தி.ஜானகிராமன் நாவல்களில் தற்கொலை - கணேஷ் சுப்ரமணி


தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் உளவியல் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டாலும், சமூகப் பின்புலத்தைப் புறக்கணித்துவிட்டு இப்பிரச்சினையின் ஆழத்தைக் கண்டுவிட முடியாது. ஒரு மனிதனின் உளவியலை அவன் சார்ந்த சமூகப் பின்னணியுடன் விவரிப்பதில் முன்நிற்கும் இலக்கிய வடிவம் நாவல். க்தமிழ்ப் படைப்புலகில் தனிமனித உளவியற் கூறுகளைத் தம் நாவல்களில் சித்திரத்த எழுத்தாளர்களுள் தனித்துவம் பெற்றவராக அடையாளம் காணப்படுபவர் தி.ஜானகிராமன். அவருடைய நாவல்களில் புலனாகும் தற்கொலை நிகழ்வுகளை அவற்றின் உளவியற் பின்னணியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

நாவல்  தற்கொலை  உளவியல்:
பொதுவாக தி.ஜானகிராமனின் நாவல்கள் நடுத்தர வர்க்கத்தின் சமூக மதிப்பீடுகளைப் பேசுபவை. அவ்வர்க்கத்தைச் சேர்ந்த கதை மாந்தர்களின் உளவியலானது, பண்பாடு உள்ளிட்ட சமூக மதிப்பீடுகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பதை ஜானகிராமனின் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. தனிமனித உளவியலும் சமூகப் பின்புலமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய உறவுடையவை. ‘தனிநபரைப் புரிந்து கொள்வதற்கு அவனை உருவாக்கும் பண்பாட்டின் நோக்கில் அவனை ஆராய வேண்டும் என்படைதப் போலவே, சமூக வழிவகையை இயக்கும் அம்சங்களைப் புரிந்து கொள்வதற்குத் தனிநபரின் அகத்தினுள்ளே செயல்படும் உளவியல் வழிவகைகளை இயக்கும் அம்சங்களை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்’ (சுதந்திரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுதல், பக்.8)1 என்கிறார் எரிக் பிராம்.

தி.ஜானகிராமன் நாவல்களில் தற்கொலையை நாடும் உளவியலை நான்கு கதை மாந்தர்களின் வழியாக உணர முடிகிறது.
1.    பாபு                         -  மோகமுள்
2.    தங்கம்மாள்        -  மோகமுள்
3.    ரங்கன்                   -  அன்பே ஆரமுதே
4.    பழனிவேலு         -  உயிர்த்தேன்
இம்மாந்தர்கள் சாவை நாடும் முடிவின் பின்னணியில் உள்ள உளவியலை மூன்று நிலைப்பாடுகளில் அடக்கலாம்.
1.    தாழ்வு மனப்பான்மை
2.    குற்ற உணர்வு
3.    வெறுமை நிலை அல்லது விரக்தி

தாழ்வு மனப்பான்மை:
தாழ்வு மனப்பான்மை என்பது உளவியல் துறையில் ஒரு முக்கியமான சிக்கல். இச்சிக்கல் குறித்து உளப்பகுப்பாய்வுத் துறையில் ஆழமான ஆய்வுகளைச் செய்தவர் ஆல்பிரட் ஆட்லர். தாழ்வு மனப்பான்மை குறித்து அவர், ‘ஒருவன், தான் எதிர் கொள்ள வேண்டிய ஒரு சிக்கலை ஏற்கவோ சமாளிக்கவோ தன்னால் இயலாது என நம்பும் போது தாழ்வு மனப்பான்மைச் சிக்கல் தோன்றுகிறது’ (What life should mean to you, P.43)2 என்கிறார். 

தி.ஜானகிராமன் நாவல்களில் ரங்கன் (அன்பே ஆரமுதே), பழனிவேலு (உயிர்த்தேன்) ஆகிய இருவரும் இந்த உளச்சிக்கலுக்கு ஆட்பட்டவர்களாகத் தோன்றுகின்றனர். தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுகளாக டபிள்யூ.இ.சார்ஜன்ட், ஆல்பிரட் ஆட்லர் போன்ற உளவியலாளர்கள் சில கூறுகளைக் குறிப்பிடுகின்றனர்.
1.    பிறரைவிடத் தான் உயர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ளுதல்
2.    பிறருடைய அன்பிற்காகவும் கவனத்திற்காகவும் இரக்கம், உதவிக்காகவும் பாராட்டுதலுக்காகவும் ஏங்குதல்
3.    சமுதாயத்திலிருந்து முற்றிலும் விலகித் தனிமையை நாடுதல்
4.    தாழ்வு மனப்பான்மை உணர்ச்சி ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தன்முனைப்பு, இழப்பீடு செய்யும் எதிர்ச் செயல்களை (Compensatory reactions) மேற்கொள்ளுதல்
5.    அடங்கி, அமைதியாய்க் கட்டுப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்காதவர் போலிருத்தல்
6.    தற்கொலை எண்ணம், தற்கொலை செய்து கொள்ளல்.

(W.E.Sargent, Teach yourself Psychology, P.118 and Alfred Adler, What life should mean to you, P.42 & 55.)3
 இவற்றில் 2,4,6 ஆகிய கூறுகள் ரங்கனிடமும் 1,3,4,5,6 ஆகிய கூறுகள் பழனிவேலுவிடமும் தென்படுகின்றன.
பொதுவாக, தி.ஜானகிராமன் படைப்புகளில் பெண்களை விட ஆண்கள் ஆளுமை4 பலவீனம் அவர்களின் கடைசிக் கடிதங்களில் வெளிப்படுகின்றன. சந்திராவைக் காதலித்துப் பின் விலகி, டொக்கியை விரும்பும் ரங்கன், தன்னுடைய கடிதத்தில் சந்திராவைப் பற்றிக் குறிப்பிடும் போது, “அவளுக்கும் எனக்கும் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது. அவளைப் பார்க்கும்போது எல்லாம் கோவிலின் உயர்ந்த கர்ப்பக் கிருகத்து கோபுரத்தில் மின்னும் கலசத்தைப் பார்ப்பது போல்தான் எனக்குப் பட்டுக்கொண்டே இருக்கிறது”5 என்கிறான். இதில் சந்திரா எனும் பெண்ணின் ஆளுமையை வெல்ல முடியாத பலவீனமான ஆணாக ரங்கன் தோற்றமளிக்கிறான்.
இந்தப் பலவீனத்தால் ரங்கனிடம் உண்டாகும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பதிலீட்டுச் செயலாக (Compensatory reaction) அவன் டொக்கியை நாடுகிறான். ஆனால் அவள் அவனை நிராகரித்ததும் அவனுடைய தாழ்வு மனப்பான்மை உச்சநிலையடைந்து தற்கொலை நோக்கி அவனைத் தள்ளுகிறது. “அவன் டொக்கிக்காகப் போகவில்லை, சந்திராவுக்காக. அவளோடு இருக்க முடியவில்லை என்ற ஏக்கம்தான் வெறியாகிச் சுவர் மேலே முட்டிக் கொள்கிறாற் போல் சாவின் மேலே முட்டிக் கொண்டுவிட்டது”6 என்று ருக்குவின் சொற்களில் இதனை மேலும் விளக்குகிறார் தி.ஜானகிராமன்.


இதைப் போன்றே உயிர்த்தேன் நாவலில் வரும் பழனிவேலுவின் உளவியலை முழுக்க முழுக்கச் செங்கம்மாவே ஆளுகிறாள். திருமணமான செங்கம்மா மீது பழனிவேலு கொண்ட ஆழ்மன வேட்கை வெளிப்படுத்தப்பட முடியாமல் சமூகத்தால் அடக்கப்படுகிறது. இதனால் அங்கே அழுத்தம் அதிகமாகிறது. நாவலில் வேறு எங்குமே வெளிப்படாத அந்த வேட்கை அவனுடைய கடைசிக் கடிதத்தில், ‘அந்தப் பெயரைச் சொல்லக் கூட எனக்கு பயமாக இருக்கிறது. அவலமாகத் தோன்றுகிறது. செங்கம்மா அவர்களால் எந்தப் பிராணிக்கும் ஒரு துளி துன்பம் ஏற்பட்டதில்லை. நான் துன்பப்படுத்தி இருப்பேனோ என்று பயமாயிருக்கிறது. படுத்திவிட்டு பச்சாபப் படுவதில் என்ன இருக்கிறது?’7 என்று நுட்பமாக வெளிப்படுகிறது.
பழனிவேலுவைத் தற்கொலை முடிவை நோக்கிச் செலுத்துவதில் தாழ்வு மனப்பான்மைக்கு நெருக்கமான குற்ற உணர்வு எனும் உளவியற் சிக்கலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.


குற்ற உணர்வு:
பழனிவேலுவின் ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட செங்கம்மா மீதான வேட்கை, அவளையும் அவளைச் சுற்றியிருப்பவர்கள்  குறிப்பாக பூவராகன்  மீதான கோபமாக நாவலின் பல இடங்களில் வெளிப்படுகிறது. அவனுடைய இவ்வேட்கை, ஆழ்மனத்திலிருந்து நனவு மனத்திற்கு உந்தப்பட்டு கணநேர மனவெழுச்சிக்கு ஆட்பட்டு அவளைக் கட்டித் தழுவுவதில் முழுமையாக வெளிப்பட்டு விடுகிறது. ஆனால் அடுத்த நிமிடமே அவளது காலில் விழுந்து எழும் அவனுடைய செயலில் குற்ற உணர்வு எனும் மனப்பாங்கின் தீவிரம் தென்படுகிறது. ஆவன் மனம் அவ்வுணர்வின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டதை, செங்கம்மாவை மீண்டும் சந்திப்பதற்குக் கூசி அந்த ஊரை விட்டுச் செல்லும் நடத்தையிலும், குற்ற உணர்வின் ஆதிக்கம் உச்சநிலை அடைவதை அவன் உலகத்தை விட்டே செல்லும் முடிவிலும் வெளிப்படுத்துகிறார் தி.ஜானகிராமன்.

பழனிவேலுவிடம் காணப்படும் இக்குற்ற உணர்வு ரங்கனிடம் (அன்பே ஆரமுதே) தென்படவில்லை. ஆனால் மோகமுள் நாவலில் தற்கொலைக்கு முயலும் பாபுவின் பாத்திரப் படைப்பில் குற்ற உணர்வின் தீவிரம் வெளிப்படுகிறது. ஆனால் யமுனா மீது அவனுக்கிருந்த ஆழ்மன வேட்கையை அவனுக்கு அடையாளம் காட்டுவதும் அதே குற்ற உணர்வுதான்.
தனிமையான சூழலுக்கு வசப்பட்டு அடுத்த வீட்டுத் தலைமை குமாஸ்தா சிவசிதம்பரத்தின் இளம் மனைவியான தங்கம்மாளுடன் உடலுறவு கொள்ளும் பாபு, தான் யமுனாவுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்ற உணர்வில் தவிக்கிறான். ‘இனி ராஜத்தின் முகத்தில் எப்படி விழிப்பது? ரங்கண்ணாவின் முகத்தில், யமுனா இதையெல்லாம் பார்த்தே தெரிந்து கொண்டு விடுவாள்’8 என்று அவன் நினைப்பதில் இது தெரிகிறது.

பழனிவேலு மற்றும் ரங்கனைப் போலவே ஒரு பெண்ணின் (யமுனா) ஆளுமைக்கு முன்னால் அடிபணியும் பலவீனமான ஆளுமை பாபுவினுடையது. அவன் யமுனாவிடம், ‘உன்னை சாதாரண ஸ்திரீயாகவே நான் நினைக்கிறதில்லை. குளிக்கிறதும் சாப்பிடுறதும் சாதாரணமாகப் பேசுகிறதும், அம்மாவாக ஆகிறதும் சாதாரண ஸ்திரீகள் செய்கிற காரியம். நீ அதற்கெல்லாம் மேம்பட்டவள் என்ற எண்ணம்தான் எனக்கு’9 என்று கூறுவதில் யமுனா குறித்து அவன் மனத்துக்குள் வடித்துக் கொண்ட உயர்ந்த மதிப்பீடுகள் வெளிப்படுகின்றன.
உணர்வுப் பூர்வமான இம்மதிப்பீடுகளுக்கும் தங்கம்மாளுடன் உறவு கொண்ட தன் செயலுக்கும் இடையேயான முரண் அவனை நிலைகுலையச் செய்கிறது. தன்னுடைய செயலுக்காகக் கூசிப் போகும் பாபு, குற்ற உணர்வின் உந்துதலால் மன எழுச்சிக்கு ஆட்பட்டுச் சாவை நாடிச் செல்கிறான். எனினும் நீரில் தெரியும் யமுனாவின் முகத் தோற்றம் அவனை அம்முடிவிலிருந்து மீளச் செய்கிறது. சாவிலிருந்து மீளும் பாபு, யமுனாவிடம் தன் காதலை முதல் முறையாக வெளிப்படுத்துகிறான். அதற்கான மனத்துணிவைக் குற்ற உணர்வின் உந்துதலால் சாவை நோக்கிச் சென்று மீளும் அவனுடைய உளநிலையே தருகிறது.


வெறுமை நிலை:
மோகமுள் நாவலில் வரும் தங்கம்மாளின் தற்கொலைக்கான உளவியல், மற்ற மூன்று பாத்திரங்களின் நிலையிலிருந்து வேறுபட்டது. அவளுடைய தற்கொலை நோக்கிய உளவியலில் சமூகத்தின் ஆதிக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. தன்னுடைய ஆதரவற்ற சூழ்நிலையால் மிகவும் வயதான ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக அவள் மணமுடிக்கப்படுகிறாள். அப்போதே, அவளின் பாலுணர்வு சார்ந்த தேவைகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் எனும் முறையின் வழியாகப் பூர்த்தியடைவது முற்றாக நிராகரிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் பாலுணர்வு வேட்கைகள் நனவிலி மனத்துடன் தொடர்புடையவை. எளிதில் கட்டுப்படுத்த இயலாதவை. எனவே தங்கம்மாளின் நாட்டம் இயல்பாகவே அடுத்த வீட்டு இளைஞனான பாபுவின் மீது செல்கிறது. தன்னைத் தேள் கொட்டி பாபுவால் காப்பாற்றப்படும் போது இந்த நாட்டம் வேட்கையாகப் பரிணமிக்கிறது. இவ்வேட்கை அவளை மேலும் தூண்டி தனிமையில் பாபுவின் அறைக்குச் செல்ல வைத்துத் தன்னை வெளிக்காட்டுகிறது. அந்தப் பொழுதில் அவனால் தணிக்கப்படும் அவ்வேட்கை  அது தணிக்கப்பட்டதாலேயே  மேலும் வளர்ந்து, பரவலாகி அவளுடைய மனநிலையை முழுமையாக ஆக்கிரமிக்கிறது.

உலகம் (சமூகம்) தங்கம்மாளின் தேவைகளைப் புறக்கணித்த நிலையில், அவற்றைப் பூர்த்தி செய்யும் பாபுவே அவளுக்கு உலகமாகிறான். அவன் நினைவுகளால் தவிக்கிறாள். ஆனால் தன்னுடைய உணர்வுகள் பாபுவாலும் நிராகரிக்கப்படும் போது வெறுமை நிலை அவள் மனத்தை ஆட்கொள்கிறது. உலகம் ஒன்றுமில்லாத வெற்றிடமாகத் தோன்றுகிறது. இவ்வெறுமை நிலைக்குத் தன்னை ஆட்படுத்தும் தன்னுடைய உடலையும் உணர்வுகளையும் அவள் வெறுக்கிறாள். அவளுடைய கடைசிக் கடிதத்தில், ‘நான் உடம்பை இப்படியே வெச்சிண்டிருக்கவும் முடியலே. உடம்பு, உசிரு எல்லாம் பெரிய பாரமாயிருக்கு’10 என்று கூறுவதில் இது வெளிப்படுகிறது. இங்கு பாபு ஒரு குறியீடு ஆகிறான். அவன் வழியாகத் தங்கம்மாளின் உணர்வுகளை  இயல்பான தேவைகளை  நிராகரித்துச் சாவை நோக்கி அவளைச் செலுத்துவது அவளும் பாபுவம் கட்டுப்பட்டிருந்த சமூகம்தான்.


நிறைவு:
தனிமனித உளவியலை முன்னிலைப் படுத்தும் தி.ஜானகிராமனின் படைப்புகளில் தற்கொலை சார்ந்த உளவியற் கூறுகள் மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக அவருடைய நாவல்கள் கற்பனை நவிற்சிவாதத் (Romanticism) தன்மையுடன் படைக்கப் பெற்றவை. அவருடைய பாத்திரங்கள் அசாதாரணமான உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். எனவே அவற்றின் உளவியற் சித்திரிப்புகளும் நடைமுறை வாழ்வுடன் நெருங்காமல் விலகி நிற்பவையாகத் தோற்றமளிக்கின்றன. என்றாலும், இந்த விலகலுக்கான நியாயங்களைத் தன்னுடைய படைப்புகளுக்குள்ளேயே விளக்கிச் செல்கிறார் அவர். ஒரு தனிமனிதனைத் தற்கொலை நோக்கிச் செலுத்துவதில் தனிமனித உளவியலுக்கு உள்ள பங்கினை ரங்கன், பழனிவேலு, பாபு ஆகிய பாத்திரங்களின் வழியாக உணர்த்தும் தி.ஜானகிராமன், இதில் சமூகத்துக்கும் உள்ள பங்கினைத் தங்கம்மாள் மூலம் வெளிப்படுத்துகிறார்.


குறிப்புகள்
1.    வி.ஐ.தெப்ரென்கோவ், உண்மையைத் தேடும் புதிய பிராய்டியர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட், சென்னை, 1982, பக்.28.
2.    நா.அனுராதா, தமிழ் நாவல்களில் மனிதமனம், மதுரை, 2001, பக்.53.
3.    மேலது, பக்.54.
4.    ஆளுமை குறித்த எந்த ஒரு தனித்த வரையறையும் எல்லா உளவியல் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. பொதுவான வரையறைகளிலிருந்து ஒரு மனிதனின் தோற்றம், இயல்பு, தனித்தன்மை, அறிவுத்திறன், செயல்பாட்டுக் கூறுகள், ஒத்திசைவுத் தன்மை, தாங்கும் திறன், மனப்போக்கு, எண்ண வெளிப்பாடு போன்ற கூறுகளை உள்ளடக்கியதான பொருளில் இச்சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.
5.    தி.ஜானகிராமன், அன்பே ஆரமுதே, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1996, பக்.518.
6.    மேலது, பக்.525.
7.    தி.ஜானகிராமன், உயிர்த்தேன், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1994, பக். 321-322.
8.    தி.ஜானகிராமன், மோகமுள், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2003, பக். 303.
9.    மேலது, பக்.325.
10.    மேலது, பக்.388.

No comments:

Post a Comment

கருத்துக்கள்