பாட்டு பைட்டு சூப்பர்! - கணேஷ் சுப்ரமணி

இப்போதெல்லாம் சினிமா படங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பாக teaser என்று குறும்பட அளவில் தனியாக ஒரு வீடியோ தயாரித்து வெளியிடுகிறார்கள். படம் எடுத்து முடித்த பிறகு trailer வெளிவருகிறது. இதற்கிடையில் படத்தின் ஒவ்வொரு பாடலையும் போதிய இடைவெளியில் தனித்தனியாக வெளியிடுகிறார்கள். படம் குறித்த தொடர்ச்சியான எதிர்பார்ப்பைத் தக்க வைப்பதற்கு இந்த உத்திகள் பயன்படுகின்றன. ஆடியோ வெளியீடு, promotion meet என்றெல்லாம் நடத்தி அதிலும் பரபரப்பான சம்பவத்தையோ பேச்சையோ உருவாக்கி வைரல் ஆக்குகிறார்கள். ‘ஒரு விளம்பரம்..!!’ என்று கவுண்டமணி சொல்வது போல எதைச் செய்தாவது படத்தை ரசிகர்களின் கவனவெளியில் தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். கோடிக்கணக்கில் முதலீடு புழங்கும் சினிமாவுக்கு இதெல்லாம் தேவையாகவே இருக்கிறது.

என்னதான் மக்களை எளிதாக ஈர்க்கும் கலையாக இருந்தாலும் சினிமாவுக்கு விளம்பரம் தேவையானதாகவே எல்லாக் காலத்திலும் இருந்துள்ளது. சினிமாவின் பரிணாம வளர்ச்சியைப் போன்றே சினிமா விளம்பரங்களும் நிறைய மாறியிருக்கின்றன. சினிமாவுக்குச் செல்வதும் ரசிப்பதும் கிளர்ச்சியான நினைவுகளாக மனத்தில் படிந்திருப்பவை. சொந்த ஊர்களில் அல்லது வசித்த ஊர்களில் சினிமா பார்த்த ஞாபகங்கள் எல்லாருக்குமே பசுமையானவை. அவை திரைப்படங்களை விடவும் திரையரங்குகளுடன் அதிகம் பிணைக்கப்பட்டவை. இன்று எல்லா ஊர்களிலும் இயங்காமல் பாழடைந்து கிடக்கும் தியேட்டர்களைக் காண முடிகிறது. பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாகவோ, வணிக வளாகங்களாகவோ, அடுக்கு மாடி குடியிருப்புகளாகவோ மாறி மறைந்து போய்விட்டன. வேறு எந்தக் கட்டிடத்தின் இழப்பை விடவும், ஒரு சினிமா தியேட்டரின் மறைவு நிறைய பேரின் மனதில் ஈரம் கசியச் செய்துவிடுகிறது.

திரையரங்குகளைப் போன்றே சினிமா விளம்பரங்களும் விளம்பர முறைகளும் மனதில் பதிந்து விட்ட நினைவுப் படிமங்களாக இருக்கின்றன. தள்ளு வண்டி, ரிக்சா, மாட்டு வண்டிகளில் படத்தின் பேனரைக் கட்டி ஊர்களில் விளம்பரம் செய்வார்கள். எண்பதுகள் வரை தொடர்ந்த இது பின்னர் மறைந்தது. பிடித்த நடிகரின் படம் ரிலீசாகும் போது செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தைப் பார்க்கும் போது உண்டாகும் பரவசமே ஒரு கவிதைதான். அறுபதுகளுக்கு முன்பு வரை போஸ்டர்கள் மட்டுமே சினிமா விளம்பரத்துக்கான முதன்மை வடிவமாக இருந்தன. நாற்பதுகளுக்கு முன்பு போஸ்டர்கள் விளம்பரங்களாக மட்டுமின்றி அறிவிப்புப் பலகைகளாகவும் இருந்தன. ‘சைக்கிளுக்குத் தனிக் கட்டணம்’, ‘(தியேட்டரில்) கலகம் செய்பவர்கள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்’ என்பது போன்ற வாசகங்கள் போஸ்டர்களில் இடம்பெறும். சில போஸ்டர்களில் படத்தின் கதைச் சுருக்கத்தையும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள்.

போஸ்டர்களின் வழியாகவே மக்களை ஈர்க்க வேண்டியிருந்ததால் அவை விதவிதமாக மக்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டன. மூன்றாண்டுகள் வெற்றிகரமாக ஓடிய எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ படத்தின் போஸ்டரில் ‘1944, 1945, 1946 தீபாவளி’ (மூன்று தீபாவளிகளைக் கண்ட படம்!) என்று விளம்பரம் செய்யப்பட்டது. பிரம்மாண்ட பேனர்கள் வைப்பதில் புதிய டிரென்ட் உருவாக்கியவர் எஸ்.எஸ்.வாசன்தான். 1948இல் வெளிவந்த ‘சந்திரலேகா’ படத்திற்காக வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனரில் டி.ஆர்.ராஜகுமாரி காதில் அணிந்திருந்த ஜிமிக்கி மட்டும் பத்து அடி உயரம் இருந்ததாகச் சொல்வார்கள். வட இந்தியாவிலும் அந்த பேனர் பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

ஐம்பதுகள் வரை கருப்பு வெள்ளையாயிருந்த போஸ்டர்கள் அதற்குப் பின்னர்தான் வண்ணத்துக்கு மாறின. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வெளியான நாளிலிருந்து பத்தாவது நாள், இருபத்தைந்தாவது நாள் என்று தொடங்கி இருநூறு, முந்நூறு நாட்கள் வரை போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவற்றுள் நூறாவது நாள், நூற்று எழுபத்தைந்தாவது நாள் (சில்வர் ஜூபிலி) போஸ்டர்கள் முக்கியமானவையாக இருந்தன. இப்போது கடைசியாக நூறு நாட்களைக் கடந்து ஓடிய படம் எது என்றே ஞாபகம் இல்லை.

சினிமா போஸ்டர்களை வைத்து படத்தின் வகைப்பாட்டை (genre) அறிய முடிந்தது. குறிப்பாகத் திகில் படங்களின் போஸ்டர்களைப் பார்த்ததும் மனதில் லேசான பயம் உண்டாகும் வகையில் அவை கூடுதல் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டன. படத்தின் மையக் கருத்தை ஒன்றிரண்டு வரி ஸ்லோகன்களாக போஸ்டரில் இடம்பெறச் செய்வதும் ஓர் உத்தியாக இருந்தது. படத்தின் முக்கிய நடிகர், நடிகைகள், அவர்களின் பெயர்கள் போன்றவற்றை இடம்பெறச் செய்வது நீண்ட கால வழக்கமாக இருந்தது. எண்பதுகளில்தான் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் படங்களும் பெயர்களும் போஸ்டரில் இடம்பெறத் தொடங்கின. பாலச்சந்தர், பாரதிராஜா, இளையராஜா போன்றவர்களின் பெயர்கள் அவ்வாறு இடம்பெற்றன.

வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஒட்டப்படும் புதிய போஸ்டர்களைப் பார்ப்பதற்கென்றே தொலை தூரம் நடந்து சென்றவர்களும் உண்டு. குடும்பத்துடன் செல்லும் போது ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படங்களின் போஸ்டர்களைக் கடக்கும் போது தலையைக் குனிந்து செல்வதும் உண்டு. எண்பதுகளின் இறுதியில் கமலஹாசன் நடித்த டப்பிங் படமான ‘சாணக்யன்’ பட போஸ்டரில் இடம்பெற்ற முத்தக் காட்சி பரபரப்பைக் கிளப்பியது. பார்ப்பவர்களை நெளிய வைத்தது. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில் தெலுங்கு டப்பிங் பட போஸ்டர்களும் பங்களிப்புச் செய்தன. அவற்றில் ஹீரோவை விட ஹீரோயின்களுக்குத்தான் அதிக மவுசு இருந்தது.

பள்ளிகள், கோயில்களின் அருகிலோ சாலையோரங்களிலோ (கவனம் சிதறி விபத்து ஏற்படலாம்!) வைக்கப்படும் கவர்ச்சியான போஸ்டர்களை நீக்கச் சொல்லி போராட்டங்களும் நடந்திருக்கின்றன. நடிகர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போல் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போஸ்டர்களைக் கிழிப்பதும், பெயின்ட் அடிப்பதும் போராட்ட வடிவமாக இருந்தது. சில நேரங்களில் இது போன்ற போராட்டங்கள் அப்படங்களுக்குக் கூடுதல் விளம்பரங்களாக இருந்தன. பார்த்தவுடன் ரசிகனை ஈர்க்கும் தன்மை போஸ்டர்களுக்கு அவசியமானது. ரசிக்க வைப்பது மட்டுமின்றி ரசிகனை அதிர்ச்சிக்குள்ளாக்கி அவனுடைய கவனத்தைத் தன் பக்கம் இழுக்கும் படியான போஸ்டர்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டன. சர்ச்சைக்கு உள்ளாவது, எதிர்ப்பு கிளம்புவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டே போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டு விளம்பரம் தேடின. தொண்ணூறுகளில் ஏதோவொரு படத்தில் வினிதாவும் ராம்கியும் இடம்பெற்ற போஸ்டர் அப்படித்தான் பரபரப்பைக் கிளப்பியது. அதற்குப் பின்னர் அதே போன்று சிம்புவும் நயன்தாராவும் இடம் பெற்ற ‘வல்லவன்’ பட போஸ்டருக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

தொண்ணூறுகள் வரை ரசிகர்களின் சண்டைகளுக்கான போர்க்களங்களாக போஸ்டர்களே இருந்தன. தனக்குப் பிடித்த ஹீரோவின் போஸ்டருக்கு மாலையிடுவதும் சூடம் கொளுத்தி பூஜை செய்யும் ரசிகர்கள் எதிர் தரப்பு ஹீரோவின் போஸ்டர்களில் சாணியடிப்பதும் சகஜமாயிருந்தது. எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி - கமல் வழியாக விஜய் - அஜித் வரை இது தொடர்ந்தது. தற்போது ரசிகர்கள் கொஞ்சம் பக்குவமடைந்து விட்டதால் இது மறைந்து விட்டது அல்லது குறைந்து விட்டது. நகரங்களில் சாணி கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்.

பேனர்கள், கட்அவுட்கள் போன்றவை படத்தின் புகழுக்கும் வெற்றிக்கும் பெரிதும் உதவின. அத்துடன் அவற்றைச் சார்ந்த ஓவியக் கலைஞர்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்தன. சிறப்பாக வரையும் கலைஞர்கள் உள்ளூர் ரசிகர்களிடையே அபிமானத்தையும் பெற்றிருந்தார்கள். ஓவியக் கலைஞர்கள் மட்டுமின்றி, சாரம் கட்டுபவர்கள், அச்சகங்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள் என்று பலருக்கும் வருவாய் ஆதரமாக போஸ்டர்கள் இருந்தன. போஸ்டர், பேனர்கள், கட்அவுட்களின் அளவை வைத்து நடிகர்களின் மதிப்பு அளவிடப்பட்டது. தியேட்டரில் வைக்கப்படும் உயரமான கட்அவுட்கள் வெகுதூரத்தில் இருக்கும் வீடுகளின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் தெரிந்தன. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் எதிரில் வரிசைகட்டி நின்ற கட்அவுட் நாயகர்கள் நாற்பதைக் கடந்த மதுரைவாசிகளுக்கு மறக்க முடியாதவை. அறுபது அடி உயர கட்அவுட் எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன. நான் சிறுவனாக இருந்த போது கே. பாக்யராஜ் இயக்கிய ‘அவசர போலீஸ் 100’ எனும் படத்திற்காக சென்ட்ரல் தியேட்டரில் எம்.ஜி.ஆருக்குப் பெரிய கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் அணிந்திருந்த பூட்ஸ் என்னை விட உயரமாயிருந்தது.

தொண்ணூறுகளின் முற்பாதி வரை பல ஊர்களில் சிறிய தியேட்டர்கள் நிறைய இருந்தன. புதிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்ய வசதியின்றி, பழைய வெற்றிப் படங்கள் இவற்றில் திரையிடப்பட்டன. இப்படங்களுக்குப் பெரும் செலவு செய்து வண்ண வண்ண போஸ்டர்கள் ஒட்ட வசதியிருக்காது. பஞ்சு மிட்டாய் நிறத்தில் கருப்பு எழுத்துக்களினால் ஆன போஸ்டர்கள்தான் (text posters) இந்த மாதிரியான தியேட்டர்களுக்குப் பயன்பட்டன. இவற்றில் இடம்பெற்ற வாசகங்கள் புகழ் பெற்றவையாயிருந்தன. ‘பாட்டு பைட்டு சூப்பர்’, ‘பாடல்கள் தேன் சண்டைகள் தூள்’ ‘கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து’ என்பது போன்ற வாசகங்களை உருவாக்க ஏழு பேர் கொண்ட குழுக்கள் இயங்கியிருக்கலாம். கேபிள் டிவி, சேட்டிலைட் தொலைக்காட்சி போன்றவை வந்த பிறகு பழைய படங்களைத் தியேட்டரில் பார்ப்பது குறைந்து போனது. இது மாதிரியான தியேட்டர்கள் பாழடைந்து மறைந்தன. போஸ்டர்கள் மங்கிப் போய் கிழிந்தன.

        இன்று போஸ்டர்கள், பேனர்களின் மதிப்பு குறைந்துவிட்டது. டிஜிட்டல் போஸ்டர்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. இவை செலவின்றி அதிகம் பேரின் கண்களைச் சென்றடைகின்றன.

No comments:

Post a Comment

கருத்துக்கள்