திருக்குறளில் தெய்வம் - கணேஷ் சுப்ரமணி

சங்க காலத்துக்குச் சற்று பிந்தைய காலத்தில் தோன்றிய திருக்குறளில் எந்தவொரு கடவுட் கோட்பாட்டையும் வள்ளுவர் பின்பற்றவில்லை. எனவேதான் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவரும் அவரைத் தங்கள் சமயத்தவர் என்று உரிமை கோருகிறார்கள். அந்த அளவுக்கு சமயப் பொதுமையைப் பேணியுள்ளதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதுப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு. எனவேதான் தோன்றி ஈராயிரம் ஆண்டுகள் ஆகியும் திருக்குறள் குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. சமயப் பொதுமை என்பதையும் கடந்து வள்ளுவரின் குறள்களில் இறைமறுப்புச் சிந்தனையும் பொருள் முதல்வாதக் கருத்தியலும் தென்படுகிறது. இதை விளக்குவதே இந்த ஆய்வுத்தாளின் நோக்கம். அவர் பண்டைத் தமிழ்ப் பொருள்முதல்வாதி என்பதே இந்தச் சிறு ஆய்வின் கருதுகோள்.

வள்ளுவரின் கடவுட் கருத்தியல்:

இறைக் கோட்பாடு பற்றிய வள்ளுவரின் சிந்தனைகளைப் பாயிரவியல் எனும் முதல் நான்கு அதிகாரங்களில் நேரடியாகவும், மற்ற குறள்களில் மறைமுகமாகவும் உணர முடிகிறது. பாயிரவியல் என்ற பாகுபாடு வள்ளுவர் உண்டாக்கியதல்ல என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து. இது கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய நான்கு அதிகாரங்களை உள்ளடக்கியது. இந்த வரையறையிலும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக, இப்பாயிரவியல் திருவள்ளுவர் எழுதியதல்ல என்பது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் முடிபு. ஆனால் அவர் பாயிரவியலில் உள்ள முதல் மூன்றதிகாரங்களை மட்டுமே பாயிரவியலாகக் கொண்டு அதனை திருக்குறளின் ஒரு பகுதியாக ஏற்க மறுக்கிறார். நான்காம் அதிகாராமான அறன் வலியுறுத்தலை அறத்துப் பாலின் முதல் அதிகாரமாகக் கொள்கிறார் அவர்.

கடவுள் வாழ்த்து அவர் எழுதியதாகவே கொண்டாலும் அதை விடப் பொருளியல் வாழ்வுக்குத்தான் அவர் முதன்மை அளித்திருக்கிறார். கடவுள் எனும் கருத்து முதல்வாதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. எல்லாவற்றையும் படைத்து, காக்கின்ற முழுமுதற்பொருளாக இறைவனை வள்ளுவர் எங்கும் குறிப்பிடவில்லை. உலகம் நிலைபெற வளம் பெறத் தேவையான மழையை முதன்மைப்படுத்தும் வகையில் இரண்டாம் அதிகாரமாக வான்சிறப்பை வைக்கிறார். இதில் அவருடைய பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் தெளிகிறது. உற்பத்தி முறையாலும் உழைப்பினாலும்தான் உலகம் வளர்ச்சி காண்கிறது என்னும் கருத்தியலை வான்சிறப்பு அதிகராத்தின் வழி குறிப்பிடுகிறார்.

நீத்தார் பெருமை எனும் மூன்றாவது அதிகாரம் துறவறவியலைப் பற்றிப் பேசுகிறது. துறவறம் குறித்து பின்னர் வரும் துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் போன்ற அதிகராங்களிலும் வள்ளுவர் விவரிக்கிறார். எனவே நீத்தார் பெருமை என்கிற அதிகாரம் அவரால் எழுதப்படாத இடைச்செருகலாயிருக்கலாம் என்பது சில அறிஞர்களின் கருத்து. அதற்கடுத்த நிலையில் அறன் வலியுறுத்தலைப் படைக்கிறார். இதுதான் வள்ளுவர் சொல்ல வரும் கருத்தியல். கடவுளுக்கு இணையான இடத்தை அவர் அறத்திற்கு அளிக்கிறார்.

உலகியல் இன்பங்களைச் சிற்றின்பம் என்றும் இறைநிலை அடைவதைப் பேரின்பம் என்றும் குறிப்பிடுவது மெய்யியல் மரபு. வள்ளுவர் இவ்வகைப்பாட்டுக்குள் செல்லாமல்

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்

புறத்த புகழு மில1

என்று அறத்தால் வரக்கூடிய இன்பத்தை மட்டுமே இன்பம் என்றுரைக்கிறார். மற்ற இன்பங்கள் என்று அவர் குறிப்பிடுவது தீய வழியில் வரும் இன்பங்கள் என்று பலரும் உரை கூறுகிறார்கள். ஆனால் சமயங்கள் சொல்லக் கூடிய பேரின்பமெனும் இறையின்பத்தையும் புறத்த எனும் சொல்லில் அவர் சுட்டுவதாகக் கொள்ளலாம். தீவினைகளைத் தண்டிக்கும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு எனும் வைதீகச் சமயவாதிகளின் கருத்தை மறுத்து, அந்த இடத்திலும் அறத்தை வைக்கிறார்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே

யன்பி லதனை யறம்2

எனும் குறளில் அன்பில்லாத உயிர்களை அறம் அழிக்கும் எனும் கருத்தை மொழிகிறார். கடவுட் கோட்பாடுக்கு இணையாக இங்கு அறக்கோட்பாட்டை முன்வைக்கிறார்.

தெய்வமெனும் சொல்:

தமிழில் கடவுள், இறைவன், தெய்வம் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழிச் சொற்கள். மொழிப் பயன்பாட்டில் கடவுள் மற்றும் இறைவன் ஆகிய சொற்கள் உயர்திணைச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன (கடவுள் ஏன் கல்லானான், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்). இவை தமிழ்ச் சொற்கள். தெய்வம் எனும் சொல் அஃறிணைச் சொல்லாகப் பயன்பாட்டில் இருக்கிறது (தெய்வம் வந்தது, தெய்வம் நின்று கொல்லும்). இச்சொல் வடமொழிச் சொல். தேவ் எனும் சொல்லிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட சொல்.

கடவுள்எனும் தமிழ்ச் சொல் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கில் உள்ளது. சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலும் இந்தச் சொல் பயின்று வருகிறது. ஆனால் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர்த் தோன்றிய திருக்குறளில் கடவுள் எனும் சொல் எங்கும் சுட்டப்படவேயில்லை. பல்வேறு சமயங்கள் கூறும் கடவுள் பற்றிய கருத்துகளைத் தன்னுடைய குறள்களில் சுட்டிக் காட்டும் வள்ளுவர் கடவுள்எனும் சொல்லை மட்டும் தன்னுணர்வுடனே தவிர்த்துள்ளார். இறைவன் எனும் சொல்லை நான்கு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஓரிடத்தில் அரசன் எனும் பொருளில் அச்சொல் பயிலப்பட்டுள்ளது. இறைவன் என்பதன் வேர்ச்சொல்லான இறை என்னும் சொல் ஆறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஓரிடத்தில் மட்டுமே இறைவன் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அரசன், தலைவன், இறைத்தல், முன்கை போன்ற பொருட்களில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.

கடவுளுக்கு உருவமோ குறியீடுகளோ தந்து தன்னுடைய சமயம் குறித்த தெளிவை வள்ளுவர் அளித்துவிடவில்லை. கடவுள் எனும் சொல்லுக்குப் பதிலாக தெய்வம்எனும் சொல்லைப் ஐந்து இடங்களில் (குறள் எண்கள்  43, 50, 55, 619, 702) பயன்படுத்துகிறார். பாயிரவியலில் வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்கள் கடவுட் தன்மை பொருந்தியனவாக திருக்குறளில் ஆளப்பட்டுள்ளன. இந்தச் சொற்களை எந்த சமயத்தின் சாயலுமற்ற ஒருவித பொதுமைத் தன்மையுடனே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். தெய்வம் எனும் சொல்லையும் பேராற்றல் மிக்க கடவுட் தன்மை பொருந்திய சொல்லாக அவர் எங்கும் பயன்படுத்தவில்லை. இச்சொல் ஆளப்பட்டுள்ள குறள்களை ஆராய்ந்தால், அறவழியில் நிற்கும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர முடியும் எனும் மனித மையக் கோட்பாடே தென்படுகிறது.

தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்3

எனும் குறளில் தெய்வத்தால் ஆகாத வினையும் உண்டு; அதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் மனித உழைப்புக்கு உண்டு என்கிறார். இதில் தெய்வம் என்பது எல்லாம் வல்ல ஒன்றாகக் குறிக்கப்படவில்லை.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க வாழ்க்கை

வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்4

எனும் குறளில் வாழ்ந்து மறைந்தோர், விருந்தினர், சுற்றத்தார் ஆகியோரின் வரிசையில் தெய்வத்தை வைக்கிறார். அதிலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்குப் பின்னரே தெய்வத்தை வரிசைப்படுத்துகிறார். மனிதனினும் மேலான ஒன்றாக அவர் தெய்வத்தைக் கருதவில்லை.

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்5

எனும் குறளில் மனத்தின் குறிப்பறியும் ஆற்றல் பெற்ற மனிதனைத் தெய்வத்துக்கு இணையானவாகக் குறிப்பிடுகிறார்.

சமண, பவுத்தம், உலகாயதம், பூதவாதம், சாங்கியம், சார்வாகம், ஆசீவகம் போன்ற சமயங்களும் எல்லாம் வல்லதான இறை எனும் நம்பிக்கையை ஏற்றவையல்ல. சமணமும் பவுத்தமும் பின்னாளில் இறைக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டாலும் தொடக்கத்தில் அவை இறை மறுப்புச் சிந்தனைகளாகவே இருந்தன. இச்சிந்தனைகள் மேலோங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த வள்ளுவரிடமும் இறைமறுப்பு வாதம் தென்படுகிறது. தெய்வத்தை விட அறவழியில் வாழும் மனிதனை அவர் உயர்வாக மதித்துள்ளார். இருத்தலியவாதியான நீட்சே கடவுளை விட ஆற்றல் மிக்கவனாக அதி மனிதன் எனும் கருத்துருவைத் தந்தார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் கடவுளை விட ஆற்றல் மிக்கவனாக அற மனிதன் எனும் கருத்துருவைத் தன் குறட்பாக்களில் உணர்த்துகிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப் படும்6

எனும் குறளில் அறவழியில் வாழும் மனிதனே தெய்வம் எனும் வள்ளுவரின் கடவுட் கோட்பாடு தெளிவாகத் தென்படுகிறது. அத்தகைய பேராற்றல் மிக்க அறமனிதனுக்கு முன்னால் பலம் குறைந்த கடவுளைக் குறிப்பதற்கு தெய்வம் எனும் வடமொழிச் சொல்லையே வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

முழுமுதற்கடவுள் என்னும் கடவுட் கோட்பாடு வள்ளுவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே நேரம் அவர் காலத்தில் இயங்கிய பிற சமயங்களின் கடவுளர்களையும் நம்பிக்கைகளையும் தன்னுடைய குறள்களில் எடுத்தாளுகிறார். தாம் சொல்ல வரும் கருத்துகளை மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்கும் நோக்கில் உவமைத் தன்மையுடனும் கருப்பொருட் தன்மையுடனும் பல்வேறு கடவுட் பெயர்களைப் பயன்படுத்துகிறார். இந்திரன் (25), முகடி எனும் மூதேவி (167, 617, 936), திருமகள் (617), தாமரைக்கண்ணான் (1103) போன்ற கடவுட் சொற்கள் பெரும்பாலும் உவமச் சொற்களாகவே திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவர் (1073), வானோர் (25, 50, 86, 101, 346, 353) போன்ற சொற்களும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவனன்றி ஓரணுவும் அசையாது என்கிற தெய்வ நம்பிக்கை வள்ளுவருக்கு இல்லை. அதாவது உலகின் இயக்கம் கடவுளால் நிகழ்வதில்லை என்பதை உணர்த்துவதற்காக எல்லாம் ஊழ்வினையால் நிகழ்வது என்னும் கருத்தியலை முன்வைக்கிறார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்7

எனும் குறளில் கடவுளுக்குப் பதிலியாக ஊழ் பற்றிக் குறிப்பிடுகிறார். எல்லாம் வல்லதான ஆற்றல் என்று ஊழைக் குறிப்பிடும் வள்ளுவர், அதையும் வெல்லக் கூடிய வலிமை மனிதனுக்கு உண்டு என்கிறார். தெய்வத்தால் முடியாத செயலையும் ஆற்றக்கூடிய வலிமை மனித முயற்சிக்கு உண்டு எனும் கருத்துடைய குறளுக்கு அடுத்த குறளிலேயே

ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்

தாழா துஞற்று பவர்8

என்று மனித ஆற்றலுக்கு முன்னால் ஊழின் பெருவலியும் சிறிதுதான் எனும் கருத்தை முன்வைக்கிறார். அதாவது தெய்வ சக்தி, ஊழ் வலிமை ஆகியவற்றை விட மனித உழைப்பு உயர்ந்ததாகவும் ஆற்றல் மிக்கதாகவும் வள்ளுவர் மதிப்பிடுகிறார்.

அறமெனும் சொல்:

திருக்குறளில் அறம் (அறன்) எனும் சொல் 47 இடங்களில் பயிலப்பட்டுள்ளது. இச்சொல்லைக் கடவுளுக்கு இணையான ஒன்றாக அல்லது அதற்கும் மேலானதாக பல குறள்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார். அவர் முன்னிறுத்தும் அறம் எனும் கருத்தியலில் பொருள் முதல் வாதத் தன்மை அதிகம் தென்படுகிறது. இல்லறம் மற்றும் துறவறம் ஆகிய இரண்டு நெறிகள் குறித்தும் அவர் உரைத்தாலும் கருத்து முதல் வாதத்தை மையமாகக் கொண்ட துறவறத்தை விட உலகியல் நடைமுறைக்கு நெருக்கமான இல்லறத்திற்கு முதன்மை அளிக்கிறார். அறம் என்பதே இல்லறம்தான் என்பதை

அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்

பிறன்பழிப்ப தில்லாயி னன்று9

எனும் குறளில் அழுத்தமாகக் குறிப்பிடும் வள்ளுவர்,

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்

முயல்வாரு ளெல்லாந் தலை10

எனும் குறளில் துறவறத்தை விட இல்லறமே தலை சிறந்தது என்று நேரடியாகவே குறிப்பிடுகிறார். கற்பனையான விண்ணுலக வாழ்வை நோக்கமாகக் கொண்ட அறவழியை விட வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே இறைநிலை அடையும் வழி என்கிறார். வெளிவேடமிட்டு துறவு அடையாளம் பூணும் போலித்தனத்தை

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்

பழித்த தொழித்து விடின்11

எனும் குறளில் அவர் சாடுகிறார். இவ்வுலக வாழ்வில் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தால் துறவு தேவையில்லை என்று அழுத்தமாக இக்குறளில் சொல்கிறார். இறைவனை அல்லது இறைநிலையை அடைவதற்குத் தக்க வழிமுறையான துறவு குறித்து நீத்தார் பெருமையில் கூறும் வள்ளுவர் அதற்கடுத்த நிலையில் இவ்வுலக வாழ்வியலில் ஈடுபடும் இல்லறத்தார்க்குத் தேவையான அறம் குறித்து அடுத்த அதிகாரமான அறன் வலியுறுத்தலில் பேசுகிறார். மனத்தளவில் கூட குற்றமில்லாத ஒழுக்க நிலையையே அறம் என்ற சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர்.

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற

னாகுல நீர பிற12

எனும் குறளில் அவர் சொல்ல விழைவது இதைத்தான். துறவறத்தார் கடவுளை அடைவதை உயரிய நோக்காகக் கொள்வதைப் போல இல்லறம் பேணுவோர் அறம் தவறாது வாழ்தலை உயர்ந்த நோக்காகக் கொள்ள வேண்டும் என்பதே அவர் வலியுறுத்த விரும்பும் கருத்து எனலாம். உலகியலுக்கு அப்பாற்பட்ட கருத்து முதல்வாத அறங்களை அறத்துப்பாலில் உரைக்கும் வள்ளுவர் உலகியல் நடைமுறைக்கு இணக்கமான பொருள் முதல்வாத அறங்களைப் பொருட்பாலில் எடுத்துரைக்கிறார். அறத்துப்பாலுக்கு 38 அதிகாரங்களை மட்டுமே அளிக்கும் அவர் பொருட்பாலுக்கு 70 அதிகாரங்களை வழங்குகிறார். வள்ளுவர் பண்டைத் தமிழ்ப் பொருள் முதல்வாதி என்பதற்கு அவருடைய நூலே சான்றாகத் திகழ்கிறது.

முடிவுகளும் விவாதங்களும்:

1.     திருக்குறளில் எந்தவொரு சமயம் சார்ந்த கடவுட்கோட்பாடும் இடம்பெறவில்லை.

2.     கடவுள் எனும் சொல்லை வள்ளுவர் எங்குமே பயன்படுத்தவில்லை. தெய்வம் எனும் வடமொழிச் சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார். இச்சொல்லை எல்லாம் வல்ல பேராற்றல் எனும் பொருளில் அவர் பயன்படுத்தவில்லை.

3.     அவைதீகச் சமயங்களின் இறை மறுப்புவாதம் அவருடைய குறட்பாக்களில் தென்படுகிறது. தெய்வத்தால் இயலாத செயல்களும் மனித ஆற்றலால் சாத்தியப்படும் என்று கூறுகிறார். இதில் தெய்வ வலிமையை விட மனித ஆற்றல் மேலானது எனும் மனித மையவாதக் கோட்பாடு தெரிகிறது. கடவுளுக்கு இணையான ஆற்றல் மிக்கவனாக அறவழியில் வாழும் மனிதனை அவர் வரையறுக்கிறார்.

4.     வைதீகச் சமயக் கடவுளர்களின் பெயர்களை வெறும் உவமைகளாகவும் பொருண்மையை விளக்கப் பயன்படும் கருப்பொருள் தன்மையுடனும் மட்டுமே பயன்படுத்துகிறார்.

5.     கடவுளுக்கு இணையான அல்லது அதற்கும் மேலானதாக அறம் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அதிலும் கருத்து முதல்வாதக் கோட்பாடான துறவறத்தை விட பொருள்முதல்வாதக் கோட்பாடான இல்லறத்தை முதன்மையானதாக அவர் வலியுறுத்துகிறார்.

வள்ளுவரைப் பண்டைத் தமிழ்ப் பொருள் முதல்வாதி என்று அவருடைய குறள்கள் வழியாக நிறுவ முடிகிறது.

குறிப்புகள்:

1.    திருவள்ளுவர், குறள் எண்: 39, தமிழ் மறை, பக். 4.

2.    மேலது, குறள் எண்: 77, பக். 8.

3.    மேலது, குறள் எண்: 619, பக். 62.

4.    மேலது, குறள் எண்: 43, பக்.5.

5.    மேலது, குறள் எண்: 702, பக். 71.

6.    மேலது, குறள் எண்: 50, பக். 5.

7.    மேலது, குறள் எண்: 380, பக். 38.

8.    மேலது, குறள் எண்: 620, பக். 62.

9.    மேலது, குறள் எண்: 49, பக். 5.

10. மேலது, குறள் எண்: 47, பக். 5.

11. மேலது, குறள் எண்: 280, பக். 28.

12. மேலது, குறள் எண்: 34, பக்.4.

உதவிய நூல்கள்:

  1. தமிழ் மறை, திருவள்ளுவர், தாழி அறக்கட்டளை, புதுச்சேரி, 2012.
  2. குறள் கூறும் சமயம், காமாட்சி சீனிவாசன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1979.
  3. திருக்குறள் உரைக்களஞ்சியம், அறத்துப் பால்  பாயிரவியல், ச.தண்டபாணி தேசிகர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1981.
  4. திருக்குறள் அகராதி, எச். இராமசாமி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004.

No comments:

Post a Comment

கருத்துக்கள்