90s kids என்றோர் இனமுண்டு. அதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அதற்குச் சற்று முன் வாழ்ந்த இன்னோர் இனமுண்டு. அதற்கு ‘90s teens’ என்று பெயர் வைக்கலாம். கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸ், காரண காரியத் தொடர்பின்றி ஒரு பெரிய கல்லை மலைமேல் ஏற்றிச் செல்வதைப் போல பழைய நினைவுகள் எனும் தாங்க முடியாத பெரும் பாரத்தைச் சுமந்து திரிபவர்கள்தான் இந்த 90s teens. மாற்றம் ஒன்றே மாறாதது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்; எல்லாக் காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் கண்முன்னால் சகிக்க முடியாத வேகத்தில் நிகழும் மாற்றத்தைக் கண்டு உலர்ந்து போயிருக்கும் ஒரு தலைமுறை என்று இவர்களைச் சொல்லலாம்.