சங்க காலத்துக்குச் சற்று பிந்தைய காலத்தில் தோன்றிய திருக்குறளில் எந்தவொரு கடவுட் கோட்பாட்டையும் வள்ளுவர் பின்பற்றவில்லை. எனவேதான் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவரும் அவரைத் தங்கள் சமயத்தவர் என்று உரிமை கோருகிறார்கள். அந்த அளவுக்கு சமயப் பொதுமையைப் பேணியுள்ளதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதுப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு.
