தோல்விகளில் கரைந்த ராசா மகன் - கணேஷ் சுப்ரமணி

தொன்னூறுகளில் தொடக்கத்தில் இசையில் மெல்ல நிகழத் தொடங்கியிருந்த மாற்றங்கள் இசை ரசிகர்களுக்குத் தெரியும். இசை நவீனமாதலின் அடுத்த கட்ட நகர்வின் தேவை உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில் தனிப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்த இளையராஜாவும் இதை உணர்ந்திருந்தார். நவீனத் தொழில்நுட்பங்களைத் தன் இசையில் அவர் அறிமுகப்படுத்துவதும் கையாளுவதும் அந்த மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளாக இருந்தன. ஆனால் ரகுமானின் அதிரடியான வரவு
அந்த நவீனமயத்தை அழுத்தமாக உறுதிப்படுத்தியது. அதற்கு முந்தைய ராஜாவின் முயற்சிகளுக்கு அவரிடம் பணியாற்றிய ரகுமானும் ஒரு காரணகர்த்தாவாக இருந்திருக்கக் கூடும். அப்போதே அந்த நவீனத்துக்குத் தன் மகன் கார்த்திக் ராஜாவைத் தயார்படுத்திக் கொண்டுதான் இருந்தார் இளையராஜா.

அக்காலகட்டத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த பல படங்களில் கார்த்திக் ராஜாவின் பங்களிப்பு இருந்தது. எண்பதுகளின் பிற்பாதியில் இளம் வயதிலேயே இளையராஜாவிடம் கீ போர்டு வாசிக்கத் தொடங்கியிருந்தார் கார்த்திக் ராஜா. அக்காலகட்டத்தில்  மிகுந்த பரபரப்புடன் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த ராஜாவுக்குத் துணையாக அவர் பணி செய்தார். அவருக்கிருந்த இசை ஞானமும் ஆர்வமும் ராஜாவின் படங்களில் ஒருசில பாடல்களுக்கு இசையமைக்கக் காரணமாக இருந்தன. பாண்டியன் படத்தில் இடம் பெற்ற பாண்டியனின் ராஜ்ஜியத்தில் எனும் பாடல்தான் அப்படி அவர் இசையமைத்த அதிகாரப்பூர்வ முதற்பாடல். அந்தப் பாடலின் வெற்றி கார்த்திக் ராஜா எனும் பெயரைக் கவனிக்க வைத்தது. ஏய் வஞ்சிக்கொடி (பொன்னுமணி), ‘நினைக்கின்ற பாதையில் (ஆத்மா), ‘நேற்று வந்த காற்று (கண்மணி) போன்ற பாடல்கள் அப்பாவின் படங்களில் கார்த்திக் இசையமைத்து வெளிவந்து வெற்றியும் பெற்றவை. அப்போதே தனியாகப் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புகள் அவருக்கு வந்திருக்கும். என்றாலும், அவர் அதில் இறங்கவில்லை. அப்பாவின் படங்களில் துணைபுரிவதையே தன்னுடைய பணியாகத் தொடர்ந்தார். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தாகம் காரணமாக இருந்திருக்கலாம்.

தொன்னூறுகளில் இளையராஜா இசையில் வெளிவந்த இதயம், உழைப்பாளி, பொன்னுமணி, ராசாமகன், சக்கரைத்தேவன், தர்மசீலன், அமைதிப்படை போன்ற படங்களின் பின்னணி இசையைக் கார்த்திக் ராஜாதான் அமைத்தார். இளையராஜா இசையமைத்த பல படங்களில் கார்த்திக் ராஜாவின் பங்களிப்பு தனித்து தெரியும். அமைதிப்படை படத்தில் இடம்பெற்ற சொல்லிவிடு வெள்ளிநிலவே பாடல் அப்படியானது. இன்றும் பலருடைய ப்ளே லிஸ்ட்டில் இருக்கும் அந்தப் பாடலில் அவர் பயன்படுத்திய இசை அந்தப் படத்தின் காதல் காட்சிகளுக்குப் பொருத்தமாகப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். நவீனமும் காவியத்தனமும் கலந்த அந்த அழகான இசைக் கோர்வை சத்யராஜ் - ரஞ்சிதா நடித்த காதல் காட்சிகளுக்கு அமைந்து போனது துரதிர்ஷ்டவசமானது.

வள்ளி படம் வெளியாகிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தப் படத்துக்குக் கார்த்திக் ராஜாதான் இசையமைத்ததாக ஒரு விழா மேடையில் ரஜினிகாந்த் சொன்னார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அங்கிருந்த இளையராஜாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. வள்ளி படத்தின் என்னுள்ளே என்னுள்ளே பாடல் இன்று வரை இளையராஜாவின் ஒப்பற்ற பாடல்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது. எனவே ரஜினி சொன்ன அந்தத் தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த சில நாட்களுக்கு அது பேசுபொருளாகவும் ஆனது. ஆனால் வள்ளி படத்தின் இயக்குனர் நட்ராஜிடம் இது பற்றி கேட்கப்பட்ட போது, ‘வள்ளி படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். ரஜினிகாந்த் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை என்று பதிலளித்தார். அந்தப் படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் இளையராஜாவின் இசைக் குறிப்புகளைக் கொண்டு (notes) அவர் இல்லாத இடத்தில் கார்த்திக் இசை நடத்துநராக அல்லது ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியிருக்கலாம். அதனால் ஏற்பட்டிருந்த மன வருத்தத்தில் கூட வைத்து ரஜினிகாந்த் அப்படிச் சொல்லியிருக்கலாம். அந்த அளவுக்கு இளையராஜாவின் படங்களில் கார்த்திக் ராஜாவின் பங்களிப்பு இருந்தது என்பதுதான் இங்கே சொல்ல வந்தது.

அக்காலகட்டத்தில் வெளிவந்த ராஜாவின் படங்களில் சில பாடல்களைக் கூர்ந்து கவனித்தால் அது கார்த்திக் இசையமைத்தது என்று தெரியும் அல்லது தோன்றும். வந்தாள் வந்தாள்(ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி) பாடலை எப்போது கேட்டாலும் அது ராஜாவின் இசைப் பாணியில் இல்லாதததை உணர முடியும். அந்தப் பாடலின் ஒலிக்கலவையும் இசைக் கோர்ப்பும் அப்படியானவை. பின்னாளில் கார்த்திக் ராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களுடன் அந்தப் பாடலை ஒப்பிட்டுப் பார்த்தால் இது நன்றாகப் புரியும். இதே போல், ‘போட்டு வைத்த காதல் (சிங்கார வேலன்), ‘கொக்கரக்கோ கோழி (கலைஞன்), ‘நாள்தோறும் எந்தன் நெஞ்சில் (தேவதை), ‘முத்திரை இப்போது (உழைப்பாளி), போன்ற பாடல்களும் அப்படியானவைதான். ராஜாவின் தீவிர ரசிகர்களுக்கு இந்த வித்தியாசம் நன்றாகப் புரியும். இப்படித் தன்னுடைய அப்பாவின் படங்களில் தன் திறமையைப் பரிசோதித்து வெற்றி பெற்ற கார்த்திக் ராஜாவால் தனியாக இசையமைத்து வெற்றி பெற முடியாமல் போனதுதான் சோகம்.

கார்த்திக் ராஜா இசையாக்கத்திலும் திறமையிலும் குறையே இல்லாதவர்தான். வாய்ப்புகளுக்கும் குறைவில்லை. அவர் உருவாவதற்கான தேவையும் இருந்தது. இளையராஜாவிடமிருந்து ரகுமான் வழியாக புது வித இசைப்பாணிக்குத் தமிழ்த்திரையிசை நகர்ந்து கொண்டிருந்தது. ரகுமான் குறைந்த அளவிலான படங்களுக்கே இசையமைத்தார். எனவே புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்து நிரப்புவதற்கு தேவையான வெற்றிடங்கள் இருந்தன. அந்த இடங்களைக் கார்த்திக் ராஜாவால் நிரப்ப முடியாமல் போனது. அவருடைய தம்பி யுவனுக்கு அது எளிதாகக் கைவந்தது. தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், சிற்பி போன்றவர்களும் அந்த வெற்றிடங்களை நிரப்பினார்கள். கார்த்திக் ராஜா எங்கே தவறினார் என்று இன்று வரை புரியவில்லை.

கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக முறையாக அறிமுகமான படம் அலெக்ஸாண்டர். தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலத்தின் படத்தில்தான் தன் மகனும் அறிமுகமாக வேண்டும் என்பது இளையராஜாவின் விருப்பமாக இருந்திருக்கலாம். அந்தப் படத்தில் பெரிய அளவில் இசைக்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும் நதியோரம் வீசும் தென்றல் எனும் காதுகளை இதமாக வருடும் பாடலைத் தந்தார். இதற்கடுத்து இவர் இசையமைத்த எனக்கொரு மகன் பிறப்பான் படத்திலும் பாடல்கள் சொல்லிக் கொள்ளும் படியாக அமையவில்லை. என்றாலும் அந்தப் படத்தின் பின்னணி இசை புதுவிதமாக இருந்தது. இதற்குப் பின்னர், தன் அப்பா கோலோச்சிக் கொண்டிருந்த கிராமியக் கதைப் பாணியில் அமைந்த மாணிக்கம் படத்திற்கு இசையமைத்தார். ஒன்றிரண்டு பாடல்கள் தவிர அந்தப் படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

அக்காலகட்டத்தில் கேபிள் டிவியும் சேட்டிலைட் தொலைக்காட்சி சேனல்களும் அறிமுகமாகி டிவியில் தினமும் திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு உருவாகிவிட்டிருந்தது. இதனால் பெண்கள் தியேட்டருக்குச் செல்வதும், குடும்பமாகச் சினிமா பார்க்கப் போவதும் குறைந்து விட்டிருந்தது. தியேட்டருக்கு வரும் இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படங்களே அதிகம் வெற்றி பெற்றன. டஜன் டஜனாகக் காதல் படங்கள் தியேட்டர்களில் குவிந்தன. அப்படியொரு வாய்ப்புதான் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சரியான சந்தர்ப்பமாக இருந்தது.

கார்த்திக் ராஜாவுக்கு அப்படியொரு வாய்ப்பு அமிதாப் பச்சன் தயாரிப்பில் வெளிவந்த உல்லாசம் படத்தின் மூலம் கிடைத்தது. அவரும் அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி தன் திறனை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தில் கொஞ்சும் மஞ்சள் பூக்கள்’, ‘சோலாரே’, முத்தே முத்தம்மா’, யாரோ யார் யாரோ உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் இளைஞர்களைப் பெரிதாகக் கவர்ந்ததுடன் புதுமையாகவும் இருந்தன. குறிப்பாக, ‘வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா எனும் பாடலின் சரண வரிகளுக்குப் பின்னணியில் யாரவள் எனும் வார்த்தையை repeat mode கோரஸ் குரலாக இசைத்திருப்பார். அது அந்தப் பாடலுக்கு ஒருவித காவிய அழகியல் தன்மையைத் தந்திருக்கும். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது.

அதற்குப் பின்னர் கார்த்திக் ராஜா இசையில் வெளிவந்த நாம் இருவர் நமக்கிருவர், காதலா காதலா போன்ற நகைச்சுவைப் படங்களில் பாடல்களும் பின்னணி இசையும் புகழ் பெற்றாலும் அவருடைய திறன் வெளிப்படுவதற்கான பெரும் வாய்ப்பாக அவை அமையவில்லை. 2001இல் வெளிவந்த டும் டும் டும் திரைப்படம் கார்த்திக் ராஜாவின் திறமைக்குத் தீனி போடுவதாக அமைந்தது. தேசிங்கு ராஜா’, ‘ரகசியமாய்’, ‘உன் பேரை சொன்னாலே போன்ற பாடல்களின் வழியாக ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். அதே ஆண்டில் வெளிவந்த உள்ளம் கொள்ளை போகுதே படத்திலும் தன் இசைத்திறனை முழுமையாக வெளிப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற கவிதைகள் சொல்லவா பாடலின் இரண்டு வெர்சன்களும் அற்புதமானவை. அப்படத்தில் திரைக்கதையை நகர்த்திச் செல்லும் சிறு சிறு பாடல்கள் அழகாக மட்டுமின்றி புதுமையாகவும் இருந்தன. ஆனாலும் இந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. அதற்குப் பின்னர் வந்த படங்களில் செல்லமே செல்லம் (ஆல்பம்) பாடலைத் தவிர வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக அவருக்கு அமையவில்லை.

அவருடைய இசையில் தென்படும் மேற்கத்தியத் தன்மை (westernisation) தமிழ் ரசிகர்களுக்குக் கொஞ்சம் அன்னியமாக இருந்தது. எல்லாத் தரப்பு மக்களையும் இலக்காகக் கொள்ளாமல் உயர் வர்க்க (high class) ரசிகர்களை நோக்கி மட்டுமே அவர் சென்றார். அதற்கேற்பவே அவருக்குப் படங்களும் அமைந்தன. இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் சில படங்களுக்கு அவர் இசையமைத்தார். வாய்ப்புகள் நிறைய அமைந்தாலும் அவர் இசையமைத்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவின. சொல்லப் போனால் அவர் இசையமைத்த படங்களில் ஒன்றிரண்டு சுமாரான வெற்றிப் படங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் எல்லாமே தோல்விப் படங்கள்தான். சூப்பர் ஹிட் படம் என்று எதுவுமே அவர் இசையமைத்த படங்களின் பட்டியலில் இல்லை. ஒரு பேட்டியில் சினிமா இசை என்பது fake music என்று சொல்லப்படுவதை மேற்கோள் காட்டிய அவர் real music நோக்கிய தேடலில் தான் இருப்பதாகச் சொன்னார். கைவராமல் போன கலை மீதான அவருடைய கருத்தாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். தோல்விகளில் கரைந்து மங்கிப் போன பெரும் கலைஞனாகவே கார்த்திக் ராஜாவை மதிப்பிட முடிகிறது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்