரி சேர்த்தெழுதத் தெரியாமலும் வைத்தியநாதன் என்பதற்குப் பைத்தியநாதன் என்று கையெழுத்து வைத்துக்கொண்டு சிலர் உயிர் வாழ்கிறார்கள். ஐரோப்பாக் கண்டத்தில் தன் மொழியில் தன்னுடைய கையெழுத்தையே பிழையற எழுதத் தெரியாதவனுக்கு ஒரு சிறு அலுவலுங் கிடைக்க மாட்டாது’ (பெண் கல்வி) என்று தாய்மொழிவழிக் கல்வியின் அவசியத்தைச் சொல்லும் வேதநாயகம் பிள்ளை, இந்தியாவில் தாய்மொழியைப் புறக்கணித்துப் பிறமொழிகளில் (குறிப்பாக ஆங்கிலம்) கல்வி கற்பவர்களுக்குப் பெரிய பணிகள் கிடைப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கல்வி பரவலாக வேண்டும்; குறிப்பாகப் பெண்களிடையே கற்றல் முயற்சிகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற அவருடைய நோக்கத்திற்குத் தடையாய் அவர் பிறமொழிக் கல்வியைக் கருதுகிறார். எளிமையான பின்னணியிலிருந்து கல்வி கற்க வருபவர்கள் (குறிப்பாகப் பெண்கள்) பிறமொழிவழிக் கல்வியை உள்வாங்கச் சிரமம் கொண்டு கல்வி கற்பதையே கைவிடும் நிலைக்கு ஆளாவதைத் தடுக்க அவர் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறார். தாய்மொழியில் கற்கும் முறை பெண்களுக்கு எளிமையானதாக இருக்கும் என்பது அவருடைய கருத்து.

கற்பித்தலும் மகடூஉ முன்னிலையும்:

முற்காலத்தில் பெண்கள் அதிகம் படித்தார்கள் என்பதை நினைவூட்டும் அவர், பல நீதி நூல்கள் பெண்களை மாணவிகளாகக் கொண்டு போதிக்கப்பட்டதைச் சுட்டுகிறார். அந்நூல்களில் பல பாடல்கள் மகடூஉ முன்னிலையாகச் சொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

நாலடியார், காரிகை முதலிய நூல்கள் மகடூஉ முன்னிலையாகச் செய்யப்பட்டிருக்கின்றனவாதலாலும், திருக்குறள், நாலடியார், காசி கண்டம் முதலிய நூல்களில் பெண்களுக்கு இருக்க வேண்டிய கற்பு முறைமை முதலிய குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவாதலாலும், ஆடவர்களைப் போலப் பெண்களும் படிப்பதற்காகவே அந்த நூல்கள் செய்யப்பட்டனவென்பது எடுத்துக்காட்டாயிருக்கிறது. பெண்கள் படிக்கக் கூடாதென்பது மேற்படி நூலாசிரியர்களுடைய முடிவாயிருந்தால் அவர்கள் பெண் முன்னிலையாகப் பாடவும் கற்பு முறைமைகளைப் பேசவும் ஏதுவில்லையே?’ (பெண் கல்வி)

தன்னுடைய பெண்மதி மாலையிலும் பல பாடல்களைப் பெண் முன்னிலையாகவே படைத்துள்ளார். அவருடைய பாடல்களில்,

மதியிது மதியிது பெண்ணே

புண்யவதியல்ல வோநல்ல மகராசி கண்ணே’        (பெண்மதி மாலை)

என்னும் பொதுவான வரிகளைப் பல்லவியாகக் கொண்டு அமைத்துள்ளார். பெண்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று அவர் பெண்களை முன்னிலைப்படுத்தியே பெண்மதி மாலையில் தன்னுடைய நீதிக் கருத்துக்களைச் சொல்லுகிறார்.

செய்ய வேண்டியவை

செய்யக் கூடாதவை

மாதா பிதாவை வணங்கு

அடுக்குப் பானையை உருட்டாதே

பெற்றவர் நேசத்தைத் தேடு

தங்கையைத் தொடையிற் கிள்ளாதே

பெற்றவர்களின் சொல்லுக்கு இணங்கு

தாழ்வோரை நீ சிரியாதே

குருமாரை வணங்கிக் கொண்டாடு

வாழ்வோரைக் கண்டு வயிறெரியாதே

கடவுரை வழிபடு

நாட்டிலெவரையும் வையாதே

பக்தியுடன் பணிந்து உன்னைத் தாழ்த்து

பூச்சியைப் பிடித்துக் கொள்ளாதே

தூய தேவாலயம் நாடு

பிச்சையிடாமல் உண்ணாதே

சாமியைத் தேடு

ஊரார் பொருளைத் தொடாதே

ஐயன் திருவருள் நினைந்து நீ தினங் கண்ணீர் பெருகு

நாலுபேர் அறியும்படி பிச்சையிடாதே

சத்திய மார்க்கத்தைக் கூடு

அழுக்குவத்திரங்கள் கட்டாதே

தெய்வ பக்தியே பாக்கியம் பந்தயம் போடு

சூதும் வாதும் படியாதே

உன்னைப் போல் பிறரையும் நேசி

கோட்சொல்லிக் குடி கெடுக்காதே

ஞான புத்தகங்களை வாசி

கோளும் புரளியும் கேளாதே

இட்டமாய் நல்லோரைக் கூடு

எந்த நாளும் புரளிபேச நாக்கு நீளாதே

பொல்லாத் துட்டரைக் கண்டால் நீ தூரத்திலோடு

வேலைக்கு நீ சிணுங்காதே

நித்தமும் நீரிலே முழுகு

மூலைக்குட் புகுந்து முணுமுணுக்காதே

வீடு சுத்தமாகும்படி தோகையே மெழுகு

வேலை செய்வோரை வாட்டாதே

வேலை செய்வோரை வாட்டாதே

நெடுநேரம் படுத்துத் தூங்காதே

ஆரையும் சீறி ஏசாதே

புருடர்கள் பார்க்க நில்லாதே

உன்னைநீ புகழ்ந்துகொள்ளாதே

நகைதுணியிரவல் வாங்காதே

இன்னும் நீளும் இப்பட்டியலில் பெண்களை முன்னிலைப்படுத்தியே வேதநாயகம் பிள்ளை பேசுகிறார். ஓர் ஆசிரியர் மாணவியிடம் சொல்வது போன்ற போதானா முறை அவருடைய படைப்பில் தெரிகிறது. பெண்கள் செய்ய வேண்டியனவாகச் சொல்லும் காரியங்களை விட, செய்யக் கூடாதனவாகச் சொல்லும் காரியங்களின் எண்ணிக்கை அதிகமாயுள்ளது. இது அவர் வாழ்ந்த காலத்திய பெண் சமூகத்தின் மீதான அவருடைய கருத்து அல்லது மனப்பாங்கைக் காட்டுகிறது.

கல்வி கற்பதன் பலன்களைச் சொல்லி ஆசையைத் தூண்டும் பயன்பாட்டு நோக்கிலான கற்பித்தல் முறையையும் பயன்படுத்துகிறார். பெண் கல்வி பற்றிப் பெண்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரின் நோக்கமாகத் தோன்றினாலும் அவர் கூறும் கருத்துக்கள் பெண்கல்வியினால் உண்டாகும் பலன்களை ஆண்களுக்குச் சொல்வதாகவே வெளிப்படுகிறது.

பெண்கள் படித்தால் அவர்களுக்கு எல்லா அறிவும் உண்டாகுமானதால் அவர்கள் ஆடவர்களுக்கு அமைச்சர்களைப் போலச் சமயத்தில் அறிவு சொல்வார்கள். செயலாளர்களைப் போல வீட்டுச் செயல்களையெல்லாம் நடப்பித்துக்கொள்வார்கள். கணக்கர்களைப் போல வீட்டைச் சேர்ந்த கணக்குகளையெல்லாம் எழுதிக்கொள்வார்கள். தாய் போல் ஆடவர்களைக் காப்பாற்றுவார்கள்; காவற்காரரைப் போல வீட்டுப் பண்டங்களையெல்லாம் காத்துக்கொள்ளுவார்கள். நல்ல அட்டில் தொழிலாளர்களைப் போல ஆடவர்களுடைய நாவுக்கிசைவான சிற்றுண்டிகளைச் செய்து கொடுத்துப் போற்றுவார்கள். மருத்துவர்களைப் போல ஆடவர்களுடைய உடல் நலங்களுக்கடுத்த செயல்களைத் தேடிச் செய்வார்கள். இன்னிசைப் புலவர்கள் போல இன்ப இசைகளைப் பாடியும், இனிமையான மொழிகளைப் பேசியும் ஆடவர்களுடைய வருத்தங்களைத் தீர்ப்பார்கள்; நண்பர்களைப் போல ஆடவர்களுடைய ஆபத்துக்கு உதவுவார்கள்; ஆடவர்கள் பிசகி நடந்தால் அவர்களுக்குக் குருவைப் போல அறிவுரை பகர்வார்கள் இவ்வாறான பெண் கல்வியைப் பரவலாக்கச் செய்யும் நோக்கம் அதில் தெரிகிறது’ (பெண் கல்வி)
என்றெல்லாம் பெண் கல்வியின் பலன்களாக வேதநாயகம் பிள்ளை கூறும் கருத்துக்கள் ஆண்களிடம் பெண்களைப் படிப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.

நிறைவுரை:

ஐரோப்பியர் வருகையால் இந்தியாவில் முதலாளித்துவச் சமூகச் சூழல் வலுப்பெற்ற நிலவுடைமைச் சமூகப் பின்னணியில் உருப்பெற்ற ஆளுமையாக மாயூரம் வேதநாயகம் பிள்ளை விளங்கியுள்ளார். நிலவுடைமைச் சமூக மதிப்பீடுகளில் ஒரு கூறாகப் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது காலங்காலமாக இருந்து வந்துள்ள சூழலில் வேதநாயகம் பிள்ளை பெண் கல்வியை வலியுறுத்துகிறார். சமூகச் சூழல் மற்றும் காலகட்டத்தை மீறிய இச்சிந்தனைகள் அவரிடம் உருக்கொள்ள ஆங்கிலக் கல்வியும் அதன் வழியாக வாய்த்த ஐரோப்பியச் சமூக முறை பற்றிய அறிதலும் காரணிகளாக அமைந்துள்ளன. காலங்காலமாக இருந்து வந்த சாதிய அமைப்பையும் அவர் மென்மையாகக் கேள்விக்குள்ளாக்குகிறார்.

தகப்பன் அலுவல் பார்க்காமலிருந்தால் பிள்ளையும் அலுவல் பார்க்கக் கூடாதா? பார்ப்பனர்கள் மறை ஓதுதலையன்றி மற்றொரு தொழிலும் செய்யக் கூடாதென்று, அப்படியே மற்றைக் குலத்தார்களும் தங்கள் தங்களுக்குரிய தொழில்களைச் செய்ய வேண்டுமென்றும் , மனு நீதியில் சொல்லப்பட்டிருக்க, இப்போது பார்ப்பனர்கள் மறையைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு, மற்றைக் குலத்தார்களுடைய தொழில்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டு செய்யவில்லையா? மறையோதுதலுக்கு மாறாக வழக்கு முறை நூல் ஓதுதலும், மறையியல் நெறி வாழ்க்கைக்கு மாறாக உலகியல் நெறி வாழ்க்கையையுஞ் செய்கிறார்களே! கலப்பை என்னும் கருவியைக் கொண்டு நிலத்தை உழுது உழவுத் தொழில் செய்ய வேண்டிய வேளாளர் இறகென்கிற கருவியைக் கொண்டு கடிதமாகிய நிலத்தை உழுது உயிர் வாழ்க்கை நடத்த வில்லையா?’ (பெண் கல்வி) என்று வேதநாயகம் பிள்ளை எழுப்பும் கேள்வியில் நிலவுடைமைச் சமூக அமைப்பின் மதிப்புகள் மாற்றம் கொள்ளத் தொடங்கியது தெரிகிறது. அப்படி மாறி வந்த சமூகச்சூழலைக் கல்வி பரவலாக்கத்துக்கான தளமாக அவர் பார்க்கிறார். குறிப்பாகப் பெண் கல்வியை முன்னெடுக்க வேண்டிய தொடக்கக் காலகட்டமாக அவர் உணர்ந்துள்ளார்.

வேதநாயகம் பிள்ளையின் இச்சிந்தனைகள் பிற்காலத்திய பாரதியாரிடம் தீவிரமாக வெளிப்பட்டது. பெண் விடுதலைச் சிந்தனைகளில் பாரதியாரிடம் தென்பட்ட மரபு மீறல்களை வேதநாயகம் பிள்ளையிடம் காண முடியவில்லை. ஆண் மையச் சமூகம் உருவாக்கிய பெண்ணடிமைத்தன எல்லைகளுக்குள் அடங்கி நிற்பனவாகவே பிள்ளையின் கருத்துக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பெண் கல்வி பரவலாவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அவரை ஓர் ‘முன்னத்தி ஏர்’ என்று சொல்லலாம். அதுதான் பின்னத்தி ஏர்களுக்கு ஏற்ப மண்ணைத் தயார் செய்தது. அந்த வகையில் பெண் கல்வியின் அவசியத்தைப் பேசியதில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஒரு முன்னோடி ஆளுமையாகிறார். இவர் உருவாக்கிய பாதையில் பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பின்னாளைய சிந்தனையாளர்கள் வெற்றிநடை போட்டதாகக் கொள்ளலாம்.

உதவிய நூல்கள்:

1.   மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பெண் கல்வி, பெண் மானம், பெண்மதி மாலை, சாரதா பதிப்பகம், சென்னை, 2012.

2.   மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பிரதாப முதலியார் சரித்திரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2012.

3.      W.Anlet Sobithabai, Contemporary History of India, Trivandrum, 1874.

4.      N.Subramaniyam, History of Tamil Nadu upto 1565, Udumalai, 1991.

5.      Mugibul Hasan Siddique, Women Education: A Research Approach, New Delhi, 1993.

6.      Revenue Consultations, Minute of Munro, Vol.277, 1822.

7.       Report of the Education Commission, 1882.

No comments:

Post a Comment

கருத்துக்கள்